|
|
|
தீபாவளியன்று பொழுது விடிந்ததும் வெங்கட கிருஷ்ணையருக்குத் தெருவில் வரும் பிச்சைக்காரர்களுக்குப் பதில் சொல்வது தீராத் தொல்லையாக இருந்தது. ஒருவர்பின் ஒருவராகக் குடுகுடுப்பாண்டி, அப்புனீர் மாட்டுக்காரன், குரங்காட்டி, செப்பிடு வித்தைக்காரன், குறி சொல்லும் நரிக்குறத்தி, தாடிப் பண்டாரம் இப்படி எல்லோரும் முறையே வெங்கடகிருஷ்ணையரைத் துதித்துப் பணிந்து கெஞ்சி முறையிட்டுக் கல்லான நெஞ்சைக் கரைய வைக்கும் பஞ்சப் பாட்டுக்கள் பாடி கந்தை, கிழிசல் தந்தருள வேண்டுமென்று மன்றாடினார்கள். நாகூர் ஆண்டவனுக்கு விளக்குத்திரி போடும் தர்மத்தில் வெங்கட கிருஷ்ணையரை ஈடுபடுத்த முயன்றான் குடுகுடுப்பைக்காரன். கலியபெருமாளுக்கு மாடு விடும்போது கொம்பில் சுற்றுவதற்கு ஒரு வஸ்திரம் யாசித்தான் அப்புனீர் மாட்டுக்காரன். குரங்காட்டி தன் சீரங்கிக்கு ரவிக்கை தைக்க ஒரு சீலைத் துண்டம் தேவை என்று சிபார்சு செய்து, சீரங்கியைக் கொண்டே யாசிக்கச் செய்தான். தாடிப் பண்டாரம் குளிருக்குப் போர்வை ஒன்று கொடுத்து உதவினால் நல்ல தர்மமாகுமென்று வற்புறுத்தினான். செப்பிடு வித்தைக்காரன் தன் வித்தைகளைப் பார்த்தபின் அதற்குத் தகுந்த சன்மானமாக வேஷ்டி, படியரிசி, பாக்கு, வெத்திலை, பணம் எல்லாம் கொடுக்கும்படி ஒரு தாக்கீது செய்து கொண்டான். இதற்கு மத்தியில் குறத்தி வீதியில் எதிரொலி குமுறும்படி வெண்கல நாதத்துடன் கீதம் பாடிக்கொண்டு நர்த்தனக் காட்சி அளிக்கலானாள்.
வெங்கடகிருஷ்ணையர் அன்று காலையில் கொஞ்சம் கோபமாக இருந்தார். காரணம் வேறு. மாப்பிள்ளை அன்று அவர் கொடுத்த தீபாவளி ஸம்பாவனையை - சேலம் வேஷ்டி ஜோடியையும் ராஜா விருத்திக்கல் பதித்தத் தங்க மோதிரத்தையும் - நிராகரிக்கும் பாவனையில் நடந்துகொண்டான்.
பிச்சைக்காரர்களின் தொல்லை வெங்கட கிருஷ்ணையருக்குத் தம் கோபக்கனலை விசிறிவிட ஒரு முகாந்தரம் அளித்தது. "வாருங்கோடா! வாருங்கோ! தீபாவளியாச்சே என்று உங்களுக்கெல்லாம் துணி வாங்கி வைத்திருக்கிறேன்! வாங்கிக் கொண்டு போகலாம், வாருங்கோடா! சோம்பேறித் தடியன்களா! இங்கே அவனவன் கந்தல் கிழிசல்களைத் தைத்துக் கட்டிக்கொண்டு காலம் தள்ளுகிறான். உங்களுக்கெல்லாம் வேஷ்டி வாங்கித் தயாராக வைத்திருக்கமாட்டானோ? பத்தாறு கட்டினவர்கள் எல்லாம் நாலு முழம் முண்டு கட்டிப் பழக்கிக் கொள்ளவேண்டிய காலம் வந்திருக்கு. வழியிலே போகிற வேலையத்தவன்களுக்கெல்லாம் வேஷ்டி கொடுக்கமாட்டானோ ஒருத்தன்? இங்கே, வாங்க வேண்டியவர்களுக்கே வேஷ்டி வாங்க முடியாமல் கடைக்குக் கடை அலைந்து திரிந்து முழங்கால் முறிந்து போச்சு. உங்களுக்கென்ன? கொடுத்தால் வாங்கிக் கொண்டு போக மாட்டீர்களோ? இங்கே வேஷ்டியும் கிடையாது. ஒன்றும் கிடையாது. போங்கடான்னா! இப்போ போகிறீர்களா? தண்ணியைக் கொண்டுவந்து தலையில் கொட்டச் சொல்லட்டுமா? மரியாதையாகப் போய்விடுங்கள். விடிந்ததும் விடியாததுமாக எனக்கு இருக்கிற தொல்லை போறாதுன்னு நீங்கள் எங்கேயடா வந்தீர்கள், என் கழுத்தை அறுக்க? சனியன்களா! தொலையுங்கோடா ஒரு நாழி முன்னே!" என்று இரைந்தார் ஐயர்.
வெங்கட கிருஷ்ணையருக்குக் கோபம் வந்தால் கொந்தளிக்கும் சமுத்திர ஜலத்தைப்போல் அலை வீச்சும் அலை வீழ்ச்சியுமாக மாறி மாறிப் பொங்குவார். எழுந்து எழுந்து உட்காருவார். ரேழிக்குப் போவதும் வாசலுக்கு வருவதுமாக ஊசலாடுவார். அவர் கோபம் அவரைப் பல தினுசாக ஆட்டிவைக்கும். ஆனால் எதிராளி பயப்பட வேண்டியதே இல்லை! அவருடைய பதற்றமும் ஆயாசமும் அவர் எவ்வளவு தம் கோபத்தை அடக்குவதற்குப் பிரயத்தனப்படுகிறார் என்பதைக் காட்டுகின்றனவே ஒழிய, எதிராளியைத் தாக்குவதெல்லாம் வெறும் தோற்றமே என்பது எளிதில் புலப்படும். அவராகக் குமுறிப் பொங்கிப் பெருகி, வெடித்து, விசிறி, ஆறி அடங்கிப்போவார். அதுமட்டும் அல்ல; பொங்கிய சமுத்திரம் பின்வாங்குவது போல் அவர் கோபம் சமனமடைந்ததும் கோபத்தின்மேல் வெறுப்பை அடைந்து அதற்கு எதிரிடையான போக்கைக்கூட ஆதரிக்கத் தொடங்குவார்
ஈச்வரன் கள்ளம் கபடமில்லாத உள்ளத்தைப் படைத்து அதனுடன் முன்கோபத்தையும் கொடுக்கிறான் என்பது உலகாநுபவம். அதன்படியே வெளிப்படையாகக் கனல் வீசும் ஆவேசச் சொற்களைப் பொழிந்துகொண்டு தயாளுவான வெங்கட கிருஷ்ணையர் உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்துகொண்டிருந்தார்.
பிச்சைக்காரர்களுக்குள் குடுகுடுப்பைக்காரன் சிறந்த வாய்ஜாலக்குக்காரனாய் இருந்ததுடன் ஆழ்ந்த மதியூகி. மற்றத் தோழர்கள் சலிப்புற்று அரிசியைப் பெற்றுக்கொண்டு விலகிப்போன பின்னரும் அவன் நகரவில்லை. வெங்கட கிருஷ்ணையரின் ஹிருதயத்தை அவன் உள்ளங்கையில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தான். "மவராசங்க, நீங்க தீவளிக்குப் புதிசு கட்டிக்கிறீங்க. இந்த ஏழைப் பக்கிரி உங்களப் புதிசு கேக்கலீங்களே! நீங்க கட்டிக் கிழிந்த பழசு ஒண்ணுதானே கேட்டேன். சாமிக்கு முன்கோபம் ஜாஸ்தி; மனசு தங்கம். ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவாரு. நீங்க பிள்ளே குட்டிங்களோடே சொகமாயிருக்கணும். உங்களுக்கு நல்ல சேதி, சந்தோசம் வருது! வீட்டிலே புது மாப்பிள்ளை வந்திருக்காரு. அவரு கொஞ்சம் கோபக்காரரு. ஒருத்தன் பேச்சைக் கேட்டுக் கிட்டு உங்கபேரிலே மனஸ்தாபமாயிருக்காரு. ஆனால் யோசிக்காதேயுங்க. இன்னிப் பொழுதுக்குள்ளே சமாதானமாகிவிடுவாரு. உங்க குழந்தைக்கு ஒரு திருஷ்டிமாதிரியிருக்கு. ஒரு பொம்பிள்ளை கொடூரப் பார்வை பார்க்கிறாள். இந்தப் பக்கிரி கையாலே ஒரு ரக்ஷை கட்டிக்கணும். உங்களுக்குத் துரோகம் நினைத்தவன் ஐயோன்னு போகப்போகிறான்! இந்தத் தென்மேற்கு மூலையிலே ஒரு கௌளி சொல்லுது. இன்னும் ஒன்பது நாளிலே நீங்க நினைத்த காரியம் ஜயமாகுது. இன்னிக்கு ஒரு கடிதாசு வருது. அது மூலமாய் உங்களுக்குப் பெரிய லாபம் கிடைக்கப்போகுது. காளியாயி சொல்லறா... ஜக்கம்மா சொல்லறா... மலையாள பகவதி சொல்லறா... உங்களுக்கு ஒரு கவலையும் வைக்கமாட்டாள். உங்கள் குல தெய்வத்துக்கு ஒரு பிரார்த்தனை செய்துகொண்டு அதை மறந்துவிட்டீங்க. அதை நினைச்சுப் பாருங்க. உங்கள் மனசு நல்ல மனசு. இந்த வருசம் உங்க வீட்டிலே கல்யாணம் வருது. உங்கள் பேர் விளங்கப் போவுது. சந்தோசம் வருது; சந்தோசம் வருது; நல்ல வாக்குச் சொல்லடி, காளியாயி! நல்ல வாக்குச் சொல்லடி. குடு குடு குடு குடு குடு குடு...என் மகாராஜா! விடிய ஜாமத்திதிலிருந்து நல்ல வாக்குச் சொல்லறேன் உங்கள் வாசலிலே! ஒரு பழசு, கந்தை, கிழிசல்தானே கேட்கிறேன்? எத்தனை நேரம் காத்திருப்பேன், சாமி" என்று சொல்லி முடித்தான்.
வெங்கட கிருஷ்ணையரின் மனம் கசிந்தது. அதில் கோபத்திற்குப் பதில் ஒரு திகைப்புக் குடிகொண்டது. குடுகுடுப்பைக்காரன் தெய்வ சக்தியால் பேசுகிறான் என்று அவர் நம்பவேண்டியிருந்தது. அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் அவருக்குப் பொருத்தமாக இருந்ததுடன், வருங்கால சுபங்களை அவன் குறிப்பிட்டது அவருடைய நொந்த மனத்திற்கு மிக்க ஆறுதலையும் தந்தது. உடனே எழுந்து உள்ளே சென்றார்.
உள்ளே சென்ற அவர் பழைய துணிகள், சட்டைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பைகளைப் பரிசோதிக்க யத்தனித்ததுதான் தாமதம், அவர் சம்சாரம் ருக்மிணி அம்மாள் மாடிப்படி இறங்கி, மெல்ல அருகில் வந்து ரகசியக் குரலில், "என்ன தேடுகிறேள்?" என்று விசாரித்தாள்.
"ஒன்றும் இல்லை. உள்ளே மனுஷ்யாள் நடமாட்டத்தையே காணோமே! காலை வேளையில் நீ எங்கே போய்விட்டாய் என்று பார்க்க வந்தேன்."
"கொல்லையிலே வேலைக்காரி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விஜயம் பக்ஷணங்களுடன் காபியும் எடுத்துக்கொண்டு மாடிக்குப் போனாள். என்ன நடக்கிறது பார்ப்போம் என்று மாடிப்படியில் சற்று நின்றுகொண்டிருந்தேன்.
"என்ன நடந்தது?"
"இவள் காபியையும் பக்ஷணத் தட்டையும் பெஞ்சியின் மேல் வைத்தாள். அவன் திரும்பியே பார்க்கவில்லை."
"உம். ஹும். அப்புறம்?"
"இவள் சற்று நின்று பார்த்துவிட்டுக் கீழே இறங்கத் திரும்பினாள். 'பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போகலாம்' என்றான் அவன். 'சாப்பிட்டாகி விட்டால் நானே எடுத்துக் கொண்டு போய்விடுகிறேன்' என்று இவள் பதில் சொன்னாள். 'எனக்கு வேண்டாம் ' என்றான் அவன். 'ஏன் வேண்டாமாம்' என்றாள் விஜயம். 'நேற்று மத்தியான்னம் டிபனும் காபியும் நீதான் கொண்டுவந்தாயோ?' என்றான் அவன். 'நேத்திக்கு டிபன் காபி கொண்டுவந்தவர்கள் இப்பவும் கொண்டு வந்தால்தான் சாப்பிடுவீர்கள்போல் இருக்கிறது. சரி. அவர்களே வரட்டும்' என்று சொல்லிவிட்டு மறுபடி விஜயம் மாடிப்படிக்கு வந்தாள்."
"'விஜயம்!' என்று அதட்டிக் கூப்பிட்டான் அவன். இவள் நின்றாள். 'நேத்திக்குக் காலையிலே வந்த என்னை இப்போதுதான் வந்து பார்க்கிறாய், அப்படித்தானே?' என்று கேட்டான் மாப்பிள்ளை. 'எனக்கு ஸெலக்ஷன் பரீட்சை வருகிறது. நான் படித்துக்கொண்டிருந்தேன்' என்று அவள் பதில் சொன்னாள். 'ஸெலக்ஷன் பரீட்சை உனக்கு முக்கியமாய்ப் போய்விட்டது அப்படித்தானே?' என்றான் அவன். ஸெலக்ஷன் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை வருகிறது. நீங்கள் மாதத்திற்கு ஒரு தடவை வருகிறீர்கள். ஆகையால் அதைத்தானே முக்கியமாகக் கவனிக்க வேண்டும்' என்று சொல்லிச் சிரித்தாள் விஜயம்."
"பலே! நல்ல போடு போட்டாள். வேணும் அந்த முட்டாளுக்கு."
"இரையாதேயுங்கோ! கேளுங்கோ இன்னும் வேடிக்கையை. 'உங்க அப்பா எனக்கு வேஷ்டியும் மோதிரமும் வாங்கியிருக்காரே! அந்த வேஷ்டி எங்கள் குடியானவனுக்கு நாங்கள் தீபாவளிக்கு வாங்கிக் கொடுக்கிற வேஷ்டிக்கும் கேவலமாயிருக்கு. அதை வாசலில் கத்திக்கொண்டிருக்கிற பிச்சைக்காரர்களிடம் இப்படியே தூக்கி வீசி எறிந்துவிடலாமா என்று வருகிறது எனக்கு' என்றான் மாப்பிள்ளை காரமாக. அதற்கு அவள், 'அப்படியானால் கொஞ்சம் இருங்கோ. உங்கள் அம்மாவும் அக்காளும் எனக்கு வேணும் என்று பார்த்துப் பொறுக்கி வாங்கி அனுப்பியிருக்கிறார்களே, அந்தப் புடைவை நாங்கள் எங்காத்துக் காரியக்காரிக்கு வாங்கிக் கொடுப்பதையும் விடக் கேவலமாயிருக்கு. அதையும் எடுத்துக் கொண்டு வருகிறேன். வேஷ்டிகளை வீசி எறியும்போது நீங்கள் அதையும் அந்தக் குறத்திகிட்டே எறிஞ்சுடுங்கோ" என்று சொன்னாள்.
அவன் முறைத்துப் பார்த்தான்.
அவள் இன்னும் விடவில்லை. 'ஆமாம் அந்த மோதிரத்தை என்ன பண்ணப் போகிறேள்?' என்று வம்புக்கு இழுத்தாள்.
'அதோ வாசலிலே நிற்கிற குறத்தி போட்டுக்கொண்டிருக்கும் சங்கு மோதிரம் இதைவிடத் தேவலை' என்றான் அவன் அடத்திற்காக.
'அப்படியானால் அந்த நாட்டியக்காரியிடம் இதைக் கொடுத்துவிட்டு அதை மாற்றிக்கொள்ளலாமே' என்று சொல்லி, வந்த சிரிப்பை அடக்கப் பார்த்தாள் விஜயம்.
மாப்பிள்ளை 'களுக்'கென்று சிரித்துவிட்டான். அந்தச் சமயத்தில் நீங்கள் கீழே இரைஞ்சிண்டிருந்தேள். அது அவன் காதில் பட்டது.
"நான் என்ன இரைஞ்சிண்டிருந்தேன்?"
"'நம் இஷ்டப்படி நல்லதாய் வாங்குகிறதற்குக் கடையிலேயே துணிமணி அகப்படவில்லை. விலையோ ஒண்ணுக்கு நாலா இருக்கு'ன்னு நீங்கள் சொல்லவில்லையா?"
"ஆமாம்; அவன் காதில் படட்டும் என்றுதான் சொன்னேன்! நம்ம கஷ்டத்தை அவன் எங்கே அறிகிறான்?"
"அது தனக்குத்தான் என்று நினைச்சுண்டு அவன், 'உங்க அப்பாவுக்கு மரியாதை தெரியவில்லை. பிச்சைக்காரர்களிடத்திலே போய் இதை எல்லாமா சொல்லுகிறது? இவர் வாங்கிக் கொடுத்துத்தான் நான் வேஷ்டி கட்டிக்கொண்டிருக்கேனோ!' என்று இன்னும் என்ன என்னமோ கன்னா பின்னா என்று புரிஞ்ச வார்த்தையும் புரியாத வார்த்தையுமாக உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். அதற்கு அவள், 'நீங்கள் எத்தனை மரியாதையாய் ஓதியிட்டுக் கொடுத்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு பெரியவாளைப்போய் நமஸ்காரம் பண்ணினேளோ, அதற்கு எங்க அப்பா ஒண்ணும் மரியாதைக் குறைச்சலாய் இருந்து விடவில்லை' என்றாள் பளிச்சென்று."
"எப்படியடி அவள் அத்தனை துணிச்சலாய்ப் பேசினாள்! அவன் மூர்க்கனாச்சே!"
"இப்படித் துணிச்சலாய்ப் பேசாத போனால் அவன்கிட்ட காலம் தள்ள முடியுாது. அவள் சரியாகத்தான் பேசுகிறாள். உங்கள் பெண் மட்டைக்கு ஏற்ற கொட்டாப்புளி."
"உன் பெண் அசடாக இருக்குமா? மேலே!"
"அவள் கொடுத்ததை எல்லாம் அவன் பேசாமல் வாங்கிக் கொண்டுதான் இருந்தான். இதற்குள் குடுகுடுப்பாண்டி, 'மாப்பிள்ளை கோபக்காரர்' என்று சொன்னானே, அதைக் கேட்டு இரண்டு பேரும் இடிஇடின்னு சிரித்தார்கள்."
"குடுகுடுப்பைக்காரன் நல்ல சமயத்தில்தான் வந்தான். அவனுக்கு ஒரு சட்டை பார்த்துக் கொடுக்கலாம்னுதான் உள்ளே வந்தேன். சரி, அப்புறம் சொல்லு. மாப்பிள்ளை காபியைச் சாப்பிட்டானோ இல்லையோ?"
"பக்ஷணத்தையும் தின்றுகொண்டு காபியையும் சாப்பிட்டுக் கொண்டுதான் இந்தப் பேச்செல்லாம். அவளையும் கிட்ட உட்கார வைத்துக்கொண்டு பக்ஷணங்களைத் தன்னோடு திங்கச் சொன்னான். அதையெல்லாம் உங்களிடத்தில் சொல்லவில்லை நான்."
"சரி, எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டாம். அப்புறம் ஏதாவது விசேஷம் உண்டா?"
"ஒன்றுமில்லை; மாப்பிள்ளைக்குக் கோபமெல்லாம் உங்களாலே வந்ததுதான். சிறிசுகள் சமாசாரம், உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சு."
"என்ன? புரியல்லையே?"
"நேத்திக்கு மத்தியானம் டிபனை நான் அவள் கையிலேதானே அனுப்பினேன்? நீங்கள் ஆக்ஷேபித்தீர்களோ, இல்லையோ? அதனால் வந்ததுதான் இதெல்லாம். அவள் கையிலே இருந்ததை வாங்கி, நீங்கள் தூக்கிக்கொண்டு போவானேன்?"
"சில வீடுகளில் இருப்பதுபோல் அந்த அசட்டுப் பிசட்டு வியபாரங்களெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லை!"
"இப்போ பிடிக்கல்லே. எல்லாம் அந்த நாளில் அப்படித்தானே இருந்தது. இதுக்கு மேலே பேசாதியுங்கோ எனக்கு... ஆமாம்!" இந்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்தது, ஒரு செருகல் பார்வையும், மாயச் சிரிப்பும்.
"சரிதாண்டி! சரிதான்!! எங்கே ஓடிப்போகிறது? இதற்காகவா, ஓதியிட்ட வேஷ்டியைக் கட்டிக்க மாட்டேன்னு படுத்தறது? நான் அப்படித்தான் பண்ணினேனோ?"
"ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம்!"
இந்தச் சுவாரசியமான பேச்சிற்கு இடையே விஜயம் கீழே இறங்கி வரும் ஓசை கேட்டு, வெங்கிடகிருஷ்ணையர் ரேழிக்கு நழுவினார். ருக்மிணி அம்மாள் ஒன்றும் தெரியாததுபோல், "என்னடி?" என்று பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தாள்.
"இதோ வந்துவிட்டேன் அம்மா! என் மார்க்குகளை எல்லாம் பார்க்கவேணுமாம். அதற்காக நோட்டுப் புத்தகங்களை எடுத்துவரச் சொன்னார்" என்று விஜயம் சிரித்துவிட்டு, நோட்டுப்புஸ்தகங்களை அடுக்கிக் கையில் எடுத்துக்கொண்டு மாடிக்குப் புறப்பட்டாள்.
"வெங்கிடகிருஷ்ணா!" என்று உரக்கக் கூப்பாடு போட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரிடையர்டு இன்ஸ்பெக்டர் கோபாலையர்.
வெங்கிடகிருஷ்ணையர் தகப்பனாருக்கு இன்ஸ்பெக்டர் கோபாலையர் ஒன்றுவிட்ட அத்தான் முறை. இருவரும் நிரம்ப அன்னியோன்னியம், கோபாலையரிடம் வெங்கிட கிருஷ்ணையர் அன்று தம் மாப்பிள்ளை வைத்தீச்வரனின் அதிருப்தியைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். விஷயத்தைக் கேட்டுக்கொண்டு கோபாலையர் மாடிக்குச் சென்றார்.
சற்று மாப்பிள்ளையுடன் லோகாபிராமமாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கோபாலையர், "ஏன், தீபாவளி வேஷ்டியை அதற்குள் நீ அவிழ்த்து வைத்துவிட்டாய்? புதிசு கட்டிக் கொண்டு பெரியவர்களை நமஸ்காரம் செய்வது சம்பிரதாயம். மற்ற நாட்களில் நமஸ்காரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் தீபாவளிக்கும், ஆவணி அவிட்டத்திற்கும் பெரியவர்களை நமஸ்கரிப்பதற்கு மறக்கவோ மறுக்கவோ கூடாது" என்று வற்புறுத்திக் கூறி, "கீழே போகலாம், வா" என்று அவனைப் புது வேஷ்டியை உடுத்துக்கொள்ளச் செய்து இழுத்துக் கொண்டு இறங்கினார்.
"நான் கதர்தான் கட்டுகிற வழக்கம். இவ்வளவு செலவில்லாமல் கதரையே வாங்கியிருந்தால் எனக்கு ரொம்பத் திருப்தியாயிருக்கும்" என்று முணுமுணுத்துக்கொண்டே இறங்கினான் மாப்பிள்ளை வைத்தீச்வரன்.
கோபாலையர், வெங்கடகிருஷ்ணையருக்கு மாப்பிள்ளை நமஸ்காரத்தை வாங்கித் தந்து, தாமும் பெற்றுக்கொண்டார். பின்பு கோபாலையர், "வெங்கடகிருஷ்ணா! நான் உனக்கு ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். பழைய சம்பிரதாயத்தை அநுசரித்து நாம் மாப்பிள்ளைக்குச் சேலம் வேஷ்டி வாங்கினாலும், இந்தக் காலத்துப் பிள்ளைகளின் நோக்கப்படி கதர் வேஷ்டியையும் வாங்கிடுவதுதான் உசிதம்" என்றார்.
"அதுதான் எனக்குத் தெரியுமே! நான் அரை டஜன் கதர் வேஷ்டி அல்லவா வாங்கியிருக்கிறேன் மாப்பிள்ளைக்கு! ஓதியிடுவதற்கு அந்தப் பெரிய மூட்டை எதற்கு என்று நினைத்துப் பழைய சம்பிரதாயப்படி சேலம் வேஷ்டியை ஓதியிட்டுக் கொடுக்கச் செய்தேன்" என்று வெங்கடகிருஷ்ணையர், கோபாலையர் பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் ஒரு போடு போட்டார். மாப்பிள்ளையும் புன்னகை பூத்தார்.
விஜயத்தின் தலைதீபாவளி, 'டூ'வில் ஆரம்பித்துச் 'சேர்த்தி'யில் முடிந்தது. |
|
ய. மஹாலிங்க சாஸ்திரி |
|
|
|
|
|
|
|
|