|
|
அன்புள்ள சிநேகிதியே...
மார்ச் மாதத் 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதி தன் மாமியாரிடம் பட்ட பாட்டை ஒரு பெரிய கடிதமாக எழுதியிருந்தார். நீங்கள் அந்த மாமியாரைக் குறை சொல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தீர்கள். அதுபோன்ற மாமியார்கள் சிறிது கஷ்டப்பட்டால்தான் வழிக்கு வருவார்கள் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.
இருபது வருடங்களுக்கு முன்னால் நானும் அந்தச் சகோதரியைப் போல மாமியாரிடம் மிகவும் கஷ்டப்பட்டேன். 'நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்' - அப்பப்பா எனக்கே பொறுக்க முடியவில்லை. தைரியமாக ஒரு முடிவெடுத்து, என் கணவருடன் சண்டை போட்டுவிட்டு, குழந்தைகளுடன் தனியாகக் குடும்பம் நடத்தி, ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். பிறகு கணினியில் தேர்ச்சி பெற்று, குடும்ப நண்பர் உதவியுடன் அமெரிக்கா வரும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஒரு வருடம் குழந்தைகளையும் பிரிந்து இருந்தேன். முடிவில், என்னைப் பின்தொடர்ந்து என் கணவரும் இங்கே வந்து சேர்ந்து, ஒரு வழியாகக் குழந்தைகள், கணவர், நான் என்று சேர்ந்துவிட்டோம். இங்கு வந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன.
என் கணவர் என்னிடம் வந்து சேர்ந்த ஒரு வருடத்திலேயே என் மாமனார் இறந்துவிட்டார். சடங்குகளைச் செய்யச் சென்ற என் கணவர், தனியாக இருக்க விரும்பாத தன் தாயை தன் தம்பி வீட்டில் விட்டுவிட்டு (தான் பணம் அனுப்புவதாகச் சொல்லி) இங்கே திரும்பி வந்தார். ஆனால் என்னுடைய ஓரகத்தியுடனும் சரிப்பட்டு வரவில்லை. என் கணவருக்கு அவர் போன் செய்யும்போதெல்லாம் அழுது தீர்த்து, அமெரிக்காவுக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார். என் கணவரும் தயங்கித் தயங்கி என்னிடம் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். ''அப்பாவின் மரணம் அம்மாவை மாற்றி விட்டது. முன்போல் என்னிடம் நடந்து கொள்ள மாட்டார்'' என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். நான் ''எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறேன். அவர் தனியாக வீடு, வேலைக்கு ஆள் என்று இருக்கட்டும் ஆனால் இங்கே வந்து என் நிம்மதியை நான் இழக்கத் தயாராக இல்லை'' என்று கெடுபிடியில் இருந்தேன். என் கணவரும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார். நான் உடனே இந்தியா சென்று ஒரு வீடு பார்த்து எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்து, மாதாமாதம் ஒழுங்காக (எங்கள் வசதிகளை குறைத்துக் கொண்டு) அவருக்கு நிறையப் பணம் அனுப்பி வைத்தோம்
பிறகு, என் மாமியார் என்னை நன்றி, சிறிது பயம் கலந்த மரியாதை என்று நடத்த ஆரம்பித்தார். அன்புக்கு ஏங்க ஆரம்பித்தவர் அடிக்கடி ''இந்தச் செலவெல்லாம் எதற்கு? நான் உங்களுடனேயே வந்து இருந்து விடுகிறேன்...'' என்று கெஞ்சுவார்.
ஆனாலும் 3 வருடம் கழித்துதான் அவரை வரவழைத்தோம். இன்னும் கொஞ்சம் மாறியிருந்தார். நானும் மனதிலும் வயதிலும் வளர்ந்துவிட்ட நிலையில் பழைய கசப்பு உணர்ச்சிகளை மறக்க முயன்று, அவரிடம் சினேகிதமாக இருந்தேன். திரும்பிப் போய்விட்டு, மறுபடியும் போன வருடம் வந்தார். அப்போது எங்கள் உறவு நன்றாகவே இருந்தது. இந்த முறை குழந்தைகளுடன் ஊருக்குப் போய் அவர்களுடன் தங்கிப் போகிறோம் என்று சொல்லி யிருந்தோம். அதற்குள் விதி வேறு விதமாக நிர்ணயித்துவிட்டது. மூன்று மாதம் முன்பு திடீரென்று தூக்கத்தில் மாமியார் இறந்து விட்டார்.
என் மனம் உண்மையாகவே வருந்தியது. இன்னும் சிறிது நாள் பேரன், பேத்தியுடன் இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று தோன்றியது. அதே சமயம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்து என் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொண்ட திருப்தியும், பெருமையும், நிம்மதியும் மனதில் தங்குகிறது. ஆனால் பிறர் என்னைப் போல் அவதிப்படும் போது, ''மருமகளை வெறுப்பவர்களுக்கு நாம் ஏன் பரிவு காட்ட வேண்டும்? தன் தாயைத் திருத்த முடியாத கணவருக்கு ஏன் அனுதாபப்படவேண்டும்'' என்றுதான் தோன்றுகிறது. நீங்களே சொல்லுங்கள். இப்படிக்கு... அன்புள்ள
உங்கள் மாமியார் விஷயத்தில் உங்கள் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. அதிலே, உங்கள் தன்னம்பிக்கை தெரிகிறது. விடா முயற்சி தெரிகிறது. கடமை பளிச்சிடுகிறது. கழிவிரக்கம் தலைகாட்டுகிறது. மறந்து மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பண்பாடும், அதே சமயம் உங்கள் எதிர்கால வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தற்காப்பு வழிகள், விதிமுறை களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்ட வேண்டியதுதான்.
ஆனால், பலருக்கு உங்களைப் போன்ற வாய்ப்புகளும் கிடைத்திருக்காது; அணுகு முறையும் தெரியாது. பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள், கணவனை நம்பியே வாழ்பவர்கள், தங்களைக் கொடுமைப்படுத்தியவர்களுக்குப் பாடம் புகட்டும் நிலையில் இல்லை. பதில் கொடுக்கிறோம் என்று நினைத்து, வாழ்க்கையைப் பணயம் வைத்துவிடுவார்கள். அது நடக்காமல் இருக்க அவர்களுடைய அணுகுமுறை வித்தியாசமாகத்தான் இருக்க வேண்டும். வேறுவிதமான யுக்திகளைக் கையாண்டு, பிறரின் நடத்தையை மாற்றுவதும் ஒரு வகையில் படிப்பினைதான். எந்த உறவின் மேம்பாட்டுக்கும் தேவையானது கொஞ்சம் விட்டுக்கொடுத்தல், கொஞ்சம் தியாகம். அதை எல்லோரும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். சிலர் சிறிது அதிகமாகச் செய்ய வேண்டிய நிலை வந்துவிடுகிறது. உறவுகளில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை மூன்று: |
|
அந்த உறவின் முறிவால், எத்தனை முக்கிய உறவுகள் பாதிக்கப்படும் என்ற கணிப்பு.
ஒன்று சேர்ந்து பாதிக்கப்படும் உறவு களினால் நமக்கு எற்படக்கூடிய இழப்பு.
முறியும் நிலையில் இருக்கும் உறவைச் செப்பனிட எந்த அணுகுமுறை உதவும், எந்த அளவு நம் மனதின் ஒத்துழைப்புத் தேவை என்ற ஆய்வு. (நீங்கள் இதில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். ஆனால், குடும்பத்துக்குக் குடும்பம் அணுகுமுறை வேறுபடும்)
உறவுமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் மனித இயல்புகளின் வேறுபாடுகள்தாம் உறவுகள் வளரவோ முறியவோ காரணமாகின்றன. நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளாத, நம்மைக் கேவலமாக நடத்துகிற மனிதர்களை நாம் பரிவுடன் நடத்தும்போது, நாம் அவர்களைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிறோம். இந்த உணர்வு வந்தால் அங்கே பகைமையோ, பழிவாங்கும் உணர்ச்சியோ இருக்காது. மனம் சுருங்கியவர்கள் பிறரை வேதனைப் படுத்துவார்கள். பரந்த மனம் உடைய நாம் விட்டுக்கொடுத்து, தட்டிக் கொடுத்து, ஒரு வாய்ப்புக் கொடுக்கிறோம். இதன்பொருட்டு நாம் குனியும் போது இன்னும் உயர்ந்துதான் போகிறோம் என்ற விழிப்புணர்வு இருந்தால் போதும்.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|