டெட்ராய்ட்டில் இந்தியா நாள்-2004 லேன்சிங் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா மீரா ஸ்ரீராம் நடன அரங்கேற்றம் ரசிகாவின் இன்னிசை மழை சுவாமி சுகபோதானந்தாவின் அமெரிக்கப் பயணம்
|
|
'ஆவாரம்பூ' கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சி |
|
- |செப்டம்பர் 2004| |
|
|
|
சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தனது வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ஜூலை 11, 2004 அன்று 'ஆவாரம்பூ' தமிழ் கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா குப்புசாமி மற்றும் குழுவினர் வழங்கிய தமிழ் கிராமியப் பாடல்கள். உள்ளூர்க் குழந்தைகளின் கிராமிய நடனங்கள். மற்றும் மன்றத்தின் பழைய, புதிய செயற்குழுவினர், ஆயுள் உறுப்பினர்கள் கெளரவிப்பு ஆகியவை இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சி 'தமிழ்ப் பண்பாட்டு மையம்' நிறுவும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையிலும் அமைந்திருந்தது.
அனு சுரேஷ் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியை மணி ராம் தொகுத்து வழங்கினார். தனது தொகுப்புரையின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் கிராமியக்கலைகளைப் பற்றி விபரமாகப் பேசினார். பிறகு தமிழ்மன்றத்தின் தலைவர் மணி மு. மணிவண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து வளைகுடாப்பகுதிவாழ் சிறுவர், சிறுமியரின் கிராமிய நடனங்கள் நடைபெற்றன. புஷ்பவனம் தம்பதியர் பாடி வெளியிட்டு இருந்த ஒலிப்பேழைகளில் இருந்து கரகாட்டம், கோலாட்டம் மற்றும் கும்மி பாடல்களுக்கு நான்கு குழுக்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் நடனமாடியது அருமையாக இருந்தது. இவர்களின் அலங்காரம் மற்றும் மேடையலங்கரப் பொருட்கள் பார்ப்பவர்களை கிராமங்களுக்கே அழைத்துச் சென்றது.
வெள்ளிவிழா ஆண்டையொட்டி, மன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் அனைவரையும் மேடையில் அழைத்து கவுரவித்தனர். இவர்களை மேடையில் வரவேற்றுப் பேசிய தலைவர் "25 ஆண்டுகளுக்கு முன்பு சில குடும்பங்களோடு ஆரம்பிக்ப்பட்ட தமிழ்மன்றம், வளர்ந்து இன்று வெள்ளிவிழாவைக் கொண்டாடுகின்றது என்றால், அதற்கு மேடையில் இருக்கும் அத்தனை உறுப்பினர்களின் அயராத உழைப்புதான் முக்கிய காரணம்" என்று புகழ்மாலை சூட்டினார். மன்றத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் உறுப்பினர்களுக்கும், அவர்தம் குடும்பங்களுக்கும், வளைகுடாப்பகுதி தமிழர்களுக்கும் மன்றத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் இளைய தலைமுறையினரிடையே தமிழ்ப் பயன்பாட்டையும், பண்பாட்டையும் வளர்க்க உதவும் வகையில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தமிழ்ப்பண்பாட்டு மையத்தை (Tamil Cultural Center) பற்றிச் சிறு அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்திற்கு அன்பளிப்பாக கிரியா கிரியேஷன்ஸ் மற்றும் நாடகக் குழுக்களைச் சேர்ந்த வேணுசுப்ரமணியன் மற்றும் மணி ராம் ஆகியோர் நன்கொடைக் காசோலைகள் வழங்கினர்.
அடுத்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இசைநிகழ்ச்சி தொடங்கியது. தங்களது பாட்டாலே வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் கூறி ஆரம்பித்த புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்களின் இளை மழையில், அனைவரும் நனைந்தனர். இவர்களது குழுவில் இந்தியாவில் இருந்து வந்த கலைமாமணி கோவை நடராஜன் கீபோர்டையும், இராஜகோபாலன் தபேலாவையும், சுகுமாரன் உடுக்கை மற்றும் தப்பு (பறை) வாத்தியங்களையும், கிணத்தடியான் தவில் மற்றும் உறுமி வாத்தியங்களையும் வாசித்தனர். இது மட்டுமல்லாது வளைகுடாப்பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் அருளாந்து தபேலாவையும், ஸ்ரீதரன் மைனர் தாளத்தையும் வாசித்தனர். சில கர்னாடக சங்கீத இராகங்கள் (குறிப்பாக கரகரப்ரியா ராகம்) கிராமிய இசையில் இருந்துதான்வந்தன என்பதை கிராமிய, கர்னாடக மற்றும் திரைப்படப் பாடல்கள் பாடி, குப்புசாமி விளக்கியபோது அரங்கமே அதிரும்படி கைதட்டல்கள் இருந்தன. இடையிடையே அவர் நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். "சீனிவாசன்" என்ற பெயரை தமிழில் "எறும்பு" என்று சொல்லியபோது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவருக்கு இணையாக அனிதா குப்புசாமியும் சில பாடல்களைப் பாடினார். இவரும், மகள் பல்லவியும் சில மழலையர் பாடல்களைப் பாடியது கேட்பதற்கு இனிமையாக இருந்தது. சுமார் இரண்டரை மணிநேர இசைக்குப் பிறகு இடைவேளை விடப்பட்டது. |
|
இடைவேளைக்குப் பின் இசைநிகழ்ச்சி மறுபடியும் தொடங்கியது. அப்போது மேடைக்கு முன்னால் இருந்த நடனமாடும் இடம் திறந்து விடப்பட்டது. இப்போது புஷ்பவனத்தார் வேகமான பாடல்களைப் பாட, இசைக்கருவிகள் ஈடுகொடுக்க அவ்வளவு நேரம் கால்களைக் கட்டி வைத்திருந்த இரசிகர் கூட்டம் ஆடத் தொடங்கியது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தம்மை மறந்து ஆடினர். கடைசியாக நன்றி கூறும் வகையில் ஒரு பாட்டுப்பாடி தனது இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தமிழ் இசைக்கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இறுதியில் மன்றத்தின் உதவித் தலைவர் கருணாகரன் பழனிச்சாமி நன்றியுரை நிகழ்த்த, விழா முடிவடைந்தது. வளைகுடாப்பகுதியில் முதன்முதலாக நடத்தப்பட்ட இந்தக் கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சி பார்த்தவர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்ததற்கு வெளியில் விற்பனையான குப்புசாமி தம்பதியினரின் இசை குறுந்தகடுகளின் எண்ணிக்கையே சான்று. |
|
|
More
டெட்ராய்ட்டில் இந்தியா நாள்-2004 லேன்சிங் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா மீரா ஸ்ரீராம் நடன அரங்கேற்றம் ரசிகாவின் இன்னிசை மழை சுவாமி சுகபோதானந்தாவின் அமெரிக்கப் பயணம்
|
|
|
|
|
|
|