|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜனவரி 2025| |
|
|
|
|
அதிவிரைவு ரயில்கள், அதிவிரைவு நெடுஞ்சாலைகள், மின்வழியே நொடியில் பணப்பரிமாற்றம் என்று கணக்கற்ற துறைகளில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் உலகை வியக்க வைப்பது. நிலவின் இருண்ட மறுபக்கத்தில் விண்கலத்தைக் கொண்டு நிறுத்திய சாதனை புவிப்பந்தில் வேறெந்த நாடும் செய்யாதது. இப்போது விண்கல அறிவியலில் இன்னோர் அருஞ்செயலைச் செய்துள்ளது பாரதம். ஒரே ராக்கெட்டின் மூலம் சில நிமிட இடைவேளையில் இரண்டு துணைக்கோள்களைச் செலுத்தி, ஏவப்பட்ட சில நாட்களுக்குப் பின் இரண்டையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பாரதத்தின் ISRO, இதனை 2024 டிசம்பர் 30ம் தேதி ஏவியுள்ளது. 2025 ஜனவரி 7ஆம் தேதி வாக்கில் இரண்டு துணைக்கோள்களையும் இணைக்க முயலப்படும். இதே ராக்கெட்டில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிக்கான 24 சுமைகளையும் (payloads) அனுப்பியுள்ளது. நமது உணர்வை வெளியிட, பெருமிதம் என்பதைவிட இன்னும் ஆழமான சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
★★★★★
உலகெங்கிலும் இருந்து சிறந்த கூரறிவு கொண்டோரை, ஆய்வாளரை, அறிஞர்களை வரவேற்பதில் முதலிடம் வகித்து வருவது அமெரிக்கா. அதற்கு மிகநல்ல கருவியாக இருந்து வருவது H1B விசா முறை. ட்ரம்ப் அவர்களின் முந்தைய ஆட்சிக்காலத்திலேயே இது பாதிப்புக் கண்டது. அவர் மீண்டும் பதவி ஏற்கப் போகும் இந்தத் தருணத்தில், அந்தக் கட்சியினர் அதைப் பெரும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது கவலை தருகிறது. ஆதரித்துப் பேசிய அடுத்த கணமே சற்றே ஆட்டம் கண்டுபோன இலான் மஸ்க் அவர்களின் நிலைப்பாடும் நிலைத்த நம்பிக்கை தருவதாக இல்லை. ட்ரம்ப் அரசின் குடிவரவுக் கொள்கை எத்தகையதாக இருக்கும் என்பதில் இன்னும் நமக்குத் தெளிவு கிடைக்கவில்லை. விவாதம் நல்ல முடிவை நாட்டுக்குத் தரட்டும்.
★★★★★
இலக்கிய இரட்டையரான சுந்தரராஜன், கிருபானந்தன் நடத்தும் 'குவிகம்' குறித்த உரையாடல் இனியது. நூல் வாசிப்புக் குறைந்து போன இந்த நாளிலும் இவர்கள் விடாது செய்யும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. எழுத்தாளர் ஏ.வி. ராஜகோபால், முன்னோடி அரு. சோமசுந்தரன், சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள் ஆகியோர் குறித்த கட்டுரைகள் தென்றலுக்கே உரிய சிறப்பு முத்திரையுடன் வெளிவருபவை. சிறுகதை 'கண்ணோட்டம்'... ஊஹும்... நாங்கள் சொல்லவில்லை, நீங்களே படித்துப் பாருங்கள்.
வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள். |
|
தென்றல் ஜனவரி 2025 |
|
|
|
|
|
|
|