நாரணோ ஜெயராமன்
|
|
ஔவை நடராசன் |
|
- |டிசம்பர் 2022| |
|
|
|
|
தமிழறிஞரும், பேராசிரியரும், பாரத் பல்கலைக்கழக வேந்தருமான ஔவை நடராசன் (86) காலமானார். இவர், விழுப்புரத்திற்கு அருகிலுள்ள ஔவைக்குப்பம் கிராமத்தில், ஒளவை துரைசாமிப் பிள்ளை-லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிவபாத சேகரன் என்பது இவரது இயற்பெயர். தந்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியபோது 'நடராசன்' என்று பெயர்மாற்றம் செய்துகொண்டார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்ற ஔவை நடராசன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளமுனைவர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு, புதுதில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார்.
அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனால் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். பின்னர் தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக அல்லாமல், இப்பணிக்கு நியமிக்கப்பட்டவர் ஔவை நடராசன் மட்டுமே. தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் உட்படப் பல்வேறு பதவிகளை வகித்தார். இளைஞர்கள் பலரை ஊக்குவித்து எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் ஆக்கினார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிகச்சரளமாக எழுதும், உரையாற்றும் திறன் பெற்றவர். தமிழ் இலக்கியப் பணிகளுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது, தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்படப் பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்றுள்ளார்.
வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள், அருளுக்கு ஔவை சொன்னது எனப் பல நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் நூல்களை எழுதியுள்ளார். சர்வதேசக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியவர். தமிழின் சிறப்பைப் போற்றியவர்.
ஔவை நடராசன், 21 நவம்பர் 2022 அன்று முதுமையின் காரணமாகச் சென்னையில் காலமானார். |
|
தகைசால் தமிறிஞருக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
நாரணோ ஜெயராமன்
|
|
|
|
|
|
|