|
|
|
திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் சுவாமி அமிர்தானந்தர் கம்பராமாயணச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அருமையான, அறிவு பூர்வமான சொற்பொழிவுகளுக்குப் பெயர் போனவர் அமிர்தானந்தர். தனக்கென ஒரு கூட்டமோ, அமைப்போ ஏற்படுத்திக் கொள்ளாமல் ஆத்மார்த்தமாக ஆன்மீகப் பணியில் ஈடுபட்டிருப்பவர் அவர்.
அன்றைய கூட்டத்திற்கு நூறு, நூற்றி இருபது பேர் வந்திருந்தனர். அமிர்தானந்தரின் சொற்பொழிவை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், அமிர்தானந்தரின் பார்வை மண்டபத்தின் ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வெள்ளை நிற மனிதனை அடிக்கடி தொட்டு வந்தது. ‘இதென்ன, இவன் அயல் நாட்டவனைப் போல் தோன்றுகிறானே? இவனுக்கென்ன என் பேச்சில் ஈடுபாடு ஏற்பட முடியும்? இப்படிக் கவனித்துக் கொண்டு இருக்கிறானே? அதுவும் தவிர இவனுக்குத் தமிழ் தெரியுமா? நாம் பேசுவது புரியுமா?’ என யோசித்தபடி இருந்தார்.
கூட்டம் முடிந்தது. பலர் வந்து அமிர்தானந்தரைப் பாராட்டினார்கள். அமிர்தானந்தர் பார்த்தார். அந்த வெள்ளைக்கார மனிதன் தன்னுடன் பேசுவதற்காகத் தூரத்தில் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்தார். புன்சிரிப்புடன் தலை அசைத்து அருகில் வருமாறு சமிக்ஞை செய்தார்.
அவன் அவரை நெருங்கியபோது கிட்டத்தட்ட மற்ற எல்லோருமே போய் விட்டிருந்தார்கள். அவன் அவரிடம், "என் பெயர் இஷ்டதேவன் மயூரன்" என்றான். அமிர்தானந்தரின் முகத்தில் ஏற்பட்ட வியப்புக் குறியைக் கவனித்த அவன், "சுவாமி, முதலில் என்னைப் பற்றிய விவரங்களைக் கூறிவிடுகிறேன். நான் இப்போது ஒரு பெரிய தேடுதலில் ஈடுபட்டு திசைத் தெரியாமல் திண்டாடுகிறேன். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்."
அமிர்தானந்தர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தார். அவன் தொடர்ந்து பேசினான்.
"ஐயா, நான் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவன். இயற்பெயர் இஸ்து வான் மேயர். என்னைப் போன்ற பலருக்கு ஒரு தடுமாற்றம், இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரா? எனக்குள் இந்த தேடுதல் வேட்கை ஆரம்பமானது. பல மதத் தலைவர்களைச் சந்தித்தேன். என் சந்தேகங்களைக் கேட்டேன். எனக்குத் திருப்தியாக பதில்கள் கிடைக்கவில்லை. நாடு நாடாகப் போனேன். ஓர் ஊரில் சொன்னார்கள், ஆன்மீகத்தில் தலைசிறந்த நாடு இந்தியா என்றார்கள். வட இந்தியாவில் பல முனிவர்களைக் கண்டேன். அவர்களும் என் சந்தேகத்திற்கான சரியான விளக்கங்களை அளிக்கவில்லை. அந்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு வந்தேன். இங்கு தமிழ் கற்றேன். இந்த மொழியினால் ஈர்க்கப்பட்டு என் பெயரை இஷ்டதேவன் மயூரன் என்று மாற்றிக்கொண்டு விட்டேன். இன்று உங்கள் மிக அருமையான ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டேன். எனக்கு நீங்கள் சொல்லுங்கள். ஆண்டவன் என்று ஒருவர் இருக்கிறாரா?"
அமிர்தானந்தர் பார்த்தார். அந்த நடுத்தர வயதுக்காரனின் முகத்தில் ஒரு தீவிரமும், கண்களில் ஒரு தேடுதலும் தெரிந்தது.
புன்னகையுடன் அவனைப் பார்த்துச் சொன்னார். "நிச்சயமாக ஆண்டவன் இருக்கிறார்."
"அதற்கு நிரூபணம்?"
"இருக்கிறது. இன்று நேரமாகிவிட்டது. நான் என் இடத்திற்குத் திரும்ப வேண்டும். நாளை என் இருப்பிடத்திற்கு வாருங்கள் பேசலாம்."
இஷ்டதேவன் முகத்தில் ஒரு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்தது.
"சுவாமி என் கேள்விக் கணையிலிருந்து நீங்கள் தற்காலிகமாக தப்புவதற்காக, இப்படிச் சொல்லவில்லையென நினைக்கிறேன்."
அமிர்தானந்தர் இதற்கும் புன்னகைத்தார்.
"நாளைக்கு வாருங்கள், பேசுவோம்."
அடுத்த நாள் அவன் அமிர்தானந்தர் தங்கியிருந்த இடத்தில் சொன்னபடியே ஆஜராகிவிட்டான்.
ஆனால் அவன் அமிர்தானந்தருடன் முதல் நாள் கேட்ட கேள்வியுடன் பேச்சைத் துவக்கவில்லை. "சுவாமி ஒரு சந்தேகம், கேட்கலாமா?" அமிர்தானந்தரின் தலையசைப்பை கவனித்துவிட்டு அவன் தொடர்ந்தான்.
"சுவாமி, நான் என் தேடுதலில் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். பல மதங்களைப்பற்றி அறிந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை பல மதங்களில் கடவுள் ஆணாகத்தான் இருக்கிறார். ஆனால் உங்கள் மதத்தில் பெண்கள் கூட கடவுளர்களாக இருக்கிறார்கள். ஆண் உருவம், பெண் உருவம் இணைந்து ஒரு கடவுள். அக்கடவுள் பெயர் அர்த்தநாரீசுவரர் என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு உருவம் இருக்க முடியுமா?"
அமிர்தானந்தர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மிகவும் மெதுவாக, ஆனால் தெளிவாகப் பேச ஆரம்பித்தார்.
"மிஸ்டர், இஷ்டதேவன் நீங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் நீங்கள் நேற்று கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்கிறேன். நீங்கள் என்ன கேட்டீர்கள்? கடவுள் இருக்கிறாரா என்றுதானே? அதற்கு என்னுடைய பதில் - இருக்கிறார். இதைத் தொடர்ந்து நீங்கள் என்னை என்ன கேட்டீர்கள்? அப்படி இருக்கிறார் என்றால், அதற்கு நிரூபணம் என்ன? அவரை எனக்குக் காட்ட முடியுமா? முதலில் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்றுதானே?"
அமிர்தானந்தர் பேசிவிட்டு அந்த மனிதனின் முகத்தையே பார்த்தபடி இருந்தார். அவன் முகத்தில் அவர் சொல்வதைக் கேட்பதில் தீவிரம் தெரிந்தது. விடைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. அமிர்தானந்தர் தொடர்ந்தார்.
"நான் இப்போது உங்களைச் சில கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்ப்போம். உங்கள் தந்தையின் பெயர் என்ன?"
இஷ்டதேவன் இவர் ஏன் இதைக் கேட்கிறார் என்று யோசித்தபடியே "இஸ்துவான்" என்றான்.
"உங்கள் தாத்தாவின் பெயர்?"
தொடர்ந்து இவர் ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் தொடர்ந்து கேட்டு குழப்புகிறார் என்று இஷ்டதேவன் நினைத்துக் கொண்டான். உண்மையில் அவனுக்குத் தன் தாத்தாவின் பெயர் தெரியாது. அவனுடைய தந்தையின் இளம் வயதிலேயே அவருடைய அப்பா அதாவது அவனுடைய தாத்தா இறந்து போனதாகச் சொன்னார்கள். அவனுடைய தந்தை தன்னுடைய அப்பாவைப் பற்றி அவனிடம் சொன்னதே இல்லை.
ஆகவே இப்போது அமிர்தானந்தர் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
"என் தாத்தாவின் பெயர் தெரியாது" என்று தயக்கத்துடன் சொன்னான்.
"என்ன உங்கள் தாத்தாவின் பெயர் தெரியாதா?" அமிர்தானந்தர் சிரித்தபடியே கேட்டார்.
"அவரைப் பார்த்தாவது இருக்கிறீர்களா?"
"ஊஹும்" உதட்டைப் பிதுக்கினான் இஷ்டதேவன்.
"அப்படியென்றால் உங்களுக்குத் தாத்தாவே கிடையாது என்று வைத்துக் கொள்ளலாமா?" இந்தக் கேள்வி இஷ்டதேவனுக்கு கோபத்தைத் தந்தது.
"இதென்ன பேத்தல்? எனக்கு எப்படி தாத்தா இல்லாமல் இருந்திருக்க முடியும்? தாத்தா இல்லாவிட்டால் எனக்கு ஏது அப்பா? அப்பா இல்லாவிட்டால் நான் எப்படி உருவாகியிருக்க முடியும்? என்ன கேள்வி கேட்கிறீர்கள் சுவாமி?"
அமிர்தானந்தர் மறுபடியும் சிரித்தார். "மிஸ்டர், இஷ்டதேவன் நீங்கள் இருப்பதென்றால் உங்களுக்கு அப்பா இருக்க வேண்டும். உங்கள் அப்பாவிற்கு ஒரு அப்பா இருந்திருக்க வேண்டும். அதாவது ஒரு படைப்பிற்கு ஒரு படைப்பாளி இருக்க வேண்டும். அதன் ஜீவராசிகள் எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டனவே. அதற்கென்று ஒரு சிருஷ்டிகர்த்தா இருந்திருக்க வேண்டுமல்லவா?"
"என் தாத்தா இறந்துவிட்டார். அப்படியென்றால் உங்கள் இறைவனும்?" இஷ்டதேவன் அவசரமாகக் கேட்டான்.
இஷ்டதேவன் சொன்னதைக் கேட்டு அமிர்தானந்தர் பெரிதாகச் சிரித்தார்.
"இஷ்டதேவன் சிலவற்றைத் தெரிந்துகொள். இறைவன் பிறப்பில்லாதவன். ஆகவே இறப்பில்லாதவன். அவன் எங்கும் இருப்பவன். ஆனால் நம்மால் பார்க்க முடியாதவன். அவனை அவன் செயல்களைக் கொண்டே நாம் உணரமுடியும்."
"இதென்ன நீங்கள் சொல்வது முரண்பாடாகத் தெரிகிறது?"
"முரண்பாடில்லை. உண்மை இஷ்டதேவா. இந்த அண்டவெளியில், நமக்குத் தெரியாமலேயே பல உயிர்கள் இருக்கின்றன என்பதற்கு ஒன்றைச் சொல்கிறேன் கேள். ஒரு தடவை விஞ்ஞானிகள் காற்றுப் புகமுடியாத ஒரு சூனியப்படுத்தப்பட்ட அறையில் ஒரு டேப்ரிகார்டரை வைத்து அதை ஒரு தானியக்கி மூலம் இயக்கினார்கள். அந்த டேப்ரிகார்டரில் இருந்த ஒலி நாடாவில் முன்னதாக எந்த ஒலியும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆனால் அந்த டேப்ரிகார்டரைப் பிறகு எடுத்து ஏதாவது பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்தபோது அதில் என்ன மொழி, என்ன பொருள் என்று சொல்லமுடியாதபடி பல ஒலிகள்! விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். நமக்குப் புலப்படாத பல ஜீவன்கள் இந்த அண்டத்தில் இருக்கின்றன என்று புரிந்து கொண்டார்கள். அப்படித்தான் ஆண்டவனும். மிஸ்டர் இஷ்டதேவன் அவனைப் பார்க்க முடியாது, ஆனால் உணர முடியும்."
"சுவாமி நீங்கள் சொல்வது சரி போலவும் தோன்றுகிறது. சரியில்லை போலவும் தோன்றுகிறது. எனக்குக் குழப்பமாக இருக்கிறதே?"
அமிர்தானந்தர் புன்னகைத்தார்.
"சரி, இப்படிச் சொல்கிறேன் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். உங்களால் மின்சாரத்தைப் பார்க்க முடியுமா?"
இஷ்டதேவன் முடியாதென்பதற்கு அறிகுறியாக தலையை இருபுறமும் அசைத்தான்.
அமிர்தானந்தர் தொடர்ந்தார்.
"ஆண்டவனை மின்சாரத்திற்கு இணையாகக் கொள்ளுங்கள். எப்படி மின்சாரத்தைப் பார்க்க முடியாதோ அதேபோல் ஆண்டவனையும் தரிசிப்பது சாத்தியமில்லை. ஆனால் எப்படி மின்சாரத்தால் இயங்கும் பொருள்களைக் கொண்டு அவற்றின் இயக்கம் மின்சாரத்தால் என்கிறோமோ, அதேபோல் ஆண்டவனால் இயக்கப்படும் பலவும், எங்களை இயக்குபவன் ஒருவன் என உண்மையைச் சுட்டிக் காட்டுபவை. மின்சாரத்தால் இயங்கும் பல பொருள்களில் எவ்வளவு வேற்றுமை பார்த்திருக்கிறீர்களா? இஸ்திரிப்பெட்டி சூட்டைத் தருகிறது. குளிர்பதனப் பெட்டி பெரும் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஃபேன் காற்றைத் தருகிறது. அதுவே எக்ஸாஸ்ட் பேன் காற்றை அப்புறப்படுத்துகிறது."
அமிர்தானந்தர் பேசுவதை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த சொம்பிலிருந்து நீரைக் குடித்தார். இஷ்டதேவன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அவன் கண்களில் மீண்டும் ஆர்வம் தெரிந்தது.
அமிர்தானந்தர் தொடர்ந்தார். "நீ ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் சொல்கிறேன் கேள். இதோ பார், உனக்குத் தெரிந்திருக்கும். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்று இணைப்புகள் தேவை.
அவற்றில் ஒன்றுடன் மட்டும் மின்சாரம் ஏற்பட முடியாது. இந்த பாசிடிவ், நெகடிவ் என்பவை இரு குறியீடுகளே. இரு பெயர்கள் அவ்வளவே. உலகில் ஆண்டவன் படைத்த ஆணும், பெண்ணும் இவ்விரு இணைப்புகள் போன்றவர்களே! மனிதவர்க்கம் வளர இருவரும் தேவை. இஷ்டதேவன் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். விஞ்ஞான ரீதியாகவே ஒரு ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தான் தத்துவஞானிகள் ஆண் இனத்தைச் சிவன் என்றும் பெண்ணை சக்தியென்றும் இங்கே குறிப்பிடுகிறார்கள். எப்படி பாசிடிவ், நெகடிவ் இரண்டும் அவசியம் என்று சொல்லப்படுகிறதோ, அதேபோல இங்கே சக்தியில்லையெனில் சிவனில்லை என்கிறார்கள். அந்த அடிப்படையிலே தான் அர்த்தநாரி என்ற கடவுள் உருவகம்."
அமிர்தானந்தர் பேசுவதை நிறுத்திவிட்டு இஷ்டதேவன் முகத்தை உன் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதா என்பது போல் பார்த்தார்.
இஷ்டதேவன் முகத்தில் ஒரு ஒளி, தெளிவு, பிரகாசம்.
"சொல்லுங்கள் சுவாமி! இதுவரை நான் பலரிடம் கேட்டும் விடை காணாததை உங்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றேன். மேலும் சொல்லுங்கள்" ஆர்வத்துடன் கேட்டான் அவன்.
"மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை." என்றார் அமிர்தானந்தர்.
இஷ்டதேவன் சிறிது நேரம் ஏமாற்றத்துடன் மௌனம் காத்தான். பிறகு "சுவாமி, என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்வீர்களா?" பணிவுடன் கேட்டான்.
அமிர்தானந்தர் பெரிதாகப் பலமாகச் சிரித்தார்.
"இதோ பார், இஷ்டதேவன். நான் தனி மனிதன். அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்ததை மற்றவருக்குச் சொல்லி வருகிறேன். இதை விடுத்து நான் எனக்கென்று சீடர்களை வைத்துக் கொண்டு, ஆசிரமம் அமைத்தால் அந்த ஆசிரமத்தை எப்படி நடத்துவது என்று எனக்குப் பெரும் கவலை ஏற்பட்டுவிடும். அப்போது எனக்குத் தெய்வ சிந்தனை குறைந்து, எனக்கும் ஆண்டவனுக்கும் இடைவெளி அதிகரித்து விடும்."
"அப்படி என்றால் என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ள மாட்டீர்களா?" ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் கேட்டான் இஷ்டதேவன். |
|
ஏ.வி. ராஜகோபால் |
|
|
|
|
|
|
|