Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறுகதை
அவுட் சோர்சிங்
ஓடிப்போனவள்
- ஷீலா ஸ்ரீனிவாஸ்|ஜூன் 2004|
Share:
கண்ணம்மாவின் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. அவள் கண்கள் ஜன்னலையே நோட்ட மிட்டது. "இப்படி கொட்ற மழையில புள்ளய சாராயம் வாங்க அனுப்ப எப்படித் தான் உங்களுக்கு மனசு வந்துச்சி, நாளைக்கு பரீச்சை ஆரம்ப மாகுது, படிக்கிற புள்ளய சாராயக்கடைக்கு அனுப்புரது தப்புன்னு தோணல?" கணவனைக் கேட்டாள்.

"என்னடி புள்ளைக்கு சப்போட்டு, அவனப் படிக்க வெக்கிறதே என் தப்பு. அவன் படிச்சி என்னத்த கிழிக்கப்போறான். எங்கியாச்சும் கூலி வேலைக்குத்தான் அனுப்பணும்" என்றான் துரைராஜ்.

போன வாரம் சாராயம் வாங்கிட்டு வர்ற வழியில வாத்தியார் பாரதியைப் பார்த்துட்டார். "மறுபடியும் உன்னை இப்படிப் பார்த்தா தொலைச்சுடுவேன்" என்று எச்சரித்தார். ஒரு கையில் சாராய புட்டி, வறுத்தகறியும் இன்னொரு கையில் குடையுடன் வேகமாக நடந்த பாரதிக்கு பரீட்சையின் பயம் ஒரு பக்கம், வாத்தியார் பார்த்துவிடுவாரோ என்னும் பயம் மறுபக்கம். யாரைப் பார்த்தாலும் வாத்தியார் போலவே தோன்றியது.

பாரதி பிடித்திருந்த குடை அவன் வீட்டுக் கூரையைப் போலவே பல ஓட்டைகளோடு இருந்தது. வீட்டில் ஒழுகும் மழைத் தண்ணீரை அவன் தாய் பாத்திரம் வைத்துப் பிடித்து தரை நனையாமல் பார்த்துக்கொள்வதை நினைத்துக்கொண்டான். கொட்டும் மழையில் வேகமாக நடந்த பாரதி, பரீட்சைக்குப் படிக்க வேண்டும் என்னும் பயத்தில் குடையை மடித்துக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்த மழை அவனை முழுமையாக அணைத்தது. தன் தந்தையின் காலணிகளோடு வேகமாக ஓடியவன் திடீரென்று கல் தடுக்கிக் கீழே விழுந்தான். அவன் கை சாராய புட்டியை விடவில்லை என்றாலும் கல் பட்டு உடைந்த புட்டி அவன் கையைக் குத்தியது.

இரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாத பாரதி சிதறிப்போன கறித் துண்டுகளைத் தேடினான். இருள் சூழ்ந்திருந்ததால் அவன் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை. மிகவும் பதற்றத்தோடு வீட்டிற்கு வந்தான்.

வெறுமையாய் வந்த பாரதியைக் கண்டதும் துரைராஜுக்குக் கோபம் கண்களை மறைத்தது. நடந்ததைச் சொல்லியும் பாரதியின் கன்னங்களும், கால்களும் வீங்கும்வரை விடவில்லை. தடுக்க வந்த கண்ணம்மாவிற்கும் அடி விழுந்தது. துரைராஜுக்குச் சாராயத்தின் மீது அவ்வளவு ஆசை, இல்லை வெறி.

பாரதி படித்த பள்ளியில் ஏழாம் வகுப்பு வரைதான் இருந்தது. அந்த வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். "பாரதிக்கு வசதிதான் இல்லை, ஆனா ரொம்பத் திறமைசாலி. அவன் படித்துப் பெரிய ஆளாக வருவான், அவனை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள்" என்றார் பள்ளி வாத்தியார்.

இவ்வளவு கஷ்டத்திலும் தன் மகன் படிப்பதை நினைத்துக் கண்ணம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

"பாரதியை வேற பள்ளிக்கூடத்துல சேக்கணும்.எப்படியும் ரெண்டாயிரத்துக்கு மேல ஆவும்னு சொல்றாங்க...".

"என்னடி ஆட்டமா இருக்கா? அவன் படிச்சது போதும் அவன வேலைக்கு அனுப்ப முடிவு பண்ணியிருக்கேன். குறுக்க பேசாம நான் சொல்ற மாதிரி கேளு. சும்மா இருக்கறவனத் தூண்டி விட்டுன்னு இருக்காத, என்னை மீறி ஏதாவது செய்த... " என்றவன், பாரதியைப் பார்த்து "ஏய் பாரதி, நீ படிச்சி என்ன பெரிய டாக்டர் ஆவப் போறியா இல்ல இந்த ஜில்லா கலெக்டரா வரப்போறியா? எதாவது வேல வாங்கித் தரேன் அத ஒழுங்காச் செய்தா போதும். ஏதாவது அடம் பிடிச்ச... என்னப்பத்தி தெரியுமில்ல? உங்க அப்பன் பெயிண்ட் வேல செய்றத மறக்காத" என்றான்.

பாரதி தன் தாயிடம் "அம்மா என்ன வேலைக்கு அனுப்ப வேண்டாம்மா, நான் பெரிய டாக்டரா ஆகணும்" என்றான்.

"உனக்குப் படிப்பு மேல இருக்கும் ஆர்வத்த நெனச்சி நான் சந்தோஷப்படறதா, இல்ல துக்கப்படறதான்னு தெரியல. பெயிண்ட் வேல செய்தாலும் கை நிறையதான் சம்பளம் வாங்குறாங்க ஆனா என்ன பிரயோஜனம், எல்லாத்தையும் குடிச்சே அழிக்கிறாங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச தையல் வேலையச் செய்துதான் இந்த வீட்டுக்கு வாடகை கட்டமுடியுது, நம்ம வயிறும் ரொம்புது. நம்மைப் படச்ச கடவுள்தான் நம்மைக் காப்பாத்தணும்" என்றவள் பாரதியைக் கட்டி அணைத்து அழுதாள்.

விடுமுறை என்றாலே மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆனால் பாரதி மட்டும் ஏதோ இழந்தவனைப் போல் இருந்தான். அவனுடைய சிந்தனை யெல்லாம் தன் படிப்பைப் பற்றியே இருந்தது. ஆயிரம் ஆயிரம் கனவுகள் அவன் கண்களில். அந்தப் பிஞ்சு மனதை அவன் தாய் புரிந்துக்கொண்டாலும் அவள் செய்வதறியாமல் தவித்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிய துரைராஜ் "பாரதி, உனக்கு வேல பாத்தாச்சி. வர திங்கக்கிழமை சேந்தாப் போதும்னு சொன்னாங்க இன்னும் மூணு நாள் இருக்கு ஒழுங்காப் போயிட்டு வரணும். இனி படிப்பைப் பத்தி எல்லாம் நெனச்சிக்கூடப் பாக்கக்கூடாது. என்னடா காதுல விழுதா?" என்றான்.

"சரிப்பா."

"என்னங்க, பாரதி படிக்க ஆசைப்படுறான். இப்ப எதுக்கு வேலைக்கு அனுப்பணும். உங்கள மாதிரி வேலை செய்றவங்க படிக்கவைக்கும் போது நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க?"

"என்னடி, ரொம்பப் பேசுற" என்றபடிக் கண்ணாம்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் துரைராஜ்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை சற்றுத் தாமதமாக எழுந்த கண்ணம்மா, படுக்கையில் பாரதி இல்லாததைக் கண்டு பதற்றத்தோடு தன் கணவனை எழுப்பினாள். குடிபோதை தெளியாமல் இருந்த துரைராஜ் "எங்காவது வெளியில இருப்பான், போய்ப் பார்" என்று சொல்லிவிட்டு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தான். வெளியில் சென்று பார்த்த கண்ணம்மா, பாரதியைக் காணாமல் தவித்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கண்களில் ஏதோ கடிதம் தெரிந்தது. அதைப் படித்த கண்ணம்மா கதறி அழுது தன் கணவனை எழுப்பி அவனிடம் நீட்டினாள். அந்தக் கடிதத்தில் "அம்மா, அப்பா, நான் வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்" என்று எழுதி இருந்தது. அதைப் படித்த துரைராஜ் போதை தெளிந்தவனாக ஆவேசத்தோடு கத்தினான்.

"பாத்தியாடி உன் பையன் என்ன காரியம் பண்ணிட்டான். அவன் பொறந்தப்பவே கழுத்தை நெரிச்சி கொன்னு இருக்கணும். அதைச் செய்யாம விட்டது என் தப்பு. வேலை செய்ஞ்சு காசு சம்பாரிச்சுக் கொடுப்பான்னு நினைச்சி வேலை வாங்கிக் கொடுத்தா, என்னை ஏமாத்திட்டுப் போயிட்டான்."

"கொளந்த வீட்டை விட்டுப் போனத நெனச்சி வருத்தப்படாம இப்படிக் கத்திட்டு இருக்கீங்களே! பெத்த புள்ளமேல கொஞ்சமாவது பாசம் இருக்கா? அவன் எங்க போனான்னு போய்ப் பாருங்க" என்று அரற்றினாள் கண்ணம்மா.

"நான் ஏண்டி அவனத் தேடிப்பாக்கணும், ஒளுங்கா வளக்கத் தெரியாதவ நீ, என்னைப் பாசம் இருக்கான்னு கேக்குறியா. உன்னை வந்து பேசிக்கிறேன்" என்றவன் சட்டையை மாட்டிக்கொண்டு சாராயக் கடையை நோக்கிப் போனான்.

தெரிந்த இடங்களில் எல்லாம் தேடியும் பாரதி கிடைக்கவில்லை. மகனின் பிரிவைத் தாங்க முடியாத கண்ணம்மா மிகவும் கலங்கிப்போனாள். அம்மா, அம்மா என்று அவளையே சுற்றி வருவான். ஒரு சில நாட்கள் தன் வேலையிலும் ஈடுபட முடியாமல் இருந்தாள்.

மனக் கஷ்டத்தோடு இருந்த கண்ணம்மா தன்னைத்தானே தேற்றிக் கொண்டு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தாள். அதிகாலையில் எழுந்து, கணவனுக்குச் சமைத்து வைத்துவிட்டு, வீட்டிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு நான்கு மணி நேரம் துப்புரவுப் பணி செய்துவிட்டு, அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் காலனியில் ஐந்து வீடுகளில் வேலை செய்துவிட்டு, மாலை நான்கு மணிக்கு வீடு திரும்புவாள். இரவுக்கான சமையலை முடித்துவிட்டுத் தையல் வேலையைத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாமல் செய்துகொண்டு இருப்பாள். மழை, காற்று, வெயில், குளிர் என்று பாராமல் இரவும் பகலும் ஓயாமல் உழைத்தாள். கண்ணம்மா ஒரு நாளும் ஓய்ந்திருக்கவில்லை.

அவள் உழைப்பைப் பார்த்த சிலர் "பெத்த புள்ள வீட்டை விட்டு போயிட்டான், இன்னும் இவ யாருக்காக இப்படி உழைக்கிறாளோ" என்றனர். இப்படிக் கேட்பவர்களுக்கு அவள் சொல்லும் பதில் "எதுவும் செய்யாம இருந்தா பாரதி ஞாபகமாகவே இருக்கு. இப்படி வேலை செய்தாலும் கவனம் வேலையில போகும்" என்பாள். தன் கணவனுக்காக எல்லாப் பணிவிடையும் செய்தும் அவன் நச்சரிப்பு ஓயவில்லை. சில நேரங்களில் சந்தேகத்தோடு கண்ணம்மாவைப் பின்தொடர்ந்து சென்றான். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல பதினொரு ஆண்டுகளுக்கு மேல் அவளுடைய உழைப்பும் அவனுடைய நச்சரிப்பும் தொடர்ந்தது. ஆனால் ஒரு போதும் அவள் சோர்ந்து போகவில்லை.

"பாரதி வீட்டை விட்டுப் போய் இத்தன வருஷம் ஆச்சி. இதுவரைக்கும் அவன் எங்க போனான்னு தேடிப்பாத்து இருக்கீங்களா?"
"என்னடி அந்த ஓடுகாலுப் பையன இன்னும் நெனச்சிட்டு இருக்க, அந்த நாய எங்க பாத்தாலும் வெட்டிப் போடாம விடமாட்டேன். இன்னொரு முறை அவன் பேச்சை எடுத்த உன்னை என்ன பண்றன்னு பாத்துக்கோ". என்றான் துரைராஜ்.

சில நாட்களுக்குப் பிறகு...

எப்பொழுதும் அதிகாலையில் செல்லும் கண்ணம்மா, அன்று தாமதமாகச் சென்றாள். இத்தனை ஆண்டுகளாக இருந்தது போல் இல்லாமல் அன்று அவள் ஏதோ வித்தியாசமாகக் காணப்பட்டாள். அன்றும் சந்தேகத்தோடு கண்ணம்மாவைப் பின் தொடர்ந்தான் துரைராஜ்.

அதிக நேரம் காக்க வைக்காமல் கண்ணம்மா போக நினைத்த பேருந்து வந்தது. சுமார் ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பிறகு அவள் இறங்கும் இடம் வந்தது. கண்ணம்மா ஏதோ கல்லூரிக்குள் நுழைவதைப் பார்த்த துரைராஜ் அவள் பின் சென்றான். அந்தக் கல்லூரியே விழாக் கோலம் கொண்டிருந்தது. வரவேற்பறையில் இருந்தவர்கள் கண்ணம்மாவை வரவேற்று, விழா நடக்கும் இடத்தில் முதல் வரிசையில் அமரச்செய்தனர். அவள் கண்கள் இங்கும், அங்குமாக அலைபாய்ந்தது.

விழா ஆரம்பமானது. முதலில் ஒரு சிலர் பேசினர். முக்கிய விருந்தாளியாக விழாவில் கலந்துகொண்ட மாநில முதல்வரைப் பேச அழைத்தனர்.

பொதுவாக கல்லூரிகளைப் பற்றியும் மாணவர்களைப் பற்றியும் பேசிய முதல்வர், தொடர்ந்து பேசியனார், "இங்கு இருப்பவர்களில் சிலரைப் பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் கல்லூரியில் நீங்கள் சேர்ந்தபோது வெவ்வேறு சூழ்நிலைகளில் சேர்ந்து இருப்பீர்கள். ஆனால் என்னை மிகவும் பாதித்த ஒருவர் இங்கு இருக்கின்றார். குழந்தைகள் படிக்கவில்லை என்று அடிக்கும் பெற்றோருக்கு மத்தியில் குழந்தைகள் படிக்கக் கூடாது என்று அடிக்கும் பெற்றோரும் உண்டு என்று சொல்லிக்கொள்ள மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், குடிப் பழக்கத்திற்கு ஆளான கணவனால் கஷ்டப்படும் பெண்கள் ஏராளம், அதை எதிர்த்து நின்று வெற்றி நடை போடும் பெண்கள் சிலரே. இங்கு ஒரு சிறந்த தாயைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். படித்து, பெரிய டாக்டராக வரவேண்டும் என்று ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இருந்த குழந்தைக்குத் தன் தந்தையே தடைக்கல்லாக இருப்பதைத் தெரிந்து, மகனுக்குப் பனிரெண்டு வயது இருக்கும்போது அவன் வீட்டை விட்டுப் போய்விட்டான் என்று தன் கணவன் நம்பவைத்து, அந்தக் குழந்தையை தங்கும்விடுதியில் சேர்த்து, இரவும் பகலும் ஓயாமல் உழைத்து, இன்று ஒரு சிறந்த டாக்டராகப் படிக்க வைத்து இருக்கின்றார்கள். நல்ல வசதியோடு வாழ்பவர்களுக்குத் தான் எல்லா லட்சியங்களும், கனவுகளும் இருக்க வேண்டும் என்னும் தப்பான உணர்வை மாற்றி, வாழ்க்கையில் உழைப்பு என்பது இருந்தால் எல்லா லட்சியங்களையும் தொட்டு விடலாம் என்று நிரூபித்து இருக்கும் திருமதி. கண்ணம்மாவை மேடைக்கு அழைக்கிறேன்".

ஓயாத இடி முழக்கம் போன்ற கை தட்டலுக்கு மத்தியில் வந்த கண்ணம்மாவின் கண்களில் நீர் பெருகியது. அவள் வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்து விட்டாள். இத்தனை காலம் உழைத்ததின் பலன் இன்று கிடைத்துவிட்டது.

"மேலும் தன் தாய் தனக்காக ஓயாமல் உழைப்பதை உணர்ந்து, படிப்புதான் தன்னுடைய வாழ்க்கை என நினைத்து, தன் லட்சியத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு, வெற்றியடைந்த டாக்டர். பாரதியை மேடைக்கு அழைக்கிறேன். அவர் மேற்கொண்டு படிக்க வெளிநாட்டிற்குச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுப்போம். அதற்கான முழுச் செலவையும் இந்த அரசு ஏற்கும். பாரதி திரும்பி வரும்வரை அவருடைய குடும்பத்திற்கான எல்லாச் செலவையும் அரசாங்கமே ஏற்கும்" என்றார்.

பாரதி ஆனந்தக்கண்ணீரோடு தன் உயிருக்கு உயிரான தாயைக் கட்டி அணைத்தான். தன்னைப் போலப் படிக்க ஏங்கும் குழந்தைகளுக்கும், தன் தாயைப்போல வாழ்க்கையில் போராடும் பெண்களுக்கும் உதவி செய்வதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைத்துக் கொண்டான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துரைராஜுக்குள் ஒரு மனிதன் விழித்து எழுந்தான்.

ஷீலா ஸ்ரீனிவாஸ்
More

அவுட் சோர்சிங்
Share: 


© Copyright 2020 Tamilonline