|
|
|
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
★★★★★
கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளியோடு (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகிவிட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்! கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், நம் செயல்பாட்டுப் பரப்பில் சூறாவளி என்றால் வெகுவேகமாக வளரும் விற்பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகச்சந்தைகள் என்று அர்த்தம் கண்டோம். ஸிட்ரிக்ஸ் நிறுவனம் & ஆப்பிள் ஐபேட், paypal & E-Bay, Zinga & Facebook போன்றவை சூறாவளி மேடையைச் சார்ந்து எப்படி அனுகூலம் தேடிக்கொண்டன என்பதைக் கண்டோம். அவ்வாறு அனுகூலம் பெறவேண்டுமானால் அந்தச் சூறாவளி மேடையின் பயனர்கள் பெரும்பாலோர்க்கு மிகத் தேவையான அம்சம் ஒன்றை அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டோம்.
சென்ற பகுதியில், சூறாவளி மேடையின் பயனர்களுக்கு உங்கள் விற்பொருள் சென்றடைய முதல் வழியாக, அம்மேடையினரே உங்கள் விற்பொருளை தங்கள் பெயரில் விற்பதைப் பற்றி விவரித்தோம். இப்போது வாங்குவோரைச் சென்றடையும் விளம்பரத்துக்கான மற்ற சில வழிமுறைகளைக் காண்போம்.
இப்போதெல்லாம், சூறாவளி அளவுக்கு வளர்ந்துவிட்ட மேடைகள் பல, தங்கள் சூழலைச் சார்ந்த கூட்டாளிகள் (ecosystem alliance partners) தங்கள் பயனர்களுக்குத் தமது பொருட்களையே விற்பது தங்கள் மேடைக்கு பலமூட்டுகிறது என்பதை உணர்ந்து, அதை எளிதாக்கும் வகையில் சந்தை (market place) என்னும் அம்சத்தை அளிக்கிறார்கள்.
சில மேடைகளில் அதற்குச் சந்தை என்றே பெயர், உதாரணத்துக்கு அமேஸான் AWS மேகக் கணினியைக் குறிப்பிடலாம். கூகிள் மேகம், மைக்ரோஸாஃப்ட் அஸ்யூர் மேகம் போன்ற மேடைகளும் அவ்வாறே சந்தை என்று கூறுகிறார்கள். உங்கள் விற்பொருளை அவர்களின் சந்தையில் அறிவித்து, பயனர்கள் அச்சந்தையின் தேடல் சேவையால் கண்டறிந்து வாங்கமுடியும். அவ்வாறு சந்தையில் நீங்களே அறிவித்து வழங்க, படிப்படியாக என்னென்ன செய்யவேண்டும் என்ற வழிமுறையை நன்கு செய்துள்ளார்கள்.
பொதுவாக அவ்வாறு அறிவிக்கப்படும் பொருட்கள் வெற்றியடைய வேண்டுமானால் பயனர்களே எளிதில் பயன்படுத்தும் சேவை/மென்பொருளாக இருக்கவேண்டும். மேலும் பயனர்கள் உங்கள் விற்பொருளை அறிய, சந்தையில் அறிவித்தால் மட்டும் போதாது. நீங்கள் இன்னும் பல விளம்பர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை எல்லா வணிகத்துக்கும் பொதுவானவை என்பதால் இங்கே விவரிக்கப் போவதில்லை. வேண்டுமானால் அதைப்பற்றியே ஒரு கேள்வி/பதில் கட்டுரையில் காண்போம். |
|
மற்ற சில மேடைகள் அத்தகைய சந்தையை குறுஞ்செயலிக் கடை (app store) என்று அழைக்கிறார்கள். உதாரணமாக ஆப்பிள் ஐஃபோன் ஐபேட் கடையைக் குறிப்பிடலாம். பொதுவாக கடை என்பது தொலைபேசி அல்லது தொலைக்காட்சி சாதனத்தைச் சார்ந்திருக்கும். கூகிள் தன் அண்ட்ராய்ட் செயலிச் சாதனங்களுக்காக கூகிள் ப்ளே (Google Play) கடையை வைத்துள்ளது. அமேஸான் ஃபயர் டிவி, ரோக்கு போன்ற தொலைக்காட்சி சாதனங்களும் பயன்பாட்டு மென்பொருள் கடைகளை வைத்துள்ளன.
கைபேசிகளில் ஆரம்பித்த பயன்பாட்டு மென்பொருள் கடைகள் இப்போதெல்லாம், எல்லா மென்பொருள் மேடைகளுக்கும் பரவிவிட்டன. மைக்ரோஸாஃப்ட் விண்டோஸ் மேடைகூட அத்தகைய கடையை வைத்துள்ளது. சூறாவளி மேடைகள் மட்டுமல்ல, சிறிய சிறிய நிறுவனங்கள்கூடத் தங்கள் கூட்டாளிகளின் மென்பொருட்களைத் தங்கள் மேடைக்கடை மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்க ஆரம்பித்துவிட்டன!
இதுவரை மேடை விற்பனை முறைகளைப் பார்த்தோம். இப்போது, சூறாவளி மேடையைச் சார்ந்து அனுகூலம் தேடிக்கொள்ள வணிகச் சந்தை ரீதியான வழிமுறைகளைக் காண்போம்.
இது விற்பனையை விட ஒரு படி குறைவான அனுகூலம். இருந்தாலும் மிக முக்கியமானதுதான்.
கணினி மேடைகளின் சந்தையையும் பயன்பாட்டு மென்பொருள் கடைகளையும் கூட வணிக வழிமுறை என்றே கூறலாம். ஏனெனில், அவ்வழிமுறையில் அவர்களே விற்பதில்லை. உங்கள் மென்பொருட்கள் அந்தச் சந்தை அல்லது கடையின் விற்பொருள் பட்டியலில் இருக்கும் அவ்வளவுதான். அதைப் பயனர்கள் அறியச் செய்ய வேண்டியதும் வாங்கத தூண்டுவதும் உங்கள் பொறுப்புதான்.
சில சமயம் அந்த மேடைக்கடை அல்லது சந்தையினர், சந்தை விளம்பர (marketing promotion) வசதி அளிப்பார்கள். அதில், அவ்வப்போது வெவ்வேறு பயன்பாட்டு மென்பொருட்களைப் பற்றி தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பயனர்களுக்கும் எளிதாக, பளிச்சென்று தெரியும் இடங்களில் அறிவிப்பார்கள். அல்லது மேடைச்சந்தைத் தேடல் வசதியில் முதல் பக்கப் பட்டியலின் தொடக்கத்தில் காண்பிக்கப்படும். அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். அல்லது, உங்கள் மென்பொருள்/சேவை அம்மேடைக்கு எவ்வளவு பலனளிக்கிறது என்பதைப் பொறுத்து அவர்களே முன்வந்து அத்தகைய அனுகூலத்தைக் அளிக்கவும் கூடும்.
பொதுவாக அத்தகைய சந்தைகளும் மென்பொருள் கடைகளும் அவற்றில் கிடைக்கும் மென்பொருளைப் பற்றிய விவரணை தரவும் வசதி அளிக்கிறார்கள். பயனர்கள் தங்களுக்குத் தேவையான மென்பொருளை அதன்மூலம் தேடிக் கொள்ளலாம்.
இப்போதெல்லாம், கைபேசியில் உள்ள உலாவிகளைப் பயன்படுத்தி இணைய தளங்களுக்குச் சென்றால் உடனே அவர்கள் ஆப்பிள் மென்பொருள் கடை அல்லது கூகிள் ப்ளே மென்பொருள் கடையிலிருந்து தங்கள் கைபேசி பயன்பாட்டு மென்பொருளை தருவித்த்துக் கொள்ளத் தூண்டுகிறார்கள். பல பயனர்கள் தங்கள் கைபேசிகளில் அதனால் நூற்றுக்கணக்கான மென்பொருட்களை வைத்துள்ளார்கள்!
இதுவரை இக்கட்டுரையில், சூறாவளி மேடைகளைச் சார்வதால் உண்டாகும் அனுகூலங்களையும் அதற்கான வழிமுறைகளையும் விவரித்தோம். அடுத்த பகுதியில், சூறாவளி மேடைகளைச் சார்வதில் உள்ள சில அபாயங்களைக் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|