Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
அனலாத்தி
- ஹேமா ஜெய்|ஜூன் 2022|
Share:
தேங்காய், பழம், சூடம், சந்தன ஊதுபத்தி ஒரு கொத்து, தீப்பெட்டி, விளக்குக் கிண்ணியில் நெய் என வரிசையாக ஒயர் கூடையில் அடுக்கிய மலர்விழி, "வேலா, விரசா கடைக்கு ஓடி வெத்தலை பாக்கும், நாலு இலையும் வாங்கிட்டு வா... தலைவாழை இலை ஒன்னு, படையலுக்குன்னு சொல்லு, இல்லேன்னா கிழிஞ்சதை தலைல கட்டிடுவான்" அவனிடம் காசு கொடுத்தனுப்பிவிட்டு சமையலறைக்குள் வந்தாள். வெண்கல தேக்சாவில் வெல்லம் கொதித்துக் கொண்டிருந்தது.

அடுப்பை அணைத்து, தரையில் சலித்து வைத்திருந்த அரிசி மாவை எடுத்துப் பாகில் கொட்டி, கைவிடாமல் அவள் கிளற, தோட்டத்து குளியலறையின் தகரக் கதவு திறந்து வாணி வெளியே வந்தாள். ஈர நைட்டியும் தோளில் துண்டுமாக இளவெய்யிலில் நின்றவள், ஒவ்வொரு முடியாகப் பிரித்து நிதானமாகத் தலையை உலர்த்த, பார்த்துக் கொண்டிருந்த மலருக்குச் சுறுசுறுவென எரிச்சல் முளைத்தது.

"பண்டிகை நாளு கூடமாட ஒத்தாசை பண்ணுவோம்னு இல்லாம என்னம்மா பண்ற... ட்ரெஸ்சையாவது மாத்திட்டுச் சீக்கிரம் ரெடியாகு. கிளம்ப வேணாமா?" ஜன்னல் வழியே மகளை அதட்டிய மலர்விழி, மாவு ஒன்றாக உருண்டு திரண்டு வர, துணியால் பிடித்துப் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்தாள்.

"ஒரே சிக்கா இருக்கு. நீயே தலையைச் சீவி விடும்மா..." என்றாள் வாணி அங்கிருந்தே சிணுங்கியபடி.

"ஏழு கழுதை வயசாகிடுச்சு, இன்னும் தலை பின்ன நான்தான் வரணுமா? துணியை மாத்திட்டு சட்டுன்னு வாடி" என்று கத்தப் போனவள், மஞ்சள் வெளிச்சத்தில் கன்னங்கள் சிவந்து இளமையின் உருவாகத் திகழ்ந்த மகளின் அழகைக் கண்டு ஒருகணம் பேச்சற்று நின்றாள்.

ஆற்றுப்படுகையில் கையில் அள்ளும் பிடி மணலின் ஈரம் உணரும் மனசு சட்டென்று குளிர்ந்து போகுமே, அந்தச் சிலிர்ப்போடு தாய் மனசு தானாகவே பதில் சொன்னது, "குழந்தையாட்டம் கொஞ்சுடி... ஈரத்தை உலர்த்து முதல்ல, வந்துடுறேன்."

"இந்தாம்மா...." கடையில் வாங்கி வந்தவற்றைத் திட்டில் வைத்த வேலன், "பாசு சித்தப்பா கொடுத்தாங்க, இந்தாடி உனக்கும் ஒண்ணு" கையில் இருந்த சில்க் சாக்லேட்டை பிரித்தபடி வாணியையும் அழைத்தான்.

வெளியே வந்து இலைக்கட்டை எடுத்த மலர்விழி, "அந்தாளு எதுவும் கொடுத்தா வாங்கக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், ஒரு தடம் சொன்னா புத்தி இல்ல உனக்கு?" அடிக்குரலில் சீற, "நான் வேணாம்னுதான்மா சொன்னேன், சித்தப்பா கேட்கல, வற்புறுத்தி பாக்கெட்ல வச்சிட்டாரு. கடை கூட்டத்துல எல்லார் முன்னாடியும் ரொம்ப பிகு பண்ணினா நல்லாயிருக்காதேன்னு..." வேலன் அம்மாவின் சீற்றத்தை உணர்ந்து மென்று விழுங்கினான். புரிந்தும் புரியாத வயதில் இருந்தவனுக்கு அம்மாவின் அவஸ்தை முழுதாகப் புரியாவிட்டாலும், ஊடுபாவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

"வாங்கித் தரட்டுமேடி... ஆசையா வாங்கிக் கொடுக்கிறான்... ஏன் வேணாம்னு சொல்ற?" 'ஆசையா' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தபடி சிரித்துக் கொண்டே உள்ளே வந்தான் ராஜன்.

அன்றைய நாளுக்கான நஞ்சைத் தன்னுடைய பரந்த புன்னகையில் பொதிந்து வைத்திருக்கிறான் என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வைத்திருந்த மலர்விழி, அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் உள்ளே சென்றாள்.

"அவனுக்கென்ன புள்ளையா, குட்டியா, இந்தப் புள்ளைங்களைத் தான் தன் புள்ளையா நினைக்கிறான்... இந்தாடா கண்ணு, உள்ள வந்து எடுத்துக்க" அவன் வாணியை அழைக்க, "போதும், வாயை மூடுங்க. வயசு புள்ளைங்களை வச்சுக்கிட்டு..." நொடியில் கண்களில் முட்டிவிட்ட நீருடன் ஏறிட்டுப் பார்த்த மலர்விழி, "நீங்க திருந்தவே மாட்டீங்களா?" என்றாள் வெறுப்புடன். "நான் ஏண்டி திருந்தணும்? நானென்ன தப்பு பண்ணேன்? பண்ணினதெல்லாம் நீயும் அவனும்.. நாந்தான ஏமாளி இங்க."

கடவுளே! அதற்குமேல் கேட்க முடியாமல் அவளுடைய நடுத்தர வயது தேகம் கூனிக் குறுகியது. 'ஆத்தா, மகமாயி இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த நெருப்புல என்னைப் புரட்டியெடுக்கப் போற? அறியாத வயசுல செஞ்சதுக்கு..." கடகடவெனப் பொங்கி வழிந்த நீரைச் சுண்டிவிடக்கூடத் திராணி இல்லாமல், கைச்சூடு பொறுக்கப் பொறுக்கச் சட்டியில் இருந்த மாவை உருட்டி மாவிளக்காக்கினாள்.

பக்கத்தில் காது கொடுத்துக் கேட்க முடியாத நெருப்புக் கங்குகள் நிற்காமல் விழுந்து கொண்டேயிருந்தன. "ஆமாம்... என்மேலதான் எல்லா தப்பும். பண்டிகை நாள்லகூடக் கொல்லாம, நிம்மதியா படையல் போட விடுங்க..." என்றாள் ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல். தப்புதான், பெருந்தப்பேதான். அந்த வயதில் தெய்வீகமாகத் தெரிந்தது இன்று கொடுந்தவறாகவே தெரிகிறது.

"நான் ரெடிம்மா... என்ன எடுத்து வைக்கணும்?" வாணி உள்ளே வர, மகளின் வரவில் சட்டெனத் தணிந்த ராஜன், "சீக்கிரம் கிளம்புங்க... மணியாச்சு." வாணியின் கன்னத்தை வாஞ்சையாகத் தட்டிவிட்டு வெளியே சென்றான். இலையைக் கழுவி எடுத்து வந்த வேலனின் கவனமும் இவளிடம்தான் இருந்தது.

'பரவாயில்ல போ... எல்லா விதத்துலயும் சோதிச்சாலும் புள்ளைங்க விஷயத்துல நான் புண்ணியவதிதான்...' என்றெண்ணிக் கொண்ட மலர்விழி, "மாவிளக்குல நெய்யை விட்டு திரியை திரிச்சு வை" வாணியிடம் சொல்லிவிட்டு சேலை மாற்ற உள்ளே சென்றாள். காலையில் குளித்த கையுடன் கோடாலி முடிச்சிட்டது, அப்படியே ஈரம் உலர்ந்து அடைசலாய்ச் சுருண்டு கிடந்த கூந்தலை விரித்து உதறினாள்.

இடுப்புவரை படர்ந்த முடியை ஒதுக்கி நுனியில் கட்டி, நேற்றே தயாராக எடுத்து வைத்திருந்த வெளிர்மஞ்சள் புடவையைச் சீராக மடிப்பு வைத்து அணிந்தாள். எண்ணெய் வழிந்த முகத்தைக் கழுவி லேசாக பவுடர் போட்டு, பொட்டு வைத்தபோது முகம் காட்டும் நிலைக்கண்ணாடி 'உனக்கா முப்பத்தெட்டு வயது?' என்றது. வாணியே சொல்வாள், "நாம இரண்டு பேரும் ஒண்ணா வந்தா சிஸ்டர்ஸான்னு கேட்குறாங்கம்மா என் பிரெண்ட்ஸ் எல்லாம்" என்று. "ஆமாண்டி, அது ஒண்ணுதான் குறைச்சல்..." அப்போதெல்லாம் மலர்விழி சின்ன வெட்கத்துடன் உதடு பிரியாமல் சிரிப்பாள்.

"ஏம்மா, திருவிழா நாளும் அதுவுமா ஏதாவது பளிச்சுன்னு கட்டக் கூடாது?"

'பளிச்சென்று கட்டினால் என்ன நடக்குமென்று உனக்குத் தெரியாதுடி மகளே' என்று நினைத்துக் கொண்டவள், "போதும்மா, நம்ம கோவிலுக்குத் தானே" என்றபடி சிலிண்டரை அணைத்து, காய்ச்சிய பாலை உள்ளே தூக்கி வைத்துவிட்டுக் கிளம்பினாள்.
ராஜனின் பைக்கில் கூடையை அசங்காது வைத்தபடி மலர்விழி அமர, வாணியின் சைக்கிளில் பிள்ளைகள் இருவருமாகக் கிளம்பினார்கள். கோவில் ஜேஜேவென்று இருந்தது, சுற்றிலும் எரிந்த சிமிட்டு விளக்குகளும், பொங்கல் புகையும், பூவும், புதுச்சேலை கட்டிய பெண்களுமாக.

"இப்பதான் வர்றியா மலரு? சுகமா இருக்கியா?"

"ம்ம்... எனக்கென்ன அப்பத்தா... நல்லா இருக்கேன்... நீங்க.." வழிநெடுக நல விசாரிப்புகளுடன் நால்வரும் கோவிலுக்குள் நடந்தார்கள். பிறந்தது, வளர்ந்தது, கல்யாணம் பண்ணியது எல்லாம் இதே ஊருக்குள்தான். அவளிருந்த தெருவுக்குள் தடுக்கி விழுந்தால்கூட, மாமா, அத்தை, பெரியப்பன் வீட்டு வாசலில்தான் விழ வேண்டும். அத்தனை ஜனக்கட்டு, சாதிக்கட்டும் கூட.

கோவில் கமிட்டி உறுப்பினர் அட்டையைச் சட்டையில் குத்தியபடி கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பாஸ்கர், இவர்களைக் கண்டதும் அருகே வந்தான்.
"நல்லா இருக்கியா, மலரு?" என்றான் கண்கள் கனிய. மலரின் முகத்தசைகள் இறுகின. பக்கத்தில் நின்றவர்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து "உம்" என்றாள். மாவிளக்கு ஏற்றும் வரிசைக்குச் சென்று அவள் நிற்க, "என்ன பாசு.. எப்படியிருக்க?" அர்ச்சனை சீட்டை வாங்கியபடி பின்னால் வந்த ராஜன் அவன் தோளைத் தட்டி கேட்டான். "எனக்கென்னணா. சூப்பரா இருக்கேன்..." இருவரும் கைகளை இறுக கோத்துக் கொண்டார்கள்.

"க்யூல எல்லாம் நிக்க வேணாம்ணா, இப்படி வாங்க" என்றான் பாஸ்கர் அங்கிருந்த சிறு கதவைத் திறந்து விட்டபடி. திரும்பி இவளைப் பார்த்த ராஜன், "வா... டேய் வாங்கடா" என்றபடி பாஸ்கரைத் தொடர, "வேணாம்" என்றாள் மலர்விழி அழுத்தமாக.

"நாம வரிசைலயே நின்னு போய்க்கலாம்."

"சும்மா வா மலரு" பாஸ்கர் திரும்பவும் அழைக்க, "ஏய்... வாடி பேசாம" ராஜன் பின்னால் திரும்பி பல்லைக் கடித்தான். "நீங்க வேணும்னா முன்ன போங்க, நானும் புள்ளைங்களும் இப்படியே வந்துக்கிறோம்" என்றாள் அவள் நின்ற நிலையிலேயே. அவள் கண்களில் பிடிவாதம் தெரிய, "என்னமோ இன்னிக்கு இப்படியே போலாம்கிறா..." அசட்டுச் சிரிப்புடன் தானும் அவர்களுடனே நின்றுவிட்ட ராஜன், "என்னடி ரொம்பதான் வேஷம் போடுற?" என்றான் கடுத்த விழிகளுடன். மலர்விழி ஒன்றும் சொல்லாமல் முன்னால் திரும்பிக் கொண்டாள். பக்கப் பார்வையில் பாஸ்கர் மீண்டும் உள்ளே செல்வது தெரிந்தது.

"எப்படி இருக்கான் பார்த்தியா, தண்ணியும் புகையுமா... கல்யாணம் கட்டிக்காம வெறும் பயலா பிச்சைக்காரனாட்டம் சுத்துறவன், வந்துட்டான் இன்னிக்கு வெள்ளையும் சொள்ளையுமா அண்ணா, நொண்ணான்னுட்டு... ஏண்டி அந்தளவுக்குப் பிரியமா அவனுக்கு உன்மேல?"

மலர்விழி பதில் ஒன்றும் சொல்லவில்லை. சிவந்திருந்த தன் விழிகளால் அவனை ஒரேயொரு முறை ஏறிட்டு வெறுமனே பார்த்தாள். பிறகு, 'அங்க பாரு' என்கிற மாதிரி அம்மன் சன்னிதியை நோக்கிக் கைகளை நீட்டினாள். தீட்சண்யம் மிகுந்த அந்த விழிகள் தன்னைத் துளைத்தெடுப்பது போலிருந்தது ராஜனுக்கு. நெருப்பு மாதிரியான பார்வையும், அந்த அலட்சிய பாவனையும் அவனை வெருட்ட, அதற்கு மேல் பேசாமல் வாயை மூடிக்கொண்டு நின்றான்.

அரக்குநிறப் புடவையில் வெள்ளியில் கண்ணெழுதி நெஞ்சு கொள்ளாத மாலைகளும், செவ்வரளிப் பூக்களுமாக ஓங்கி உயர்ந்து நின்றாள் அனல் மாரியம்மன். கைகூப்பி அவள் முன்னால் சரணடைந்து நின்ற மலருக்கு ஒன்றுமே வேண்டிக்கொள்ளத் தோன்றவில்லை.

'உனக்குத் தெரியாததையா கேட்டுட போறேன், எப்படியோ மூச்சைப் பிடிச்சுப் பாதிக் கிணறைத் தாண்டிட்டேன், இன்னும் சொச்ச தூரத்தையும் தாண்ட வைச்சுடு ஆத்தா" பெருமூச்சுடன் மாவிளக்கு சாற்றியவள், தேங்காய், பழம் மாற்றிக் குடும்பத்துடன் வெளியே வந்தாள்.

"கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகலாம்" என்று அவள் சொல்ல, "கூட்டத்துல வேர்த்து வழியுது, வெளில சர்பத் குடிச்சிட்டு நிக்கிறோம், நீ மெதுவா வா" என்ற ராஜன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியேறினான். அவள் ஓரமாக நின்ற தூணோரம் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்தாள். நேரம் ஆக, ஆக படைபடையாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். பொங்கல் சட்டிகளும், மாவிளக்கு கிண்ணிகளும், அவற்றின் மேல் சுற்றும் காகிதப் பூ விசிறிகளுமாக.

ஒரு ஜோடி பாத விரல்கள் இவள் அருகே வந்து நிற்க, "மலரு, இந்தா..." என்ற கரகரப்பில் மலர் விருட்டென நிமிர்ந்து பார்த்தாள். எதிரில் நின்ற பாஸ்கர் அம்மன் கழுத்து மாலையை நீட்டிக் கொண்டிருந்தான். வாங்கவா, வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்த மலர், பிறகு அவன் கண்களைச் சந்திக்காமல் கைகளை மட்டும் உயர்த்தி வாங்கிக் கொண்டாள். அவனுடைய அருகாமையில் அவளுடைய அடிவயிறு சுருண்டு முறுக்கியது.

ஒரு காலத்தில் நல்ல உயரமும் உடம்புமாக இருந்தவன், அளவில்லாத மதுவில் வற்றி... இவள் விரல் வருடி ரசித்த அலையலையான கேசம் உதிர்ந்து முன்வழுக்கை விழுந்திருக்க, நிரந்தரமாய்ச் சிவந்த கண்களுடன் யாரோபோலத் தெரிந்தான் பாஸ்கர்.

"கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன், என்னைப் பிடிச்சிருக்கா மலரு?" பதின்பருவ வயதில் ஆணழகின் மொத்த உருவமாய்த் தன்முன் வந்து தைரியமாய்க் காதல் சொன்னவனைக் கண்டு திக்குமுக்காடித்தான் போனாள் அன்றைய மலர். கூச்சமும், பயமுமாகத் தயங்கியவளை ஒரே ஊர், ஒரே சாதி, கட்டுகிற முறை வேறு என்கிற சவுகரியங்கள் அசைத்துப் பார்க்க, தன் பின்னாலேயே ரோமியோ போலச் சுற்றியவனிடம் அவளும் வீழ்ந்து வசப்பட்டு வெகு சீக்கிரமே தலையசைக்கவும் செய்தாள்.

பள்ளிக்குள் துளிர்த்த ஈர்ப்பு, போகிற வருகிற வழிகளில் விழியசைவுகளில் ஜாடை பேசியபடி கன்னுக்குட்டி பிரியமாக வளர்ந்தது. பள்ளி முடிந்ததும் வீட்டில் மல்லுகட்டி அவன் படித்த கல்லூரியிலேயே சேர்ந்தாள். காலை மாலை ஒரே பேருந்து, பயணத்தில் இவளுக்காகவே அவன் இசைக்கச் சொல்லி கொடுக்கும் பாடல்கள், தோழிகளின் கேலி கிண்டல்கள், கள்ளச் சிரிப்புகள், இருவரும் பரிமாறிக் கொண்ட ரகசியப் புன்னகைகள் என அது ஒரு கனாக்காலம்!

விடுமுறை நாட்களில் இருவரும் முனீஸ்வரன் கோவிலின் முள்புதர் அருகே சந்தித்துக் கொண்டார்கள். ஓடையோரமாக இவர்கள் நின்று பேசிச் சிரிப்பது ஒருநாள் எதேச்சையாக இவளுடைய பெரியப்பனின் கண்களில் விழுந்துவிட...

கனவென்றாலே அது கலையும் காலமும் உண்டுதானே!

அதற்குப்பின் வழக்கமாக என்ன நடக்குமோ அதுவேதான் நடந்தது. ஒத்த சாதி என்ற தைரியத்தில் இருந்தவர்களைப் பணம் பிரித்துப் போட, மலர்விழி வீட்டுக்குள் அடைபட்டாள். அவசரமாக உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்த்து, அவள் செய்த குற்றத்திற்குப் பிராயசித்தமாகக் கைகொள்ளா நகையும் பணமும் சீர் கொடுத்து, அடுத்த முஹூர்த்தத்திலேயே அவளுக்கொரு மூக்கணாங்கயிறு போட்ட பின்னர்தான் அந்த ஊரே ஓய்ந்தது.

"போலாமாடி... இதென்ன அவன் கொண்டாந்து கொடுத்தானா?" பதிலெதுவும் சொல்லாமல் எழுந்த மலர், கையிலிருந்த ரோஜா மாலையை மடியில் வைத்தபடி வண்டியில் அமர்ந்தாள். ராஜனுடைய கேள்விகளெல்லாம் அவளுக்கான கேள்விகள் அல்ல, ஒவ்வொரு அணுவாகக் குத்தித் திருகும் கூர் ஆணிகள் என்பதை அவனுடன் கழித்த முதல் இரவிலேயே அறிந்து கொண்டவள், அதற்குப்பின் மௌனியாகியாகவே மாறிப் போனாள். மதியம் எல்லோரும் உணவருந்தி ராஜன் வெளியே கிளம்பிச் சென்றதும், வீடு அக்கடாவென்றானது.

கூடத்து நிலையில் கைகளைக் குறுக்கே வைத்து மலர் அலுப்புடன் படுத்தாள். சில்லென்ற தரையின் குளிர்ச்சி உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருந்தது. "தலகாணி போட்டுக்கோம்மா" வாணி எடுத்துக் கொடுக்க, வேலனும் இவளருகே வந்து படுத்துக் கொண்டான். "ஏம்மா, சீவவே இல்லையா" மகள் விரல் நுழைத்து வலிக்காமல் சிக்கு எடுப்பது மலருக்குச் சுகமாக இருந்தது. அவள் விழி மூடிக்கொண்டாள்.

"அம்மா..." என்றாள் வாணி கொஞ்ச நேரம் கழித்து.

"ம்ம்ம்....?"

"நான் ஒண்ணு கேட்பேன், திட்ட மாட்டியே?"

"இதென்ன புதுசா? என்னனு கேளுடி முதல்ல..."

"இல்ல.... அப்பாவை கல்யாணம் பண்ணாம அ..அந்தச் சித்தப்பாவை பண்ணியிருந்....தா நீ சந்தோசமா இருந்திருப்ப இல்ல?"

மலர் விருட்டென விழித்துப் பார்க்க, வாணி தயங்கிய பாவத்தில் திருதிருத்தாள். "என்ன கேள்விடி இது?" அதட்டினாலும் மகள் இப்படிக் கேட்டுவிட்டதில் மலர் ஒன்றும் பெரிதாக அதிர்ந்து விடவில்லை. ஒரே ஊருக்குள் முணுமுணுத்துக் கிடக்கும் காற்று இவர்களையும் வந்து எட்டியதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

"சொல்லும்மா... ப்ளீஸ்.." என்றாள் வாணி இவளுடைய முகவாயைப் பற்றியபடி. வேலனும் இவளையே பார்த்தான்.

"பேசாம போ வாணி, காலம் போன காலத்துல" பத்தும், பன்னிரெண்டும் படிக்கும் பிள்ளைகள் எப்போதும் குளவியாய்க் கொட்டிக்கொண்டிருக்கும் தகப்பனாலேயே இப்படியொரு கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்த மலரின் மனம் ஆந்து போனது.

"சும்மா ஒரு பேச்சுக்குத்தானேம்மா... சொல்லேன்" என்றான் வேலனும் தன் பங்குக்கு. "சொல்லும்மா, சந்தோசமா இருந்திருப்ப இல்ல?" வாணி மீண்டும் அதையே கேட்க, விழிகளைத் தேய்த்து விட்டுக்கொண்ட மலர் இருவரையும் ஆயாசமாகப் பார்த்தாள். பிள்ளைகளின் கண்களில் வெளிப்படையான ஆவலும், இவளுக்கான பச்சாதாபமும் தெரிய, மலரின் முகம் இறுகியது. ஒருமுறை விழி மூடித் திறந்தவள், "ஊஹும்... கொஞ்சம்கூட சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன்" என்றாள் சிறிதும் யோசிக்கத் தேவையில்லாத அழுத்தத்துடன்.

"என்னம்மா இப்படிச் சொல்ற? அவரு இப்பகூட உன்மேல பிரியமா... எங்க வரைக்கும் எவ்ளோ பாசமா இருக்காரு.. இன்னிக்குக்கூடக் கோவில்ல நாங்க வெளில நிக்கும்போது உன்கிட்ட வந்து பேசினதை பார்த்தேன், அவரு முகத்தைப் பார்த்தா எனக்கே பாவமா இருக்கு."

மலர் ஏளனமாகச் சிரித்தாள்.

"போடி... பைத்தியக்காரி"

"ம்ம்மா???"

"நீ வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவுதாண்டி பொண்ணே... தன்னால ஒருத்தி நித்தமும் வதைபடுறான்னு தெரிஞ்சும் அவன் தொடர்ந்து அதையே மெனக்கெட்டு செய்யறான்னா அதுல பாசம் எங்க இருந்து வந்துச்சு? பார்க்கிறவங்களுக்கு அப்படித்தான் இருக்கும், ஆசைப்பட்ட பொண்ணை மறக்கமுடியாம தவிக்கிறானே, அவளையே நினைச்சு உருகுறானேன்னு அவன் பண்றதெல்லாம் தியாகமா, அமர காதலா தெரியும். ஆனா உண்மை என்னன்னு எனக்கு மட்டும்தானே தெரியும். உங்கப்பன் குத்திட்டே இருக்கிறது வெளில தெரியுது, இவன் பண்றது வெளில தெரியல. அவ்வளவுதான் வித்தியாசம். சில ஆம்பிளைங்களோட வக்கிரம் இந்த வகைதான் வாணி. பொம்பளைங்களை வாழவும் விடாது, சாகவும் விடாது." என்றவள், ஏதோ நினைத்துக்கொண்ட மாதிரி மகனைப் பார்த்தாள்.

"வேலா, இன்னிக்குச் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, நாம விரும்புற உசிரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறதுதான் உண்மையான அன்பு. அதை விட்டுட்டு இப்படிக் கண்ணுக்குள்ள விழுந்த துரும்பா பார்க்கவும் முடியாம, திறந்து மூடவும் முடியாம, காலத்துக்கும் முள்ளா உறுத்திகிட்டே இருக்கிறதுக்குப் பேரே வேற... அதை நீ எந்த காலத்திலயும் எந்த பொம்பளைப் பிள்ளைக்கும் பண்ணிடாதே..."

வேலனுக்கு எவ்வளவு புரிந்ததோ, அவன் கண்கள் பனிக்கத் தலையாட்ட, வாணி சமைந்துபோய் அமர்ந்திருந்தாள். அதுநாள் வரை அவளாகப் பின்னி வைத்திருந்த காதலின் காவிய பிம்பம் அவளைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருந்தது.

"அவன் வந்து என்கிட்டே பேசினான்னு சொன்னியே, நான் என்ன பதில் சொன்னேன்னு கேட்டியா, 'நீ கல்யாணம் கட்டு, கட்டாம போ, தயவுசெஞ்சு என் பின்னாடியோ, என் புள்ளைங்க பின்னாடியோ வந்து உசுரை வாங்காதே, என்னை இனியாவது நிம்மதியா வாழ விடு...'ன்னேன். ஆனா அவன் கேட்பான்னு நினைக்குற, கேட்க மாட்டான், அப்பதானே உங்கப்பன் என்னைக் கொட்டு வாயிலயே வச்சிருப்பான். என்னைப் பொறுத்தவரை இவனுக்கும், காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னு மூஞ்சில ஆசிட் அடிக்கிறவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல, நான் ஏமாத்திட்டேன்னு அவனுக்கு, தான் ஏமாந்துட்டதா உங்கப்பாவுக்கு, நடுவுல நான்தான் இந்த அனல்ல அனுதினமும் போராடுறேன்....." தன் போக்கில் பேசிய மலர், தான் அதிகம் பேசியதை உணர்ந்த மாதிரி சட்டென்று நிறுத்திக் கொண்டு திரும்பிப் படுத்தாள்.

"சரி, முடியை விடுடி, கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன், இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கப்பாரு வந்துடுவாரு, சாட்டையைச் சுழட்டிக்கிட்டு..." களைப்புடன் கண்களை மூடிக் கொண்டாள்.

வேலனும், வாணியும் ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்தபடியிருக்க, மலர் சன்னமான குறட்டை ஒலியுடன் உறங்கத் தொடங்கியிருந்தாள்.
ஹேமா ஜெய்,
யுடா
Share: 




© Copyright 2020 Tamilonline