Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-S)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2024|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவைகள் கடைபிடிக்க வேண்டிய அணுகு முறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பலப்பலத் தருணங்களில் என்னை வினாவியுள்ளனர். அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சிலக் குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படையாகின்றன. வடிவமைப்புக் கோர்வைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் மடடுமல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவ பூர்வமானக் கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ளக் கருத்துக்களையும், ஒன்று சேர்த்தளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் உங்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.
இப்போது ஆரம்ப நிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

★★★★★


கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாங்களே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெற்று, செல்வந்தர்கள் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? உங்கள் பரிந்துரை என்ன?
கதிரவனின் பதில்: ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு ஒன்றும் எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:
* சொந்த/குடும்ப நிதிநிலைமை மற்றும் தியாகங்கள்
* நிறுவனர் குழுவை சேர்த்தல்
* உங்கள் யோசனையை சோதித்து சீர்படுத்தல்
* முதல்நிலை நிதி திரட்டல்
* முதல்நிலை திசை திருப்பல் (initial pivoting)
* முதல் சில வாடிக்கையாளர்கள்
* விதைநிலை நிதி திரட்டல்
* வருடம் மில்லியன் டாலர் வருவாய் நிலை
* முதல் பெரும்சுற்று நிதி திரட்டல்
* சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசைதிருப்பல்
* குழுக் கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிவு
* வெற்றிக் கோட்டைத் தாண்டத் தடங்கல்கள்

சென்ற பகுதிகளில், பல இன்னல்களைப் பற்றி விவரித்தோம். இப்போது, முன்பு விவரித்த இன்னல்களையெல்லாம் சமாளித்து, நிறுவனம் நன்கு வளர்ச்சி பெற்ற பிறகு, இறுதியாக வெற்றிக் கோட்டைத் தாண்டும் முன் ஏற்படக்கூடிய சில இன்னல்களைப் பற்றி விவரிப்போம்.

வெற்றிக் கோட்டைத் தாண்டுமுன் சில இன்னல்கள்:
உங்கள் கேள்வியின் முக்கியமான வார்த்தை 'வெற்றி'. அந்த வெற்றி என்றால் என்ன என்பதை முதலாவதாக உணர்ந்து கொள்வது அவசியம். சிலருக்கு, தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் மிகப் பலனுள்ளதாகப் பெருமளவில் பயன்படுத்தப் படுவதே வெற்றி, அதுவே போதும் என்ற கருத்து உள்ளது. உலகம் பரவிய இணையத்தை (world wide web) உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவரை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால் உங்கள் கேள்வியை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீங்கள் அம்மாதிரிக் கருத்தில் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் நிறுவிய நிறுவனம் ஓரளவாவது வளர்ச்சிபெற்று அதன் நிதி மதிப்பீடு அதிகரித்து, அதன் மூலம் உங்களுடைய சொந்த நிதி நிலைமை பரிமளிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்று கேட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அதன்படியே தொடர்ந்து விவரிப்போம்.

நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் வளர வளர, அதன் மதிப்பீடும் அதற்குத் தக்க படி வளர்ந்து கொண்டு போகும். பொதுவாக, வருமானம் ஓவ்வொரு மட்டத்தைத் தாண்டும்போதும் அடுத்த சுற்று மூலதனம் திரட்டப்படும். வருட வருமானம் பத்து மில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துவிட்டால் அதற்குப் பின் நிறுவன மதிப்பீடு அப்போதைய வருட வருமானத்தின் மடங்குகளாகத் தீர்மானிக்கப்படும். அந்த மடங்கு பல அம்சங்களைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதே வணிகத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களின் பெருக்கல் மடங்கு ஓர் அம்சம். உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் ஓர் அம்சம். பொதுவாக மூலதனத் துறையில் உற்சாகம் எவ்வளவு உள்ளது என்பது ஓர் அம்சம்.

இவ்வாறு பலதரப் பட்ட அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் உங்கள் நிறுவன மதிப்பீடு ஓரளவு உயர்ந்த பிறகு, நிதி ரீதியாக வெற்றிக் கோட்டைத் தாண்ட இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, முதல் பொதுப் பங்கு வெளியீடு (initial public offering or IPO); மற்றது, வேறொரு நிறுவனம், பொதுவாக, சிஸ்கோ, மைக்ரோஸாஃப்ட், ஜெனண்ட்டெக் போன்ற ஒரு பெரிய நிறுவனம் உங்கள் நிறுவனத்தை வாங்கி இணைத்துக் கொள்வது (M&A).

பொதுப்பங்கு வெளியிடுவதானால் நிறுவனம் லாபகரமாக இருக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் இவ்வளவு லாபம் இருக்கும் என்று சரியாகக் கணிக்க இயலும் நிலையில் இருக்க வேண்டும். அல்லது லாபம் இல்லாவிட்டாலும், ஒரு புதிய துறையில் சில வருடங்களாக வெகுவேக வளர்ச்சி பெற்றுவரும் நிறுவனமாக இருக்க வேண்டும். ஸேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் இந்த இரண்டாம் வகைக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்! (இப்பொது அது லாபகரமாக உள்ளது. ஆனால் பங்கு வெளியீட்டின் போது பலத்த நஷ்டத்தில் ஆனால் அதிவேக வளர்ச்சியுடன் இருந்தது.)

அத்தகைய பங்கு வெளியீட்டு வெற்றிக்குமுன் பல தடங்கல்கள் நேரக் கூடும். உதாரணமாக, சமீபத்தில் நேரிட்ட கோவிட் பெருந்தொற்று நோய் விபரீதத்தால், பங்கு வெளியீட்டுக்குத் தயாராக இருந்த பல நிறுவனங்கள் தடைப்பட்டன. அதற்குப் பிறகு விலை வீக்கத்தாலும், அதன் காரணமாக வட்டி விகித உயர்வாலும் நிறுவனச் செலவுக் கட்டுப்பாடு ஏற்பட்டு மூலதன நிலைமையும் அதனால் பங்கு வெளியீட்டு நிலைமையும் படுமோசமாயின. இதுபோல் பல இன்னல்கள் உண்டாகக் கூடும்.

அத்தகைய இன்னல்களைக் கடந்து வெற்றிகரமாகப் பங்கு வெளியிட பல வருட காலம் ஆகும்.

வேறோரு நிறுவனத்தால் வாங்கப்படுவது பல மட்டங்களில் வெற்றிகரமாக இருக்கக் கூடும். பொதுவாக, ஒரு மூலதனச் சுற்றின் மதிப்பீட்டைவிடச் சில பெருக்கல் மடங்காக விலை கிடைத்தால் வெற்றி என்று கருதப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விலை கிடைப்பது எளிதல்ல. வாங்கும் நிறுவனத்துக்கு உங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பமும் வணிகத் துறையும் நன்கு பொருந்தி, மிகவும் தேவையாக இருந்தால்தான் அப்படிப்பட்ட விலை கிடைக்கும். பல நிறுவனங்கள் அவ்வாறு பெரும் வெற்றி விலைக்கு விற்கப்படுகின்றன.

ஆனால் சிலமுறை அத்தகைய வெற்றி கிட்டுவதில்லை. நிறுவனம் ஒரு மட்டம்வரை வளர்ந்த பிறகு முன்பு குறிப்பிட்ட விபரீதச் சூழ்நிலைகளால் வளர்ச்சி வேகம் குறைந்துவிடக் கூடும். அல்லது வணீகரீதியில் இக்கட்டு நேரக்கூடும். உதாரணமாக, உங்கள் போட்டியாளரை ஒரு பெரும் நிறுவனம் வாங்கி பெருமளவில் சந்தையில் புகுத்தக் கூடும். அதனால் உங்கள் நிறுவன விற்பனை வேகமும், அடிப்படை அலகு விலையும் (unit price) வெகுவாகக் குறையக்கூடும். அதனால் நிறுவனத்துக்கு மூலதனம் திரட்ட இயலாமல் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடும். அதனால் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவான விலைக்கு விற்க நேரிடலாம். அவ்வாறு நிகழாமல் பல சுற்று மூலதனம் பெற்று, பெரும் விலையுடன் விற்பதற்குச் சில வருட காலங்களாவது ஆகும்.

இநத யுக்தியின் முடிவுரை
உங்கள் கேள்வியின் இரண்டாவது முக்கிய வார்த்தை 'சீக்கிரம்'. இதுவரை விவரித்த இன்னல் பட்டியல்களால், வெற்றி கிடைப்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்று உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஆனால், உங்களை பயமுறுத்தி, நிறுவனம் ஆரம்பிக்காமல் பின்வாங்கச் செய்வது என் பதிலின் குறிக்கோள் அல்ல. நீங்கள் நிறுவனம் ஆரம்பித்துப் பெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் நிறுவனத்தை ஆரம்பித்து எளிதாக, சீக்கிரமாக வெற்றி கண்டுவிடலாம் என்ற எண்ணத்துடன் ஆரம்ப நிலையில் குதிப்பது நல்லதல்ல. மிகவும் முயற்சி செய்து பலப்பல இன்னல்களைக் கடந்து, நிறுவனத்தை வளர்த்து, பல சுற்றுக்கள் மூலதனம் பெற்றபிறகே நிதிரீதியாக நல்ல வெற்றி பெறமுடியும் என்று நன்கு உணர்ந்துகொண்டு களத்தில் இறங்கவேண்டும் என்பதுதான் என் கருத்து.

அவ்வாறு நன்கு உணர்ந்துகொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து இன்னல்கள் அதிகம் இல்லாமல், வரும் சில இன்னல்களைப் பொறுமையுடனும் திறமையுடனும் சமாளித்து, பெருவளர்ச்சி கண்டு பெருவெற்றியும் அடைய என் நல்வாழ்த்துக்கள்!

(ஆரம்பநிலை யுக்தி #20 முடிவுற்றது.)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline