Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | அஞ்சலி | கவிதைப் பந்தல் | Events Calendar
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மாலதியின் தலை தீபாவளி
- ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்|மார்ச் 2023|
Share:
"சீதா, சீதா! இதோ 'வாணி (பத்திரிகையின் பெயர்) சிறுகதைப் போட்டியில் 'ரேவதி' என்பவள் முதல் பரிசைத் தட்டியிருக்காளே! அடாடா! முழுசா, ஆயிரம் ரூபாய் என்றால் ஆயிரம் ரூபாய். யார் இவள்?"

"அவள் யாரோ, எனக்குத் தெரியாதே"

"நீயும்தான் கதை எழுதறேன் என்கிறாயே. புண்ணியமா புருஷார்த்தமா? ஏதாவது அதனால் சம்பாத்தியமுண்டா?"

"ஏம்பா, அம்மாவை ஏதாவது சொல்லாவிட்டால் உனக்குப் பொழுது போகிறதில்லையா? அம்மாவின் கதை ஒன்றையாவது நீ படிச்சுப் பார்த்தானாத் தெரியும், அதன் ருசி உனக்கு!"

"பெண் பரிஞ்சுண்டு வந்துட்டையாக்கும். உங்கம்மாவை நான் ஒண்ணும் சொல்லலைடியம்மா. உன் கலியாணத்திற்கு ஏதாவது கொஞ்சம் பணம் சம்பாதிச்சுத் தரட்டுமேனுதான் பார்த்தேன்...."

"அப்பா, அதோ புருஷோத்தமையர் மாமா வருகிறார்!" என்றாள் மாலதி. ராமச்சந்திரனும் எழுந்து சென்றான்.

சென்னையில் பிராக்டீஸ் செய்யும் ஆயிரக்கணக்கான வக்கீல்களில் ராமச்சந்திரனும் ஒருவன். வருமானம் மிகச் சொற்பமே. கூட ஏதோ பிதுரார்ஜிதம் கொஞ்சம் இருந்ததாகையால் எப்படியோ ஒருமாதிரியாகக் குடும்பத்தை நடத்தி வந்தான். தற்சமயம் பெண்ணுக்குக் கலியாணம் செய்யவேண்டிய கவலை வரவே, பணக்கவலை அவனை முற்றுகையிட்டது. 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்பதுபோல் ராமச்சந்திரனுக்கு மாலதிதான் ஒரே குழந்தை.

குழந்தையைக் கூடியவரையில் தகுந்த இடத்தில் கொடுத்துக் கலியாணம் செய்ய வேண்டுமென்பதுதான் பெற்றோர்களின் விருப்பம். தேடாத இடமெல்லாம் பார்த்து, கடைசியில் வீட்டை அடமானம் வைத்து, நாலாயிரம் ரூபாய் வரதக்ஷிணையுடன் சேலம் இன்ஜினியர் ராமபத்திரனைய்யரின் புதல்வன் கோபாலகிருஷ்ணனுக்கு மாலதியைக் கொடுத்துச் சிறப்பாகக் கலியாணத்தை நடத்திவிட்டான் ராமச்சந்திரன். இது (மாலதிக்குக் கலியாணம்) நடந்த பத்தாம்நாளே ஆறுமாதக் கர்ப்பிணியாகவிருந்த சீதாவிற்கு திடீரென்று ஏதோ கர்ப்பக்கோளாறு கண்டு, அதே சாக்கில் காலகதியடைந்தாள்.

மாலதிக்கு அந்த வருஷம் தலைதீபாவளி நடைபெறவில்லை. அதற்கடுத்த வருஷமாவது தீபாவளிப் பண்டிகைக்கு மாப்பிள்ளையை அழைத்து, கலியாணத்தில் செய்யாமல் நின்றுபோன வைர மோதிரமும், தங்க ரிஸ்ட் வாட்சும் செய்து போட்டாலன்றி, பெண்ணைத் தங்கள் அகத்திற்கு அழைத்துக் கொள்கிற யோசனை கிடையாதென்று மாலதியின் மாமனார் மூன்றாம் மனுஷ்யர் வழியாக ராமச்சந்திரனுக்கு செய்தியனுப்பினார். ஏற்கெனவே கடன்பட்டிருந்த ராமச்சந்திரன் இந்தச் செய்தியை அறிந்து, செய்வதென்னவென்று வகையறியாது பரிதபித்தான். அடமானத்திற்கு வைத்த வீட்டை இன்னும் மீட்க வழிகாணோம். மேலும் மனைவி காயலாகிக் கிடந்தபொழுது வேறு மருந்துக்கும், மாயத்திற்கும், டாக்டருக்குமென்று கொடுப்பதற்காகக் கடன் வாங்கியிருந்தான்.

குழந்தைக்குக் கலியாணமாகி ஒன்றரை வருஷமாச்சு. அவளைக் காலாகாலத்தில் புக்ககம் அனுப்பிக் கொடுக்காமலிருப்பதும் நன்றாகவில்லை. குழந்தைதான் என்ன நினைப்பாள்? வரவர வரும்படியும் குறைந்துவிட்டது. என்ன செய்வான், பாவம்! இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தான். ரொம்ப ரொம்ப யோசித்துவிட்டு, கடைசியில் நண்பன் தியாகராஜனிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான். அதனுடன்கூட மனைவியின் சில்லறை நகைகள் சிலவற்றையும் விற்றுப் பணம் ஆக்கி, கூடப்போட்டு வைர மோதிரமும், தங்கக் கைக்கெடியாரமும் வாங்கிவிட்டான், அதைத் தவிர தீபாவளி ஜவுளிச் செலவு வேறு உண்டே! சம்மந்திகளுக்கும், பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்குமாக இரண்டு ஜதைப் புடவைகளும், வேஷ்டிகளும் (இந்த யுத்த காலத்திலேதான் துணி விலையைக் கேட்க வேண்டுமா? விஷம் போல் ஏறுகிறதே) வாங்கியாக வேண்டும். தவிர, பண்டிகைச் செலவு, சம்மந்திகள் வந்து போக ரயில் சார்ஜ்... அப்பப்பா! இத்தனையும் யோசிக்க யோசிக்க ராமச்சந்திரனுக்குத் தலை சுழன்றது. என்னவோ பாவம், மென்று விழுங்கித் திண்டாடிக்கொண்டு தலைதீபாவளிக் கொண்டாட்டத்திற்குக் கட்டாயம் வரும்படி சம்மந்திகளுக்கும், மாப்பிள்ளைக்கும் அழைப்புக் கடிதமும் எழுதிப் போட்டுவிட்டான். செலவு இதோடு நின்றுவிட்டதா என்ன? இன்னும் இதற்கடுத்த மாதம் நிறைவேறவிருக்கும் சாந்தி கல்யாணத்திற்குச் சீர் எடுக்கவேண்டுமே. அதற்குச் செலவழிக்கப் பணம்?

தந்தையின் அசௌகரியங்களையும், அனுகூலங்களில்லாமையையும் சிறுமி மாலதி எவ்விதம் அறியக்கூடும் பாவம்! கலியாணமாகி ஒன்றரை வருஷத்திற்குப் பிறகு சந்திக்கப் போகும் தன் மணாளனைப் பற்றிய இன்ப நினைவுதான் அவளுக்கு! ஆனந்த மிகுதியால் பூரித்துப் போனாள் மாலதி. நகை நட்டுகளை விதவிதமாக ஜோடித்துக் கொள்வதும், புதுப் புடவை கட்டிக்கொள்வதும், கேசத்தை வாரி அழகாகப் பின்னிச் சிங்காரித்துக் கொள்வதுமாக நிலைக்கண்ணாடி முன்னால் மணிக் கணக்காக நின்று காலங் கழிக்கலானாள். வீடு முழுவதும் ஒழித்து, பளிச்சென்று பரிசுத்தம் செய்யலானாள். தன் தாயாரைப் பெற்ற தர்மூப் பாட்டிக்கு பக்ஷணம், பணியாரம் தயாரிப்பதில் கூடமாட ஒத்தாசையும் செய்வாள்.



கூடத்திற்கடுத்த பெரிய அறையை மாப்பிள்ளைக்காக தந்தையும் மகளுமாக ஒழித்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு மூலையில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதன்மீது இன்னும் நான்கைந்து பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. இருவருமாக ஒன்றொன்றாய் பிடித்து அடுத்த அறைக்கு எடுத்து சென்று வைத்தார்கள். அடிப்பெட்டியின் தளத்தில் கறையான் பிடித்திருப்பதைக் கண்டு மாலதி, "அப்பா! அம்மா பெட்டியெல்லாம் கறையான்" என்று கூவினாள்.

"அம்மா பெட்டியா? ஏதோ பழம் துணிப் பெட்டி போலிருக்கே?" என்றான் ராமச்சந்திரன்.

"இல்லை அப்பா. அம்மா இதில்தான் தான் எழுதிய கதைகள், பிரசுரமான பத்திரிகைகள், அதன் சம்பந்தப்பட்ட கடிதங்கள் எல்லாவற்றையும் வைப்பது வழக்கம்" என்றாள் மாலதி.

"ஆனால், சாவிக்கொத்தைக் கொண்டு வா. திறந்து பார்க்கலாம். எல்லாம் என்னவாச்சோ" என்று பெட்டியை எடுத்து வேறிடத்தில் வைத்து கறையானைத் தட்டினான் ராமச்சந்திரன். மாலதி சாவிக்கொத்தைக் கொணர்ந்து, ஒவ்வொரு சாவியாகப் போட்டுப் பார்த்து, கடைசியில் பெட்டியைத் திறந்துவிட்டாள்.

"அப்பாடா! உள்ளே கறையான் புகவில்லை" என்றாள் மாலதி.

ராமச்சந்திரன் உட்புறமிருந்த புத்தகங்களையும் பத்திரிகைத் தாள்களையும் ஒன்றொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்த வண்ணமே, இதென்ன அம்மா 'ரேவதி' எழுதிய கதைகளுக்கு இப்படிச் சிகப்பு பென்ஸிலால் குறிப்பு போட்டு ஜோடித்து வைத்திருக்கிறாள்! அம்மா பெயரில் கதைகள் எங்கேயோ கொஞ்சம்தானே இருக்கு" என்றான்.

"ஐயோ, அப்பாவே! அம்மாவின் ஜன்மநக்ஷத்திரமென்ன?

"ரேவதி."

"பின்னே 'ரேவதி' என்ற எழுத்தாளி யாருன்னு நெனச்சே?"

"ஆனால் அவள் உங்கம்மாவா!"

"பின்னே..."

"அடி கள்ளி! அம்மாவும், பெண்ணுமாக ஏன் எனக்கு இதைச் சொல்லாமல் ஒளித்தேள்?"

"அம்மா தன் நிஜப்பெயரில் கதை எழுதினால் தான் நீ படிப்பதே இல்லை. அசட்டையா இருந்துவிடுகிறாய் என்று 'ரேவதி' என்ற புனைபெயரில் எழுதிண்டிருந்தாள்...." என்று சொல்வதற்குள் ராமச்சந்திரன் பெட்டியிலிருந்த சிறிய டைரியொன்றை எடுத்து தாள்களைத் திருப்பவாரம்பித்தான்.

2-4-19... 'விலாசினி'யில் வெளிவந்த என் கதைக்கு இன்று 25 ரூ. சன்மானம் வந்தது.

4-6-19... 'மைத்ரேயி'யில் பிரசுரமான என் தொடர்கதைக்கு இன்று 120 ரூ. வந்தது.

5-9-19... 'தேசபந்து'வின் சிறுகதைப் போட்டிப் பந்தயத்தில் என் கதைக்கு இன்று கிடைத்த முதல்பரிசுப் பணம் 500 ரூ.

7.11.19... 'வாணி'யின் சிறுகதை போட்டிப் பந்தயத்தில் நான் ஜயித்த பணம் 1000 ரூ.

'சுகந்தா'வில் பிரசுரமான என் கட்டுரைக்கு 50 ரூ.

இத்தனையும் மாலதியின் கலியாணச் செலவிற்கென்று, கலியாணம் நடந்த அடுத்த மாதமே அவரிடம் சர்ப்ரைசாக கொடுக்கவேண்டும். இந்தத் தேதிக்கு கிட்டதட்ட 2000 ரூ. சேர்ந்திருக்கு. கடைசி பக்ஷம் 3000 ரூபாயாவது என் கைப்படச் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும்....

- இவ்வாறு டைரிக் குறிப்புகளை படித்துக்கொண்டே போனான் ராமச்சந்திரன். அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பரபரவென்று பெட்டியிலுள்ள பத்திரிகைகளையும், காகிதங்களையும் புரட்டினான். அடிப்பாகத்தில் நீண்டதொரு கவர் இருந்தது. அதைத் திறந்து பார்க்கையில், கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் வெளிப்பட்டன. எண்ணிப் பார்த்தால் 3756 ரூ!

"மாலதீ!"

"அப்பா "

"உன் தாயார் ஒரு தெய்வம்! 'கதை எழுதறேன் பேர்வழி' என்று என்ன சாதிக்கிறாயோ" என்று அவளை ஏசுவேனே, அவள் புனிதத் தன்மையை அறியாது போனேனே. தமிழ்நாடு போற்றிப் புகழும் சிறந்த எழுத்தாளி 'ரேவதி' தான் என் கண்மணி சீதா என்பதை அறியாது போனேனே!" என்று கண்ணீர் வடித்தான் ராமச்சந்திரன்.

★★★★★


மாலதியின் தலை தீபாவளிக் கொண்டாட்டம் முதல் தரமான முறையில் இனிதே நடைபெற்றதென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாசன்
Share: 




© Copyright 2020 Tamilonline