Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | வாசகர்கடிதம் | அஞ்சலி | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
யோசனை பலித்தது
- பகீரதன்|அக்டோபர் 2023|
Share:
அன்று சமையலில் கவனமே ஓடவில்லை அஞ்சுகத்திற்கு. அவள் கண், மனம் எல்லாம் அடுத்த வீட்டு ஜன்னலை ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தன. 'கலீர்' என்று சிரிக்கும் சத்தம் கேட்கவே, ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தாள் அஞ்சுகம். கையில் மலர்ந்த மல்லிகைப் புஷ்பத்துடன் தன் அருமை மனைவியின் அருகில் நிற்கிறான் அந்த வாலிபன். அவள் நாணிக் கோணிக் கொண்டு, "என்னிடமே கொடுத்துவிடுங்கள்; நானே தலையில் வைத்துக் கொள்கிறேன்" என்று அன்போடு கேட்கிறாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த அஞ்சுகத்திற்குக் குபீரென்று உடம்பு முழுவதும் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. "நாமுந்தான் குடித்தனம் செய்கிறோமே, சமையல்காரியைப் போல! அந்த இளந்தம்பதிகள் எவ்வளவு குதூகலமாக இருக்கிறார்கள்! என்ன ஆனந்தமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்!" என்று மனம் கலங்கினாள்.

அப்பொழுது, "ஸார்! தபால்!" என்ற சத்தம் கேட்கவே, துள்ளிக் குதித்து ஓடிப்போய்க் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அது அவள் தகப்பனாரிடமிருந்து வந்திருந்தது.

இந்தச் சமயத்தில், "ஆபீஸுக்கு நாழிகையாகி விட்டது; இலையைப் போடு" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அஞ்சுகத்தின் கணவன் ரங்கராஜன்.

அடுப்பில் கத்திரிக்காயை வேக வைத்துவிட்டு வந்தது அப்பொழுது தான் அவளுக்கு நினவு வந்தது. கடிதத்தைக் கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினாள். கத்திரிக்காய் எல்லாம் காய்ந்து கருகிப் போய்க் கிடந்தது. அதைப் பார்த்ததும் சிலைபோல் செயலற்று நின்று விட்டாள் அஞ்சுகம்.

இந்தக் காட்சியைக் கண்ட ரங்கராஜனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. "இன்று சாப்பாட்டு வாயில் மண்தான். அம்மாள் அடுப்பைக் கவனிக்காமல் கடிதத்தில் மூழ்கி இருந்தாளாக்கும்! வெட்கமில்லாமல் 'நாலு மாதமாக நான் முழுகாமல் இருக்கிறேன். நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து என்னை அழைத்துப் போ!' என்று உன் அப்பனுக்குக் கடிதம் எழுதி விட்டாயோ? ரொம்ப நல்லது. பேஷாகப் போய்ச் சேரு. இன்று நீயே உன் கருகிப்போன சமையலைச் சாப்பிடு!" என்று எரிந்து விழுந்துவிட்டு விர்ரென்று வெளியே சென்றுவிட்டான் ரங்கராஜன்.

அஞ்சுகத்திற்கு அகில லோகமும் சுழலுவதுபோல இருந்தது. அடுத்த வீட்டு இளந் தம்பதிகளாடு, தன்னுடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, அவள் என்னவெல்லாமோ எண்ணி எண்ணி ஏங்கினாள். அன்று மாலை பால்காரன் வந்து கூப்பிட்டபோது தான் அவளுக்குச் சுய உணர்வே வந்தது. தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தாள். "ஐயோ இவ்வளவு நேரமாகி விட்டதே! காலையில் அவர் சாப்பிடாமல் ஆபீஸுக்குப் போனாரே மாலை அவருக்கு ஏதாவது 'டிபன்' செய்ய வேண்டாமா?" என்று எண்ணிக்கொண்டே அடுப்பை மூட்டச் சென்றாள்.

அந்தச் சமயத்தில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "நான் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். எனக்காக ஒன்றும் செய்ய வேண்டாம்!" என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்கு வந்தான் ரங்கராஜன்.

இதைக் கேட்ட அஞ்சுகத்திற்குச் 'சுரீர்' என்றது. கண்ணீரும் கம்பலையுமாய் கணவனின் அருகில் சென்றாள்.

"இந்த நீலிக் கண்ணீருக்கு நான் வசியமாவேன் என்று நினைக்காதே!" என்று சொல்லிவிட்டு ரங்கராஜன் கூடத்திலிருந்த ஈஸிசேரில் சாய்ந்தான்.

"உலகத்திலே யாரும் செய்யாத தவறை நான் என்ன செய்து விட்டேன்?" என்று நினைத்துப் பார்க்கும்போது அஞ்சுகத்தால் தாங்கவே முடியவில்லை.

இப்படியே ஒரு வாரம் சென்றது. ரங்கராஜன் அஞ்சுகத்தினிடம் பேசுவதே கிடையாது. ஹோட்டலில்தான் சாப்பாடு. வீட்டிற்கு வருவதும், ஆபீஸுக்குப் போவதும் வெளித் திண்ணையில் படுத்து உறங்குவதுமாக நாட்கள் கழிந்தன.

ஒரு நாள், "வாருங்கள், வாருங்கள்!" என்று தன் கணவன் யாரையோ அழைத்த சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள் அஞ்சுகம். தன் தகப்பனார் வந்திருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. அப்படியே ஓடிப் போய் அப்பாவைப் பிடித்துக் கொண்டு 'ஹோ' என்று அழலாமா என்று கூடத் தோன்றியது. ஆனாலும் மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு சாந்தமாக நின்று கொண்டிருந்தாள்.

"என்ன, சௌக்கியமா? அஞ்சுகம் சௌக்கியமாயிருக்கிறாளா?" என்று மாப்பிள்ளையை விசாரித்துக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தார் மாமனார்.

அஞ்சுகம் உள்ளே இருந்தபடியே தன் தந்தையை ஆவலுடன் பார்த்தாள். "இந்தா, அம்மா. இதையெல்லாம் உன் அம்மா உன்னிடம் கொடுக்கச் சொன்னாள்!" என்று சொல்லி ஒரு பையை அஞ்சுகத்தின் கையில் கொடுத்தார்.

"என்ன மாப்பிள்ளை! இன்று நல்ல நாள். சாயங்கால ரயிலுக்கு அஞ்சுகத்தை அழைத்துக் கொண்டு போகலாம் என்று இருக்கிறேன், உங்களுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்..."

"அதற்கென்ன, பாதகமில்லை. நான் ஆபீஸிலிருந்து சாயங்காலம் சீக்கிரம் வந்து விடுகிறேன். அஞ்சுகத்தை ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராய் இருக்கச் சொல்லுங்கள்!" என்று சொல்லி விட்டு ஆபீஸுக்குச் சென்று விட்டான் ரங்கராஜன்.

மாலையில் ஒரு வண்டியை அழைத்துக் கொண்டு வந்து மனைவியையும் மாமனாரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் ரயிலேற்றி விட்டு வந்ததற்கப்புறம் தான் ரங்கராஜனுக்கு நிம்மதி உண்டாயிற்று.

அஞ்சுகம் தன் பிறந்தகத்திற்குச் சென்று மூன்று மாதங்களாகி விட்டன. ஒருநாள், "ஸார்! தந்தி!" என்ற சத்தங் கேட்டுத் திடுக்கிட்டு வாசலுக்கு ஓடினான் ரங்கராஜன். கைகள் நடுநடுங்கக் கையெழுத்திட்டுத் தந்தியை வாங்கிப் படித்துப் பார்த்தான். "அஞ்சுகத்திற்கு ஆண் குழந்தை பிறந்திருக்சிறது; தாயும் குழந்தையும் சௌக்கியம்" என்று இருந்தது.

ரங்கராஜனுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவனுக்கு உடனே போய்த் தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், நடுவில் "நாமே வலுவில் போகக் கூடாது!" என்ற வைராக்கியம் வந்து அவன் மனதைக் கல்லாக்கி விட்டது.

இப்படியாகத் தினங்கள், வாரங்கள், மாதங்களாக ஒரு வருஷம் ஓடி மறைந்தது.

தன்னைக் கொண்டு போய்த் தன் கணவனிடம் விட்டுவிடும்படி அஞ்சுகம் தன் தந்தையிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். "உன்னை விரும்பாத உன் புருஷனிடம் உன்னைக் கொண்டுபோய் நான் விடமாட்டேன்!" என்று கண்டிப்பாய் மறுத்து விட்டார் அஞ்சுகத்தின் தந்தை.

வேறு வழியின்றி அஞ்சுகம் தன் விதியை நொந்து கொண்டாள்.

ரங்கராஜன் அன்று வழக்கம்போல் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வெந்ததும் வேகாததுமாயிருந்த சப்பாத்தியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, ஒரு கட்டி பட்டை அடித்த சாதத்தை இலையில் போட்டுவிட்டுப் போன சப்ளையர் திரும்பி வரவே இல்லை. ஒரு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருந்த பிறகு, "சாம்பார் கிடையாது; ரஸமும், மோருந்தான்!" என்று சொல்லிக் கொண்டே உப்பில்லாத ரஸத்தையும், கொஞ்சம் நீர்மோரையும் வைத்துவிட்டுப் போய்விட்டார் சப்ளையர்.

"என்ன, ஐயா! சாப்பாடு இவ்வளவு மோசமாயிருக்கிறதே!" என்று ஹோட்டல் முதலாளியிடம் போய்ப் புகார் செய்தான் ரங்கராஜன்.

காதிலும், கையிலும் வைரங்கள் மின்ன தொந்தியைத் தடவிக் கொண்டிருந்த முதலாளியின் காதில் இது உடனே விழுமா? சிறிது நேரங் கழித்து, "அப்படித்தான் இருக்கும் சாப்பாடு! உம்மை நாங்களா கூப்பிட்டோம்? இஷ்டமிருந்தால் சாப்பிடும்; இல்லாவிட்டால் போய்விடும்!" என்றார்.

அப்பொழுதுதான் தன் அருமை மனைவி அஞ்சுகத்தின் நினைவு அவனுக்கு வந்தது. "என்னதான் இருந்தாலும் வீட்டில் இவ்வளவு மோசமாகவா இருக்கும் சாப்பாடு!" என்று நினைத்துக் கொண்டான்,

மறுநாள், ஆபீஸில் நிறைய வேலையிருந்தது. வயிற்றுப் பசி வேறு. வேலையை முடித்துவிட்டு வேகமாக ஹோட்டலுக்கு வந்தான். ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்த காவல்காரன், 'என்னடா, ஒரு வருஷமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறானே' என்று கூடப் பார்க்காமல் "மணி ஆகிவிட்டது; சாப்பாடு கிடையாது!" என்று கடுமையாகச் சொல்லியதுடன், ஹோட்டலுக்கு உள்ளே விடுவதற்குக் கண்டிப்பாக மறுத்துவிட்டான்.

வேறு வழியில்லாமல் அன்று நாலு வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குப் போனான் ரங்கராஜன். வயிறு நிறைந்தால் தானே வேலையைச் செவ்வையாகச் செய்ய முடியும்? ஒன்றிருக்க ஒன்றைச் செய்துவிட்டு மானேஜரின் கோபத்திற்கு ஆளானான்.

அதே மன வேதனையில் சாயங்காலம் வீட்டிற்கு வந்தான். அன்றுதான் வீடு வெறிச்சென்றிருப்பது அவனுக்குத் தெரிந்தது. "அஞ்சுகமும் குழந்தையும் வீட்டில் இருந்தால்..." என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான்.

இந்தச் சமயத்தில், "என்ன மிஸ்டர் ரங்கராஜன்!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். வீட்டுக்காரர் நின்று கொண்டிருந்தார்.

"உங்களிடம் ஒரு சேதி சொல்ல வேண்டும் என்று இரண்டு நாளாகப் பார்க்கிறேன். நீங்கள் அகப்படவே இல்லை. குழந்தை, குட்டிகளை வைத்துக்கொண்டு வீடு கிடைக்காமல் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிறார்கள். திடீரென்று என் நண்பர் ஒருவர் இவ்வூருக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். வீட்டிற்கு ஒரு மாதமாக அவர் பார்க்காத இடமே கிடையாதாம். இந்தச் சமயத்தில் உதவி செய்ய வேணும் என்று என்னை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். உங்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய வீடு வேண்டியதில்லை. நீங்கள் ஒரு அறையை மட்டும் வேண்டுமானால் வைத்துக்கொண்டு, வீட்டை காலி செய்து கொடுத்து விடுங்கள்"

இதைக் கேட்ட மாத்திரத்தில் ரங்கராஜனின் தலை சுழல ஆரம்பித்துவிட்டது. அவன் மனம் எதிர்காலத்தை நோக்கி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.

திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவனாய், "நாளைக்கு என் மனைவியையும் குழந்தையையும் போய் அழைத்துக்கொண்டு வரபோகிறேன். தயவுசெய்து வேறுயாருக்கும் வீட்டைக் கொடுக்க ஏற்பாடு செய்து விடாதீர்கள்!" என்று கேட்டுக் கொண்டான்.

"அப்படியானால், சரி!" என்று, அவன் சொன்னதை ஆமோதித்து விட்டுச் சென்றார் வீட்டுக்காரர்.

★★★★★


ஆனால், தன்னுடைய மாமனார் எழுதிக் கேட்டுக் கொண்டதன் காரணமாகத்தான், அந்த வீட்டுக்காரர் தன்னை அவ்வாறு பயமுறுத்தினார் என்பது ரங்கராஜனுக்கு எப்படித் தெரியும்?
பகீரதன்
Share: 




© Copyright 2020 Tamilonline