Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | அஞ்சலி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சிறந்த மதிப்பெண் பெற வழிகள்
- சே. அப்துல் லத்தீப், அஷ்வின் சாங்கி, அசோக் ரஜினி|டிசம்பர் 2023|
Share:
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்பார்வை இல்லாதவராக ஸ்ரீகாந்த் பிறந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுமாறு அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தினர். அவருடைய கல்வியறிவில்லாத, ஆண்டுக்கு ரூபாய் 20,000 வருமானம் கொண்ட பெற்றோர் இந்தத் தவறான வழிகாட்டுதலுக்குச் செவி சாய்க்காமல் அவரை அன்போடும் கனிவோடும் வளர்ப்பதென முடிவெடுத்தார்கள்.

கண்பார்வை இல்லாமலும் வறுமையோடும் பிறந்த ஸ்ரீகாந்த் அவருடைய கிராமத்துப் பள்ளியில் கடைசி இருக்கையில் உட்கார வைக்கப்பட்டார். மற்ற குழந்தைகளுடன் விளையாட அவரை அனுமதிக்கவில்லை. அவருடைய தந்தை அவரை ஹைதராபாத்தில் உள்ள ஒரு சிறப்பு பள்ளியில் சேர்க்கக் கஷ்டப்பட்டு நிறைவேற்றி விட்டார். இங்கே, அவர் சதுரங்க விளையாட்டு மற்றும் கிரிக்கெட் விளையாட்டைக் கற்றுக் கற்றுக் கொண்டதோடல்லாமல் அதில் மிகவும் சிறப்பாகவும் விளங்கினார். அவர் தன்னுடைய வகுப்பில் உயர்நிலை பெற்று முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 'இந்தியாவை வழிநடத்துவோம்' திட்டத்தில் பங்கேற்று அவரோடு பணிபுரிய சிறப்பான வாய்ப்பும் பெற்றார்.

அவர் தன்னுடைய பத்தாம் நிலை தேர்வுகளில் (SSLC) ஒட்டுமொத்தமாக 90 சதவிகிதத்திற்கு மேலாக பெற்று வெற்றி பெற்றார். அவரது உடற்குறைபாடு காரணமாக அறிவியல் பாடவகுப்பு படிக்கும் வாய்ப்பைத் துரதிஷ்டவசமாக இழந்தார். இதை எதிர்த்து சட்டபூர்வமாகச் செயல்பட முடிவெடுத்தார். இறுதியாக அவர் அறிவியல் வகுப்பில் பயில அரசாங்க உத்தரவு கிடைத்தது. ஆனால் 'அவருடைய சொந்தப் பொறுப்பில்' என்று உத்தரவிட்டனர். அவர் தன்னுடைய பாடப்புத்தகங்களைத் தானே ஒலிப்புத்தகங்கள் ஆக்கிக் கொண்டார். அவர் அளவுக்குமீறி கடினமாக உழைத்தார். வாரியம் நடத்திய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 98 சதவிகிதம் பெற்றார்.

அவர் பார்வையற்றவராக இருந்ததால், IIT, BITS மற்றும் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்லூரி போன்றவை தங்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆகவே, ஸ்ரீகாந்த் தன் 18ஆம் வயதில் அமெரிக்க மஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் சர்வதேசப் பார்வையற்ற மாணவர் என்ற சிறப்பைப் பெற்றார்.

தன்னுடைய கல்வியை அமெரிக்காவில் MIT 60 முடித்தபிறகு அங்குள்ள மிகப்பெரிய கம்பெனிகள் வழங்கவிருந்த அரிய வாய்ப்புகளை ஏற்காமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஆக்கப்பூர்வத் தீர்வுகளைத் தேடி இந்தியாவுக்குத் திரும்பினார். இன்று, ஸ்ரீகாந்த் இயற்கைநிலை சார்ந்த மறுசுழற்சிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நான்கு உற்பத்தி ஆலைகளுடன் கூடிய மிகப்பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் தொழில்முனைவோராக இருக்கிறார். முற்றிலும் சூரிய சக்தியைக் கொண்டு இயங்கக் கூடிய ஐந்தாவது ஆலை விரைவிலேயே ஆந்திரப் பிரதேசத்தில் உருவாக உள்ளது. அவர் 70 சதவிகிதம் மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட ஊழியர் கட்டமைப்பைப் பெற்றுள்ளார். அவருடைய விற்பனை வர்த்தகம் ரூ 500 மில்லியன்.

ஸ்ரீகாந்த் தன்னுடைய குறிக்கோளைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: 'இந்த உலகம் என்னைப் பார்த்து, 'உன்னால் எதுவும் செய்ய முடியாது' என்று கூறினால், நான் அவர்களைத் திரும்பிப் பார்த்து, 'என்னால் எதுவும் செய்ய முடியும்' என்று சொல்கிறேன்.

புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள்

ஒருகாலத்தில் ஓர் அரசர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அந்த அரசருக்கு வயதாகிக் கொண்டிருந்தது. ஒரு வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கு அதுதான் சரியான நேரம் என்று முடிவெடுத்தார். வயதான அந்த அரசர் தன் மூன்று மகன்களையும் அழைத்து அவர்கள் செய்யவேண்டிய வேலையை அவர்களுக்குக் கொடுத்தார். ஒவ்வொருவரும் ஒரு அறையை ஒரேயொரு பொருளால் எந்தவித இடைவெளியும் இல்லாதவாறு நிரப்ப வேண்டும். ஒரு சிறு பகுதிகூட நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது. இதை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு கொடுக்கப்பட்டது.

மூன்று இளவரசர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி விரைந்து சென்றார்கள். முதலாமவன் தன்னுடைய அறையை மிகப்பெரிய கற்களால் நிரப்புவதற்கு முடிவெடுத்தான். அந்த வேலையைச் செய்யுமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் இந்த வேலை உழைப்பைக் கொண்டு செய்யவேண்டியிருந்ததால் முன்னேற்றம் தாமதமாக இருந்தது.

இரண்டாமவன் இதைவிட ஒரு சிறந்த முறையைச் செயல்படுத்தினான். அறையைப் புல் கட்டுகளால் நிரப்பும்படி தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். கற்களைத் தூக்கி வந்து வைப்பதைவிட இது மிகவும் எளிதாக இருந்தது. இந்த இளவரசன் குறிப்பிட்ட நேரத்தில் அறையை நிரப்புவதில் வெற்றி பெற்றுவிட்டான்.

மூன்றாவது இளவரசன் வெறுமனே ஒரு திரவம் அடங்கிய சிறிய பாட்டிலை எடுத்துக் கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான். அவன் அறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் நன்கு மூடினான். எல்லா இடத்திலும் தான் கொண்டு வந்த திரவத்தைத் தெளித்தான்.

குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் அரசர் மூன்று அறைகளுக்கும் சென்றார். முதலாமவனின் அறை பகுதியாகத்தான் கற்களால் நிரப்பப்பட்டிருந்தது. கடினமான வேலை என்பதால் கொடுத்த வேலையை முடிக்க முடியவில்லை என்பதுதான் பிரச்சனை.

இரண்டாவது அறை புல் கட்டுகளால் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தது. பிரச்சனை என்னவென்றால் புல்களுக்கு இடையில் சூரிய ஒளி புகுந்து செல்ல முடிந்தது. இது அரசர் கொடுத்த நிபந்தனையை நிறைவேற்றவில்லை.

அரசர் மூன்றாவது அறைக்குச் சென்றார். கதவைத் திறந்த உடனேயே இனிமையான அதிகமான மல்லிகை மணம் அவருடைய மூக்கில் நிறைந்தது. அரசர் அறையின் எல்லா மூலை முடுக்கெல்லாம் சென்று பார்த்தார். எல்லா இடத்திலும் அந்த மணம் நீக்கமற நிறைந்திருந்தது. மூன்றாவது இளவரசன் அறை முழுவதும் வாசனைப்பொருளை நிறைத்திருப்பதை அரசர் உணர்ந்து கொண்டார்.

அரசர் புன்னகை செய்தார். அவர் தகுதி மிக்க ஒரு வாரிசைத் தேர்ந்தெடுத்து விட்டார். கஷ்டப்பட்டு உழைப்பதைவிட புத்திசாலித்தனமாக சாதுரியமாகச் செயல்பட்டவர் வெற்றி பெற்றார்.

(நன்றி: சிறந்த மதிப்பெண் பெற முழுமையான 13 வழிகள், Westland Publications Private Limited, 61 Silverline Building, 2nd Floor, Alapakkam Main Road, Maduravoyal, Chennai 600095)
ஆங்கில மூலம்: அஷ்வின் சாங்கி, அசோக் ரஜினி
தமிழில்: சே. அப்துல் லத்தீப்
Share: 




© Copyright 2020 Tamilonline