|
|
|
ராகவும் பிரியாவும் பொறியியல் கல்லூரியில் கணினி மென்துறையில் கடைசி ஆண்டு படித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் பள்ளி மேல்நிலை வகுப்பிலிருந்தே ஒன்றாக படித்து வந்தார்கள். அப்போது முதலே ராகவுக்கு பிரியாமீது ஒருதலைக் காதல். கல்லூரி இறுதித் தேர்வு முடிந்தவுடன் நேராகப் பிரியாவிடம் போய் "உன்னை விரும்புகிறேன்" என்று சொல்ல, சற்றும் எதிர்பாராத அவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள்.
பிறகு நிதானமாக யோசித்து, "ராகவ், உன்னை வகுப்புத் தோழனாக மட்டும்தான் எனக்கு தெரியும். அதைத் தாண்டி உன்னைப்பற்றி எனக்குத் தெரியாது. உனக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது எப்படி உன் காதலை நான் திடீரென்று ஏற்றுக்கொள்ள முடியும். நீயே சொல்!" என்றாள்.
ராகவுக்குப் பிரியாவின் அந்த நிதானமான பதில் மிகப் பிடித்து இருந்தது. அது சரிதான் பிரியா, உன் கேள்வி நியாயமானதுதான். நீ என்னைப் பற்றியும் நான் உன்னைப் பற்றியும் சில மாதங்கள் பழகித் தெரிந்து கொள்வோம். பிறகு நீ என்ன சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான்.
பிரியாவும் "சரி, பழகலாம் அப்படி நமக்குப் பிடித்து இருந்தால், அடுத்த கட்டமாகப் பெற்றோரிடம் பேசலாம். இப்பவே தீர்க்கமாகச் சொல்கிறேன், பெற்றோரை எதிர்த்து நாம் எதுவும் செய்ய வேண்டாம். ஏன் இதை நான் சொல்கிறேன் என்று உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன். எந்தக் காரணம் கொண்டும் இத்தனை வருடம் அன்பு காட்டிச் செல்லமாக வளர்த்து, தனக்கே சொந்தமான உறவு என்று வாழும் என் பெற்றோரை உன்னிடம் கிடைக்கப்போகும் அன்புக்காக இழக்க நான் விரும்பவில்லை. என் பெற்றோர்களுக்கு நான் ஒரே மகள், நான்தான் உலகமே என்று வாழும் அவர்களை, அவர்கள் பாசத்தைப் புறக்கணிக்க முடியாது. புரிந்ததா? அப்படித்தான் உனக்கும் இருக்கும்னு நெனக்கிறேன், சரியா? இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால் நாம் பழகலாம்" என்று முதிர்ச்சியான பதிலைச் சொன்னாள்.
ராகவுக்குப் பிரியா பேசப்பேச, அவள்மேல் இருந்த காதலும் மரியாதையும் அதிகமாயின. ராகவ், "நீ சொல்வது ரொம்பச் சரி. எனக்கும் என் அம்மா மட்டும்தான், என் அப்பா நான் 12 வகுப்பு படிக்கும்போதே இறந்துவிட்டார். அதுமுதல் தனி ஒருத்தியாக என் அம்மாதான் என்னையும், என் தம்பியையும் வளர்த்தாங்க. அவர்கள் அன்பும் எனக்கும் எப்பவும் வேணும். உங்கள் உத்தரவு மகாராணி" என்று கிண்டலாகச் சொல்லி, முழு மனதாக ஏற்றுக் கொண்டான். பின் இருவரும் அவரவர் நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.
சில மாதங்களில் ராகவும் ஐ.டி.யில் வேலைக்குச் சேர்ந்தான். உடனே பிரியாவுக்கு ஃபோன் செய்தான். "எனக்கு வேலை கிடைத்துவிட்டது. நாம நாளைக்கு எங்காவது சந்திப்போமா?" என்று கேட்டான். பிரியாவும் மகிழ்ச்சியோடு சரி என்று சொன்னாள். அவர்கள் ஒரு காஃபி ஷாப்பில் சந்தித்தார்கள். இப்படியே இருவரும் இரண்டு வருட ம் பழகி ஒருவரை ஒருத்தர் புரிந்துகொண்டு ஆத்மார்த்தமான காதலர்கள் ஆனார்கள்.
ஒருநாள் ராகவ் நம்ம இப்ப நாம வீட்டில் பேசலாமா என்று பிரியாவிடம் கேட்டான். அவளும் "சரி, நம்ம வீட்டுல சொல்லி பேசச் சொல்லலாம்" என்று சொன்னான். பிரியா அவர்கள் வீட்டில் பேச, அவள் தந்தை ரவிக்கு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ராகவுக்குக் கொடுப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் தாய் ரஞ்சனிக்கு ராகவ் பற்றிக் கேட்டதில் மிகப்பிடித்துப் போக, அவள் பிரியாவிடம் ராகவையும் அவர்கள் குடும்பத்தையும் வரச்சொல் என்று சொன்னாள். இருவரும் ஒருநிலையில் நிற்க ரவி வேறுவழி இல்லாமல் ஒத்துக்கொண்டான்.
ராகவ் தன் வீட்டில் சொன்னான். தாய் கவிதா, அவர்கள் பெரிய வசதியான குடும்பம்போல் தெரிகிறது நமக்குச் சரிப்பட்டு வருமா என்று கேட்டாள். அவன் தம்பி உதய் அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, "அம்மா அதெல்லாம் சரியா வரும். அண்ணனுக்குப் பிடித்து இருக்குல்ல. அப்ப நீ ஒத்துக்கதான் வேணும்" என்றான். கவிதாவும் சரி உங்கள் இஷ்டம் என்று சொல்லி விட்டாள்.
பிரியா தன்னைப் பெண் பார்க்க வரப் பெற்றோர்கள் சொன்னதைச் சொல்லி "நாளை மறுநாள் நல்ல நாளாம். நீங்க குடும்பத்துடன் வந்துடுங்க" என்று சொன்னாள். ராகவும் "சரி, வருகிறோம்,நானும் வீட்டில் சொல்லிவிட்டேன். முதலில் எங்க அம்மா நீங்க பணக்காரக் குடும்பம் என்று தயங்கினார்கள். ஆனால் நானும் என் தம்பியும் பேசிச் சம்மதிக்க வைத்தோம்" என்று சொல்லிச் சந்தோஷப்பட்டான்.
ராகவ் தந்தை இல்லாவிட்டாலும் தன் தாய் கவிதா, தம்பி உதய், மூன்று அத்தைகள், இரண்டு பெரியப்பா, ஒரு சித்தப்பா குடும்பம், மற்றச் சொந்தங்கள் என 50 பேருடன் பெண் பார்க்க வந்தார்கள். ஒரு தங்கையுடன் மட்டுமே பிறந்து வளர்ந்த தந்தை ரவிக்கு அவர்கள் கூட்டத்தை அறிமுகம் செய்து வைத்ததும் ரொம்பச் சலித்துக் கொண்டான். ஏதோ ஒரு ஃபார்மாலிடிக்கு தான் இந்த பெண் பார்க்கும் படலம். எப்படியாவது பிரியாவுக்குப் புரியவைத்து, வேண்டாம் இந்த சம்மந்தம் என்று சொல்லத் துடித்தான். ஆனால் அவன் எதிர்பாராது, எல்லாருக்கும் பிரியாவைப் பிடித்துப் போக, ரஞ்சனி கல்யாணமே முடிவு செய்த மாதிரி ராகவின் குடும்பத்தை முறைசொல்லி மிக சகஜமாகப் பழகினாள்.
அதை பார்த்த ரவி, "ரஞ்சனி ஒரு நிமிடம் உள்ள வா" என்று சொல்லி அவளை உள்ளே அழைத்து அவளைத் திட்டினான். ஆனால் அவளோ, "போங்க நீங்க நம்ம பொண்ணுக்குப் பிடிச்சிருக்கு. அவங்க குடும்பத்தை பார்த்தால் எனக்கு எங்க குடும்பம் மாதிரி பெரிய குடும்பமா இருக்காங்க. எனக்கு முழு சம்மதம் என்று நான் ஏற்கனவே பிரியாட்ட சொல்லிட்டேன்" என்றாள்.
அந்த பையன் ராகவ் நல்ல பையனா இருக்கான். எஞ்சினீயராக பெரிய ஐ.டி கம்பெனில இருக்கான். அவங்க குடும்பமும் ரொம்ப அன்பா பழகறாங்க. அதைவிட வேற என்ன பெரிய சொத்து தேவை? நம்மகிட்ட இல்லாத சொத்தா, எல்லாம் நம்ம பொண்ணுக்குதானே. அப்புறம் என்ன? நாம உள்ள வந்து ரொம்ப நேரம் பேசிகிட்டு இருக்கோம். அவங்க தப்பா எடுத்துக்கப் போறாங்க. வாங்க, சம்மதம்னு சபைல வந்து சொல்லுங்க" என்று அவன் பதிலுக்குக்கூட நிற்காமல் சென்றாள். ரவிக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. ஆனால் என்ன செய்வது, எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று தெரியாமல் அவள் பின்னே பூனைக்குட்டி போலப் போனான்.
ஹாலில் எல்லோரும் கசமுசா என பேசிக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் வந்ததும் ஹாலே அமைதி ஆனது. ரஞ்சனி, "அது ஒண்ணும் இல்லை. ஒரே பொண்ணாச்சா, அதுதான் அவருக்குப் பிரியா கல்யாணம் மேல் ரொம்பப் பெரிய எதிர்பார்ப்பு. கல்யாணத்த தடபுடலா பண்ணிடணும்னு உள்ள வந்து சொன்னாரு. அப்படிதானேங்க ?" என்று சற்றும் எதிர்பாராமல் அனைவர் முன்பும் கேட்க, ஆமாம், ஆமாம் என்று ரவி தலை ஆட்டினான்.
ரஞ்சனி "சொல்லுங்க நமக்கும் சம்மதம்னு. இப்பவே ஒப்பு தாம்பலம் மாத்திக்கலாம். வர தை மாசம் நிச்சயம் பண்ணி வைகாசில கல்யாணத்த வச்சுக்கலாம்" என்று எல்லா முடிவையும் அவளே சொல்லி விட்டாள்.
ரவிக்கு உலகமே நின்றுவிட்டால் என்ன என்று ஒரு நிமிடம் தோன்றியது.
ஆனால் பிரியாவும் ராகவும் ஒருவரை ஒருவர் காதல் பார்வை பார்த்துக் கொண்டு சிரித்தார்கள். ராகவ் குடும்பதிற்கும் மிக சந்தோஷம். உடனே கவிதா தாம்பூலத் தட்டை எடுத்து நீட்ட, ரஞ்சனி "வாங்கிக்கலாம் வாங்க" என்று சொல்ல வேறுவழி இல்லாமல் ரவி வாங்கிக்கொண்டான்.
★★★★★
ஒருவழியாகக் கடைசியில் நிச்சயதார்த்தம், கல்யாணத் தேதி குறித்தார்கள். அவர்கள் பட்டாளம் போகும்வரை அவன் தங்கை கீதா, அவள் கணவன் குடும்பத்துடன் மட்டும்தான் ரவி பேசினான். ரஞ்சனிமேல் அவனுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. அதனால் வந்திருந்த அவள் குடும்ப நபர்களிடம் கூட ரவி பேசவில்லை.
ஒரு வழியாக நிச்சயம் முடிந்து கல்யாணத் தேதி நெருங்கி வந்தபோது ரவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து யோசித்து இரவெல்லாம் தூங்காமல் அவன் உடல்நலம் குறையத் தொடங்கியது. ஒருநாள் திடீரெனெ அவனுக்கு நெஞ்சுவலி வந்தது. உடனே அவனை ரஞ்சனியும் பிரியாவும் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு ராகவ் வீட்டுக்கும் சொன்னார்கள். உடனே ராகவ் குடும்பத்தினருடன் வந்துவிட்டான்.
கவிதா, "அண்ணனுக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்காங்க?" என்று கண்ணீர் மல்கக் கேட்க, ராகவும் உதய்யும் "மாமா இப்ப எப்படி இருக்காங்க?" என்று தவிப்புடன் கேட்டார்கள். "பயப்படறதுக்கு ஒண்ணூம் இல்லை, வந்தததும் அவர் ஹார்ட்ல பிரச்சனைன்னு ஆஞ்சியோ பண்ணணும்னு சொன்னாங்க மாப்பிள" என்று ரஞ்சனி சொன்னாள். உள்ளே சென்று ரவியை பார்த்த அவர்கள், "உங்களுக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாதிங்கன்னு" ஆறுதல் சொன்னார்கள். அதைக் கேட்க ரவிக்குக் கொஞ்சம் தெம்பாக இருத்தது,
அடுத்து கீதா, ரஞ்சனியின் குடும்பம் என்று ஊரில் இருந்து வந்து சேர்த்து விட்டார்கள். ரவிக்கு அடுத்த இரண்டு நாளில் ஆஞ்சியோ முடிய ராகவின் குடும்பத்திலிருந்து எல்லோரும் மாறி,மாறி வந்து பார்த்தார்கள். ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலிருந்த ரவிக்கு தினம் தினம் ராகவின் குடும்பத்திலிருந்து எல்லோரும் ஒவ்வொரு வேளையும் சாப்பாடு கொண்டு வந்து ரொம்பக் கரிசனமாக விசாரித்துப் போனார்கள். ரவிக்கு அதை பார்க்க பார்க்க ராகவ் குடும்பத்தின் மீதும் ராகவ் மீதும் அன்பு வந்தது.
ஒவ்வொரு நாளும் இதைப் பார்த்த டாக்டர்கள், நர்சுகள் எல்லோரும் இது ஆஸ்பிடலா கல்யாண வீடான்னு தெரியல என்று கொஞ்சம் கோபத்துடனும்,கொஞ்சம் நக்கலாகவும் சொல்லிவிட்டுப் போனார்கள்.
ரவி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குச் செல்லும் நாளும் வந்தது. அப்போது ராகவின் மொத் த குடும்பமே வந்து விட்டார்கள், "வந்துடீங்களா மாயாண்டி குடும்பத்தார்" என்று நர்சுகள் கிண்டல் செய்தார்கள்.
ரவி அவனையும் அறியாமல் மாப்பிளை ராகவைக் கட்டிக்கொண்டான்.
பின்பு காரில் வீட்டுக்குச் செல்லும்போது அன்பு, பாசம், நேசம்தான் வாழ்க்கையில் மிகச் சிறந்த சொத்து. அதைவிட உயர்ந்தது வேறு எதுவுமில்லை என்று உணர்ந்த தருணத்தில், அவர்கள் எல்லாரையும், "வாங்க வாங்க வந்து சாப்புட்டு இருந்து போகலாம்" என்று ரவியே சொல்ல ரஞ்சனிக்கு ஒரே ஆச்சர்யம். ரவி, ராகவ் மற்றும் ராகவ் குடும்பத்துடன் அவர்கள் செல்லும்வரை சிறிது சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தான்.
ரஞ்சனிக்கு அவன் செயலில் மிகுந்த ஆச்சரியம். அதை அவர்கள் சென்றதும் அவனிடமே ரஞ்சனி கேட்க, "உங்க ரெண்டு பேத்துக்காகத்தான் முதலில் கல்யாணத்துக்கு அரை மனசாக ஒத்துக்கிட்டேன். ஆனா, இப்ப எனக்கு ராகவையும் அவன் குடும்பதையும் ரொம்பப் பிடிசிருக்கு" என்று சொன்னான்.
ரவி ரஞ்சனியிடம் "எப்ப நமக்குக் கல்யாணத்திற்கு டிரஸ் எடுக்க போறதுன்னு பாரு. நான் இன்னைக்கு ஒருநாள் ரெஸ்ட் எடுப்பேன். நாளையிலிருந்து கல்யாண வேலையப் பார்க்கனும்" என்று சொல்லிட்டு பிரியாவின் நிச்சயதார்த்த ஃபோட்டோவைப் பார்த்து "பிரியா எவ்ளவு அழகா இருக்கா பாரு"ன்னு சொல்லி சந்தோஷப்பட்டான். |
|
இந்துமதி ஜெயபால், டப்ளின், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|
|