Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
நன்றியில் வாழும்போது, நன்றியோடு வாழும்போது....
- சித்ரா வைத்தீஸ்வரன்|செப்டம்பர் 2020|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
என்ன செய்தாலும் கவலை, உளைச்சல், வெறுப்பு, பயம் என்று மாற்றி மாற்றி இருந்துகொண்டே இருக்கிறது. அதுவும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 'அன்று அன்று வாழ்ந்துவிடுங்கள்' என்று அழகாக எழுதிவிட்டீர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகத் தெரிகிறது. இந்த அளவுக்கு வாழ்க்கையின் பாரத்தை நான் தாங்கிக்கொண்டதில்லை. எனக்கு வயது 70; என் மனைவிக்கு வயது 58. ஆனால், அவள் என்னைவிடச் சோர்ந்து போய்விட்டாள். அதுவும் சமீபத்தில் 30 வருட சிநேகிதம் அப்படியே சிதைந்து போய்விட்டது. அதுவும் COVID-ஆல் ஏற்பட்ட சந்திப்பும், அதனால் ஏற்பட்ட டென்ஷனும், சச்சரவுகளும்.... அந்தக் கதையை எழுதிக்கொண்டே போகலாம். ஆனால், முடிவில் முறிந்து போய்விட்டது உறவு. அது எங்களைவிட வயதில் சிறியவர்கள் உள்ள குடும்பம். அவர்கள் இங்கே வந்த புதிதில் அவ்வளவு உதவி செய்திருக்கிறோம். அதையெல்லாம் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. எங்களுக்காக இந்த COVID சமயத்தில், மளிகைச்சாமான் வாங்கி வந்ததையும், மருந்துக்கடைக்குப் போய் வந்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். யார் மனதை யார் அதிகம் புண்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. இருந்த உறவும் போய்விட்டது. இந்த வயதான காலத்தில் ஆண்டவன் இன்னும் என்னென்ன தலையில் எழுதி வைத்திருக்கிறானோ தெரியவில்லை.

இப்படிக்கு,
...........
அன்புள்ள சிநேகிதரே:
உறவுகளின் அருமை தெரிந்தவள் நான். வருத்தமாயிருக்கிறது. நீங்கள் எழுதியதைக் கேட்டு. இன்னும் கொஞ்சம் விவரம் எழுதியிருந்தால் எனக்கு காரணம் என்னவென்று புரியும். வேதனைச் சம்பவங்களை விவரித்து எழுத உங்கள் மனம் ஒப்பாது. உங்கள் கசப்பையும், பயத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன்.

★ உயிர்களுக்கும், உறவுகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்குமே உத்தரவாதம் இல்லை. இரண்டுக்குமே விபத்து, ஆபத்து ஏற்படலாம். இரண்டுமே மீண்டும் வரலாம். இல்லை, இழந்தும் விடலாம்.
★ நாம் எப்படி உடலை நோயில்லாமல் பார்த்துக்கொள்ள விரும்புகிறோமோ அதேபோல உறவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
★ அப்படிப் பார்த்துக் கொண்டாலும், சில சமயம் ரத்தசம்பந்த உறவுகள்கூட முறிந்து போகின்றன.
★ இரண்டிலுமே கொஞ்சம் சுயநலம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். அதனால் தான் 'Love all; Serve all' என்று மனதில் ஒரு பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டால், உறவில் ஏற்படும் விரிசல்கள் நம்மை பாதிக்காது. நாம் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறோம். எதிர்பார்த்தால்தானே பிரச்சனை!

என்னுடைய கருத்தில் உங்கள் நண்பர்களும் உங்களைப்போல உளைச்சலில் இருப்பார்கள். "யார் பூனைக்கு மணியைக் கட்டுவது" என்பதுபோல, யார் முதலில் இணங்கி வருத்தம் தெரிவிப்பார்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் வயதிலே முதியவராக இருப்பதால், விவேகத்துடன் நீங்கள் ஃபோன் செய்து உங்கள் நிலைமையைத் தெரிவிக்கலாம். அவர்கள் திரும்பிவர நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் நீங்கள் அந்த அந்த நாளை அதன் போக்கில் அனுபவிப்பதுதான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்றுகிறது. "when we live in Gratitude and live with Gratitude" எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தானாக வந்துவிடும். உங்களுக்கு அந்தப் பக்குவம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Life is Beautiful.
எந்தச் சம்பவத்தையும் ,
கசப்பு என்றால் சுவைக்காதீர்கள்.
கவலை என்றால் சுமக்காதீர்கள்
வெறுப்பு என்றால் வருந்தாதீர்கள்.
இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline