|
மாவிந்த புராணம் |
|
- |ஜனவரி 2025| |
|
|
|
|
சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைக்கு, இராசதானிக் கலாசாலையில் வடமொழிப் பேராசிரியாரக இருந்த ராவ்பகதூர் ம. ரங்காசாரியார் அதிபராக இருந்தார். நான் சென்னப்பட்டணத்துக்கு வேலையாக வந்த ஆரம்பத்தில் புதிதாக எழுதப்பெற்று வந்த அப்புத்தகசாலைத் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகளின் விரிவான அட்டவணையை அவர் என்னிடம் காட்டினார். அந்தப் புத்தகசாலை பெரும்பொருள் செலவிட்டு அமைக்கப் பெற்றது. பலர் அதில் வேலையில் அமர்ந்து உழைத்து வந்தார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றிலுள்ள ஏட்டுச் சுவடிகளும் அதில் உண்டு.
புத்தகசாலைத் தலைவர் அப்புத்தக அட்டவணையை என்னிடம் கொடுத்து, "எங்கள் புத்தக சாலையில் இந்த அட்டவணையைத் தொகுத்து எழுதியிருக்கிறோம். இதைக் கவனித்து ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் செய்து கொடுத்தால் அநுகூலமாக இருக்கும்" என்றார். அந்த அட்டவணையில் பல தமிழ்நூல்களின் பெயர்கள் காணப்பட்டன. அப்பெயர்களிலே சில சில பிழைகளும் இருந்தன.
ஏட்டுச் சுவடிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடைய எனக்கு அக்கனவான் அளித்தவேலை 'கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல்' இருந்தது. அப்புத்தகசாலையில் இன்ன இன்ன சுவடிகள் உள்ளனவென்பது தெரிந்து எனக்கு ஏதேனும் உதவுமானால் பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
ஆதலால் அந்த அட்டவணையை ஆவலோடு பார்த்தேன். பல பிரபந்தங்கள், புராணங்கள், இலக்கணங்கள், சாஸ்திரங்கள், வைத்தியம், சோதிடம் முதலிய பலவகை நூல்களின் பெயர்களை அதிற் கண்டேன். சங்கநூல்கள் அதிகமாக இல்லாவிடினும் பிற்காலத்து நூல்கள் பல இருந்தன. அச்சிட்ட புத்தகங்களாக இருந்தாலும் ஏட்டுச்சுவடிகளின் உதவியால் பல அரிய திருத்தங்கள் கிடைக்கும். ஆதலால் ஏட்டுச் சுவடிகளை நான் எங்கேனும் காணும்போது, இவை அச்சிடப்பட்டவை என்று நினைத்து அலக்ஷியமாக இருப்பதில்லை. அச்சுப் பிரதிகளில் பலகாலமாகத் தீராமல் இருந்த சந்தேகங்கள் ஏடுகளிலே கண்ட பாட பேதங்களினால் தெளிவாகியதுண்டு. ஆதலின் மேலே கூறிய புத்தகசாலையிலுள்ள சுவடிகளை இயன்றவரையில் மிகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று கருதினேன்.
புத்தக அட்டவணையைக் கூர்ந்து பார்த்து வந்தேன். புராண வரிசையிலே மாவிந்த புராணம் என்ற ஒரு பெயரைக் கண்டேன். அப்பெயரை அதற்குமுன் நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; தரும புத்திரரது பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள வரலாறுகளைக் கூறுவதாகிய மாவிந்தமென்ற ஒரு நூல் உண்டு. அது மிகவும் எளிய நடையில் அமைந்தது. அதுவாக இருக்கலாமென்று முதலிலே எண்ணினேன். அப்பால், 'மாவிந்த புராணமென்று இருப்பதனால் அந்த நூல் ஒரு ஸ்தல புராணமாக இருக்குமோ' என்ற ஐயம் எனக்கு உண்டாயிற்று. மாவிந்தமென்ற ஸ்தலம் எங்கே உள்ளதென்று யோசித்தேன். அப்படி ஒரு ஸ்தலம் இருப்பதாக எனது ஞாபகத்துக்கே வரவில்லை. தேவியை விந்தாசனி என்று கூறுவதுண்டு. விந்தகிரியில் எழுந்தருளியிருக்கும் தேவியின் புகழைக் கூறும் புராணமாக இருக்கலாமோ என்று கருதினேன். வேறு சமயத்தாருக்குரிய நூலாக இருக்குமோ என்ற ஐயமும் இடையே எழுந்தது.
வசவ புராணம், சாந்தி புராணம் முதலிய வேறு மதநூல்களின் பெயர்கள் அப்போது என் ஞாபகத்திற்கு வந்தன. 'சரி, அந்தப் புத்தகத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்யவேண்டும்' என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
எனக்கு இருந்த ஆவலினால் விரைவில் அந்தப் புத்தகசாலைக்குச் சென்றேன். அங்கே சுவடிகளைப் பலர் பார்த்துப் படிப்பதற்கும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கும் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற்குரிய வேலைக்காரர்களும் இருப்பார்கள்.
மாவிந்த புராணத்திற்குரிய எண்ணைக் கூறி அதை வருவிக்கும்படி அங்கிருந்த அதிகாரியிடம் சொன்னேன். அவர் ஒரு வேலைக்காரனை அனுப்பினார். அவன் தன் வழக்கப்படியே அடிமேல் அடிவைத்து அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்துவரச் சென்றான். எனக்கிருந்த மனோவேகத்தை அவன் கண்டானா? அவன்பால் எனக்கு அப்போது மிக்க கோபம் உண்டாயிற்று. என் செய்வது! 'புத்தகம் வராமலா போய்விடும்? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?' என்று சமாதானம் செய்துகொண்டு பொறுத்திருந்தேன்.
வேலைக்காரன் கால்மணி நேரம் கழித்து ஒரு சுவடியைக் கொண்டுவந்து என் கையில் கொடுத்தான். அவசர அவசரமாக அதைப் பிரித்துப் பார்த்தேன். அதில் முற்பகுதியில் சில ஏடுகள் இல்லை. பிரித்தவுடன் முதலில் இருந்த ஏட்டைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய ஆத்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. 'மலை கல்லி எலி பிடித்தது' போல இருந்தது. நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். 'இதற்குத்தானா இவ்வளவு ஆவலோடு ஓடிவந்தோம்!' என்று என் செயலை நானே இகழ்ந்துகொண்டேன்.
"இந்த அட்டவணையைத் தொகுத்த புத்திசாலி யாரோ?" என்று அந்த அதிகாரியை வினவினேன்.
"எங்கள் புத்தகசாலைப் பண்டிதர்" என்றார் அவர்.
"பண்டிதரா?" என்று நான் வியப்போடு கேட்டேன்.
"ஆமாம்" என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.
"அவரை நான் பார்க்கலாமோ?"
"ஆகா! தடையின்றிப் பார்க்கலாம்."
அவர் சொல்லியனுப்பவே பண்டிதர் வந்தார். வரும்போதே அவர் எதையும் லக்ஷியம் செய்யாத இயல்புடையவரென்று தெரிந்தது.
"இந்த அட்டவணையை எழுதியது தாங்களோ?" என்று அவரைக் கேட்டேன்.
"ஆமாம். பின் வேறு யார் எழுதுவார்கள்? நான்தான் ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிரமப்பட்டுக் குறித்தேன்."
"அப்படியா! இதில் மாவிந்த புராணம் என்று ஒரு புத்தகத்தின் பெயர் இருக்கிறதே; அந்தப் பெயரை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"
"எல்லாம் அந்த அட்டவணையிலேயே தெளிவாக இருக்கும். புத்தகம் தானே சொல்லுமே. அதைப் பார்த்தால் எல்லாம் தெரியும்."
"அட்டவணையைப் பார்த்துத்தான் புத்தகத்தைத் தேடினேன். இதோ இருக்கிறது அந்தச் சுவடி. இதன் பெயர் மாவிந்த புராணமென்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்."
"ஆமாம். நான்தான் நன்றாக ஆராய்ந்து ஊகித்துக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறேன்."
எனக்கு அவருடைய இயல்பைக் கண்டு சிரிப்பு ஒரு பக்கமும் கோபம் ஒரு பக்கமும் வந்தன.
"எதைக் கொண்டு ஆராய்ந்தீர்கள்?" என்று மீண்டும் வினவினேன்.
"இங்கே கொடுங்கள் அதை. நான் சொல்லுகிறேன்" என்று பண்டிதர் அந்தச் சுவடியை என் கையிலிருந்து வாங்கிக்கொண்டார். அதில் உள்ள செய்யுளை அவர் படித்தார். "மாவிந்த மென்னும் வளநாக கூற லுற்றாம்" - என்ற பகுதி முதலில் இருந்தது. அதைப் படித்துக் காட்டி, "இந்தப் பாட்டைப் பாருங்கள். இதில் மாவிந்தமென்னும் பெயர் தெளிவாக இருக்கிறதே. இது தெரியவில்லையா? இந்தப் பெயரே இது மாவிந்தமென்னும் ஸ்தலத்தின் புராணமென்பதை விளக்கவில்லையா? முதற் பக்கத்திலேயே இந்த அடையாளம் இருக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்காமல் என்னைக் கேட்கிறீர்களே" என்று அவர் கூறினார்; முன்பிருந்ததைவிட அப்போது அவர் தொனி மிகவும் கம்பீரமாகவேயிருந்தது. என் அறியாமையால் நான் விஷயத்தைத் தெரிந்துகொள்ளவில்லை யென்பது அவர் எண்ணம்.
அவர் பேசப் பேச எனக்குச் சிரிப்போ தாங்க முடியவில்லை. "நீங்கள் நைடதம் படித்ததுண்டா?" என்று கேட்டேன்.
"நைடதம் படிக்காமலா இருப்பேன்? நான் ஒரு பெரிய வித்துவானுடைய மருமகன்" என்று அவர் சிறிது சினக் குறிப்போடு சொன்னார். உடனே பக்கத்தில் நின்ற வேலைக்காரன் ஒருவனை அழைத்தேன்.
"அப்பா, இந்தப் புஸ்தகசாலையில் நைடதமென்ற புஸ்தகத்தின் அச்சுப் பிரதியிருந்தால் எடுத்துக்கொண்டு வா" என்றேன். அவன் அதைக் கொணர்ந்தான். அதைப் பிரித்து நாட்டுப்படலத்தின் இறுதியிலுள்ள மேற்கூறிய செய்யுளைக் காட்டினேன். பண்டிதர் அதைப் பார்த்தார்:
"கொல்லுலை வேற்க ணல்லார் கொழுநரோ டூடி நீத்த வில்லுமிழ் கலன்கள் யாவு மிளிர்சுட ரெரிக்கு மாற்றால் எல்லியும் பகலுந் தோன்றா திமையவ ருலக மேய்க்கும் மல்லன்மா விந்த மென்னும் வளநகர் கூற லுற்றாம்."
என்பது அச்செய்யுள்.
"நீங்கள் நைடதத்தைச் சரியாகப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இந்தச் சுவடியைக் கொஞ்சம் பின்னாலே புரட்டிப் பார்த்திருந்தால் உங்களுக்கே இது நளன் கதையென்று தெரிந்திருக்கும். போனது போகட்டும். நான் ஏமாற்றம் அடைந்த மாதிரி மற்றவர்கள் ஏமாறாதபடி இந்தச் சுவடியின் பெயரை இனிமேல் நைடதமென்று மாற்றிவிடுங்கள்" என்றேன்.
"படித்ததெல்லாம் ஞாபகத்திலே இருக்கிறதா? ஆயிரத்தில் ஒன்று தவறுவது வழக்கந்தான்" என்ற முணுமுணுப்போடு அப்பண்டிதர் வேறிடஞ்சென்ற விட்டார்.
அப்பால் நான் ராவ்பகதூர் ரங்காசாரியாரவர்களிடம் சென்று புத்தக அட்டவணையை முதலிலிருந்து நன்றாகப் பரிசோதித்தே வெளியிட வேண்டுமென்று தெரிவித்தேன். அங்ஙனமே வேறோரு தக்க பண்டிதரைக்கொண்டு முழுவதையும் பரிசீலனை செய்வித்து அட்டவணையை வெளியிட்டார்கள்.
ஆதாரம்: உ.வே.சா. நினைவுமஞ்சரி - பாகம் 1 |
|
உ.வே. சாமிநாதையர் |
|
|
|
|
|
|
|