|
இறைவன் சோதிப்பார், பின்னர் வெகுமதி தருவார் |
|
- |பிப்ரவரி 2024| |
|
|
|
|
பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை ஒன்றை அனுப்பினர். அது நாடு முழுவதும் சுற்றித் திரியும். குதிரையை நிறுத்திக் கட்டுபவன், அப்படி செய்வதன் மூலம் வேள்விக்குச் சவால் விடுகிறான். துணிச்சலாகத் தடுப்பவரைத் தோற்கடித்து, குதிரையை மீண்டும் பாண்டவர்கள் வெல்லவேண்டும்.
சிறந்த கிருஷ்ண பக்தரான மயூரத்வஜர், நல்ல அரசர், வேதம் கற்ற ஞானி, இரக்க குணம் கொண்டவர். அவர் குதிரையைப் பிடித்தார், அர்ஜுனன் அவரைப் போரில் சந்திக்க முடிவு செய்தான். ஆனால், கிருஷ்ணர் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஏனெனில், பக்தியில் அர்ஜுனனையும் விஞ்சியவர் மயூரத்வஜர் என்பதை அர்ஜுனனுக்குக் காட்ட விரும்பினார். மயூரத்வஜர் தியாகம், சத்தியம் ஆகியவற்றில் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை உலகத்துக்குப் பறைசாற்ற விரும்பினார் கிருஷ்ணர்.
கிருஷ்ணரும் அர்ஜுனனும் மயூரத்வஜரின் அரண்மனைக்குப் பிராமண வேடமிட்டு உணவு வேண்டிச் செல்லலாம் என்று கூறினார். அவர்களை வரவேற்ற மன்னர், அவர்களைச் சிறப்பாக உபசரித்தார். ஆனால், அவர்கள் முதல் வாய் உணவைச் சாப்பிடுவதற்குள், கிருஷ்ணர் ஆச்சரியமானதொரு துயரக் கதையைச் சொன்னார்.
"மென்மையான உள்ளம் கொண்ட சக்கரவர்த்தியே, கேள்! உங்கள் சாம்ராஜ்யத்தின் எல்லையில் ஒரு காட்டு வழியாக நாங்கள் வந்து கொண்டிருந்தபோது, ஒரு புலி இந்தத் தோழனின் இளம் மகனைப் பறித்துச் சென்றது. அந்த மிருகத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அது பாதி உடலை விழுங்கி விட்டது. ஆனால், அது எங்கள் பரிதாபமான வேண்டுகோளைக் கேட்டு, தேசத்தின் பரிசுத்தமான சக்ரவர்த்தியான மயூரத்வஜனின் புனிதமான உடலின் ஒரு பாதியைக் கொடுத்தால் அந்தச் சிறுவனை உயிருடன் ஒப்படைப்பதாக உறுதியளித்தது. இந்த வேதனையை எங்கள் இதயத்தில் வைத்துக்கொண்டு உன் உபசரிப்பை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? இந்தப் பிராமணச் சிறுவனின் உயிருள்ள முழு உடலுக்கு ஈடாக உங்கள் உடலில் பாதியைப் புலிக்குக் கொடுப்பதாகச் சத்தியம் செய். அப்போதுதான் நாங்கள் உன் விருந்தோம்பலை ஏற்போம்" என்று சொல்லி முடித்தார்.
மயூரத்வஜர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். மதிய உணவு முடிந்ததும் தரையில் அமர்ந்துகொண்டு, தனது உடலைப் பாதியாக அறுக்குமாறு தனது ராணி மற்றும் மகனிடம் கூறினார்.
அவர்கள் அரிவாளைத் தலையில் வைத்து, உடலைப் பிளக்கும் பணியைத் தொடங்கினர். அதைப் பிராமணர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். மன்னரின் இடது கண்ணில் துளிகள் தோன்றின. கிருஷ்ணர், "ஓ மன்னா! வாக்களித்ததை நீங்கள் கண்ணீருடன் எங்களுக்குத் தருகிறீர்கள், தூய விருப்பத்துடன் அல்ல. கண்ணீருடன் எதைக் கொடுத்தாலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். ஆனால் மயூரத்வஜர், "ஐயா! எனக்கு விருப்பமில்லை என்றாலோ தயக்கம் இருந்தாலோ இரண்டு கண்களும் கண்ணீர் சிந்த வேண்டும், இல்லையா? இடது கண் மட்டுமே கண்ணீரை உதிர்க்கிறது. காரணம் இதுதான், உடலின் வலது பாதி, ஒருவரைக் கொடூரமான மரணத்திலிருந்து காப்பாற்றும் புனிதமான நோக்கத்திற்குப் பயன்படுகிறது. ஆனால், இடது பாதி என்னவாகும்? தூக்கி எறியப்படுமா, நாய்களும் கழுகுகளும் தின்னுமா? எனவேதான் இடது பாதி அழுகிறது. ஆனால், வலது பாதியோ தான் ஏதோ ஒரு நல்ல நோக்கத்திற்குப் பயன்படுகிறோம் என்று மகிழ்கிறது" என்றார்.
கிருஷ்ணர் உடனே தனது ஒளிமயமான காட்சியை மயூரத்வஜருக்கு அளித்தார். "நீ எப்போதும் என்னை இதயத்தில் நிலைநிறுத்தி இருப்பாய். எப்போதும் ஆனந்தமாகவும் திருப்தியாகவும் இருப்பாய்" என்று கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். தன்னைவிட மேலான கிருஷ்ண பக்தர் இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவனது கர்வம் அழிந்தது. மயூரத்வஜரின் பணிவுக்குப் பரிசு கிடைத்தது.
நன்றி: சனாதன சாரதி, நவம்பர் 2023. |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா |
|
|
|
|
|
|
|