Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அரங்கேற்றம்: நந்திதா வெங்கடேஷ்
மைத்ரி நாட்யாலாயாவின் நடன நிகழ்ச்சி
அரங்கேற்றம்: அதிதி வெங்கடேசன்
- சிவகாமி|ஆகஸ்டு 2021|
Share:
ஜூலை 17, 2021 அன்று செல்வி அதிதி வெங்கடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஆன்டோவர் மாசசூசெட்ஸில் நடைபெற்றது. அவரே ஸ்ரீ கணேச சரணம் என இறைவணக்கம் பாடித் தொடங்கினார். செல்வி அனன்யா வெங்கடேசன் ஆங்கிலத்திலும், திரு சரவணன் மெய்யப்பன் தமிழிலும் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்புரை வழங்கினார்கள்.

கலைமாமணி மதுரை ஆர். முரளிதரனின் கம்பீரநாட்டையில் அமைந்த பாடலுக்குப் புஷ்பாஞ்சலி செய்து நடன நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

அடுத்து அவரது வசந்தி ராகத்தில் அமைந்த "வினை தீர்க்கும் விநாயகனே" பாடலுக்கும், கல்யாண வசந்தத்தில் அமைந்த "தெவிட்டாத திருநடனம்" எனத்தொடங்கும் சிவத்துதிக்கும் ஆடி பக்திக் களிப்பூட்டினார்.

முரளிதரனின் மற்றுமொரு படைப்பான "கானம் இசைத்து" என்ற பாடலை வர்ணத்துக்கு தேர்ந்தெடுத்து ஆடினார். "எனை மறந்து சென்ற காரணம் ஒன்றைச் சொல்வாயோ" எனக் காரணங்கள் ஒவ்வொன்றாய் சொல்லிக் கேள்வி கேட்கும் வகையில் அமைந்த இப்பாடலுக்குப் பாஞ்சாலிக்கு அபயமளிக்கும் கண்ணன், போரில் கர்ணனிடம் தானம் பெறும் கண்ணன், காளிநர்த்தனம் ஆடும் கண்ணன் என அருமையான முகபாவங்கள் மற்றும் அற்புதமான அபிநயங்கள் மூலம் மனதைக் கொள்ளை கொண்டதுடன் வலுவான ஜதிகள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இடைவேளையை அடுத்து ராகமாலிகையில் அமைந்த "அண்ட சராசரத்தில்" என்னும் பாடலுக்கு, தீமையை அழிக்கும் காளியாகவும், அருள்புரிந்து ஆசி வழங்கும் உமா மஹேஸ்வரியாகவும் அற்புதத் தோற்றமளித்தார். காளியின் பல அம்சங்களை நடனத்தில் காட்டி அவையோரின் கரகோஷத்தைப் பெற்றார்.

காளி கவுத்துவத்தின் விறுவிறுப்பான நடனத்திற்குப் பின், அதற்கு முற்றிலும் மாறான, அமைதியான பாவங்களுடன் அடுத்து சில நிமிடங்கள் தன்னை மறந்து ஆஞ்சநேய பக்தர்களாகவே அனைவரையும் உணரச்செய்தது சுத்தசாரங்கத்தில் அமைந்த "சரணம் சரணம்" என்னும் பஜனைக்கான நடனம்.



ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் "மாடு மேய்க்கும் கண்ணே" பாடலுக்கு, வெளியே விளையாடச் செல்ல அனுமதி கேட்கும் குட்டி கண்ணனையும், வேண்டாமென மறுக்கும் யசோதையையும் காட்டும்போது அதிதி தெரியவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணன் இப்படித்தான் இருந்திருப்பான் என நினைக்கும் வகையில் துள்ளிக் குதித்து ஆடினார். சந்திரஜோதி தில்லானாவுக்கு ஆடும்போது முதல் பாடலுக்கு ஆடிய அதே புத்துணர்வுடனும் புன்னகையுடனும் ஆடியது குறிப்பிடத் தக்கது. மங்களத்திற்கு நடனமாடி அரங்கேற்றத்தை நிறைவு செய்தார்.

தாய் திருமதி லக்ஷ்மிப்ரியா, குரு சுஜாதா மெய்யப்பன் அவர்களைப் பற்றிப் பேசினார். தந்தை திரு வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.

நியூஜெர்ஸி ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியாகச் சேரப்போகும் அதிதி 7 வருடங்களாக சுஜாதா மெய்யப்பனிடம் நடனமும், பிரியா ஆனந்திடம் கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறார். 2018ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆர் முரளிதரனின் "தீமஹி" நிகழ்ச்சியில் அவரது தமக்கை அனன்யாவுடன் இணைந்து நடனமாடியுள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற "கின்னஸ் சாதனை- 50 ஜதி சவாலிலும்" பங்கேற்றுள்ளார். கோலம் அகாடமியில் உதவி ஆசிரியையாக இருப்பதுடன் பாலிவுட் நடனம் கற்றுத் தருகிறார்.

தன்னார்வத் தொண்டு அமைப்புகளான சூப் கிச்சன், யூத் குரூப் இவற்றுடன் இணைந்து சேவை செய்வதுடன், 'விஷன் எய்ட்' நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கடந்த 6 வருடங்களாகப் பங்கேற்று வருகிறார். மேலும் NEMA, IANH, KANE & SWARAG ஆகியவை நடத்தும் நடனப் போட்டிகளிலும் நியூ இங்கிலாந்து பகுதியில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளார். கூடைப்பந்து விளையாட்டிலும் தேர்ந்தவர்.

அதிதியின் குருவும் கோலம் அகாடமியின் இயக்குனருமான சுஜாதா மெய்யப்பன் சிறந்த நடன கலைஞர். சிறந்த நடன ஆசிரியராக இவர் பெற்ற பல்வேறு பரிசுகளில், 2018ம் ஆண்டு சென்னை கிருஷ்ண கான சபாவில் இவர் பெற்ற 'நடனச் சுடரொளி' பட்டம் குறிப்பிடத்தக்கது.
சிவகாமி,
ஆல்பனி, நியூ யார்க்
More

அரங்கேற்றம்: நந்திதா வெங்கடேஷ்
மைத்ரி நாட்யாலாயாவின் நடன நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline