டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்
|
|
தவத்திரு பங்காரு அடிகளார் |
|
- |டிசம்பர் 2023| |
|
|
|
|
'அம்மா' என்றும் 'சித்தர்' என்றும் பக்தர் பலரால் அன்புடன் அழைக்கப்பட்ட தவத்திரு பங்காரு அடிகளார் (82) இறையடி எய்தினார். விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில், மார்ச் 03, 1941 நாளன்று கோபால நாயக்கர் - மீனாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் இவர். இயற்பெயர் சுப்பிரமணி. (பங்காரு என்றால் தங்கம் என்பது பொருள்) சிறுவயதிலேயே ஆன்மீக அனுபவங்களைப் பெற்ற பங்காரு அடிகளார், ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவராய் வளர்ந்தார். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர், ஆசிரியர் பயிற்சி பெற்று, சோத்துப்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணி வாழ்வைத் தொடங்கினார்.
அக்காலகட்டத்தில் பெண் சித்தர் ஒருவரால் ஆட்கொள்ளப்பட்டார் பங்காரு அடிகளார். தான் குடியிருந்த வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தை வழிபாடு செய்துவந்தார். 1966ஆம் ஆண்டு வீசிய புயலில் அம்மரம் வேரோடு சாய்ந்தது. அந்த வேப்பமரத்தின் அடியில் இருந்து சுயம்பு உருவானது. அதையே கோயிலாக நிர்மாணித்த பங்காரு அடிகளார், ஆரம்பத்தில் தன்னை நாடிவரும் பலருக்குக் குறி சொல்லியும், மருத்துவ, ஆன்மீக ஆலோசனைகளை வழங்கியும் வந்தார். 1970களில், மேல்மருவத்தூரில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைத் தொடங்கினார். அதுமுதல் அவரது புகழ் தமிழ்நாடெங்கும் பரவியது. நாளடைவில் இந்தியாவிலும், உலகனைத்திலும் நன்கறியப் பெற்றவரானார். ஆயிரக்கணக்கான மக்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு வரத் தொடங்கினர். செவ்வாடையைத் தனது பக்தர்களுக்கான ஆடையாக அடிகளார் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
மடி, ஆச்சாரம், தீட்டு என்பவற்றை விலக்கி தெய்வம் அனைவர்க்கும் பொது என்பதை உணர்த்தும் வகையில் பெண்களே ஆதிபராசக்தி அன்னையைத் தங்கள் கைகளால் தொட்டு வழிபாடு செய்யலாம் என்றும், வீட்டு விலக்கு போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் அன்னையின் வழிபாட்டில் கிடையாது என்றும் அறிவித்தார் பங்காரு அடிகளார். அது மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் பேருந்துகூடப் போகாத குக்கிராமங்களிலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் தொடங்கப்பட்டது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் அம்மாவின் பக்தர்களாக ஒன்றுகூடி வழிபட்டனர். சமூக முன்னேற்றத்துக்காக அடிகளார் பள்ளிகள், கல்லூரிகள் பலவற்றைத் தொடங்கினார். பெண்கல்வியை ஊக்குவித்தார். பல்வேறு சேவைப்பணிகளை முன்னெடுத்தார். ஆதிபராசக்தி மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு மையத்தின் தலைவராகச் செயல்பட்டார்.
ஆதிபராசக்தி பீடத்திற்கு வராத அரசியல் தலைவர்களே கிடையாது என்னும் அளவுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அடிகளாரின் வாக்கைக் கேட்கப் பலர் வந்தனர். பலனடைந்து சென்றனர். அனைவரிடமும் எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரையும் தனது குழந்தைகளைப் போன்றே எண்ணிச் செயல்பட்டார் அடிகளார். அடிகளாரின் பக்தர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகின் 15 நாடுகளில் உள்ளனர்.
இவரது ஆன்மீக சேவையைப் பாராட்டி 2019ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துச் சிறப்பித்தது. பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரு மகன்கள்: அன்பழகன், செந்தில் குமார். இரு மகள்கள்: ஸ்ரீதேவி, உமாதேவி.
உடல்நிலை குன்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார், அக்டோபர் 19 அன்று இறையுடன் ஒன்றினார். |
|
அடிகளாருக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்
|
|
|
|
|
|
|