Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பேரா. சுவாமிநாதனுடன் ஒரு சந்திப்பு
திருப்பூர் கிருஷ்ணன்
- கேடிஸ்ரீ|மார்ச் 2005|
Share:
Click Here Enlargeஇளம் எழுத்தாளர்கள், குழுக்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது:

கல்கியில் தனது எழுத்துலக அனுபவங்களை 'சுவடுகள்' என்கிற தொடராக எழுதிய முனைவர் திருப்பூர் கிருஷ்ணனை அறியாத தமிழ் இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது.

தினமணியில் சுமார் கால் நூற்றாண்டுக் காலம் துணையாசிரியராகப் பணியாற்றிவர். அம்பலம் டாட் காம், சென்னை ஆன் லைன் (தமிழ்) ஆகிய வலை இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. சிறந்த இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவாளர். இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

தன்னுடைய அயராத பணிகளுக்கிடையே தென்றல் வாசகர்களுக்காக தன்னுடைய முதல் கவிதை, சிறுகதை, தற்கால இலக்கியம், இன்றைய சிறுபத்திரிக்கைகளின் நிலை, இலக்கியத்தில் இணையத்தளத்தின் செயல்பாடுகள், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார்...

கே: உங்கள் தமிழ் ஆர்வம் தொடங்கியது எப்போது?

ப: என் கல்லூரி நாட்களில் தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் எழுத்தாலும் பேச்சாலும் கவரப்பட்டேன். அதன் விளைவால் நான் எழுத்துத் துறைக்கு வரவிரும்பினேன். என் குடும்பப் பின்னணி எழுத்துக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஆனாலும் என் பெற்றோர் அனுமதியுடன் நான் தமிழிலக்கியத்தில் முதுநிலை படித்தேன். பிறகு நா.பா.வின் 'தீபம்' பத்திரிக்கையில் பணிக்குச் சேர்ந்தேன். என் ஆதர்ச எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இருந்த நா.பா.விடமே பணி செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதினேன்.

நா.பா.வின் கண்ணோட்டம் பொருளியல் சார்ந்ததல்ல. அவர் உயர்ந்த லட்சியங்களுக்காக வாழ்ந்த வித்தியாசமான எழுத்தாளர். இன்றைக்கு நான் பார்க்கின்ற எழுத்தாளர்கள் பலர் எழுத்தாளர் என்கிற தளத்தில் மட்டுமே இயங்குகிறார்கள். ஆனால் நா.பா.வோ எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஓர் இலக்கிய சக்தியாக இருந்தார். ஏராளமான எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, புதியவர்கள் எழுதுவதற்கு தீபம் என்கிற ஓர் அரங்கை அமைத்துக் கொடுத்தார். மேடைகளில் இலக்கியத்தைக் கொண்டாடினார். எழுத்தை ஓர் இயக்கமாக்கி, மக்களிடையே தீவிர இலக்கியத்துக்கு வசீகரத்தை ஏற்படுத்தினார். நா.பா.வுடனான பழக்கத்தினால் என் மனது செம்மைப்பட்டது. என்னிடம் குறைகள் இருக்கலாம். ஆனால் என்னிடம் ஏதாவது நிறை இருக்குமானால் அது நா.பா.வின் நேரடித் தாக்கத்தினால் வந்ததுதான். அந்த அளவிற்கு அவர் உயர்ந்த மனிதர்.

கே: சுஜாதாவுடனும் பணியாற்றியுள்ளீர்கள் போலிருக்கிறதே..?

ப: தீபத்தை அடுத்து தினமணியில் சுமார் கால்நூற்றாண்டுக் காலம் பணியாற்றினேன். பிறகு சுஜாதா அவர்களுடன் அம்பலம் இணையத்தளத்தில் பணியாற்றினேன். பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த, சுறுசுறுப்பான சுஜாதாவின் கீழ் பணிபுரிவது அருமையான வாய்ப்பு. அவர் ஒரே நேரத்தில் ஏராளமான விஷயங்களைக் கூர்மையாகச் செய்யக் கூடியவர். அதன் பிறகு சென்னை ஆன் லைன் இணையத்தளத்தின் தமிழ்ப் பதிப்பில் பணியாற்றினேன். பொதுவாகப் பத்திரிக்கையில் பணிபுரியும் போது மேடையில் பேசக்கூடாது, வேறு இதழ்களுக்கு எழுதக் கூடாது என்று பலவகைக் கட்டுப்பாடுகள் இருக்கும். சென்னை ஆன்லைனின் ரவிச்சந்திரன், அசோகன் ஆகியோர் பூரண சுதந்திரத்துடன் பணிபுரிய வாய்ப்புக் கொடுத்தனர். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத கால கட்டம் என்று சொல்வேன்.

என் மனைவியின் பணி காரணமாக நான் ஒன்றரையாண்டுக் காலம் புனேயில் அதிகம் இருக்க வேண்டிய தேவை இருந்தது. மறுபடியும் என் மனைவி சென்னை வந்துவிட்டதால், நான் இப்போது முழுநேர எழுத்தாளராக, பேச்சாளராக இயங்குவதை ரசிக்கிறேன்.

கல்வியாளரும், சுயமுன்னேற்றச் சிந்தனையாளருமான என்.சி. ஸ்ரீதர் என்கிற என் நண்பர் 'வானமே எல்லை' என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். அதற்கு ஆலோசகராக இருக்கிறேன். சென்னை போரூரில் உள்ள WCC என்ற நிறுவனத்தினர் தொடங்கவிருக்கிற 'உறவுப்பாலம்' பத்திரிகைக்கு இலக்கிய ஆலோசகராகப் பணியாற்றுகிறேன். பொதிகைத் தொலைக்காட்சியில் 'காலைத் தென்றல்' பகுதியில் மாதம் ஒரு வாரம் அரசியல் விமர்சகராக இயங்குகிறேன். சென்னை வானொலியில் நிகழ்ச்சிகள் அளித்து வருகிறேன்.

கே: உங்கள் முதல் கவிதை, முதல் சிறுகதை எப்போது வெளிவந்தது? அன்று உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ப: மற்ற எழுத்தாளர்கள் போல் மனப் போக்கு உள்ளவனா நான் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் என் தாயாருக்கு ரொம்பச் செல்லப்பிள்ளை. ஆகையால் என்னுடைய இளம் வயதில் நான் அடுத்தவர்களின் அபிப்பிராயத்தால் எளிதில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நாம் எழுதுகிறபடி எழுதுவோம் என்கிற மனப்போக்கு முன்னர் இருந்ததில்லை. தொடக்கத்தில் நான் எழுதி அனுப்பிய சிறுகதையோ, கவிதையோ திரும்பி வந்திருந்தால் நிறைய மனச்சோர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் அப்படி நிகழவில்லை. என்னுடைய முதல் கவிதையான 'நானும் நானும்', பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கிறபோது ஆனந்தவிகடனில் வெளி வந்தது. கவிதையை அனுப்பிய ஒருவாரத்துக்குள் எனக்கு 'கவிதை சிறப்பாக இருக்கிறது. புகைப்படத்துடன் பிரசுரிக்க விரும்புகிறோம், அனுப்புங்கள்' என்று எழுதியிருந்தது. இது உற்சாகத்தைத் தந்தது. அதுபோல் 'தாமரை' பத்திரிகைக்கு 'நியாயங்கள் மாறுபடும்' என்ற சிறுகதையை அனுப்பினேன். இது நான் பிரசுரத்திற்கு அனுப்பிய முதல் சிறுகதை. அது பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அப்போது என்னுடைய ஆர்வத்திற்குப் பெரிதும் அக்கறை காட்டிய ஆசிரியர் முப்பால் மணி, கல்லூரியில் மாணவர்கள் முன்னிலை

யில் அக்கதையை முழுக்க அவரே படித்துக் காட்டினார். ஆரம்ப காலத்தில் எனக்குக் கிடைத்த ஊக்கத்தின் காரணமாக நான் இத்துறையில் தொடர்ந்தேன்.எனக்குப் பெரிய செல்வம் எது என்றால் என் பெற்றோர், உறவினர்கள், முக்கியமாக, ஏராளமான நண்பர்கள். அவர்கள் எல்லோரும் என் மேல் வைத்திருக்கும் அன்பை நான் அவர்கள் மேல் வைத்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. வல்லிக் கண்ணன், தி.க. சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, முதுபெரும் எழுத்தாளர்கள் ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் என்று நிறையச் சொல்லிக் கொண்டு போகலாம்.

கே: இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள்? உங்கள் கவிதைகளைப் பற்றியும் சொல்லுங்கள்.

ப: 250 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். மரபுக் கவிதைகள் 5000க்கு மேல் எழுதியிருக்கிறேன். தொடக்க காலத்தில் நான் மரபுக் கவிதைகளை எழுதியிருந்தாலும் மரபுக் கவிஞனாக நான் அறியப்படவில்லை. காரணம் பின்னாளில் நான் பணிபுரிந்த பத்திரிகைகளில் மரபுக் கவிதைகளுக்கு வாய்ப்பே இல்லை. 25 வருட காலம் நான் தினமணி கதிரில் பணியாற்றிய போது மரபுக் கவிதை எழுதுகிற சூழல் ஏற்படவில்லை. ஆனால் இப்போது கல்கி போன்ற பத்திரிக்கைகள் என் மரபுக் கவிதைகளை வெளியிடுகின்றன.

கே: வேறெந்த இலக்கிய வடிவங்கள் உங்களை ஈர்க்கின்றன?

ப: எனக்கு கவிதை, சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் உற்சாகம் இருக்கிறது. தவிர என் குரு தீபம் நா. பார்த்த சாரதியைப் பற்றி 'வாழ்வும் பணியும்' என்ற தலைப்பில் ஒரு நூலைச் சாகித்திய அகாதெமிக்காக எழுதினேன்.

இதேபோல் வை.மு. கோதைநாயகி என்ற எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிற வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய சுதந்திர சிந்தனை, தேசிய சிந்தனை, பெண்ணுரிமைச் சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. அவர் சிறந்த பாடகி மட்டுமல்லாது சுதந்திர போராட்ட வீரரும் கூட.

ஆபாசக் கலப்பு இல்லாமல் வெற்றிகரமாக நடந்துவரும் கல்கி பத்திரிக்கையில் 42 வாரங்கள் எனது பத்திரிகை, எழுத்துலக அனுபவங்களை 'சுவடுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதினேன். அதுபோல் 'அரவிந்த அமுதம்' என்கிற ஆன்மிகத் தொடர் ஒன்றையும் வெளியிட்டார்கள். குமுதம் ஜங்ஷன் பத்திரிகையில் 'மனசரிதம்' என்கிற தொடர் எழுதியிருந்தேன். இவற் றைப் புத்தகமாக வெளியிடவிருக்கிறேன்.

கே: வாசகர்களைப் பற்றி...

ப: இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையே ஆனாலும், வாசகர்கள் ஆழ்ந்த இலக்கியம், உயர்ந்த ஆன்மிகம் இவற்றை விலை கொடுத்து வாங்கி ஆதரிக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான போக்கு.

கே: கோதைநாயகியின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில், பெண் படைப்பாளர்களின் எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்ற நினைக்கிறீர்கள்?

ப: 'இலக்கியச் சிந்தனை' கொடுத்த வாய்ப்பால் உருவானது 'கோதைநாயகியின் இலக்கியப் பாதை' என்ற வாழ்வும் பணியும் குறித்த புத்தகம். நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்திலிருந்து வந்தவன். என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து நிறைப் பேர் கதர் ஆடைதான் அணிவார்கள். வை.மு.கோ. எழுத்தாளர் என்பதோடு சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்பதால் அந்த நூலைப் பெரும் ஈடுபாட்டுடன் எழுதினேன். பொதுவாகப் படைப்பாளரைப் பெண் என்றும் ஆண் என்றும் பிரித்துப் பார்ப்பது சரியல்ல. அவர்கள் பிறந்த ஜாதி ரீதியாகப் பிரிப்பதும் சரியல்ல. படைப்பைப் படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். எழுத்து சமூக முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும். மனிதநேயம் எழுத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கலைநயம் கெடாமல், உள்ளடங்கி, மனிதநேயக் குரல் ஒலிக்கும் போது, அது படிக்கிற வாசகனை எளிதாகச் சென்றடையும்.

கே: தீவிர இலக்கியம் என்றால் என்ன?

ப: பல்வேறு வகை வாசகர்கள் பல்வேறு வகை மனத் தளங்களில் இயங்குகிறார்கள். ஒருவருடைய மனத்தினுடைய உயரம் என்பது இன்னொருவரின் மனத்தின் உயரம் போன்று இருக்காது. உலகம் பலவகைப்பட்டது. ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள்.

ஆழ்ந்த இலக்கியம் என்பது மனம் முதிர்ந்த வாசகர்களுக்காக வாழ்க்கையினுடைய உண்மைகளை ஒரு விசாரணையின் மூலம் தேடிக் கண்டுபிடித்து இப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என்பதைச் சொல்கிறது.

சா. கந்தசாமி, ஜெயமோகன், சுந்தர ராமசாமி, ஜானகிராமன் போன்றோரின் நாவல்களைப் பார்த்தால், அவற்றில் வாழ்க்கையைப் பற்றிய விசாரிப்பு இருக்கும். வாழ்க்கையின் ஆழ்ந்த தத்துவங்கள் அவர்களின் நாவல்களில் இருக்கும். உலகில் மனிதன் பிறக்கிறான், ஒருநாள் இறக்கிறான். இடையில் இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையான கருத்துப் போக்குகள், உணர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப் பற்றிய ஆழ்ந்த விசாரணையாக அமைவது தான் ஆழ்ந்த இலக்கியம்.

மேலோட்டமான எழுத்து என்று ஒன்று இருக்கிறது. அந்த வாசகத்தளத்தில் இருப்பவர்களுக்கு அத்தகைய எழுத்து தேவையானதாக இருக்கும். அவர்களுக்காக அத்தகைய எழுத்து வரும். ஆனால் அவை இலக்கியமாகா. அதே சமயத்தில் இன்றைக்கு இருக்கிற பல நவீன இலக்கியவாதிகள் ஏதோ சொல்ல வருவதாக நினைத்துக் கொண்டு யாருக்கும் புரியாத மொழியில் ஒரு போலி இலக்கியம் செய்து, பம்மாத்துச் செய்வதும் இலக்கியமல்ல. இலக்கியத்துக்கு நாம் இலக்கணம் வகுத்து, இப்படித்தான் இலக்கியம் என்று சொல்வதைவிட கு. ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி. புதுமைப் பித்தன் போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் எழுதியதைப் போன்ற எழுத்துக்கள் இலக் கியம் என்று சொல்லலாம்.

இவை ஏன் இலக்கியத்துக்கான இலக்கணம் என்றால் இவர்கள் வாழ்க்கையைப் பற்றிய விசாரணைகளில் இறங்குகிறார்கள். இவர்களின் எழுத்தைப் படிப்பதன் மூலமாக நமக்கு உள்ளுணர்வில் ஒரு மேம்பாடு ஏற்படுகிறது. ஒரு தெளிவு ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை அத்தகைய தளத்தில் சொல்வதுதான் இலக்கியம் ஆகமுடியும்.

எல்லாம் இலக்கியம்தான் என்று சொல்ல முற்பட்டால் மர்ம நாவல்கூட இலக்கியமாகிவிடும். அவையெல்லாம் தமிழ் எழுத்தின் வகைகள் என்று சொல்லலாம். எல்லா விதமான எழுத்துகளும் தேவைதான். அவற்றையும் சிலர் விரும்பிப் படிப்பார்கள். சமூக விரோதம் இல்லாத எழுத்து எதுவாக இருந்தாலும் அது சமுதாயத்திற்குத் தேவை தான்.

தற்போது பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் பலர் எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்து நேரிடையாக, கருத்துகளை அப்படியே சொல்வதுபோல் இருக்கிறது. அவர்கள் இலக்கிய வடிவத்தை விடக் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்குப் பெரிய இலக்கிய அந்தஸ்து கிடைக்காது. ஆனால், மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், சின்னப்ப பாரதி போன்றோர் அதை அடக்கி வாசிக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்துகளை வெளியில் துருத்திக் கொண்டு நிற்காமல், இலக்கியத்திற்கு உள்ளடங்கிக் கொடுப்பதினால் அவை இலக்கியமாகின்றன.

ஒரு விஷயத்தை இலக்கியம் அல்லது இலக்கியமல்லாதது என்று பிரிப்பது எப்படி என்றால், அந்த இலக்கியம் மனித வாழ்விற்குப் பயன்படுகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தது. நான் பொதுவுடைமைவாதி அல்ல. ஆனால் நான் பொதுவுடைமை சார்ந்த இலக்கியத்தை ரசிக்கிறேன். கொண்டாடுகிறேன். இதற்குக் காரணம், எல்லோருக்குமே ஏதாவது ஒரு வயதில் பொதுவுடைமைக் கண்ணோட்டம் இருந்திருக்கும். உழைப்பாளிகளும், ஏழைகளும், தொழிலாளர்களும் மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது, ஒருவகையில் பார்த்தால் வள்ளலாரின் தத்துவம்தான். ஆகையால் அடிப்படையில் அதில் எனக்கு எந்தவித வேறுபாடும் இல்லை. கட்சிசார்ந்து நான் இயங்கவில்லை. அந்தக் கருத்தின் தாக்கம் எல்லோருக்கும், ஏன் மனித குலத்துக்கே, இருக்கிறது. நம் தேசப்பிதா காந்தியின் லட்சியத்தைப் பார்த்தால், அதுவும் பொதுவுடைமை இலட்சியத்துடன்தான் இணையும். ஆனால் வழிகள்தாம் வேவ்வேறு. எல்லா இலக்கியப் போக்குகளும் தமிழுக்குத் தேவைதான்.

கே: தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றி...

ப: தற்காலத் தமிழ் இலக்கியத்தில் உள்ள சங்கடமான நிலைமை என்னவென்றால் சிறுசிறு குழுக்களாக இயங்குவதுதான். ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் அந்தக் குழுவைச் சார்ந்த எழுத்தாளர்களை முன்னிலைப் படுத்துவதைக்கூடத் தவறாகக் கருதமுடியாது. இயல்பானதுதான். ஆனால் அவர்கள் தங்களுடைய சக்தி முழுவதையும் அடுத்த குழுவில் உள்ள ஆட்கள் சரியில்லை என்று சொல்வதிலேயே பயன்படுத்துகிறார்கள். அதைப் பற்றியே எழுதுகிறார்கள். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. இத்தகைய போக்கு நாள்பட நிற்காது.

தற்காலத் தமிழிலக்கியத்திலும் பலவகையான போக்குகள் உள்ளன. அப்படி இருந்தால்தான் அது ஒரு மொழி. ஒவ்வொரு போக்கிலும் மேலான எழுத்து எது என்று பார்த்து நாம் அதைக் கொண்டாட வேண்டும். அப்படிச் செய்தால் இலக்கியம் நன்றாக வளரும்.

கே: எல்லோருடனும் கலந்து பழகும் உங்கள் குணம் பற்றி...

ப: என்னைப் பொறுத்தவரை அவர்கள் எந்தக் கொள்கையை வைத்திருந்தாலும் அவர்கள் எழுதும் இலக்கியத்தின் ஜீவனைத் தான் பார்க்கிறேன். மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், சின்னப்பபாரதி போன்றவர்கள் எனது நெருங்கிய நண்பர்கள். நான் பொதுவுடைமைவாதி அல்ல. அது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் பொதுவுடைமைவாதியாக இருந்தால்தான் அவர்களுடன் நட்பு வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏன், அவர்கள் மனைவியோ, குழந்தைகளோ, அண்ணன், தம்பிகளோகூடப் பொதுவுடைமைவாதி களாக இல்லாமலிருக்கலாம்.

ஆகையால் ஒரு சித்தாந்த அடிப்படையில் எழுதுகிறவர்களுக்கு, அதைச் சார்ந்தவர்கள்தாம் நண்பர்களாக இருக்க முடியும் அல்லது அவர்களுடைய எழுத்தைக் கொண்டாட முடியும் என்பது கிடையாது. இலக்கியத்தை நாம் இலக்கியமாகத்தான் பார்க்கிறோம்.

நான் ஒரு இந்து. ஆனால் தேம்பாவணி, சீறாப்புராணம் போன்ற நூல்களை நான் படித்திருக்கிறேன். அந்த நூல்களில் நான் தோய்ந்து, ரசித்திருக்கிறேன். அண்மையில் மறைந்த மு.மு. இஸ்மாயில் கம்பராமாயணத்தைப் பொறுத்தவரை முக்கியமான அறிஞர்களில் ஒருவர். ஆகையால், இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கும் போது இத்தகைய தத்துவ பேதங்கள் மறைந்துவிடும். நாம் அந்த நிலையைவிட்டு அடுத்த தளத்திற்கு செல்வதற்கான மனஉயரத்தோடு இயங்கினோம் என்றால் எல்லோருமே நம்முடைய நண்பர்களாக இருப்பார்கள்.

அப்படி என்றால் எல்லாப் போக்குகளிலும் எழுதுகிற எல்லா எழுத்தாளர்களையுமே கொண்டாடுகிறோம் என்பதல்ல. போக்குகளை நாம் அங்கீகரிக்கிறோம். அந்தப் போக்குகளில் மேலான உணர்வோடு எழுதும் உயர்ந்த எழுத்தாளர்களை நாம் பாராட்டுகிறோம்.

கே: சிறு பத்திரிகைகள் பெரும் பத்திரிகைகளுடன் வியாபார ரீதியாக ஏன் போட்டியிட முடியவில்லை?

ப: ஒரு காலத்தில் சிறு பத்திரிகைகள் 15 - 20 ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய அளவில் வலிமையான சக்தியாக இருந்தன. நா. பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன் போன்றோர் காலத்தில்கூடச் சிறு பத்திரிகைகளின் விற்பனை, பெரும் பத்திரிகைகளோடு போட்டி போடுகிற அளவுக்கு இருந்தது கிடையாது. ஏனென்றால் சிறு பத்திரிகைகளைக் குடிசைத் தொழில் போல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு வணிக நோக்கம் என்பது கொஞ்சம்கூடக் கிடை யாது. ஆனால் ஆழ்ந்த இலக்கிய நாட்டமுள்ள வாசகர்கள் தேடித்தேடி இத்தகைய சிறு பத்திரிகைகளை ஆதரித்தார்கள். தற்போது முன்பு இருந்தது போல் சிறு பத்திரிகைள் குறைவாக இல்லை. ஏராளமான சிறு பத்திரிகைகள் வருகின்றன. தேவையற்ற தனி மனிதத் தாக்குதல்கள் இல்லாமல், கோட்பாடுகள் ரீதியாக மட்டும் தாக்குதல்களை வைத்துக் கொண்டு, நெறிமுறைகளுடன் இயங்குகிற உயர்ந்த இலக்கிய பத்திரிக்கை எது என்று கேட்டால் நம்மால் சட்டென்று சொல்ல முடியாது. யோசிக்க வேண்டியிருக்கும்.

இவற்றில் பல விஷயங்கள் நன்றாக இருக்கின்றன. வேண்டாதவரைப் பற்றித் தாறுமாறாக எழுதப்பட்ட சில பக்கங்கள் இருக்கின்றன. 'நாச்சியார் மடம்' என்கிற கதையில் ஊனமுற்றோர்களைப் பற்றிக் கேலி எழுதியதாக ஒரு விவாதம் வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த அளவிற்குப் பண்பாட்டுக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு இது அடையாளம். திரைப் படங்களில்கூட ஊனமுற்றவர்களைக் கேலி செய்கிறார்கள். அத்தகையவற்றை நாம் அனுமதிக்க முடியாது. சில இலக்கியப் பத்திரிக்கைகளிலும் இது நடக்கிறது. இவற்றை வைத்துப் பார்க்கிற போது தீபம், சுபமங்களா போன்ற பத்திரிகைகள் மாதிரி இன்றைய சிறு பத்திரிகைகள், பொதுவான ஆழ்ந்த வாசகர்களால் கொண்டாடக் கூடியவையாக மாற என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

நா. பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன் இருவருமே எதிர்க் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவற்றைக் கருத்தாகத்தான் பார்ப்பார்களே தவிர, சொன்ன நபர் யார் என்று பார்க்க மாட்டார்கள். ஆனால் இன்றைய இலக்கியப் பத்திரிகை களில் சொன்ன நபர் யார் என்று பார்த்து அவர்களைத் தாறுமாறாக - தனிமனித வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டு - தாக்கும் அளவிற்குப் போகிறது. கிண்டல், கேலி, நையாண்டி என்கிற பெயரில் வாழ்நாள் முழுக்க ஒரு எழுத்தாளர் மனக்காயம் படக்கூடிய வரிகளை எழுதுகிறார்கள். இதைப் படிக்கிறபோது ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு மோசமான தாக்குதலுக்கு அவசியம் என்ன என்ற யோசனை நமக்கு வருகிறது.

இப்படிப்பட்ட போக்குகளை விட்டுவிட்டு, இலக்கியப் பத்திரிகையைப் பொது மேடையாக வைத்துக் கொண்டு, மொழியை நாகரிகமானதாக வைத்துக் கொண்டு, எல்லா வகையினருக்கும் எழுத இடம் கொடுத்துச் சிறு பத்திரிகைகள் இயங்கி னால், முன்போல நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

தற்போது இலக்கியப் பத்திரிகைகளை அந்தந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் பிரமாதமாக மதிக்கிறார்கள், அதில் எழுகிறார்களே. பொது, ஆழ்ந்த வாசகன் உயர்வாகக் கருதும் வகையில் இலக்கியப் பத்திரிகைகள் இயங்குவதாகத் தெரியவில்லை. என் வேண்டுகோள் என்ன வென்றால், உங்கள் குழுவைச் சார்ந்த ஆட்களை நீங்கள் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் குறைந்த பட்சம் உங்களது குழு சாராதவர்களைத் தாறு மாறாகத் தாக்காதீர்கள். அதுவே நீங்கள் இலக்கியத்திற்குச் செய்கிற சேவையாக இருக்கும். அபாரமான ஆற்றலுடன் வருகிற இளை ஞர்கள், குழுச் சிக்கல்களில் சிக்காமல் வரவேண்டும் என்பதும் என் கவலை.

கே: இரண்டு வெவ்வேறு ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. இவற்றிடையே நீங்கள் காணும் வித்தியாசங்கள்...

ப: இணையத்தளம் இயங்கும் முறை அற்புதமாக இருக்கிறது. இதிலே தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாகச் சரி செய்துகொள்ள முடிகிறது. அச்சுப் பத்திரிக்கையில் இது சாத்தியமில்லை. என் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் என்பது எதிர்வினைகள்தான். நான் இப்போது அதிகம் மேடையில் பேசுகிறேன். மேடைப் பேச்சில் பேசியவுடன் நம்மிடம் சந்தேகம் கேட்கிறார்கள். உடனடியாக எதிர்வினை நமக்குத் தெரிந்துவிடுகிறது. பத்திரிகைகளில் கூடப் பலர் உடனடியாகத் தொலைபேசியின் மூலம் நம்மிடம் பேசுகிறார்கள். கருத்தை அலசுகிறார்கள். சந்தேகங்களைக் கேட்கிறார்கள். இது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் இணையத்தளத்தைப் பொறுத்தவரை, எதிர்வினை அதிகம் தெரிய வருவதில்லை. மின்னஞ்சல்கள் மூலம் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே தவிர, அதனுடைய தாக்கம், குறிப்பாக சென்னையிலும் தமிழகத்திலும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. வெளிநாடுகளில் இணையத்தளத்தின் தாக்கம் இருக்கலாம்.

இணையத்தளத்தின் மூலமாக இலக்கியம் வளர்ப்பது அவசியம்தான். ஏனென்றால் தமிழர்கள் பல்வேறு தேசங்களில் இருக்கிறார்கள். அவர்களிடையே தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களது தமிழ் எழுத்துகளை இங்குள்ள மக்களுக்குத் தர வேண்டும். ஆனால் ஆர்வத்துடன் இயங்குகிற சமகாலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பத்திரிக்கைள் தருகிற உற்சாகத்தை இணையத்தளங்கள் தரவில்லை என்று சொல்வேன்.

அதற்குக் காரணம் பத்திரிகைகள் வாசிக்கப்படும் அளவிற்கு இணையத்தளங்கள் தமிழகத்தில் வாசிக்கப்படவில்லை. அச்சு இதழ்கள் ஒருபுறமிருக்க, இணையத் தளங்களின் சேவை நிரந்தரமானது. எதிர்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுகூட ஒருவர் அதை எடுத்து வாசிக்க முடியும். ஆகையால் அதன் சேவையை ஒழுங்குபடுத்தி, சிறப்பாகச் செயல்படுவது தமிழ் ஆர்வலர்களுடைய கடமை. சுஜாதா போல் இத்துறை வல்லுநர்கள் ஒன்றிணைந்து தமிழ் இணையத்தளங்களை வலுப்படுத்த வேண்டும்.

கே: புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் எதிரானவையா?

ப: இன்றைக்குப் புதுக்கவிதைகள் போலவே மரபுக்கவிதை என்பது கவிதைசார்ந்த இன்னொரு துறை. இரண்டுமே வளர்ந்து வருகின்றன. மரபுக் கவிதைகளை ஒரேயடியாக ஓரம் கட்டுவது சரியல்ல. மரபுக் கவிதைகளில் வெறும் ஓசைதான் இருக்கிறது... அதில் கருத்துக்களே இல்லை என்று சொல்கிற வாதங்கள் இயலாமை காரணமாகச் சொல்கிற வாதங்கள். இளங்கோவடி கள் போன்றவர்கள் உலக அளவில் நிலைத்து நிற்கக்கூடிய மரபுக் கவிதைகளைச் செய்திருக்கிறார்கள். தமிழில் முடியரசன், குலோத்துங்கன், கருணாநந்தன் போன்ற பல மரபுக் கவிஞர்கள் அருமையாக எழுதுகிறார்கள். நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்.

இப்போது புதுக்கவிதைகள் நிறைய எழுதப்படுகின்றன. ரொம்பச் சாராசரியாக, இதெல்லாம் கவிதையா என்கிறபடிப் புதுக்கவிதைகள் ஏராளமாக வெளிவருகின்றன. ஆனால் மரபுக் கவிதைகளைப் பொறுத்தவரை, மரபு வடிவில் அமைந்த செய்யுள்களே அதிகம் வருகின்றன. இலக்கணம் இருக்கிறதே தவிர, கவித்துவம் குறைவாக இருக்கிறது. ஆகையால், கவித் துவத்தோடு கூடிய உயர்ந்த மரபுக் கவிதை களை எழுதுவதும், அத்துறையை வளர்ப் பதும் இலக்கியவாதிகளின் கடமை. மரபுக்கவிதைகள் மறுபடியும் வீறு கொண்டு எழ வேண்டும். அதே சமயம் புதுக்கவிதையும் அதற்கு இணையாக வளர வேண்டும். வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள்?

ப: தி. ஜானகிராமனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய அழகியல் பிடிக்கும். அதுபோல அழகிரிசாமியைப் பிடிக்கும். அழகிரிசாமி ஒரு கருங்கல் மேலே கண்ணாடி டம்ளர் ஒன்றை வைப்பது போல், தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல் கதையை ஒரு கலையாகக் கையாள்வார். புதுமைப்பித்தன் மிகச்சிறந்த எழுத்தாளர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அவர் இதுதான்யா பொன்னகரம் என்று சொல்கிற போது அந்த வரி கதைக்கு கொஞ்சம் வெளியே வந்துவிடுகிறது. அழகிரிசாமியிடம் அதைக்கூட நீங்கள் பார்க்க முடியாது.

கே: தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்கள் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய முடியுமா?

ப: தொலைக்காட்சி, திரைப்படங்கள் போன்றவைகளில் எப்போதுமே நல்லது கொஞ்சம், கெடுதல் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது. முன்பெல்லாம் நல்லதின் விகிதாசாரம் அதிகம் இருந்தது. கெட்டது குறைவாக இருந்தது. இப்போது கெட்டது அதிகமாகவும், நல்லது குறைவாகவும் உள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களுக்குப் பொறுப் புணர்ச்சி குறைவாக உள்ளது. நல்ல கருத்துடைய நாவல்களை எழுதுபவர்கள் இப்போது அதிகம் இல்லை. இன்றைய இளைஞர்கள் திசை தெரியாமல் தடுமாறுகிறார்கள். மெகா தொடர்களில் இலக்கிய நாவல்கள் இடம் பெற செய்ய வேண்டும்.

நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' நாவல் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது. அதில் நடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில், ''குறிஞ்சிமலர் தொடரில் நான் கதாநாயகனாக நடித்ததால் என் மனம் மென்மைப்பட்டது'' என்று சொன்னார். அந்த நாவலின் தாக்கம் அப்படிப்பட்டது.

தொலைக்காட்சிகள் அத்தகைய உயர்ந்த நாவல்களை தொடராகக் கொண்டுவர வேண்டும். இப்போது வரும் தொடர்கள் எல்லாம் பழிவாங்கும் செயலைத்தான் உயர்த்திப் பிடிக்கின்றன. இத்தகைய போக்கு மாற வேண்டும்.

எழுத்தாளர்கள் தொலைக்காட்சியில் ஒர் அரை மணிநேரமாவது தங்களுடைய இலக்கியச் சிந்தனைகளைச் சொல்ல முன்வர வேண்டும். சு.சமுத்திரம் பல நல்ல கருத்துகளைத் தொலைக்காட்சி மூலமாகவும், வானொலி மூலமாகவும் சொல்லியிருக்கிறார்.

இது சமூகம் சார்ந்த விஷயம். சமூகத்தில் இருப்பவர்கள் கொச்சையான அருவருக்க தக்க விஷயங்களை நிராகரிக்க வேண்டும். இத்துறையை எதிர்ப்பதைவிட ஆக்கப் பூர்வமாக நாம் என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும்.

கே: சிறந்த எழுத்தாளர்கள் பலர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பதை மாற்ற முடியுமா?

ப: உண்மைதான். மக்கள் நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்களை விலைகொடுத்து வாங்க வேண்டும். அதுவும் இலக்கியப் புத்தகங்களை அதிகம் வாங்க வேண்டும். அப்போதுதான் எழுத்தாளர்களின் பொருளதார நிலை உயரக்கூடும்.

கண்ணதாசனின் உதவியாளராக இருந்த சக்திவசந்தன் காலமானபோது அவரது மனைவி தன் கணவனின் உடலை மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்து விட்டார்கள். இதற்கு அறிவியல் கண்ணோட்டம் காரணமன்று. கணவனின் உடலை அடக்கம் செய்வதற்குப் பொருளாதார வசதி இல்லை என்பதுதான். இந்த நிலையில்தான் சக்திவசந்தன் போன்ற நல்ல எழுத்தாளர்களை நாம் வைத்திருந்தோம் என்றால், புதிய இளம் எழுத்தாளர்கள் எப்படி வருவார்கள்!

மக்கள் கையில்தான் இருக்கிறது. இப்போது தமிழை நாம் செம்மொழி என்று சொல்கிறோம்.

தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். எழுத்தாளர்களுக்குத் தமிழ் மூலமாக வாழ்க்கை உத்தரவாதம் இல்லாத போது தமிழ் செம்மொழி என்று கோஷமிடுவதில் என்ன பயன்?

எழுத்தாளர் சங்கங்களே தளர்நடைதான் போடுகின்றன.

இதற்கு ஒரே வழி பெரிய தனவந்தர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இதை இயக்கமாகச் சிந்தித்து எப்படி ஒழுங்கு செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். அரசும் இதை செய்ய வேண்டும்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி சொல்லுங்கள்?

ப: நான் திருப்பூர் குமரன் பதிப்பகம் என்கிற பதிப்பகம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். முதன்முதலாக இதன் மூலம் கல்கியில் நான் எழுதிய 'சுவடுகள்' புத்தகத்தை வெளியிட்டேன். வியக்கத்தக்க வகையில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. 'இலக்கிய முன்னோடிகள்' என்ற தலைப்பில் பழைய முன்னோடி எழுத்தாளர்களுடனான என் நட்பு குறித்த கட்டுரைத் தொகுப்பு தயார் செய்துகொண்டு வருகிறேன். அதுபோல் தினமணியில் நான் எழுதிய 'இலக்கிய உலகில்' என்ற முதுபெரும் எழுத்தாளர்களைப் பற்றிய விவரத் தொகுப்பும் புத்தகமாகி வரவிருக் கிறது. டாக்டர் அ. ராமசாமியின் மேற் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றேன். அந்த ஆய்வேட்டையும் புத்தகமாக மாற்றியமைக்க ஆர்வம் இருக்கிறது. என் இரண்டு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு மரபுக் கவிதைத் தொகுதிகள் போன்றவற்றையும் விரைவில் வெளியிட விருக்கிறேன். எனக்கு ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் உண்டு. அந்தத் துறையிலும் எழுதத் தொடங்கியிருக்கிறேன். என் நண்பர்கள் மூலமாக என் நெடுநாள் கனவான இலக்கியப் பத்திரிகை தொடங்கும் ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

*****
தீரமுள்ளவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்

வை.மு.கோ. காலத்துப் பெண்ணியம் வேறு. இப்போதைய பெண்ணியம் வேறு. 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்று வள்ளுவர் சொன்னது அந்தக் காலத்திற்குப் பொருந்தும். இப்போது பொருந்தாது. இதை ராஜம் கிருஷ்ணனும் சுட்டியிருக்கிறார். காலந்தோறும் பெண்ணியக் கோட்பாடும் பிற கோட்பாடுகளும் மாறத்தான் மாறும். முந்தைய கோட்பாடுகளை அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதற்காக இப்போது அவர்களைச் சாடுவது சரியல்ல. பெண்ணியம் உள்பட இலக்கியத்தின் எல்லாக் கோட்பாடுகளுமே பொதுவான மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ஆணுக்குரிய எல்லா உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு. பெண்ணுக்கு உரிமையை யாரும் கொடுக்க வேண்டாம். அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும். உரிமையைக் கொடுப்பது என்பதில் ஓர் ஆணாதிக்க மேலாட்சி தெரிகிறது. உரிமை, சுதந்திரம் போன்றவை காற்றில் உலவுகின்றன. தீரமுள்ளவர்கள் அதை அனுபவிக்கிறார்கள்.

*****


திருப்பூர் கிருஷ்ணன் நூல்கள்

வெளியானவை:

சிவப்பாய்ச் சில மல்லிகைகள் - சிறுகதைத் தொகுப்பு

பட்டொளி வீசி - சிறுகதைத் தொகுதி.

கோதைநாயகியின் இலக்கியப் பாதை
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நா. பார்த்தசாரதி வாழ்வும் பணியும் குறித்த ஆய்வு நூல் (சாகித்ய அகாதமி வெளியீடு)

வெளிவர இருப்பவை:

மீண்டும் சுவடுகள் (இரண்டாம் பாகம்)

இலக்கிய உலகில் - தினமணியில் வாரந்தோறும் பிரசுரமான முதுபெரும் எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு.

இலக்கிய முன்னோடிகள் - தி.ஜானகி ராமன், தொ.மு.சி. ரகுநாதன், க.நா.சு., நாரணதுரைக்கண்ணன், கண்ணதாசன் போன்ற காலஞ்சென்ற முன்னோடி எழுத்தாளர்களைப் பற்றிய அனுபவப் பதிவுகள், தமிழ் ஸி·பி டாட்காம், பாரதமணி, இதய அலைகள் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

இலக்கிய விசாரம் - கணையாழியில் பல ஆண்டுகள் மாதந்தோறும் தொடர்ந்து வெளிவந்த தற்கால இலக்கியப் போக்குகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு.

பொய் சொல்லும் தேவதைகள்-ஆனந்த விகடனில் முத்திரைப் பரிசு பெற்ற கதைகள், கலைமகள் சிறப்புச் சிறுகதைகள் உள்பட, கல்கி, குமுதம், குங்குமம், அமுதசுரபி உள்ளிட்ட தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு.

சந்தித்த வேளையில் - கலை, இலக்கிய, ஆன்மீகப் பிரமுகர்கள் பலரின் நேர்காணல் தொகுப்பு.

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் ஓர் ஆய்வு சொல்லின் செல்வன்- கு. அழகிரிசாமி பதிப்பித்த கம்பராமாயண சுந்தர காண்டத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட, அனுமன் பாத்திரப் படைப்பு குறித்த இலக்கிய ஆராய்ச்சி.

பாரதியின் கண்ணன் பாட்டு, காமாட்சிப் பாமாலை, காவியக் கவிதை, நளசரிதம்

பெற்ற பரிசுகள்:

தரமான எழுத்துகளைத் தந்துவரும் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பெற்ற பரிசுகள்:

சிறுகதைகளுக்கான இலக்கியச்சிந்தனைப் பரிசு

பாஞ்சஜன்யம் விருது

அனந்தாச்சாரி விருது

லில்லி தேவசிகாமணி விருது

அகில இந்திய வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.


சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
More

பேரா. சுவாமிநாதனுடன் ஒரு சந்திப்பு
Share: 
© Copyright 2020 Tamilonline