Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |மே 2020|
Share:
அமெரிக்கா என்று நினைத்த மாத்திரத்தில் ஓர் அறிவார்ந்த, வளம் கொழிக்கும், அறிவியலின் உச்சத்தைத் தொட்ட, எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு என்றே நாம் நம்பி வந்திருக்கிறோம், இன்னமும் நம்புகிறோம்.
ஆனால் COVID-19 நம்மை ஒரு பனிப்பாறை தலையில் தாக்கியதுபோல அதிர வைத்திருக்கிறது. அந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் மட்டுமே எண்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது. உலக அளவில் எடுத்துக்கொண்டால் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு கொரோனாவால் இறந்தவர் எண்ணிக்கை 37 பேராக இருக்கையில் அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 4187 என்பது அதிர்ச்சியின் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. இதுவே ரஷ்யாவுக்கு 14 ஆகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு 2 என்பதாகவும் இருப்பதை ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. இறப்போரின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைந்தபாடில்லை. நோய் பரவுவதும் நின்றபாடில்லை.

நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகள் யாவுமே செய்தவை என்னவென்றால், சமுதாய விலகல், முகமூடி அணிதல், நோய் கண்டோரை தனிமைப்படுத்தல் என்கிற முக்கியமான அடிப்படை நடவடிக்கைகளை விரைந்து செய்ததுதான். நாம் தாமதமாக விழித்துக்கொண்டோம். நாட்டின் தலைமை, நோயின் அபாயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதை விட, அதை வைத்து அரசியல் செய்ததுதான் அதிகமோ என்கிற எண்ணம் மக்களுக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. அதுவும் தவிர அமெரிக்காவின் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், உடல்நலத் துறையின் செயல்பாடு போன்றவற்றின் அணுகுமுறை பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டவையாக இல்லை என்பதும் மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ள நேரம் இது.
எந்தக் கடுமையான சவாலும் சீர்திருத்தத்துக்கான பல வாய்ப்புகளோடுதான் வருகிறது. அதற்குக் கொரோனாவும் விலக்கல்ல. நாட்டின் தலைமை நிர்வாகத்திலிருந்து, மருத்துவத்துறை, உடல்நலக் காப்பீட்டுத் துறை, நோய்த்தடுப்புத் துறை எனப் பலவற்றின் தயார்நிலையும், அணுகுமுறைகளும் நுணுகி ஆராயப்பட வேண்டும். லாபநோக்கம், தனிநபர் சுதந்திரம் போன்ற கோட்பாடுகள் பரவலான மக்கள் நலனுக்குக் கீழானவையே என்னும் கருத்தை நோக்கி நம் நிறுவனங்களின் பார்வை திருப்பி நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இத்தனை மரணங்களும் விழலுக்கு இறைத்த நீரே.

தன்னலமில்லாமல் ஏழைச் சிறாருக்கு இதயநோய் அறுவைசிகிச்சை உட்படப் பலவற்றை இலவசமாகச் செய்யும் மதுரை மருத்துவர் கோபி நல்லையனின் நேர்காணல் இந்தத் துயரமான காலநிலைக்கு நன்மருந்தாக வருகிறது. ரமலான் சிறப்புச் சிறுகதை, அன்னையர் தினச் சிறுகதை என அழகிய கதைகளும் இவ்விதழில் மணக்கின்றன. வாசித்து இன்புறுங்கள்.

தென்றல் வாசகர்களுக்கு ரமலான் நோன்புநாள் வாழ்த்துகள்.

தென்றல்
மே 2020
Share: 




© Copyright 2020 Tamilonline