Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2024 Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
நல்முத்து மாலை
- கோமதி சுப்ரமணியம்|ஏப்ரல் 2024|
Share:
1

"கீதா போட்டிருக்கிற மாலையை எனக்கு வாங்கித்தாம்மா" என்று முரண்டியழுத பானுவின் குரல் உச்சஸ்தாயியில் புரண்டெழுந்தது. அந்த வார்த்தை உள்ளே நின்றுகொண்டிருந்த சாவித்திரியின் இதய வெளியில் நாராசமாய்ப் புகுந்து பலத்த போராட்டத்தைக் கிளப்பிவிட்டதோடு நிற்காமல் வாசலிலும் பெரிய போராட்டத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. இப்போராட்டம் எந்நிலையில் முடியுமோ என்கிற திகிலுடன் வெளியே எட்டிப் பார்த்தாள் சாவித்திரி.

கழுத்தில் கிடந்த நல்முத்து மாலையை இரு கைகளாலும் கெட்டியாகப் பற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி ஓடிவந்த கீதாவைக் கண்டு பதறிப்போய்த் தூக்கிக் கொண்டாள் சாவித்திரி.

அத்தை, கீதாவைத் தூக்கிவிடவும் பானுவின் ஓட்டம் தேங்கிவிடவே அவளது ஆவேச வெறியும் சற்றுத் தேங்கி நிற்க வேண்டிவந்தது. பானு குழந்தைதான். ஆனாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டாள். எப்படியாவது தான் விரும்பிய மாலை வேண்டும்; அந்த மாலையைப் பெறும் யோசனை குறுக்கு வழியில் ஓடியது. சட்டென அத்தையின் புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சத் தொடங்கினாள் பானு.

"அத்தை, எனக்கு கீதாவின் மாலையை வாங்கித்தா.." பானுவின் கெஞ்சும் விழிகள் சாவித்திரியின் மனதைக் கலங்கச் செய்தன. இந்த மாலை தவிர வேறு எந்தப் பொருளைக் கேட்டிருந்தாலும்கூட இதற்குள் பெற்று திருப்தியுற்றிருப்பாள். ஆனால் இந்த மாலை விஷயம் அப்படிப்பட்டதல்லவே. இந்த மாலையை எடுக்கவோ பிறருக்குக் கொடுக்கவோ எந்த அதிகாரமுமற்ற சாவித்திரியால் எப்படி அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியும். அது அவள் பாத்யதைக்கு அப்பாற்பட்ட விஷயம். அவள் யோசனைக்குக் குழந்தைகள் காத்துநிற்கவில்லை. 'மாலை எனக்குத்தான்..' 'இல்லை எனக்குத்தான்..' என்று அவர்களுக்குள் சொல் யுத்தம் தொடங்கிவிட்டார்கள்.

தன் குழந்தை விரும்பிக் கேட்டும் கொடுக்க மனமில்லாமல் பாசாங்கு செய்யும் மதனியிடம் வெறுப்புத் தோன்றியது, வாசலில் நின்று கொண்டிருந்த லலிதாவுக்கு. அவள் வெறுப்பு பானுவின் முதுகுக்கு நெருப்பாக மாறியது.

"அற்ப நாயே, பிச்சைக்கார நாயே, மாலையாடி வேண்டுமுனக்கு" என்று முதுகில் பளீர் பளீரென்று இரண்டு அறை வைத்து, குழந்தையைக் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்தாள்.

லலிதாவின் வெறிகொண்ட செய்கையால் திடுக்கிட்ட சாவித்திரி பதறிப்போய், இடுப்பிலிருந்த குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, அடிபடும் குழந்தையை ஆசுவாசப்படுத்த நோக்கினாள்.

"ஏன் லலிதா, இப்படி வெறிகொண்டவள் போல் குழந்தையைத் தாக்குகிறாய்; இப்படிக் கொடு குழந்தையை" என்று அவள் கைக்குள்ளிருந்த குழந்தையின் கரம் பற்றினாள்.

"உன் ஜோலியைப் பார்த்துக்கொண்டு அப்பால் போ மதனி. என் குழந்தையை அடிக்கவோ உதைக்கவோ எனக்குப் பாத்யதை உண்டு."

ஆம், அவளுக்குப் பாத்யதை இருக்கிறது. குழந்தையை அடிக்கிறாள். எனக்கு மாலையைக் கொடுக்கப் பாத்யதை இல்லை. அதனால் குழந்தை அடிபடுகிறாள்.

இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, பாத்தியதை என்ற ஒரே காரணத்தால் குழந்தை அடிபடுகிறாள். குழந்தையைத் தெய்வத்துக்குச் சமம் என்கிறார்கள். இங்கே தெய்வம் அடிபடுகிறது. அடிபடும் தெய்வத்தைக் காக்க அவள் மனம் துணிகிறது. ஆனால் செயல் பலிக்கவில்லை.

சாவித்திரியின் பரிவு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலிருந்தது. நன்மையை நாடித் தரவேண்டிய பரிவு அதிகத் துன்பத்தைத் தேடி வந்தது. அவள் பரிவு கொண்டதைச் சாக்காகக் கொண்டு பின்னும் ஐந்தாறு அடிகள் அந்தப் பிஞ்சு முதுகைப் பதம் பார்த்தன. பானுவை அறைந்த ஒவ்வொரு அறையும் சாவித்திரியின் நெஞ்சில் அடிக்காமல் அடித்தது என்பதைச் சாவித்திரி உணர்ந்துகொண்டுதானிருந்தாள்.

'இதுவரை எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்துவந்த உனக்கு இன்று மட்டும் என்ன வந்துவிட்டது. திடீரென்று மாறுபட்ட மனத்திற்குக் காரணமென்ன?' என்று கேட்டது போலிருந்தது லலிதா நின்ற ஆக்ரோஷ நிலை. 'மதிப்பற்றதனமாகத் தரமறுத்ததற்குத் தண்டனையாக இந்தக் குழந்தை அடிபட்டு அலறுவதைப் பார்த்து மனம் துடித்துப் போ' என்று சொல்லாமல் சொல்லியபடி மேலும் மேலும் அறைந்துகொண்டே குழந்தையைக் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துச் சென்றாள் சாவித்திரியின் நாத்தனார்.

துடித்துச் செல்லும் குழந்தையின் குரல், தெருமுனை திரும்பியும் காற்றோடு கலந்து வந்து செவிகளில் பேயறைவதுபோல் அறைந்து கொண்டிருந்தது. அணு அணுவாய் மங்கி மறையும் ஓலத்தை உற்று நோக்கியவாறே வாசற்படியிலேயே நின்றபடி நின்று கொண்டிருந்தாள் சாவித்திரி.

2

"என்னவழிமேல் விழி வைத்து யாரை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாய். நான் வந்ததுகூடத் தெரியாமல்" என்ற அவள் கணவனின் குரலைக் கேட்டுச் சுயநினைவு பெற்றாள்.

பேயறைந்தது போல் நின்ற அவள் வதனத்தைக் கண்டு திடுக்கிட்ட ராமன், "ஏன், சாவித்திரி உன் முகம் ஏன் இப்படி இருக்கிறது" என்று பதறினான்.

"ஒன்றுமில்லை" தலையைத் தாழ்த்திக்கொண்டாள். கலங்கிய விழிகளை அவன் கண்டுவிடப் போகிறானே என்கிற பயம்.

"ஒன்றுமில்லையா. என்னிடம் மறைக்கப் பார்க்கிறாய்" அவள் முகத்தை நிமிர்த்தினான். வாசலில் தந்தையின் குரலைக் கேட்டுத் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள் கீதா. அவள் வெற்றியின் மகிழ்ச்சியைத் தந்தையிடம் தெரிவிக்கும் ஆவலில் ஒவ்வொரு நிமிஷமும் துடித்துக் கொண்டிருந்த கீதா, 'அப்பா அப்பா' என்று ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டாள்.

ஆவலுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்ட ராமன் என்ன நடந்தது என்பதின் அறிகுறியாகத் தலையசைத்தான் கீதாவிடம்.

அவன் தலையசைப்பின் அர்த்தத்தை அறிந்தோ அறியாமலோ தனது மனப்பொருமலை வெளியிட்டாள் கீதா.

"பானு இந்த மாலையை கேக்கறாப்பா..." - விஷயம் புரிந்துவிட்டது.

"ஓகோ இதற்குத்தான் இத்தனை கலக்கமாக்கும்!" என்று விஷமமாகச் சிரித்தான்.

"ப்பா... அத்தை திட்டு திட்டென்று திட்டி.."

"திட்டினாளா, உன் அம்மா சீதனச் சொத்தென்று கொடுக்கமாட்டேன் என்றாளாக்கும்..." - இந்த வார்த்தை பொருமிக் கொண்டிருந்த சாவித்திரிக்குச் சீற்றத்தை உண்டுபண்ணிற்று.

"என்னுடைய சீதனச் சொத்து ஒன்றுமே உங்க தங்கைக்கு கொடுக்கல்லையாக்கும்." விக்கலும் விம்மலுமாக வார்த்தைகள் வெளிப்பட்டன.

"இல்லையென்று யார் சொன்னது? இது உன் அம்மா அருமையாகக் கொடுத்தது. அதுவும் சாகுந் தறுவாயில் பேத்திக்கென ஆசையாகக் கொடுத்தது". அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மாலையைத் தரமறுத்த உண்மைக் காரணத்தைத் தேடிக்கொடுத்தது.

பொங்கிப் பெருகிய அழுகையை அடக்க முடியாமல் உள்ளே ஓடிவிட்டாள் சாவித்திரி. அவளது நினைவுகள் அடக்க அடக்க எங்கெங்கோ சென்று கலந்தன.

3

சாவித்திரி மீனாக்ஷியம்மாளின் செல்வப் புதல்வி. சீமந்த புத்திரி, அருந்தவப் புதல்வி எல்லாம் அவள் ஒருத்தியேதான். சற்றே பணக்காரர் கோஷ்டியைச் சேர்ந்த மீனாக்ஷியம்மாளுக்கு நெடுநாளாக ஏற்பட்டிருந்த பிள்ளையில்லாக் குறையைத் தீர்த்த சாவித்திரிக்கு எவ்விதக் குறையும் ஏற்படக் கூடாதென்று கங்கணம் கட்டிக்கொண்டவள் போல் எவ்விதக் குறையுமின்றி வளர்த்து விட்டாள். மீனாக்ஷி பள்ளிப் படிப்பு முடிந்து வாழ்க்கைப் பாடம் ஆரம்பமாக வேண்டிய காலம்.

அந்தப் பருவம்தான் மீனாக்ஷியம்மாளைச் சற்றுக் கவலைக்குள் ஆழ்த்துவதாயிருந்தது. தன் மகளை வளர்த்த அருமை தெரிந்து போற்றிப் பேணுகிற மாமியாரும் கணவனும் அமைய வேண்டுமே என்று பரிதவித்துக் கொண்டிருந்தாள். அவள் தவிப்பை அறிந்துதானோ என்னவோ புருஷன் வழி வர்க்கம் என்று எவ்வித பிக்கல் பிடுங்கல் ஒன்றுமேயில்லாத ராமன் மாப்பிள்ளையாக வந்து வாய்த்தான். மாப்பிள்ளை கண்ணுக்கு அழகுதான். ஏதோ சுமாரான உத்யோகமும் பார்க்கிறான். அவன் உத்யோகம் பார்க்கும் பணத்திற்குத் தன் மகளைத் தவிர வேறு செலவுக்கு ஒருவருமில்லை. ஒரே ஒரு தங்கை இருக்கிறவளும் பம்பாயோ பூனாவோ பேர் தெரியாத ஊரில் இருக்கிறாள். அடிக்கடி வந்து தன் மகளை ஹிம்சைப்படுத்தமாட்டாள் என்கிற இரட்டிப்புச் சந்தோஷத்தில் கலியாணத்திற்குக் கொஞ்சம் அதிகமாகவே பணம் செலவிட்டு நடத்திவைத்தாள்.

உலகத்தில் நாம் நினைப்பதுபோலவே எல்லாம் சந்தோஷமாகவே முடிந்துவிட்டால் அப்புறம் வாழ்க்கையேது. வாழ்க்கையின் ரஸாபாஸங்களேது. உலகத்தைத்தான் உணரமுடிவதேது. எதிர்பார்த்தது நடவாமல் ஏமாறுவதுதானே வாழ்க்கை. ஏமாற்றத்தின் முடிவுதானே இன்பத்திற்கு அடி அவள் கொண்ட சந்தோஷத்தை அதிக நாள் நிலை நாட்டவொட்டாமல் இது நாள்வரை அயல் தேசங்களில் வேலையாகி இருந்த சாவித்திரியின் நாத்தனார் புருஷனை ராமன் வசிக்குமிடத்திற்கே மாற்றிவிட்டார்கள். இந்த விஷயம் மீனாக்ஷியம்மாளின் வயிற்றில் லேசாக வேதனையில் நஞ்சைக் கலந்தது போலிருந்தது. என்றாலும் ஆரம்பத்தில் அதுபற்றிப் பெரிதும் கவலைப்படவில்லை. வந்தால் வந்துவிட்டுப் போகிறாள். நம் மகளும் அவளும் ஒன்றாகவா இருக்கப் போகிறார்கள்?' என்று அசட்டையாக இருந்துவிட்டாள். ஆனால் அவள் நெஞ்சில் கலந்த நஞ்சு இருந்திருந்து வேலை செய்யத் தொடங்கியது.

மீனாக்ஷியம்மாளின் பெண்தான் சாவித்திரி என்றாலும் குணபாகங்களில் இருவருக்குமிடையே வெகு வித்தியாசம் தோன்றும். பிறந்த வீட்டு மனிதர்கள் என்று அம்மா ஒருத்தியாவது வந்து போய்க்கொண்டிருந்தாள். ஆனால் புகுந்த வீட்டு மனிதர்கள் அப்படி ஒருவருமில்லையே என்ற ஆதங்கம், லலிதாவின் வரவினால் தனது வெகுநாளைய குறை தீரப்போவதாக நம்பினாள். அந்நம்பிக்கையின் அஸ்திவாரமாய் அவளைத் தன்னுடனே இருக்கச் செய்யத் திட்டமும் போட்டுக்கொண்டிருந்தாள்.

சாவித்திரியின் கணவன் மீனாக்ஷி அம்மாளின் குண விசேஷத்தில் நன்கு பழகியவனாதலால் முன்னேற்பாடாகத் தனி வீடு ஏற்பாடு செய்துவிட்டான்.

இந்த விஷயம் சாவித்திரியின் மனதில் பெரும் ஏமாற்றத்தை உண்டுபண்ணியதென்றாலும் ஒருவருக்கொருவர் அடிக்கடி போக்குவரத்து வைத்துக்கொண்டு அந்த ஏமாற்றத்திற்கு ஈடு செய்துகொண்டாள்.

சாவித்திரியின் வீட்டிற்கு வந்திருந்த மீனாக்ஷியம்மாள், மகளின் பயித்தியக்கார நிலையைக் கண்டு மனதிற்குள் திகில் கொண்டாள். ஆனாலும் வெளியில் சிரித்துப் பேச முயன்றாள். "சாவித்திரி, இது என்ன பைத்தியக்காரப் போக்கு? உன் குழந்தைக்கு எது வாங்கினாலும் பானுவுக்கும் வாங்குவது, உன் வீட்டுக்கு எது வாங்கினாலும் உன் நாத்தனாருக்கும் வாங்குவது? இந்தப் பைத்தியம் முற்றினால் எத்தனை கோரத்தில் முடியுமென்பதை உணர்ந்திருக்கிறாயா?" என்று அதட்டினாள்.

வழக்கம்போல் கலகலவென்ற சிரிப்புடன் லலிதா கையில் குழந்தையுடன் மன்னியின் வீடு வந்து சேர்ந்தாள். அவள் சிரிப்பின் ஒளியைவிட அவள் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸின் ஒளி மீனாக்ஷியம்மாளின் கண்ணைக் குத்தியது. அது, அவள் தன் மகளுக்கு ஆசையுடன் பார்த்துப் பார்த்துச் செய்து போட்டது. அதை மற்றொரு பெண் போட்டுக்கொண்டிருப்பதா? ஒருவேளை அது அவளுடையதாக இருக்குமோ?

இருக்க முடியாது. போன தடவை வந்திருந்தபோது மாலை அவள் கழுத்தில் மின்னவில்லையே. மேலும் நடுவில் இருக்கும் பச்சைக்கல், 'நீ பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணிய கல்லாக்கும் நான்' என்று அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுவது போலிருந்தது. இருக்கட்டும், இந்தப் பெண்ணின் புத்திக்குச் சுவரில் முட்டிக் கொண்டால்கூடத் தீராது போலிருக்கே என்று மனம் வெதும்பினாள்.

தனது பொருமலைத் தீர்த்துக்கொள்ளப் புழுவாய்த் துடித்தாள். ஒருவழியாய் வெகு நேரத்துக்கப்பால் வந்தவள் புறப்பட்டுப் போய்விட்டாள். அவள் போவதற்காகத் துடித்துக் கொண்டிருந்தவள்போல் அவள் தலை மறையவும் மகளிடம் சீறினாள்.

"இங்கே பாரம்மா. என் மாலையைக் கொடுத்த மறுதினமே அதைவிட உயர்ந்த ரகத்தில் உன் மருமகன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்களம்மா?" கணவனின் பெருமையைப் பூரிப்புடன் வெளியிட்டுக் கொண்டாள் சாவித்திரி.

அதனால் மீனாக்ஷியம்மாவின் கொதிப்பு அடங்கிய பாடில்லை; கொந்தளித்துக் குமிழியிட்டது. ஆம். 'சாவித்திரி அது, உனக்கு உயர்வாகப் போய்விட்டது. பணத்தில் வேண்டுமானால் அது உயர்வாக இருக்கலாம் ஆனால் அன்பில்...'

தன் அன்பளிப்பை மகள் செய்த அலக்ஷியம் அவள் மனதைப் பாறாங்கல்லாய் அழுத்தியது. அழுத்தும் வேதனையுடனே அதிக நாள் தாமதிக்க மனமில்லாதவளாய் ஊரைப் பார்க்கப் புறப்பட்டு விட்டாள். அதன்பின் அவள் தன் மகள் வீட்டைத் தேடி வரவேயில்லை.

சாவித்திரிதான் அவளைத் தேடிக்கொண்டு சென்றாள். எத்தனை போகத்துடன் புருஷன் வீட்டில் வாழ்ந்தாலும் பிறந்த வீட்டை வாழ்க்கை இடையிடையே அனுபவிக்காவிட்டால் பெண்களின் வாழ்க்கையில் ரஸனையைக் காணமுடிவதில்லை. சாவித்திரி மட்டும் பெண்ணினத்திற்கு விதிவிலக்கல்லவே.

பிறந்த வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் தங்கி மனத்தை நிறைத்துக்கொண்டாள். திரும்பும்பொழுது பல அன்பளிப்புப் பொருள்களையும் ஏற்றுக்கொண்டு, முக்யமாக மீனாக்ஷியம்மாளின் அன்புப் போதனைகளை வெகுவாகப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தாயாரின் அன்பளிப்பு வீடுவரை வந்து சேர்ந்தது. அவள் அன்புப் போதனையோ ரயிலடியிலேயே தங்கிவிட்டதென்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் தாயார் புதிதாகச் செய்து கொடுத்திருந்த வெள்ளிப்பவுடர் டப்பாவை நாத்தனார் கேட்டபோது தயங்காமல் எடுத்துக் கொடுத்திருப்பாளா?

கைநீட்டிக் கொடுக்கும்பொழுது லேசாகத் தாயாரின் போதனைகளின் நினைவு தோன்றிச் சற்றே தயக்கமுறச் செய்தது. மறுகணமே டப்பாவின் மேல் ஆசையுடன் நோக்கி நிற்கும் நாத்தனாரின் முகம் அவள் தயக்கத்தைப் புறங்காட்டச்செய்தது. அதேபோல் வேறு வாங்கித் தருவதாகச் சொன்னால் நாத்தனார் உள்ளம் ஒடிந்துவிடுவாள். தான் கொண்டுவந்த டப்பாவைத் தன் தாயாரின் அன்பளிப்பை லலிதாவுக்குக் கொடுத்துவிட்டுத் தாயார் அறியுமுன் கணவனிடம் கேட்டு அதுமாதிரி வாங்கி வைத்து விடலாமென்று நம்பிக்கைத் துரோகம் செய்யத் தூண்டியது.

சோதனை வரும் காலத்தில் நம் முயற்சிகளுக்கோ சாமர்த்தியத்திற்கோ இடம் வைத்திருப்பதில்லை.

சொல்லி வைத்தாற்போல மறுநாள் புறப்பட்டு வந்து விட்ட்டாள் மீனாக்ஷியம்மாள் பெண் வீட்டிற்கு.

"நீயும் குழந்தைகளும் புறப்பட்டு வந்த பிறகு வீடு வெறிச்சோடிப் போய்விட்டது. தனிமை என்னைப் பைத்தியமாக்கி உன்னிடம் கொண்டு சேர்த்துவிட்டது" என்று கூறிக்கொண்டே வந்து சேர்ந்துவிட்டாள்.

அம்மாவும் வந்ததும் வராததுமாய்த் தன் அன்பளிப்புச் சாமான்களைக் கண்காணிக்கப் போகிறாளென்பதைக் கனவிலும் கருதவில்லை சாவித்திரி. ஆனால் அதுவே கண்ணும் கருத்துமாய் வந்திருக்கும் மீனாக்ஷியம்மாளின் கண்ணுக்கு மறைந்த பவுடர் டப்பா மாறிவிட முடியுமா?

"எங்கே அந்த பவுடர் டப்பா. உன் நாத்தனாருக்குக் கொடுத்து விட்டாயோ!" என்று கேட்கும் அம்மாவிடம் 'ஆமாம்' என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? அம்மா வருவதற்குள் வேறு வாங்கி விடலாமென்ற நம்பிக்கை இருந்தது. அந்நம்பிக்கையைத் தகர்த்தெறிந்துவிட்டது அம்மாவின் வருகை. ஆமாம் என்ற வார்த்தை மீனாக்ஷியம்மாவின் இதயத்தில் ஓங்கி ஒரு உதை விட்டது போன்றிருந்தது. ஆமாம், எத்தனை அலக்ஷியம். எவ்வளவு ஏளனம். நான்தான் அன்பு அன்பு என்று அடித்துக்கொள்கிறேன். அவள் அன்பை அலக்ஷியம் செய்கிறாள். இதயத்தில் அன்புக்கிடமிருந்தால் அன்பின் சின்னமாகிய நான் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பையும் உதாசீனம் செய்ய முடியுமா? அன்பற்ற அவளுக்காக அன்புருகிச் சாகும் தன் மடத்தனத்தினின்றும் விழித்தெழுந்துவிட்டதாகக் கருதி அவ்வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். தன்னைப் புறக்கணித்ததாகக் கருதும் மகளைப் புறக்கணித்துப் புறப்பட்ட பிறகுதான் அவள் மனம் நிம்மதி அடைந்தது.

அன்று போனவள். அதன்பின் மரணப் படுக்கையில்தான் தாயும் சேயும் சந்தித்தனர். தன் நிலை முத்திப் போகும்வரை மகளுக்கு அறிவிக்காமலே இருந்துவிட்டாள். தன் அன்பை அலட்சியம் செய்தவள் என்று அவள் அங்கம் ஒவ்வொன்றும் உருகிக்கொண்டே இருந்தது.

தாயாரின் நிலையைக் கேள்விப்பட்ட சாவித்திரி மரணப் படுக்கையிலிருந்த தாயாரைச் சந்திக்கும் பாக்கியத்தைத் தேடி ஓடோடியும் வந்தாள். பலவந்தமாய் அடக்கி வைத்திருந்த அன்பு ஊற்று மகளைக்கண்ட வேகத்தில் அணை கடந்து பெருக்கெடுத்தோடத் தொடங்கியது. இருவர் மனமும் அன்பில் பொங்கி, கண்ணீராகப் பெருகி வழிந்துகொண்டிருந்தது. ஒரு கணம் இன்னும் ஒரே கணம்தான்.

"சாவித்திரி" அவளது ஒவ்வொரு வார்த்தையும் அன்பின் ஆழத்தில் தோண்டி எடுத்து வந்தது.

"அம்மா.." அவள் நெஞ்சே விம்மி வெடித்துவிடும் போலழுதாள். தன் மெலிந்த கரங்களால் தட்டுத்தடுமாறி தலையணைக்கு அடியிலிருந்து எதையோ எடுத்தாள் மீனாக்ஷியம்மாள்.

அவள் துவண்ட கரங்களில் நல்முத்துமாலை கலரில் பளிச்சிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது.

பக்கத்தில் நின்ற பேத்தி கீதாவை நடுங்கும் கரங்களால் அருகிலிழுத்துத் தட்டுத் தடுமாறி மாலையை அவள் கழுத்தில் அணிவித்தாள்.

வேதனையுடன் தன் முகத்தை நோக்கும் தாயாரின் வேண்டுகோளை அவள் கூறாமலே அறிந்துகொண்டாள் சாவித்திரி. தேங்கி நின்ற அவள் விழிகள் என் கடைசி அன்பளிப்பையாவது அலட்சியம் செய்துவிடாதே என்று கேட்பதுபோலிருந்தது,

"எந்தக் காரணத்தைக்கொண்டும் கீதாவின் கழுத்தைவிட்டு இந்த மாலை இடம் பிறழாதம்மா" என்று சாவித்திரி கூறவும் அவள் வார்த்தையைக் கேட்டுத் திருப்தியடைந்தவள் போலக் கண்ணை மூடிவிட்டாள் மீனாக்ஷியம்மாள்.

4

கடைசி காலத்தில் தன் தாயாருக்குக் கொடுத்த வாக்கைத் தட்டமாட்டாமல், பானு மாலை வேண்டிக் கேட்டபோது தர மறுத்து நின்றாள். ஆனால்... மாலைக்காக, அந்தக் குழந்தை பட்ட அடி... அத்தனை அடியிலும் மாலை கிடைத்திருந்தால் அக்குழந்தையின் மனம் எத்தனை பூரித்திருக்கும். மாலையும் கிடைக்காமல் அடியும் வாங்கிச் செத்த அக்குழந்தை எப்படி மனம் வெதும்பித் துடிக்கும்... அதை நினைத்தபோது அவள் தீர்மானம் லேசாக இடம் பிறழத் தொடங்கியது. குறுக்கே அம்மாவின் சாந்தியுற்ற முகம்.

இறந்துபோன அம்மாவின் ஆத்ம திருப்திக்கும். உயிருடன் மன்றாடும் அக்குழந்தையின் ஆத்ம திருப்திக்குமிடையே தவித்துத் திண்டாடினாள் சாவித்திரி.

அவள் மனதிற்கும் மனச்சாட்சிக்குமிடையே நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடனுள்ள குழந்தையின் ஆத்ம திருப்தியே வெற்றிபெற்றது.

கீதாவின் கழுத்தில் கிடந்த மாலையைக் கையில் கழற்றிப் பிடித்தவண்ணம், நாத்தனாரின் வீட்டை நோக்கி நடை போட்டாள் சாவித்திரி.
கோமதி சுப்ரமணியம்
Share: 




© Copyright 2020 Tamilonline