Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
'விஷக்கன்னி' நாவலிலிருந்து...
- குறிஞ்சிவேலன், எஸ்.கே. பொற்றேக்காட்|பிப்ரவரி 2022|
Share:
அத்தியாயம் - 1
மத்திய திருவிதாங்கூரில்‌ ஒரு மூலையிலுள்ள ஒரு மலைச்சரிவுக்கும்‌, விசாலமானதொரு வயலுக்கும்‌ நடுவே நெளிந்து செல்லும்‌ காட்டுப்‌ பாதையின்‌ திருப்பத்தில் ஒரு மாட்டுவண்டி, குலுங்கிக்‌ குலுங்கி வருகின்ற சப்தம்‌ கேட்கத்‌ தொடங்கியது. சிறிது நேரம்‌ கழிந்ததும்‌ அந்த வண்டி வயலின்‌ முகப்பில்‌ நேரிடையாகக்‌ காணத்‌ தொடங்கியது.

அந்த வண்டி நிறைய வீட்டுச்‌ சாமான்கள்‌ இருந்தன. பெட்டி, படுக்கை, செம்புப் பாத்திரங்கள்‌, சீனாச்சட்டி, தகர விளக்கு, தாழம்பாழ்‌, கோழிக்கூண்டு, கிணற்று ராட்டினம்‌, கயிறு, சல்லடை, கட்டி போன்றவற்றுடன்‌ வேண்டிய அளவுக்கு வேலி கட்டும்‌ சாமான்களும்‌ அந்தக்‌ கட்டை வண்டியின்‌ மேல்கூரை முட்டும்‌ அளவிற்குத்‌ திணித்து வைக்கப்பட்டிருந்தன.

வண்டியின்‌ பின்னால்‌ மக்கள்‌ கூட்டம்‌ ஒன்றும்‌ வந்து கொண்டிருந்தது. குழந்தைகளை மார்பில்‌ அணைத்துக்கொண்டிருந்த தாய்மார்களும்‌, குடுகுடு கிழவர்களும்‌, தத்தித்‌ தத்திப்‌ பாய்கின்ற சிறுவர்களும்‌, வயதுவந்த இளம்‌ பெண்களும்‌, படை வீரர்களைப்‌ போன்று மார்ச்‌ செய்து வருகின்ற சுறுசுறுப்புள்ள இளைஞர்களும்‌ கலந்த ஒரு விசித்திரக்‌ கூட்டம்‌ அது. அவர்களில்‌ ஒவ்வொருவருத்தருடைய இடுப்பிலும்‌ ஒவ்வொரு மூட்டையும்‌ இருந்தது. அவர்களின்‌ தலைவனென்று ஊகிக்கக்கூடிய ஒரு நடுத்தர வயதானவன் ‌- கருப்புக்‌ கோட்டும்‌, கோட்டின்மேல்‌ ஒரு சரிகை வேட்டியும்‌, பச்சைக்‌ கண்ணாடியும்‌ அணிந்த ஒரு குள்ளன் ‌- வண்டியில்‌ அடிப்பலகையைத்‌ தொட்டுக்கொண்டு இடையிடையே வண்டிக்குள்ளே எட்டிப்பார்த்து வண்டியுடனேயே வந்தான்.

"பாச்சுப்புள்ள, வண்டி கொஞ்சம்‌ சாஞ்சிருக்கு போலிருக்கே? லக்கேஜ்‌ கீழே உருண்டுடப்‌ போவுது. ஜாக்கிரதையாப்‌ பாத்துக்க."

"நீங்க சும்மா இருங்க வர்க்கி சார்‌. இங்க பாச்சுப்‌ புள்ளயில்ல இருக்கேன். நெறய புதுக்கொடங்கள ஏத்திக்கினு பத்து மைல்‌ தூரங்கூட போயிருக்கேன். ஒரு ஒத்தக்‌ கொடங்கூட ஒராய்ஞ்சது இல்ல. அப்படியிருக்கும்போது இந்த ஒடஞ்ச மரச்‌ சாமானுங்க தானா..." வண்டியின்‌ தப்பைக்‌ கழியில்‌ கால்‌ மடக்கி உட்கார்ந்து, வெற்றிலையில்‌ சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்த வண்டிக்காரன்‌ பாச்சுப்புள்ள சிரித்துக்கொண்டே உரக்கச்‌ சொன்னான்.

அந்த வண்டியும்‌ ஜனங்களும்‌ செரியானின்‌ மரக்கடையின்‌ அருகில்‌ வந்து சேர்ந்தனர்‌. செரியான்‌, கடையின்‌ இரவாணத்தைப்‌ பிடித்துக்கொண்டு ரோடைக்‌ குனிந்து பார்த்தான்.

"முண்டக்காயம்‌ வர்க்கியண்ணனும்‌ அவுரு கூட்டத்தரும்‌ வராங்க. ஒன்னோட மாமியும்‌ உண்டுடி" என்று செரியான்‌ தம்‌ மனைவியை அழைத்துச்‌ சொன்னான்.

செரியானின்‌ மனைவி மரியம்‌ வீட்டில்‌ உள்ளே கிழங்குத்‌ தோலை உரித்துக்‌ கொண்டு உட்கார்ந்திருந்தாள். செரியான்‌ சொன்னதைக்‌ கேட்டதும்‌ அவள்‌ கத்தியைக்‌ கீழே வைத்துவிட்டு, தன்‌ கைக்குழந்தையை இடுப்பில்‌ தூக்கிக்கொண்டு முற்றத்தில்‌ இறங்கி நின்றாள்.

"கவுறு இருக்கா?" என்று செரியானைப்‌ பார்த்து வர்க்கி கேட்டான்.

"இல்லியே" என்று செரியான்‌ அலட்சியமாகப்‌ பதிலளித்தான்.

"பதினோரு ஆம்பிள: எட்டு பொம்பள; ஆறு கொழந்த எல்லாரும்‌ சேர்ந்து இருவத்தைஞ்சி பேரு" என்று செரியனுடைய மகன்‌ ஜான்‌, அந்தக்‌ கூட்டத்தின்‌ அங்கத்தினர்களைக்‌ கணக்கெடுத்து முடித்தான்.

கூட்டத்திலிருந்து மரியத்தின்‌ மாமி மார்த்தா முன்னால்‌ வந்து, "மரியம்‌, நாங்க போய்வரட்டுமா?" என்று கூறியபோது அவளுடைய விடைபெற்ற குரலில்‌ விசனம்‌ நிறைந்திருந்தது.

"நீங்க மலவாருக்கு போனப்‌ பின்னால்‌ எங்கள மறந்துடுவீங்களா மாமி?" என்று மரியம்‌ தாழ்ந்த குரலில்‌ கேட்டாள்.

"மறக்கமாட்டோம்‌ கொழந்த. கர்த்தரின்‌ கருணையால நாங்க அங்க நல்ல நலைய அடைஞ்சா, நீயும்‌ செரியானும்‌ மலவாருக்கு வரணும்‌, தெரிஞ்சிதா?"

"அதெல்லாம்‌ முடியாது மாமி, அவுருக்கு மலபாருன்னு கேட்டாலே கோவம்‌ வந்துரும்‌. அவுரு தம்பி ஒருத்தன்‌ மலவாருக்குப்‌ போயி அங்கியே சொரம்‌ கண்டு செத்துட்டானாம்‌. அதுக்குப்‌ பின்னால மலவாருன்னு கேட்டாலே கோவம்‌ வந்துடும்‌. எங்க மண்ணு இங்கியேதான்‌ கெடக்கு மாமி."

"எல்லாம்‌ கடவுளோட எண்ணம்போல நடக்கும்‌ கொழந்த. அவங்கெல்லாம்‌ முன்னால போயிட்டாங்க, நான்‌ வரட்டுமா."

"கொஞ்சம்‌ நில்லுங்க மாமி" என்று கூரிய மரியம்‌, கடையினுள்ளே ஓடி ஒரு சிறிய இலைப்‌ பொட்டலத்தை எடுத்துக்‌ கொண்டு திரும்பி வந்து அதை மார்த்தாவின்‌ கையில்‌ கொடுத்தாள்.

மார்த்தா புன்னகைத்தவாறு பொட்டலத்தைப்‌ பெற்று மடியில்‌ வைத்துக்‌ கொண்டாள். சர்க்கரைதான். பிறகு அவள்‌ செரியானிடம்‌ விடைபெற்று. குழந்தையின்‌ கையில்‌ ஒரு பணத்தைக்‌ கொடுத்துக்‌ குழந்தையை ஆசீர்வதித்துவிட்டுக்‌ கூட்டத்தோடு சேருவதற்கு வேகவேகமாக நடக்கத்‌ தொடங்கினாள்.

உச்சி வெயிலின்‌ தகப்பில்‌ அந்த வயல் கரையின்‌ வழியாக நிழல்போல்‌ நகரும்‌ வண்டியும்‌ மக்கள்‌ கூட்டமும்‌ தன்‌ கண்ணிலிருந்து மறையும்‌ வரையில்‌ மரியம்‌ பார்த்துக்கொண்டே நின்றாள்
.
அவர்கள்‌ நிரந்தரமாக அந்த ஊரையும்‌, தங்கள்‌ தங்கள்‌ குடும்பத்தையும்‌ விட்டுவிட்டுப்‌ போகின்றார்கள். இனந்தெரியாத பூமிக்காகச்‌ செல்லும்‌ மிகப்பெரிய பயணம்‌. அவர்களை இனிமேல்‌ என்றைக்காவது பார்க்க முடியுமோ? அல்லது அவர்கள்‌ மலபாரின்‌ மலை மூலைகளில்‌ தான்‌, மூடிப்போவார்களோ?

மரியத்தின்‌ சாரப் பார்வை, நம்பிக்கையற்ற ஓர்‌ இருண்ட புகையாகப்‌ பரிணமித்தது. இனந்தெரியாத ஒர்‌ இரக்கமும்‌ அனுதாபமும்‌ அவள்‌ இதயத்தைக்‌ கனக்க வைத்தன. அப்போதைக்கு, அவள்‌ அழவில்லை என்று மட்டும்‌ சொல்லலாம்.

★★★★★


அத்தியாயம் - 2
ஒரு கூட்டத்தைத்‌ தொடர்ந்து மற்றொரு கூட்டம்‌. பொட்டக்காயம்‌ வர்க்கீஸின்‌ தலைமையில்‌, மலபாருக்குப்‌ போகும்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்தவன்‌ மத்தாயி.

தன்னுடைய பொருட்களையெல்லாம்‌ விற்ற வகையில்‌, மத்தாயிக்கு எண்ணூற்று எழுபது பிரிட்டிஷ்‌ ரூபாய்கள்‌ கையில்‌ கிடைத்திருந்தன. ஐந்து பெட்டிகள்‌ நிறையச்‌ சாமான்களையும்‌, நான்கு பிள்ளைகளையும்‌ மட்டும்‌ விற்காமல்‌ மீதியாக நிறுத்தியிருந்தான். அவைகளுடன்‌ நான்கு கூட்டாளிகளையும்‌ சேர்த்துக்கொண்டு அவன்‌ புறப்பட்டு விட்டான். பரஸ்பர உறவை இழந்துவிட்ட கம்பிகளையும்‌, நைந்து பிய்ந்துபோன துணியையும்‌ உடைய குடையை, தேங்காய் நார்க்‌ கயிற்றால்‌ சேர்த்துக்கட்டி கக்கத்தில்‌ இடுக்கிக்கொண்டு, கண்ணாடி உடைந்து பல்‌ விரித்துக்‌ காட்டுகின்ற ஒரு பழைய கம்பி லாந்தரைக்‌ கையில்‌ தூக்கிக் கொண்டு மத்தாயி சோர்ந்த முகத்துடன்‌ படியிறங்கினான். அவன்‌ பின்னால்‌ நாய்க்குட்டிகளைப்‌ போல்‌ அவனுடைய பிள்ளைகளும்‌ தொடர்ந்தார்கள். பிறந்து வளர்ந்த மண்ணோடும்‌ நட்டு வளர்த்த மரங்களோடும்‌, தண்ணீர்‌ வார்த்துப்‌ பாதுகாத்த செடிகளோடும்‌, கட்டி முடிக்கப்பட்ட குடிசையோடும்‌, கிராமிய முறையில்‌ இணங்கியும்‌ பிணங்கியும்‌ வாழ்ந்து கொண்டிருந்த விவசாயிகளான அக்கம்‌ பக்கத்தார்களோடும்‌ மெளனமாக விடைபெற்று, திரும்பிப்‌ பார்க்காமலேயே அவன்‌ அவசர அவசரமாக நடந்தான்.

வழிச்செலவிற்கும்‌ மற்றதுக்குமாகக்‌ கொஞ்சம்‌ பணத்தை மடித்துணியில்‌ முடிந்து வைத்திருந்தான். ஆறு நூறு ரூபாய்‌ நோட்டுகளை, ஒரு சிறிய டைரியில்‌ அடக்கம்‌ செய்து கோட்டின்‌ அடிப்பையில்‌ பத்திரமாகப்‌ பாதுகாத்து வைத்துக்‌ கொண்டு, கம்பீரமான நம்பிக்கைகளை மனதில்‌ அணைத்தவாறு சென்று கொண்டிருந்தான். ஆறு நூறு ரூபாய்‌! மலபாரின்‌ நானூறு ஏக்கர்‌ நிலங்கள்‌ தன்னுடைய டைரியினுள்‌ கிடக்கின்றன. பொன்‌ விளையும்‌ நானூறு ஏக்கர்‌ நிலங்கள். அதனை அனுபவிக்க அவனுடைய மனைவி அன்னம்மைக்குக்‌ கொடுத்து வைக்கவில்லை. அவள்‌, அம்மை நோயால்‌ இறந்து எட்டு மாதங்கள்‌ முடிந்து விட்டன. மலபாருக்குப்‌ போக அவளும்‌ அதிக ஆசையுடன்‌ இருந்தாள். கர்த்தர்‌ அவளைச்‌ சொர்க்கத்துக்கே அழைத்துக்‌ கொண்டு போய்விட்டார்.

மத்தாயியும்‌ அவனுடைய பிள்ளைகளும்‌ மாத்தனுடைய வீட்டின்‌ படிக்கட்டை அடைந்தார்கள்.

மாத்தனும்‌, மாத்தனுடைய மனைவி மரியமும்‌, அவர்களின்‌ இரண்டு குழந்தைகளும்‌ படிக்கட்டில்‌ தயாராக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும்‌ மலபாருக்குச்‌ செல்லத்தான்‌ நின்று கொண்டிருந்தார்கள். மாத்‌தன்‌ கையில்‌ முன்னூறு ரூபாய்‌ இருந்தது. மரியாவின்‌ கையிலும்‌ கொஞ்சம்‌ பணம்‌ உண்டென்று மாத்தனுக்குத்‌ தெரியும்‌. எவ்வளவு உண்டென்று கேட்கத்தான்‌ மாத்தனுக்கு தைரியம்‌ போதாது. மாத்தனின்‌ தலையில்‌ இரண்டு பெரிய ஜாதிக்காய்‌ பெட்டிகளும்‌, கையில்‌ ஒரு கட்டு மரவள்ளிக்‌ கிழங்கின்‌ குச்சிகளும்‌ காணப்பட்டன. மரியம்‌, தன்‌ தலையில்‌ ஒன்றின்‌ மீது ஒன்றாக மூன்று பெட்டிகளையும்‌ எல்லாவற்றிற்கும்‌ மேலே ஒரு தேங்காய்த்‌ துருவியையும்‌ சுமந்து நின்று கொண்டிருந்தாள். அவர்களுடைய ஒன்பது வயதான மகள்‌ மேரிக்‌ குட்டி, ஒன்றரை வயதான தன்னுடைய சகோதரன்‌ ஜானியை இடுப்பில்‌ வைத்துக்‌ கொண்டு, இடதுகையில்‌ ஒரு பாக்குப்பாளைப்‌ பொட்டலத்தையும்‌ தூக்கிப்‌ பிடித்து நின்று கொண்டிருந்தாள்.

"மாத்தண்ணே எல்லாம்‌ தயாரா?" என்று மத்தாயி கேட்டான். மாத்தன்‌ மரியத்தின்‌ முகத்தை விழித்து நோக்கினான்.

"எல்லாம்‌ தயார்தான். அம்மியையும்‌, கோழிக்கூண்டையும்தான்‌ எடுத்துக்க முடியல. மலவாருல அம்மி வாங்க முடியுமா மத்தாயண்ணே?" என்று மரியம்‌ பதில்‌ கூறினாள்.

"ஆகா, நல்ல அருமையான கருங்கல்லு கெடைக்கும்‌."

மாத்தனும்‌ மரியமும்‌ மேரிக்குட்டியும்‌ மத்தாயியின்‌ அருகில்‌ வந்தார்கள். அவர்கள்‌ ஒன்றாகச்‌ சேர்ந்து, வர்க்கீஸின்‌ இருப்பிடத்தை லட்சியமாக்கி நடக்கத்‌ தொடங்கினார்கள்.

வர்க்கீஸும்‌, ஒன்பது கூட்டாளிகளும்‌. மாத்தனையும்‌ மத்தாயியையும்‌ எதிர்பார்த்து வீட்டில்‌ உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வா்க்கீஸ்‌, கோட்டின்‌ கீழ்ப்பையிலிருந்து சங்கலியுடன்‌ சேர்த்திருந்த வாட்சை (கடிகாரத்தை) உருவி எடுத்து நேரத்தைப்‌ பார்த்தான்.

"மணி பதினொன்றரை ஆவுது. ஒன்னர மணிக்கு பஸ்‌ மெயின்‌ ரோடுக்கு வந்துடும்‌. வேகமா நடந்தாதான்‌ முடியும்‌. சிக்கிரம்‌ கெளம்புங்க."

அவ்வாறு, பத்தொன்பது பேர்களடங்கிய அந்தக்‌ கூட்டம்‌. வேகமாக நகரத்‌ தொடங்கியது.

சுள்ளிக்‌ காடுகளும்‌ பாறைத்‌ துண்டங்களும்‌ கலந்துள்ள குன்றின்‌ பக்கவாட்டில்‌ நெளிந்து செல்லும்‌ பாதை, அந்தக்‌ கூட்டத்தினால்‌ நிறைந்தது. சாதாரணமாக, உயிரற்றுக்‌ கிடக்கும்‌ அந்தக்‌ கிராமப்‌ பாதை, அவர்களுடைய பேச்சுக்களால்‌ கலகலப்புப்‌ பெற்றது.

சிறிது நேரம்‌ சென்றதும்‌ எல்லோரும்‌ மெளனமாகக் காணப் பட்டார்கள். யாருக்கும்‌ ஒன்றும்‌ பேசுவதற்கு விஷயங்களில்லை. மூட்டை முடிச்சுக்களைத்‌ தூக்கிக்கொண்டு, அவர்கள்‌ அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆனால்‌ அந்த மெளனத்தில்‌ இனிய எதிர்பார்ப்புகள்‌ கதிராகி முற்றி நின்றிருந்தன. அவர்கள்‌ தாங்கள்‌ குடியேறப்போகும்‌, வெகு தூரத்திலுள்ள அந்த மலபாரைப்‌ பற்றிய கற்பனைகளில்‌ ஆழ்ந்திருந்தார்கள். அவர்களுடைய மடித்துணிக்குள்‌ நோட்டுக்‌ கட்டுக்கள்‌ கிடந்தன. அவர்களுடைய பூர்விக மனைகளையும்‌, நிலங்களையும்‌, வசித்த இடங்களையும்‌ புதிய பணக்காரர்களுக்கு விற்றதற்குக்‌ கிடைத்த பிரதிபலன்‌களாக, கண்ணுக்குத்‌ தெரியாத அழகும்‌ செழிப்பும்‌ உள்ள மலபாரின்‌ மலையோரங்கள்‌, அவர்களுக்கு வரவேற்பு நல்கக்‌ காத்துக்‌ கொண்டிருக்கின்‌றன. அங்கே மதச்சார்பான சண்டையில்லை. சமூகச்‌ சங்கடங்கள்‌ இல்லை. அரசியல்‌ துஷ்பிரபுத்துவத்தின்‌ செருப்பு நக்கிப்‌ (தாளம்‌ போடுபவர்கள்‌) பெரியோர்களின்‌ முன்னால்‌ ஐம்புலன்களையும்‌ அடக்கி, பயத்துடன்‌ நாட்களைக்‌ கழிக்க வேண்டாம்‌. இயற்கையுடன்‌ ஒன்றி சுதந்திரத்துடன்‌ வாழலாம்‌... அநுபவிக்கலாம்... சம்பாதிக்கலாம்‌... ஈடு இணையற்ற நிலையை நிலைநிறுத்தலாம்.

மிகப்‌ பழக்கமுள்ள குன்‌றின்‌ சரிவுகளையும்‌, வயல்கரைகளையும்‌, தோட்ட எல்லைகளையும்‌ பின்னுக்குத்‌ தள்ளிக்கொண்டு, அந்த, குடிபெயரும்‌ கூட்டம்‌ போகும்‌ வழியில்‌, அங்கங்கே தனித்‌து நிற்கும்‌ குடிசைகளிலிருந்து வெளியே வந்து பார்த்த விவசாயிகளில்‌ சிலர்‌, பொறாமையுடனும்‌ மற்றவர்கள்‌ அன்புடனும்‌ அவர்களுக்கு அது நல்லதொரு பயணமாக ஆக வேண்டுமென்று வாழ்த்தினார்கள்.

மலபாரின்‌ கிராமப்‌ புறங்களும்‌ இதேபோலக்‌ குன்றும்‌ வயலும்‌ கலந்து கிடக்குமோ? அங்கேயுள்ள மொழி நமக்குப்‌ புரியுமோ? மலையாளம்தானே அங்கேயும்‌ பேசுவார்கள்‌? பெருச்சாளிகளும்‌, போலீஸ்காரர்களும்‌, அங்கேயும்‌ உபத்திரவங்கள்‌ கொடுப்பார்களோ? எதுவானாலும்‌ ஒரு விஷயம்‌ மட்டும்‌ உண்மை: முதலாளிகளின்‌ தொந்தரவு அங்கே இருக்காது, என்றெல்லாம்‌ அந்த ஏழைகள்‌ நினைத்தார்கள்.

"வர்க்கீஸண்ணே நீங்கள்ளாம்‌ விட்டுட்டுப்‌ போனா எனக்கு வேற கதியில்ல. நானும்‌ மலவாருக்கு வரட்டுமா?"

வர்க்கீஸ்‌ இருபக்கமும்‌ பார்த்தான். யாரையும்‌ காணவில்லை. பாதைக்கருகே தாழ்த்தி நிறுத்தப்பட்டிருந்த ஒரு மாட்டு வண்டியின்‌ கூட்டுக் குள்ளிருந்து ஒரு கூர்மையான முகம்‌ வெளியே நீண்டது. புன்னகைத்தவாறு வெளியே ஊர்ந்து வரும்‌ வரீது குஞ்ஞைக்‌ கண்ட வர்க்கீஸ்,‌ நகைச்சுவையாக, "யாருடாது, வரீது குஞ்ஞா? நீ மலவாருக்கு வந்தா என்னடா புண்ணியம்‌?" என்று கேட்டான்.

"அங்க நெலங்கள்‌ சும்மா கெடக்குன்னு கேள்விப்பட்டேனே?"

"அங்க போனாத்தானேடா முண்டமே. ஒனக்கு வழிச்செலவுக்கு ஒண்ணும்‌ வேணாமா? ஒன்‌ கைல காசிருக்காடா?"

"ரெண்டு நாளா முழுப் பட்டினிண்ணே. பரமுப் புள்ளத்‌ தோட்டத்திலேந்து யாரோ தேங்கா திருடிட்டுப்‌ போயிட்டாங்க. போலீஸ்காரன்‌ என்னப்‌ புடிச்சிட்டுப்‌ போயி இடி இடின்னு இடிச்சான். இனிமே இந்தக்‌ கரையிலேந்து எங்கியாச்சும்‌ தேங்கா காணாமப்போனா இடி என்‌ முதுவுலதான்னு ஒரு தாக்கீதயும்‌ கொடுத்திருக்கான். அதனால இங்க எப்பிடி வாழமுடியும்‌? என்னையும்‌ உன்னோடோ கூட்டிக்கிட்டுப்போண்ணே.. வழிச்‌ செலவுக்கு ஏதாச்சும்‌ கடங்கொடுத்தா மலவாருக்குப்‌ போனதும்‌ வேலை செஞ்சி கொடுத்துடறேன்."

வர்க்கீஸ்‌, ஒரு சிகரெட்டைப்பற்ற வைத்து புகைவிட்டுக்‌ கொண்டு நின்றான். அவன்‌ கூட்டாளிகள்‌ வெயிலில்‌ சோர்ந்து விட்டதால்‌ களைப்பைப்‌ போக்கிக்கொள்ள ஒரு மரத்தின்‌ கீழே சென்று நின்றார்கள். வரீது குஞ்‌ஞு வண்டிக்குள்ளிருந்து தரையில்‌ குதித்து அடக்கமாகத்‌ தலையைச்‌ சொரிந்துகொண்டு, வர்க்கீஸின்‌ முன்னால்‌ கூச்சத்துடன்‌ நெளிந்து நின்றான்.

"வழிச்செலவுக்கு இருவது பிரிட்டீஷ்‌ ரூவாயாவும்‌. எத வெச்சுடா ஒனக்குக்‌ கடங்கொடுக்க முடியும்‌?" என்று வாய்‌ வழியாகவும்‌ மூக்கு வழியாகவும்‌ புகைப்படலத்தைப்‌ பரப்பிக்கொண்டு வர்க்கீஸ்‌ கேட்டான்.

"இந்த வரீது குஞ்ஞோட ஒடம்பு இல்லியா, அண்ணே? மாரால இடிச்சாலே பாறை ஒடயக்கூடிய ஒடம்பாச்சே இது. சாப்பிட ஏதாச்கம்‌ கெடைச்சா போதும்‌. எந்த வேலையாயிருந்தாலும்‌ செய்யலாம்ணே. இங்கக்‌ கெடந்தா வாழவும்‌ முடியாது, சாவவும்‌ முடியாது."

வரீதுகுஞ்ஞின்‌ மேல்‌ வர்க்கீஸுக்குச்‌ சிறிது அனுதாபம்‌ தோன்றத்‌ தொடங்கியது. வரீதுகுஞ்ஞு நம்பிக்கைக்கு உரியவன்‌ தான்‌ என்று வர்க்கீஸுக்குத்‌ தெரியும்‌. வரீதும்‌ வேலை எதுவும்‌ இல்லாமல்‌ கஷ்டப்படுகிறான். ஆனால்‌, இருபது ரூபாய்‌ ஒதுக்க வேண்டுமே? கடையில்‌, தன்னுடைய புதிய நிலங்களில்‌ வேலை செய்வதற்கு வரீது குஞ்ஞை அதிகமாக உபயோகித்துக்‌கொள்ளலாம்‌ என்ற நம்பிக்கையுடன்‌ வர்க்கீஸ்‌ சொன்னான்‌: "நீ மலவாருக்குப்‌ போன பின்னால்‌ மத்தவங்க, வாலப்‌ பிடிச்சுக்கினு போயிடுவியோ என்னமோ?"

"இந்த வரீதுகுஞ்ஞா? ஒங்கள விட்டுட்டுப்‌ போவ முடியுமாண்ணே? அந்த மாதிரி சந்தேகம்‌ ஒங்களுக்குத்‌ தோண என்ன காரணம்ணே?"

"காரணமொன்னுமில்ல. மலவாருல பல புது மொதலாளிகளப்‌ பார்க்கலாம்‌. வேலக்கி நெறையக்‌ கூலி தரேன்னு சொல்லித்‌ திருப்பிக்கிட்டு போவலாம்..."

"அதுக்கு இந்த வரீது குஞ்ஞு கெடைக்கமாட்டாண்ணே."

"அப்படின்னா சரி, நீ சக்கரமாப்‌ போயி ஒன்னோட சாமான்கள எடுத்துகிட்டு பஸ்ஸு நிக்கிற எடத்துக்கு வா."

வரீது குஞ்ஞு தான்‌ நின்ற இடத்திலிருந்து ஒரு துள்ளு துள்ளினான். அவன்‌ தன்‌ பயணத்திற்கு ஒன்றும்‌ பெரிதாகத்‌ தயார்‌ செய்ய வேண்டியதில்லை. தலையில்‌ கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக்‌ கையில்‌ பிடித்துக்‌ கொண்டான். அணிந்திருந்த துண்டை அவிழ்த்துத்‌ தலையில்‌ கட்டிக்‌ கொண்டான். முதலில்‌ அவிழ்த்த துண்டை இடுப்பில்‌ சுற்றி அதை மடக்கிக்‌ கட்டிக்‌ கொண்டான். காதுச் சந்திலிருந்து ஒரு பீடித்துண்டைத்‌ தேடி எடுத்தான். பின்பு, ஏதோ புனராலோசனையுடன்‌ அதை அங்கேயே ஸ்தாபித்துவிட்டு வர்க்கீஸினுடைய சிகரெட்‌ துண்டைக்‌ கேட்டு வாங்கிப்‌ புகைத்துக்கொண்டு வரீதுகுஞ்ஞு மலபாருக்குப்‌ புறப்பட்டு விட்டான்‌!

அவன்‌ மத்தாயினுடைய பிள்ளைகளின்‌ தலையிலிருந்த பெட்டிகளை வாங்கித்‌ தன்‌ தலையில்‌ ஸ்தாபித்துக்‌ கொண்டான். மத்தாயினுடைய கக்கத்திலிருந்து துணிக்குடையை வாங்கிப்‌ பெட்டிகளின்‌ மீது வைத்து விலங்கைப்‌ போல்‌ வளைத்துப்‌ பிடித்துக்‌ கொண்டான்.

அவர்கள்‌ நகரத்‌ தொடங்கினார்கள்.

"தென்னந்தோப்பு ஏலிக்குட்டி...

அவள்‌ எண்பத்தெட்டோலை எண்ணிக்கட்டி..."

வரீது குஞ்ஞின்‌ பாட்டு அந்தக்‌ குறுங்காடுகளில்‌ முழங்கியது. சிறுவர்கள்‌ அந்தப்‌ பாட்டுக்குப்‌ பின்பாட்டு பாடினார்கள்.

உச்சிவெயில்‌ சாயத்‌ தொடங்கியபோது, அவர்கள்‌ பரந்த சமவெளியை அடைந்தார்கள். முன்னாடியே சென்ற வர்க்கியும்‌ அவன்‌ கூட்டமும்‌ அங்கே தங்கியிருந்தார்கள். அவர்களுடைய ஸ்பெஷல்‌ பஸ்‌ இன்னும்‌ வந்து சேரவில்லை.

மூன்று மணியானபோது ஒரு கரி ஆவி பஸ்ஸின்‌ உருக்குலைந்த உருவம்‌ இருமியும்‌ புகைந்தும்‌ அங்கே மெதுவாக வந்து சேர்ந்தது.

வர்க்கீஸ்‌ கண்டக்டரின்‌ அருகில்‌ சென்று என்னவோ முணுமுணுத்‌தான். ரகசியத்‌ தர்க்கங்களும்‌, வேண்‌டாமென்‌ற தலை குலுக்கலும்‌, ஆலோசனைகளும்‌, அங்க சேஷ்டைகளும்‌ மற்றவைகளும்‌ அவர்கள்‌ இருவருக்குள்ளும்‌ நடந்தன. கடைசியில்‌ கண்டக்டரின்‌ தலை சம்மதத்துக்கு அறிகுறியாக ஆடத்‌ தொடங்கியது. வர்க்கீஸ்‌ புன்னகைத்தவாறு அவனுடைய கூட்டாளிகளின்‌ அருகில்‌ சென்று சாமான்களைச்‌ சரி செய்துவைக்க உத்தரவு கொடுத்தான்.

வர்க்கீஸ்‌ தன் கூட்டாளிகளின்‌ சாமான்களை பஸ்ஸில்‌ மேல்‌ கூரைக்கு ஏற்றத்‌ தொடங்கியதோடு, வர்க்கீஸின்‌ கூட்டத்‌தாரும்‌ தங்கள்‌ பெட்டி சாமான்களை ஏற்றத்‌ தொடங்கினார்கள். அப்போது, வர்க்கி அவர்களை எட்டித்‌ தடுத்தான். கண்டக்டா்‌ நகர்ந்து வந்து வர்க்கியிடம்‌ விலகி நிற்கச்‌ சொன்னான்.

"எங்களையும்‌ எங்க லக்கேஜையும்‌ மட்டும், தான்‌ ஏத்தணும்‌" என்று கூறினான்‌ வர்க்கி.

"பஸ்ஸுல யாரையெல்லாம்‌ ஏத்தலாம்னு தீர்மானிக்கறது நான்தான்‌" என்றான்‌ கண்டக்டர்.

"அத ஒத்துக்க முடியாது" என்றான்‌ வர்க்கி.

"அப்படின்னா வேற பஸ்ஸ பாத்துக்க. இதில ஒங்களை ஏத்த எனக்கு இஷ்டமில்ல." என்று கண்டக்டர்‌ கண்டிப்பான பதிலைக்‌ கொடுத்தான்.

வர்க்கி குழம்பிப்போனான். ஆட்சேபிப்பதால்‌ புண்ணியமில்லை. அந்த பஸ்‌ கிடைக்கவில்லையென்றால்‌ அவர்கள்‌ இரண்டு நாட்கள்‌ இங்கேயே தங்க வேண்டியதாகி விடும்‌, அத்துடன்‌ ஐம்பது ரூபாயாவது செலவாகும்.

கடைசியில்‌ தோல்வியை வர்க்கி ஒத்துக்கொண்டான். கண்டக்டருடைய முப்பாட்டனுக்கு முப்பாட்டன்‌ வரையுள்ளவர்களையெல்லாம்‌ சபித்தவாறு சாமான்களை ஏற்றத்‌ கொடங்கினான்.

அவ்வாறு அந்த நாற்பத்து நான்கு பயணிகளும்‌, இருபது குடும்பங்களின்‌ ஜங்கம சொத்துக்களும்,‌ அந்தச்‌ சிறிய பஸ்ஸில்‌ திணிக்கப்பட்டன. பஸ்‌ காச நோய்க்காரனைப்‌ போல்‌ சிறிது துப்பிக்கொண்டே நகர்ந்தது.
மலையாள மூலம்: எஸ்.கே. பொற்றேக்காட்
தமிழில்: குறிஞ்சிவேலன்
Share: 




© Copyright 2020 Tamilonline