மஹீதா பரத்வாஜ் பரதநாட்டியம் க்ரியாவின் 'Seeds and Flowers' தமிழ்நாடு அறக்கட்டளை: மில்வாக்கியில் ஈகைத் திருவிழா கர்நாடக சங்கீத அரங்கேற்றம்: ஷாம்லி அல்லம் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா சிகாகோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா நியூயார்க் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் விழா
|
|
|
கான்கார்டில் அமைந்துள்ள சிவா முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு, சங்கீதாலயா கர்நாடக இசைப் பள்ளி 'Odyssey of Music' என்ற நிகழ்ச்சியை மே 13 அன்று கபர்லி அரங்கில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி, கர்நாடக சங்கீதத்தின் முன்னோடிகளான அன்னமாசார்யா, புரந்தரதாசர், வேங்கடமகி, ஷ்யாமா சாஸ்திரி, தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆகியோரின் வரலாற்றையும், அவர்கள் இசைத் தொண்டையும் விளக்குவதாக அமைந்திருந்தது.
பள்ளியின் நிறுவனர் ஹேமா சிச்டா அவர்கள், டாக்டர் எம்.எல். வசந்தகுமாரியின் சிஷ்யை. குருவின் பாணியைப் பின்பற்றிச் சங்கீத நுணுக்கங்களைக் கற்பித்து வருகிறார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீகாந்த் சாரி மற்றும் அவருடய மாணவர்கள் வீணை வாசித்தனர். நடராஜன் ஸ்ரீனிவாசன், சின்மயி ராமன் ஆகியோர் மிருதங்கம் வாசித்தனர்.
கோவிலின் கௌசல்யா ஹர்ட் அவர்கள் முன்னுரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 'வாதாபி கணபதிம் பஜேஹம்' என்று ஹம்ஸத்வனி ராகத்தில் ஹேமா சிச்டாவும் அவர் மாணவர்களும் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். அடுத்து,புரந்தரதாசர் மாயாமாளவகௌளை ராகத்தில் வகுத்த சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம் மற்றும் 'பதுமநாபா' என்கிற கீதத்தையும் சிறார்கள் மிக அழகாகப் பாடினர்.
அடுத்துப் பாடிய இளம் மாணவிகளின் 'ராவேமே மகுவா' ஸ்வர ஜ்யதியில் ஆனந்த பைரவி இழைந்தோடியது. பின்னர், மாணவிகள் அன்னமாசார்யா, தியாகராஜர் ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடி. அதன் பின், வேங்கடமகி, கோவிந்தாச்சார்யா அவர்களால் இயற்றப்பட்ட 72 மேளகர்த்தா ராகங்களையும், 12 சக்கரங்களையும் விரித்துரைத்த பதிமூன்றே வயது நிரம்பிய ரிஷிகேஷ் சாரியின் கூர்ந்த ஸ்வர, லய ஞானம், அவயோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த பாடல் ஷ்யாமா சாஸ்திரியின் பைரவி ராகத்தில் அமைந்த 'கஞ்சி காமாக்ஷி' ஆகும். முதல் பகுதியின் நிறைவாக, மோஹன ராகத்தில் அகிலேஷ் சிச்டா, தாசரதி ரகுநாதன், ரிஷிகேஷ் சாரி ஆகியோர் ராக ஆலாபனை செய்தனர். அதே ராகத்தில் அடுத்தபடியாக அவர்கள் பாடிய தீக்ஷிதரின் 'கோபிகா மனோஹரம்' என்ற கீர்த்தனை மனோஹரமாகவே இருந்தது.
இதனை தொடர்ந்த ஹேமா சிச்டா அவர்களின் நிகழ்ச்சி, கர்நாடக சங்கீதக் கச்சேரியின் முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்துமாறு அமைந்திருந்தது. அவருடன், பிரசன்னா ஆனந்த் (வாய்ப்பாட்டு), அகிலேஷ் சிச்டா (வீணை), நடராஜன் ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்) ஆகியோர் கச்சேரிக்கு மெருகூட்டினர். இடையிடையே ஸ்ரீகாந்த் சாரி அவர்கள் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிக் கொடுத்த தெளிவான விளக்கங்கள் கேட்போருக்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தன. |
|
ஹேமா தன் கச்சேரியை முருகப் பெருமானின் மேல் நீலாம்பரி ராகத்தில் அமைந்த தமிழ்ப் பத வர்ணத்துடன் தொடங்கினார். தான் இயற்றிய அமிர்தவர்ஷிணி ராக கணபதி வணக்கம், தியாகராஜரின் ஒரு வகுளாபரண கீர்த்தனை ஆகியவற்றை அடுத்தடுத்துப் பாட, கச்சேரி களைகட்டியது. இதனை தொடர்ந்தது தர்மாவதியில் அமைந்த ராகம் தானம் பல்லவி. இதன் பல்லவியை இயற்றிய ஹேமா சிச்டா, மத்யமாவதி, மானாவதி, கலாவதி, ரேவதி என்று ராகங்களை வரிசைப்படுத்தி கல்பனா ஸ்வரங்கள் பாடினார். பல்லவியில் அவர் ரேவதி ராகத்தில் ஸ்ருதி பேதம் செய்து பின் சுனாதவினோதனிக்குச்சென்றது, காதுகளில் இன்பத் தேனாகப் பாய்ந்தது. பல்லவியை முடிக்கும் முன்பு அவர் ராகங்களை மாற்று வரிசயில் பாடி ரேவதியில் ஆரம்பித்து தர்மாவதியில் முடித்தது அவையோரின் பாராட்டைப் பெற்றது. பின்னர் எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் இசையமைத்த ராகமாலிகையில் அமைந்த அஷ்டபதியைப் பாடி குருவந்தனம் செய்தார். லால்குடி ஜயராமன் அவர்களின் தில்லானா ஒன்றை மிஸ்ர சிவரஞ்சனியில் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
சங்கீத ஒடிஸி செவிக்கு இனிய விருந்தாக அமைந்ததோடு மட்டுமல்லாது, ஒரு கர்நாடகக் கச்சேரியின் அமைப்பையும், அதன் அனைத்து சாராம்சங்களையும் விரிவாக எடுத்து இயம்புவதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹி சங்கரநாராயணன் |
|
|
More
மஹீதா பரத்வாஜ் பரதநாட்டியம் க்ரியாவின் 'Seeds and Flowers' தமிழ்நாடு அறக்கட்டளை: மில்வாக்கியில் ஈகைத் திருவிழா கர்நாடக சங்கீத அரங்கேற்றம்: ஷாம்லி அல்லம் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா சிகாகோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா நியூயார்க் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் விழா
|
|
|
|
|
|
|