Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அரங்கேற்றம்: ரியா கயல் பாலசந்தர்
- |ஆகஸ்டு 2024|
Share:
செல்வி ரியா கயல் பாலசந்தரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜூலை 20, 2024 அன்று அயர் ஷெர்லி பிராந்திய உயர்நிலைப் பள்ளி (Ayer Shirley Regional High School, 141 Washington St., Ayer, MA 01432) சிறப்பாக நடைபெற்றது.

குரு சௌம்யா ராஜாராம் அவர்களிடம் கலாக்ஷேத்ரா பாணியில் பதினைந்து வயதான ரியா கயல் பாலசந்தர் சுமார் ஒன்பது ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வருகிறார்.

குருவின் நட்டுவாங்கத்துடன் திருமதி. வாணி ராமமூர்த்தி (குரலிசை), திரு. ப்ரணவ் ஸ்வரூப் (வயலின்), திரு. அனிருத் பரத்வாஜ் (புல்லாங்குழல்), தருண் பங்களூரு (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பின்னணி இசை வழங்கினர்.

முதலில் குருவின் மகள்கள் ஷர்மதா, சம்யுக்தா இனிமையாகப் பிரார்த்தனை பாடினர். இனிய விநாயகர் பாடலுடன் ஆரம்பித்த அரங்கேற்றத்தில் கயல் முதலில் தனது பாட்டி திருமதி சரஸ்வதி தியாகராஜன் இயற்றிய அன்னை மீதான "ஆனந்தரூபிணி" என்ற அழகான சுலோகத்திற்கு மிகச்சிறப்பாக ஆடினாள். இதற்கு ஷண்முகப்ரியா ராகத்தில் மனதைத் தொடும் இன்னிசை அமைத்தவர் வாணி ராமமூர்த்தி.

அடுத்து மலர்வது என்ற பொருள் தரும் அலாரிப்பில் சொற்கட்டுக்கேற்பக் கயலின் நடனம் அருமையாக அமைந்தது.

பின்னர் வந்தது அடையார் லஷ்மணனின் சரஸ்வதி ராகத்தில் அமைந்த, மிஸ்ர சாபு தாளம் கொண்ட ஜதீஸ்வரம். இதில் கயல் ஜதிக் கோர்வைகளுக்கேற்ப அவரது ஒவ்வொரு நடன அசைவும் மிகுந்த தெளிவுடனும், நளினத்துடனும் இருந்தன.



அடுத்து வந்த சப்தத்தில் தஞ்சாவூர் நால்வரின் மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த "ஆயர் சேரியர்" என்ற ராகமாலிகைப் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார் கயல். மாயவன் குழலூதி மயக்கினான் என்றால் கயல் தன் திறன்மிகு நாட்டியத்தால் சபையோரை மயக்கினார் என்றே கூறலாம்.

பின்னர் நடனத்தின் நடுநாயகமாக வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமனின் ஆதி தாளத்தில் அமைந்த நீலாம்பரி ராக "செந்தில் நகர் மேவும்" வர்ணம் வந்தது. மயில் மேடையில் வந்து மயக்கியதோ? வாணி ராமமூர்த்தியின் கொஞ்சும் இனிய குரலுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் பற்பல பாவங்களைப் பலவித அபிநயங்களுடன் அழகாக வெளிப்படுத்தினார் கயல்.

இடைவேளைக்குப் பின் கயலின் மாமா மகன் ப்ரணவ், 8 வயதுச் சிறுவன், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் செய்து அசத்தினான்.

அடுத்து ஆடிய "நம்பிக் கெட்டவர் எவரய்யா" என்ற பாபநாசம் சிவனின் ஆதி தாள ஹிந்தோள ராக கீர்த்தனத்துக்கு மயிலை கபாலியாக ஆடியது அருமை.

ஶ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரி பாடலில் அன்னையை வர்ணித்து பாவங்களை வெளிப்படுத்திக் கயல் ஆடியபோது அன்னயை நேரிலே கண்டது போன்ற உணர்வு வந்தது. க்ஷேத்ரக்ஞாவின் சப்தத்திற்கான சுருட்டி இராக 'இந்தெந்து வச்சிடிவிரா' என்ற பாடல் வரிகளில் இருந்த விரகதாபம், பாராமுகம், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைச் சிறப்பான முக பாவங்களுடனும் வெளிப்படுத்தியது அலாதி அற்புதம்.



இறுதியாக, வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் மதுவந்தி ராகத் தில்லானாவுக்குச் சிக்கலான பாத வேலைகளுடனும், விரைவான அங்க அசைவுகளுடனும் துள்ளலாக துரித கதியில் ஆடி அழகு சேர்த்தார் ரியா கயல்.

மங்களத்துடன் அரங்கேற்றம் நிறைவுற்றபோது அவையினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தனர். இது அரங்கேற்றமா அல்லது பலமுறை ஆடியவரின் நாட்டிய விருந்தா எனக் கயல் வியக்கவைத்தாள்.

கயலின் அரங்கேற்ற நடனத்தில் குரு சௌம்யா ராஜாராமின் கடின உழைப்பும், இணையிலா ஈடுபாடும் தெள்ளெனத் தெரிந்தன.

குரு சௌம்யாவின் கணீரென்ற நட்டுவாங்கம், திருமதி வாணி ராமமூர்த்தியின் தேமதுரக் குரலிசை, திரு அனிருத் பரத்வாஜின் கொஞ்சும் குழலிசை, திரு தருண் பெங்களூருவின் கம்பீர மிருதங்க நாதம், திரு ப்ரணவ் ஸ்வரூப்பின் மனதை வருடம் வயலின் இசை, திருமதி சுதா இராமநாதனின் அருமையான நிகழ்ச்சித் தொகுப்பு இவை பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

பின்னர் கயலின் பெற்றோர், அண்ணன் ரோஹன் பாலசந்தர் ஆகியோரின் உரையுடன் கயலின் நன்றி உரையும் சேர்ந்து நிகழ்ச்சி மனதுக்கு நிறைவு தந்தது.

ரியா கயல் பாலசந்தர் பரதத்தில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
சரஸ்வதி தியாகராஜன்,
பாஸ்டன்.
Share: 




© Copyright 2020 Tamilonline