|
மிஷிகன்: பூங்காவுக்கு வந்த கொலு-வலம்! |
|
- |ஜனவரி 2025| |
|
|
|
|
நவராத்திரித் திருவிழா பாரதம் எங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிற ஒன்றாகும். மிஷிகனில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
கொலு என்பது, பல்வேறு இந்திய தேவி தேவதைகள், காவிய பாத்திரங்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொம்மைகளின் பாரம்பரியக் காட்சியாகும். இதில் பறவைகள், விலங்குகள், மரங்கள் போன்ற இயற்கைக் கூறுகளும் அடங்கும். கர்நாடக இசை மற்றும் நடனம் திருவிழாவின் ஒரு பெரிய பகுதியாகும். குழந்தைகள் கொலுக் காட்சிக்கு முன்னால் பாடுவார்கள். விருந்தினர்களுக்குப் பிரசாதம் வழங்குவதோடு அன்றைய மாலை நிகழ்ச்சி முடிவடையும்.
GLACmichigan.com 34வது மிஷிகன் நவராத்திரி விழாவை ட்ராய் பாரதீய கோவிலில் நடத்தியது. இதனை ஏராளமான அன்பர்கள் வருகை தந்து ரசித்தனர்.
மிஷிகனில் பல நூறு குடும்பங்கள் உள்ளன. அவர்கள் வீட்டில் கொலு வைத்து நண்பர்கள், குடும்பத்தினரை அழைப்பார்கள். அப்போது, எங்கு போவது எதை விடுவது என்பது உண்மையான பிரச்சினை!
இரண்டு நண்பர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நினைத்தனர். கொலு-வலம் (கொலு ஆன் வீல்ஸ்) உருவானது இப்படித்தான். சுபா கணபதி மற்றும் வித்யா வெங்கடேஷ் புதுமையான மொபைல் கொலு ஒன்றை வடிவமைத்தனர்!
ஒரு டிரக்கில் கொலுவை அமைத்து உள்ளூர்ப் பூங்காக்களுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு யாவரும் இயற்கைச் சூழலில் ஒரு பாரம்பரிய நிகழ்வை அனுபவிக்க முடிந்தது. “உலகளாவிய கொலு வரலாற்றில் இது முதல் முறையாகச் செய்யப்பட்டுள்ளது," என்று ராஜே ரவி கூறினார். அவர் இந்த முயற்சிக்கு நிகழ்வு அமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பூங்கா அனுமதி பெறுவதுவரை அனைத்திலும் உதவினார்.
நோவி, ட்ராய் ஆகிய இடங்களில் அழகிய இலையுதிர் காலத்தை அனுபவிக்க நண்பர்கள் திரண்டனர். நவராத்திரிப் பண்டிகை காலத்தில் இந்திய கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கப் பூங்காவில் மக்கள் திரண்டனர். இது மற்றப் பூங்கா ஆர்வலர்களிடமும் சிகாகோ, டொராண்டோ போன்ற அண்டை நகரங்களிலும், ராலே போன்ற தொலைதூர நகரங்களிலும் 'கொலு-வலம்' ஆர்வத்தைத் தூண்டியது. உள்ளூர்ப் பத்திரிகை நிருபர்களும் இதைக் குறித்துக் கட்டுரைகள் எழுதினர். |
|
தகவல்: விபா கணபதி, ட்ராய், மிஷிகன் |
|
|
|
|
|
|
|