Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
அகலாது... அணுகாது...
விளம்பரம்
- உமா ஹைமவதி ராமன்|ஏப்ரல் 2022|
Share:
"முருகா" என்று சற்று உரக்கவே கத்திவிட்டார் மெய்யப்பன் தன் எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்து. "தாத்தா, அவர் பெயர் முருகன் இல்லை; ராஜா" என்றாள் பேத்தி மாலினி சிரித்துக்கொண்டே. ராஜாவும் புன்னகைத்தான்.

"அது இல்லை மாலினி, நம் குலதெய்வம் குன்னக்குடி முருகனைத்தான் கூப்பிட்டேன். சரி, உங்க அப்பாவைக் கூப்பிடம்மா" என்று சமாளித்துவிட்டு, "உட்காருங்க ராஜா" என்றபடி அமர்ந்தார் மெய்யப்பன்.

"அப்பா, அப்பா" என்று மாலினி அழைத்ததைக் கேட்டு கீழே இறங்கிவந்த அவளுடைய அப்பா விக்னேஷ், ராஜாவைப் பார்த்ததும் "முருகா" என்றார். "நீங்களும் நம் குலதெய்வத்தைத்தான் கூப்பிட்டீங்களா?" என்று கேட்டுச் சிரித்தாள் மாலினி. மாலினியும் ராஜாவும் வெளிநாட்டில் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்கும்பொழுது அறிமுகமாகி, நட்பாகி, காதலர்களாகி, கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டில் பெரியவர்களின் ஆசிகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

"உங்க குடும்பத்தைப் பத்தி மாலினி ஏற்கனவே சொல்லியிருக்கா தம்பி" என்ற மெய்யப்பனிடம், "ஆமா தாத்தா, எங்கப்பா ராமலிங்கம் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி செய்கிறார். அம்மா ஜானகி ஒரு சமூகசேவகி. இவங்க ரெண்டு பேரோட முதலெழுத்தை வச்சுத்தான் எனக்கு ராஜான்னு பேர் வச்சிருக்காங்க" என்றான் ராஜா. நான்கு பேரும் காஃபி குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.

"நானும் என் அம்மா அப்பாகிட்டே மாலினியைப்பற்றி நிறைய சொல்லிருக்கேன். அவங்களுக்கும் மாலினியை ரொம்பப் பிடித்திருக்கு. நீங்க நாலு பேரும் சந்தித்துப் பேசி சம்மதத்தைச் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் ராஜா. அவனை வழியனுப்ப அவன் பின்னால் மகிழ்ச்சியுடன் சென்றாள் மாலினி.

மெய்யப்பனும் விக்னேஷும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். "நம்ப முடியலையப்பா" என்றான் விக்னேஷ். "ஆமாப்பா" என்ற மெய்யப்பனின் நினைவுகள் இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.

அது ஒரு ஞாயிறு. இரவு 10 மணி இருக்கும். மகாபலிபுரம் சாலையில் தந்தை புதிதாக வாங்கித் தந்த வெளிநாட்டுக் காரில் நண்பர்களுடன் குடிபோதையில் படுவேகமாய் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தான் விக்னேஷ். திருவான்மியூரில் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்த நான்கு பேர்மீது கார் மோதியதில் இரண்டு பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மிஞ்சிய இருவருக்குப் படுகாயம்.

அங்கு நின்றிருந்த போக்குவரத்துக் காவலர்களை பார்த்தவுடன் மேலும் வேகமாய் வண்டியை ஒட்டி வீடு வந்து சேர்ந்தான் விக்னேஷ். வண்டி எண்ணைக் குறித்துக் கொண்டதால், மறுநாள் காலை போலீஸ் வீட்டுவாசலில். மகனை எப்படியும் சரணடையச் செய்கிறேன் என்ற உத்தரவாதம் அளித்த மெய்யப்பன் நேரே தன் கார் டிரைவர் முருகன் வீட்டுக்குச்சென்றார் .முருகன் அப்பொழுதுதான் பிரசவ வலியில் துடிக்கும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றது அறிந்து நேரே நர்ஸிங் ஹோம் சென்றார். மனைவிக்குப் பிரசவம் என்று முருகன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல் காலில் விழுந்து, உடனே பெயிலில் எடுத்து விடுகிறேன் என்று சொல்லி, தன் மகனுக்குப் பதிலாக போலீசில் சரணடையச் செய்துவிட்டார் முதலாளி மெய்யப்பன்.

மகனைச் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டுத் தானும் குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டார். அதன் பிறகு முருகனைப்பற்றி அவர் நினைக்கவேயில்லை.

பிரசவ காலத்தில் இருந்த தன் மனைவி செல்வியை அக்காவிடமும் அம்மாவிடமும் ஒப்படைத்துவிட்டு, போலீசில் சரணடைந்த முருகனுக்கு, தான் வஞ்சிக்கப்பட்டு விட்டது பிறகுதான் தெரிய வந்தது. அவன் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.

முருகனுக்குக் காஞ்சிபுரத்தை அடுத்த நல்லூர் கிராமம் சொந்த ஊர். கோவை விவசாயக் கல்லூரியில் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முருகன், தங்களுக்குச் சொந்தமான இருபது ஏக்கர் நிலத்தில் நிலத்தில் மிகச் சிறப்பாக விவசாயம் செய்து வந்தான். பிற விவசாயிகளுக்கும் நிறைய உதவினான். முருகனுடைய சொந்த அக்கா ராணியின் மகள்தான் செல்வி. செல்வியும் முருகனும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பினர்.

"ஏம்ப்பா, முருகா! காலாகாலத்தில் செல்வி கழுத்திலே மூணு முடிச்சு போடுப்பா" என்று அம்மாவும் அக்காவும் தொடர்ந்து வற்புறுத்தினாலும், செல்வி பி.டெக். முடித்த பிறகுதான் திருமணம் செய்துகொண்டான். தொடர்ந்து செல்விக்குப் பட்ட மேற்படிப்பிற்கு சென்னை அண்ணா பல்கலையில் இடம் கிடைக்க, தன் மனைவியின் விஞ்ஞானி கனவை நனவாக்க கிண்டியில் ஒரு சிறிய வீடு பார்த்துக் குடியேறினான். விவசாயத்தை அப்பாவும் மாமாவும் பார்த்துக்கொண்டார்கள். அடிக்கடி நல்லூர் சென்று தானும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் சென்னையில் ஒரு தற்காலிக வேலையாக, தெரிந்தவர் மூலமாக மெய்யப்பன் வீட்டில் டிரைவராகச் சேர்ந்தான். மெய்யப்பனுக்கு அவனைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட, கோவில், கோவிலாகச் சென்றுவரும் தன் மனைவி உமையாளுக்கு டிரைவராக்கினார்.

சிறைக்கு வந்து ஒரு மாதம் கழித்துதான் முருகனுக்குத் தன் மனைவி செல்வி பிரசவத்தின்போது இறந்ததும், பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தையும் இறந்துவிட்டதும் தெரியவந்தது. முருகனுக்கு என்ன ஆனதென்று தெரிய அவனுடைய அப்பா, மாமாவுக்கு வெகுநாள் ஆகிவிட்டது.

சிறையில் முருகன், 10 மற்றும் 12 வகுப்பு பரீட்சை எழுதும் கைதிகளுக்குப் பாடம் எடுத்தான். ஒருநாள் புதிதாகப் பதவியேற்ற சிறைத்துறை ஐ.ஜி. ஜெயவேலு பார்வையிட வந்தார். கைதி உடையிலிருந்த முருகனைப் பார்த்த அவர் மிகுந்த ஆச்சரியத்துடன், "ஏம்ப்பா, என்னை ஞாபகம் இருக்கா?" என்று கேட்டார். "சார், உங்க கையால பரிசுகள் வாங்கியிருக்கேன் சார், காஞ்சிபுரம் மாவட்டத்துல ப்ளஸ்2விலே முதல் மாணவனா வந்ததுக்கு பள்ளி ஆண்டுவிழாவில் நீங்க பரிசு கொடுத்தீங்க சார்" என்றான் முருகன். "உன்னோட கட்டுமஸ்தான உடலுக்கும் ஆறடி உயரத்துக்கும் போலீஸ்லே சேர்றியான்னு கேட்டதுக்கு எனக்கு விவசாயம்தான் பிடிக்கும்னு சொன்னியே, அதனாலே உன்னை மறக்கவே முடியாது" என்றார் ஐ.ஜி.

தனது வேலைகளை முடித்தபின்னர் தனியாக முருகனை அழைத்து அவன் சிறைக்கு வந்த காரணத்தை அறிந்துகொண்டார். தன்னால் முடிந்த உதவி செய்வதாகக் கூறினார். முருகனின் உதவியால் அந்த வருடம் தேர்வு எழுதிய அனைத்துக் கைதிகளும் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியாகினர். ஐ.ஜி. ஜெயவேலுவும் முருகனின் நன்னடத்தைக்காக தண்டனைக் காலத்தைக் குறைத்து, விரைவில் விடுதலை வாங்கித் தந்தார்.

தட்டிலிருந்த சோற்றைச் சாப்பிடாமல் சோக நினைவுகளில் மூழ்கியிருந்த முருகனிடம், அக்காள் ராணி, "சாப்பிடு முருகா, நம்ம செல்வி நம்மளை ஏமாத்தமாட்டா. எனக்கென்னவோ உன்னோட குழந்தை உசுரோட இருக்கும்னு தோணுதப்பா. முதல்லே கொழந்தைய உயிரோடதாம்ப்பா காமிச்சாங்க. செல்வியைத்தான் காப்பாத்த முடியலே. ரத்தம் ஜாஸ்தி போயிடிச்சு. டாக்டரம்மா போன பிறகுதான் ஏதோ நடந்திருக்கு. கொழந்தைய மாத்திட்டாங்கப்பா" என்றாள்.

"உனக்கு ரொம்ப நம்பிக்கை அக்கா" என்ற முருகனிடம், "அந்தச் சின்ன ஆஸ்பத்திரியில அன்னிக்கி செல்வியும் இன்னொரு பொண்ணுந்தாப்பா அட்மிட் ஆனாங்க. அந்தப் பொண்ணோட புருஷன்கூட மொத மூணு பிரசவம் நிக்கல, இந்தக் குழந்தையாவது தங்கணும்னு கண்ணீர் விட்டாருப்பா. எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு" என்றாள் ராணி. விவசாயத்தைத் தவிர, தனது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சோமு வாத்தியாரய்யாவுடன் சேர்ந்து அவர் வீட்டில் நூலகம் நடத்துவது, சிறுவர் பெரியோர் அனைவருக்கும் படிப்புச் சொல்லிக் கொடுப்பது எல்லாம் செய்து வந்தான் முருகன். தாயிடமும் தமக்கையிடமும் செல்வியைத் தவிர தன்வாழ்வில் இன்னொரு பெண்ணுக்கு இடமில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை வாத்தியார் வீட்டு நூலகம். பெரியவர்கள், சிறியவர்கள், குழுமி, சோமு வாத்தியார், முருகன், உடனிருக்க, பேப்பர், புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவன் வேலன் திடீரென ஒரு வாரப் பத்திரிக்கையை முருகனிடம் காட்டி "தாத்தா, தாத்தா, இந்த வேஷ்டி விளம்பரத்துல நீங்க சூப்பரா இருக்கீங்க" என்று விளம்பரத்தைக் காட்டினான். பார்த்த முருகனுக்கு ஒரே படபடப்புடன் தலைமுதல் கால்வரை வியர்த்தது. சோமு வாத்தியாரும் அதைப்பார்த்து விக்கித்து நின்றார். படத்திலிருந்த இளைஞன் அச்சு அசலாக முருகனேதான்!

முருகனை மெதுவாகத் தேற்றி "கவலைப்படாதே, நான் பாடம் சொல்லித் தரும் அனாதை ஆசிரம நிர்வாகியும் சமூகசேவகியுமான ஜானகி அம்மாளின் கணவர் மூலமாக இந்தப் பையன் யாரென்று கண்டுபிடிச்சிடலாம்" என்று கூறியவாறே ஜானகி அம்மாளுக்கு ஃபோன் செய்தார். அவர் இவர்களைத் தாய்மை ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்ல, உடனே இருவரும் அந்தப் பத்திரிக்கையுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மருத்துவமனை ரிசப்ஷனில் இருந்த இளம்பெண் முருகனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, ஒருஉதவியாளர் இவர்களை ஜானகியம்மாளின் அறைக்கு அழைத்துச்சென்றார். முன்னால் வந்த சோமு வாத்தியாரை எழுந்து வரவேற்ற ஜானகி, பின்வந்த முருகனைப்பார்த்து "இவர், இவர்?" என மேலே பேச முடியாமல் திணறினாள். "இவர் பெயர் முருகன்", என்று கூறியவாறே பத்திரிக்கை விளம்பரத்தைக் காட்டி, "இந்தப் பையன் யாரு என்னன்னு உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்" என்றார்.

தங்கள் கம்பெனி விளம்பரத்தில் இருப்பது தன் மகன் ராஜா. தன்னெதிரில் ராஜாவைப் போலவே ஒருமனிதர்! ஏதோ புரிந்துவிட்டது ஜானகிக்கு. கைகால்கள் நடுங்குவதை மறைத்துக்கொண்டே, "கண்டிப்பா செய்றேன். நம்பிக்கையா போய் வாங்க, வணக்கம்" என்று சொல்லிவிட்டு, அவர்கள் வெளியேறியதும் மயக்கமடைந்து விழுந்தார்.

சத்தம்கேட்டு உள்ளேவந்த உதவியாளர் உடனடியாக டாக்டர்களை அழைத்து முதல்சிகிச்சை அளித்து, கணவர் ராமலிங்கத்துக்கும் தெரிவித்தனர். மயக்கம் தெளிந்தவுடன் அருகில் இருந்த கணவரிடம் ஜானகி, "ஏங்க, நம்ம ராஜாவோட உண்மையான அம்மா அப்பா யாருங்க?" என்று கேட்டாள்.

தூக்கிவாரிப் போட்டது ராமலிங்கத்துக்கு."திடீர்னு ஏன் இப்படி கேக்குற? ராஜா நம்ம பையன்தான்" என்றார். "தயவுசெய்து உண்மையைச் சொல்லிடுங்க" என்று ஜானகி வற்புறுத்தவே நர்சிடம் பணம்கொடுத்து இறந்தே பிறந்த தங்கள் குழந்தையைச் செல்வியின் அருகில் கிடத்திவிட்டு, உயிருடனிருந்த அவள் குழந்தையை எடுத்துக்கொண்ட உண்மையைக் கக்கினார் ராமலிங்கம்.

இதற்குள் அம்மா மயக்கம் போட்ட விஷயம் அறிந்த ராஜா ஓடிவந்தான். மகனைப் பார்த்த ஜானகி, "என்னை விட்டு போயிடமாட்டியே ராஜா" என்று மீண்டும் மீண்டும் அழுதாள். ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை; அப்பா மௌனமாகவே இருந்தார்.

சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த ராஜாவைப் பார்த்து ரிஷப்சனிஸ்ட், "சார், நீங்க வேஷ்டி விளம்பரத்திலேயும் சூப்பரா இருக்கீங்க, காலையில வயசான கெட்டப்ல வந்தீங்களே, அதுவும் சூப்பர்" என்றாள். " நானே அம்மாவுக்கு உடம்பு சரியில்லேங்கற கவலையில இருக்கேன். ஓல்ட், கெட்டப்புனு என்னமோ சொல்றியே" என்று எரிந்து விழுந்தான் ராஜா.

"உண்மையாகத்தான் சொல்றேன் சார்,காலைலே ஆசிரமத்துலே பாடம் சொல்லிக்கொடுக்கிற சோமு வாத்தியாரும், உங்களைப்போலவே ஒருவரும் அம்மாவைப் பார்க்க வந்தாங்க. அவர் பேர்கூட... இருங்க... ரிஜிஸ்டரைப் பார்த்து சொல்றேன். இதோ, முருகன், சார். பார்க்க அச்சு அசல், உங்களைப்போலவே." என்றாள் அவள்.

முருகா.. முருகன்... அம்மாவின் புலம்பல், ஏக்கம் கலந்த, கண்ணீர் நிரம்பிய கண்கள்... அப்பாவின் மௌனம்!

சோமு வாத்தியாரின் விலாசம் கேட்டு விரைந்தான் ராஜா. காரில்வந்து இறங்கிய ராஜாவைப் பார்த்ததும் "முருகா" என்று இறுக்கி அணைத்தார் சோமு. அப்படியே முருகனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, "முருகா, யாரு வந்திருக்கா, பாரு" என்று உரக்கச் சொல்ல, ஊரே அங்கு ஒன்று கூடியது.

வெளியில் வந்த முருகன் ராஜாவைப் பார்க்க, ராஜா முருகனைப் பார்க்க, இருவருக்கும் உண்மை தெளிவானது. இருவரும் கட்டித் தழுவிக்கொண்டனர்.

வேஷ்டி விளம்பரத்தைக் காட்டி, மகனைத் தன்னுடன் சேர்த்து வைத்த வேலனுக்கு முத்தமழை பொழிந்தான் முருகன்.
உமா ஹைமவதி ராமன்,
கோயம்பத்தூர்
More

அகலாது... அணுகாது...
Share: 
© Copyright 2020 Tamilonline