Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 8)
- ராஜேஷ்|ஆகஸ்டு 2022|
Share:
கீதா அருணை அழைத்துக்கொண்டு வீட்டின் வெளியே வந்தார். இதுதான் சாக்கு என்று பக்கரூவும் ஓடி வந்தது.

"அம்மா, நாம நேத்திக்குப் போன இடத்துக்குப் போய், திரும்ப ஒரு நோட்டம் விடலாமா?"

"இன்னைக்கு அங்க யாருமே இருக்க மாட்டாங்களே கண்ணா. வேலை நாள் இல்லையே."

"அதான் அம்மா. நான் நைசா போய் அந்த இயந்திரங்களை பக்கத்துல போய் நோட்டம் விடலாம்னு இருக்கேன்."

கீதாவுக்கு அருண் சொல்வது ரொம்ப ஆபத்தாகத் தோன்றியது. எவனாவது ரௌடிப் பய அங்க இருக்கப் போய் அருணை அடித்து கிடித்து பண்ணினா என்ன செய்ய முடியும்? அதுவும் தனியே ஒரு பெண்ணாக. அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு அத்வானத்தில்? வீட்டை விட்டுக் கிளம்பியது ரமேஷின் கத்தலினால்தான். வீட்டுக்குள் இன்னம் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் கீதாவும் கோபத்தில் பதிலுக்கு ஏதாவது கத்தி இருப்பார்.

"நாம தைரியமா போலாம், அம்மா. கவலைப் படாதீங்க. ஞாபகம் இல்லையா, நான் தனியா பக்கரூவுவோடு ராத்திரி மழையிலே அந்த ஒரு அபூர்வமான பழத்துக்காக தன்னந்தனியே இருந்தேனே?"

கீதாவுக்குப் பழைய கதையை யாராவது ஞாபகப் படுத்தினால் ஒருபக்கம் கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், மற்றொரு பக்கம் பக்கென்று இருக்கும். மாடி ஜன்னல் வழியாக ரமேஷின் கடுகடு முகம் தெரிந்தது. கீதா சாதாரணமாக அப்படிச் செய்திருக்க மாட்டார். ஆனால், காரணமே இல்லாமல் காட்டுமிராண்டி போல் ரமேஷ் கத்தியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"அம்மா, அப்பாவைப் பாருங்க மேலே... உர்ருன்னு."

கீதா காரின் கதவைத் திறந்தார். அருணும் பக்கரூவும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள். கீதா அருண் சொன்னபடியே முந்தின நாள் போன அதே கருமலை அடிவாரத்திற்கு வண்டியைச் செலுத்தினார்.

வண்டி சிறிது நேரத்தில் கருமலை பகுதிக்குப் போய்ச் சேர்ந்தது.

கீதா வண்டியை நிறுத்தியது தான் தாமதம், அருண் பக்கரூவோடு வேகமாக இறங்கினான். கீதா பயத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரே நிசப்தம். ஆள் நடமாட்டமே இல்லை. என்னமோ, அந்த ஊரில் எல்லோருக்குமே அங்கு வருவது சரியில்லை என்று தோன்றிவிட்டது போல இருந்தது.

"அருண், இங்கிருந்தே பார்க்கலாமே?"

அருண் அதற்குள் கொஞ்ச தூரம் ஓடிவிட்டான். பக்கரூவும் ஓடிக்கொண்டிருந்தான் அருணோடு.

சில நிமிடங்களுக்குப் பின் அருண் அங்கிருந்த மண் தோண்டும் எந்திரங்களின் அருகில் போய் நின்றான். வேகமாக ஓடியதில் அவனுக்கு மூச்சு இரைத்தது. பக்கரூவோ இன்னும் ஓட ஆசைப்பட்டது.

அருண் அங்கிருந்த பெரிய எந்திரங்கள் ஒவ்வொன்றையும் என்னவென்று கணக்கு எடுத்தான். புல் டோசர், துளையிடும் எந்திரம், தோண்டும் எந்திரம், தண்ணீர் டேங்கர். ஒரு ரசாயன டேங்கர் டிரக்கில் 'அபாயம்' என்று எழுதி இருந்தது. காரீய விஷம் (Lead poisoning) என்றால் எதற்கு இத்தனை பெரிய எந்திரங்கள்? எதற்காக தண்ணீர் டேங்கர் மற்றும் ரசாயன டேங்கர் டிரக்? துளையிடும் எந்திரம்... நீளமான ரப்பர் குழாய்கள்? காரீய விஷ ஆய்வுக்கு என்றால் இவ்வளவும் தேவையா? விஞ்ஞானிகள் மாதிரி எடுத்துப் போய் சோதனை செய்ய இவ்வளவு தேவையா?

கீதா மெல்ல வந்து சேர்ந்தார். பக்கரூ அவரைப் பார்த்தவுடன் அவர் அருகில் வந்துவிட்டது. அருண் கையில் ஒரு சீட்டும், பேனாவும் இருந்தன.

"அம்மா, இது வெறும் ஆய்வு மாதிரி தெரியல. ஏதோ குவாரி தோண்டப் போற மாதிரி தெரியுது. இங்க பாருங்க தேவை இல்லாத பெரிய, பெரிய மெஷின்கள்."

அருண் கையிலிருந்த சீட்டை அம்மாவிடம் காண்பித்தான். அதில் அவன் அழகாக ஒரு பட்டியல் போட்டிருந்தான். கீதாவுக்கு அவன் எழுதிய பட்டியலை படித்த போது அங்குள்ள இயந்திரங்கள் ஒவ்வொன்றும் கண் முன்னால் வந்தன.

"அம்மா..."

கீதா அருண் கொடுத்த சீட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அம்மா."

அருணைப் பார்த்து பக்கரூவும் அழைத்தான்.

"பவ்... பவ்."

கீதா ஏதோ ஒரு கனவில் இருந்து நினைவுக்கு வந்ததுபோல சுய நினைவுக்கு வந்தார்.

"என்னப்பா சொன்ன?"

"அம்மா, இது வெறும் ஆய்வு மாதிரி தெரியலே. வேற ஏதோ மர்ம வேலை ஒண்ணு இங்க நடக்குது."

"நீ சொல்லுறது எனக்கு என்னமோ சரின்னு படுது, அருண்."

"என்ன நடக்குது இங்கே? எதுக்கு நடக்குது? Lead poisoning ஆய்வு இல்லேன்னா, ஏன் பொய் சொல்லணும்? இந்த ஆய்வு உண்மைன்னா ஏன் அதைப்பத்தி செய்திகளே இல்லை? இந்த மாதிரி எந்திரங்களை குவாரி தோண்டத்தான் உபயோகிப்பாங்க. ஏதோ சரியில்லை."

அருண் ஒரு புலனாய்வு அதிகாரி போலக் கேள்விமேல் கேள்வி கேட்டான். தன் செல்ஃபோனை எடுத்து மீண்டும் படங்கள் எடுத்தான்.

சில நிமிடங்களே ஆகியிருக்கும், அங்கே "வீல் வீல்" என்று ஒலி எழுப்பிக்கொண்டு போலீஸ் வண்டிகள் அங்கே வந்தன. கீதா மிரண்டு விட்டார். அருணுக்கு கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டது.

ஒலிப்பெருக்கி மூலம் போலீஸ் அதிகாரி எச்சரிக்கை செய்தார்.

"ஹலோ! இது எர்த்தாம்ப்டன் நகர காவல் ஷெரிஃப். இங்கு பார்க்கிங் பகுதியிலிருந்து நடைபாதை தவிர மற்ற எல்லா இடங்களும் இப்போது தடை விதிக்கப் பட்டிருக்கு. யாரும் இங்கு ஆய்வு நடக்கும் இடத்தின் பக்கம் சரியான அனுமதி இன்றிப் போனால் கைது செய்யப்படுவீங்க. கார்ல வந்தவங்க எல்லாம் திரும்பி போயிடணும். போகலைன்னா இன்னைக்கு ராத்திரி லாக்கப்புல கம்பி எண்ண வேண்டியதுதான்."

அருண் அம்மாவைப் பார்த்தான். அவர் மௌனமாக, திரும்பிப் போகலாம் என்று கையைக் காட்டினார். பக்கரூ நிலைமையை புரிந்து கொண்டு கமுக்கமாக முன்னே நடந்தான். ஒன்றும் பேசாமல் மூவரும் பார்க்கிங் பகுதியைச் சென்றடைந்தார்கள். எர்த்தாம்ப்டன் நகர ஷெரிஃப் சகாக்களுடன் நின்று கொண்டிருந்தார். கீதா பார்க்கிங் பகுதியை நோட்டம் விட்டபோது அங்கே வேறு யாருமே இல்லை என்பதை உணர்ந்தார்.

"ஹலோ ஆஃபிசர். குட் மார்னிங்" கீதா மரியாதை கலந்த புன்சிரிப்போடு ஷெஃரிப் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

"ஹலோ, மேடம். காலைல மலையேற வந்தீங்களா?" ஷெரிஃப் புன்னகை கலந்த அதிகாரத்தோடு கேட்டார்.

"ஆமாம் ஆஃபிசர். இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. முன்னாடி எல்லாம் அடிக்கடி வருவோம்."

"அப்படியா? ஏன் நடைபாதையை விட்டுட்டு அந்த பெரிய எந்திரங்கள் பக்கம் போனீங்க? அங்கதான் பெரிசா அறிவிப்புப் பலகை போட்டிருக்கே?"

கீதா பதில் கொடுக்கத் தெரியாமல் யோசித்தார்.

"தம்பி, அந்த அறிவிப்புப் பலகையை நீ பார்க்கலையா? Those notice boards are for a reason. Don't you think?"

அருணும் கீழே தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

"நீங்க போகலாம். ஞாபகம் வச்சிக்கோங்க, இந்த ஆய்வு முடியறவரைக்கும் இந்த பார்க்கிங் பகுதிக்குத் தகுந்த அனுமதி இல்லாம யாரும் வரக்கூடாது. இந்தத் தடைகள் எல்லாம் சீக்கிரமே முடிஞ்சிடும்னு நெனக்கறோம். ஆனா, அதுவரைக்கும் விதிகளை மீறக் கூடாது."

ஷெரிஃப் தனது சகாக்களுடன் வண்டியில் ஏறினார். கீதாவும் அருணும் பக்கரூவுடன் வண்டியில் ஏறினார்கள். அவர்கள் வண்டி கிளம்பும்வரை போலீசார் காத்திருந்தார்கள். சில நிமிடங்களில் அந்தப் பகுதி காலியானது.

(தொடரும்)
ராஜேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline