Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
பொது
காதில் விழுந்தது......
கலாட்டா-2005: மாதவனை சந்திக்க வாருங்கள்
தமிழுக்கு ஞானபீடம் விருது - ஜெயகாந்தன்
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlargeதில்லியில் ஞானபீட விருதுக்காக டாக்டர் எல்.எம். சங்வி தலைமையிலான குழு தமிழின் மிக முக்கியமான முன்னோடி எழுத்தாளரான ஜெயகாந்தனைத் தேர்ந்துள்ளது. தாமதமாக வந்தாலும் தகுதி குறித்து வந்ததே இந்த விருது என்று தமிழ் மக்கள் பெருமிதப் படலாம்.

பிரபல எழுத்தாளர்கள் மகாஸ்வேதா தேவி, யு.ஆர். அனந்தமூர்த்தி, சாகித்ய அகாதெமியின் தலைவர் கோபிசந்த் நாரங் போன்ற வர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஜெயகாந்தன் 2002-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

1975-ல் 'சித்திரப்பாவை' நாவலுக்காக அகிலனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இவ்விருதைப் பெறும் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்கிற பெருமையை ஜெயகாந்தன் பெறுகிறார். 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், பாராட்டிதழ் மற்றும் வெண்கலச் சிலையும் இவ்விருதுக்கான பரிசாக ஜெயகாந்தனுக்கு அளிக்கப்படவிருக்கின்றன.

''ஜெயகாந்தனின் எழுத்துகள் சிக்கலான மனித இயல்பை, ஆழ்ந்த உணர்ச்சியோடு யதார்த்தமாக வெளிப்படுத்தியவை. மனிதனின் பல்வேறு முகங்கள், இந்தியக் கலாசாரத்தின் மாண்பு, மரபு ஆகியவை அவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன'' என்று பாராட்டுப் பத்திரம் அவரைப் பற்றிக் குறிப்பிடுவது முற்றிலும் தகும்.

இவ்விருதைப் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயகாந்தன், ''தமிழுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தாலும் இதைத் தாமதமாகக் கருதவில்லை. தமிழ் இலக்கியத்தை மதித்து ஞானபீட விருது வழங்கிய இந்தி மொழி மக்களுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும். இந்திய இலக்கியத்தைத் தமிழில் படைத்ததற்குக் கிடைத்த பாராட்டாகவே இது அமைந்துள்ளது'' என்று கூறினார்.

இதுவரை சுமார் 40 நாவல்கள், 200 சிறுகதைகள், 15 கட்டுரைத் தொகுப்புகள் எழுதிய ஜெயகாந்தனின் பத்துப் படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜெயகாந்தன் சாகித்ய அகாதெமியின் ஃபெல்லோஷிப்பும் பெற்றவர்.
இவரின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற நாவல்கள் திரைப்பட உலகில் சரித்திரம் படைத்தவை. இவரது இயக்கத்தில் உருவான 'உன்னைப் போல் ஒருவன்' தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. அவற்றில் இவர் பாடல்களும் எழுதியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தியின் வாழ்க்கை குறித்து ரோமெயின் ரோலண்ட் எழுதிய சுயசரிதையைத் தமிழில் அழகாக மொழிபெயர்த்த பெருமை ஜெயகாந்தனுக்கு உண்டு. கலை மற்றும் அரசியல் துறை யிலான தனது வாழ்க்கை அனுபவங்களை இரண்டு தொகுப்புகளாக அவர் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் இதைப் பற்றி கூறுகையில், ''தமிழ் மொழியில் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அரசியல், சினிமா எனப் பல தளங்களில் பல்லாண்டு காலமாக பணியாற்றி வருபவர் ஜெயகாந்தன். இவருடைய தனித்தன்மை என்பது இவர் கதைகளில் தென்படும் விவாத கோணம். உரை யாடல்களை பிரதானமாக்கி வாசகர்கள் மனதில் விவாதங்களை எழுப்புவதில் தேர்ச்சியைக் காட்டியவர். எனினும் விவாதங்களோடு கதையைப் படைக்கும் இவர் அழகியலிலும் இணையான கவனம் செலுத்துகிறார். தமிழ்மொழியில் அழகியல் கண்ணோட்டத்தில் மிக உயர்ந்த நாவல் என்று இவரது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்ற நாவலைச் சொல்லலாம்." என்கிறார்.

தமிழ் எழுத்தாளர்களில் தொடர் படைப்புகளை எழுதுகிற பாணி இவருக்கு மட்டுமே உரியது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையிலிருந்து 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'கங்கை எங்கே போகிறாள்?' என்று அடுத்தடுத்துத் தொடர் படைப்புகள் எழுதப்பட்டன. அதுபோலவே 'ஜெய ஜெய சங்கரா' நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டு தற்போது 'ஹர ஹர சங்கர' புதிதாகப் படைக்கப்ட்டுள்ளது.

பல்லாண்டு காலமாகவே மக்கள் இவர் எழுத்தை ஏற்று, கொண்டாடி இவர் மேலான விருதுக்கு தகுதியானவர் என்று முன் மொழிந்து விட்டார்கள். இப்போது ஞான பீடம் அவரது தகுதியை வழிமொழிந்திருக்கிறது. இது ஜெயகாந்தனுக்குக் கிடைத்த விருது மட்டுமல்ல, தமிழுக்குக் கிடைத்த விருது. எல்லாத் தமிழர்களும் பெருமைப் படவேண்டும்.

கேடிஸ்ரீ
More

காதில் விழுந்தது......
கலாட்டா-2005: மாதவனை சந்திக்க வாருங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline