Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
இலக்கியம்
திருக்குறள் வினா - விடை
- பெரியண்ணன் சந்திரசேகரன்|ஜூன் 2005|
Share:
Click Here Enlarge2005-ம் ஆண்டு ஜூலை 8-10 நாட்களில் வாஷிங்டன், மேரிலாந்தில் நடக்கவிருக்கும் திருக்குறள் மாநாட்டைக் கருதி வாசகர்களுக்கு வாடிக்கையாகக் கேள்விப்பட்டிராத குறள்களை அறிமுகப்படுத்த இங்கே ஒரு வினா விடை.

1. துறவிகளை விடத் தூய்மையுடையவர்கள் யார்?

2. வலிமையிலும் வலிமை எது?

3. தரித்திரத்திலும் தரித்திரம் (வறுமையிலும் வறுமை) எது?

4. யாருடைய வெளிப்படைப் பகையை எதையாவது கொடுத்தும் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்?

5. யார் நம் பக்கத்தில் இருப்பதும் எழுபது கோடிப் பகைவர்கள் அதே இடத்தில் இருப்பதும் ஒன்று?

6. எதைச் செய்பவன் தானும் தன் சுற்றமும் உடுப்பதும் உண்பதுவும் இன்றிக் கெடுவான்?

7. நினைத்ததெல்லாம் உடனே கிடைக்க என்ன செய்யவேண்டும்?

8. வீட்டில் இலக்குமி தங்க என்னசெய்ய வேண்டும்?

9. எல்லாம் இருந்தும் இல்லாமை எது?

10. எது பெரிது: மனம் விரும்பித் தானம் செய்வதா? இல்லை முகமலர்ச்சியோடு இனிய சொல் பேசுவதா?

11. உடம்பு நெடுங்காலம் செல்ல என்ன வழி?

12. நண்பர்களுக்கு நல்லதல்லாதவற்றைச் செய்வதை விடக் கெடுதலானது எது?

13. இரத்தலை (பிச்சையெடுப்பதை) விட இன்னலானது எது?

14. ஆண்மையில் பெரிய ஆண்மை எது?

15. யாரை நம்மிடம் சிறிதும் அண்டவிடக் கூடாது?

விடைகள்

1. வரம்பு மீறித் தன்னைப் பேசுபவர் வாயில் வரும் கொடிய சொற்களைப் பொறுப்பவர்கள்!

துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய்
இன்னாச் சொல்நோற்கிற் பவர்
(பொறையுடைமை:159)

[இறத்தல் = மிகுதல், வரம்பு மீறுதல்; இன்னா = துன்பம், கொடுமை; நோல் = பொறு; நோற்கிற்பவர் = பொறுப்பவர்]

2. மடையர்களின் செய்கைகளைப் பொறுப்பது!

இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
(பொறையுடைமை:153)

[இன்மை = இல்லாமை; விருந்தொரால் = விருந்து + ஒரால்; ஒரால் = ஒருவுதல் = நீக்குதல்; பொறை = பொறுமை]

3. விருந்தினரைக் கவனியாமல் விலக்குவது.

குறளுக்கு: மேலே காண்க

4. நம்மை அடுத்திருந்தே நமக்குத் தகாத செயல்கள் செய்பவன் பகையை!

கொடுத்தும் கொளல்வேண்டும் கொல்லோ, அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
(பகைமாட்சி:867)

[மாணுதல் = பெருமையாகுதல்; மாணாத = பெருமையாகாதன, தகாதன; கொல்லோ = வினாப் பொருள்தரும் ஒரு சொல்]

நம்மை அடுத்திருந்தே அந்த நிலைக்குத் தகாதன செய்பவனின் வெளிப்படையான பகையை எதையாவது கொடுத்தும் கொள்ள வேண்டும்.

5. கெடுதல் எண்ணும் ஆலோசகன்/மந்திரி!

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வர்
எழுபது கோடி உறும்.
(அமைச்சு:639)

[தெவ்வர் = பகைவர்; உறு = இரு அல்லது நிரம்பு]

நம் பக்கத்திலேயே இருந்து நமக்குப் பழுது எண்ணும் ஆலோசகன் இடத்தில் எழுபது கோடிப் பகைவர்களை நிரப்பலாம். அதாவது கூட இருந்தே குழி பறிக்கும் துணையை விட எழுபது கோடி எதிரிகள் பரவாயில்லை.

6. ஒருவன் இன்னொருவனுக்குக் கொடுப்பதைப் பார்த்து வயிறெறிவான் சுற்றம்!

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
(அழுக்காறாமை:166)

[அழல் = நெருப்பு, அழுக்கறு = எரிச்சல் கொள்]

7. உள்ளத்தால் கூடக் கோபத்தை நினைக்க மாட்டான் என்றால்!

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தான்
உள்ளான் வெகுளி எனின்
(வெகுளாமை:309)

[உள்ளு = நினை; எய்து = அடை; வெகுளி = கோபம்]

நினைத்து எல்லாம் உடனே அடைவான், உள்ளத்தால்கூடக் கோபத்தை நினையான் என்றால்.

8. முகம் மலர்ந்து நல்ல விருந்தினரைக் கவனிப்பவர் வீட்டில்!

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
(விருந்தோம்பல்:84)

[அகன் = அகம், உள்ளம்; அமர்ந்து = விரும்பி; உறை = இரு, தங்கு; செய்யாள் = சிவந்தவள், இலக்குமி; ஓம்பு = கவனி; இல் = இல்லம், வீடு]

அறிவு ஒழுக்கங்களால் நல்ல விருந்தினரை முகம் மலர்ந்து கவனிப்பவன் வீட்டில் திருமகள் உள்ளம் விரும்பித் தங்குவாள்.

9. விருந்தோம்பா மடமை!

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை; மடவார்கண் உண்டு
(விருந்தோம்பல்:89)

[உடைமை = உடையவனாய் இருத்தல், செல்வமுடைமை; இன்மை = இல்லாமை; ஓம்பா = ஓம்பாத; மடவார் = மடையர்; கண் = இடம்]

எல்லாப்பொருளும் இருந்தும் இல்லாமையாகிய வறுமை விருந்தோம்பல் ஓம்பாமை என்னும் மடத்தனம்; அது மடையர்களிடம் உண்டு.
10. முகமலர்ந்து இனிய சொல் சொல்லுவதுதான் கடினம்!

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே, முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
(இனியவை கூறல்: 92)

[அகன் = உள்ளம்; அமர்ந்து = விரும்பி; ஈதல் = கொடுத்தல்; முகன் = முகம்; பெறின் = பெற்றால்]
உள்ளம் விரும்பிப் பிறருக்குக் கொடுப்பதைவிட நல்லது, முகம்பொருந்தி இனிய நாகரிகமான சொல் சொல்பவன் ஆகப் பெற்றால்.

11. செரித்த பின் அளவறிந்து உண்பது!

அற்றால் அளவறிந்து உண்க! அ·துடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு
(மருந்து: 943)

[அறு = செரி; அற்றால் = செரித்தால்; உய் = செலுத்து; ஆறு = வழி]

முன்வேளை உண்டது செரித்தபின்னால், அடுத்த வேளைச் சாப்பாட்டை வயிறு செரிக்கும் அளவறிந்து உண்க; அதுவே ஒருவன் பெறுதற்கரிய உடம்பை நீண்ட ஆயுளோடு செலுத்தும் வழி.

12. பலர்முன்னும் பயனற்ற சொல் சொல்லுவது!

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது
(பயனிலசொல்லாமை:192)

[நயன் = விருப்பம்; நள் = நட்புக்கொள்; நட்டார் = நட்புகொண்டார்; கண் = இடம்]
பயனில்லாவற்றைப் பலர்முன் சொல்லுவது, நண்பர்களிடத்தில் அவர்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்தலை விடத் தீதாகும்.

13. பிறருடன் பகிராமல் தானே தனியாய் அனுபவிப்பது!

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
(ஈகை: 229)

[இரத்தல் = பிச்சையெடுத்தல்; இன்னாது = தீயது, கொடுமையானது; மன்ற = உறுதியாக; நிரப்பிய = நிரப்புவதற்காக, வளர்ப்பதற்காக; தமியர் = தனியாராக]

தனது பொருள் குறையுமோ என்று பயந்து, தன் செல்வத்தைக் குவியலாய் நிரப்புவதற்காகத் தன் செல்வத்தைத் தான்மட்டுமே அனுபவிப்பது பிச்சையெடுப்பதைவிட மோசமானது, உறுதியாக!

14. பிறனுடைய மனைவியை/காதலியை நோக்காமை!

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ? ஆன்ற ஒழுக்கு
(பிறனில் விழையாமை:148)

[மனை = மனைவி; ஒன்றோ = ஒன்றுமட்டுமா; ஆன்ற = நிரம்பிய; ஒழுக்கு = ஒழுக்கம்]

பிறனுடைய மனைவியைக் காம நோக்கத்தோடு நோக்காததே பெரிய ஆண்மை; அது உயர்ந்தவனாய் வாழ்வோனுக்கு அடிப்படைத் தருமம் மட்டுமல்ல; ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

15. தனியே நன்றாகப் பழகிவிட்டுப் பொதுஇடத்தில் பழிப்பவர்களை/கிண்டல் செய்பவர்களை!

எனைத்தும் குறுகுதல் ஓம்பல்! மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
(தீநட்பு:820)

[எனைத்து = எத்தனை; குறுகு = நெருங்கு; ஓம்பு = தவிர்;
கெழீஇ = கெழுவி = நட்புக்கொண்டு; மன்று = மன்றம், பொதுவிடம்]

நம் வீட்டில் தனியே இருக்கும்பொழுது நன்றாகப் பழகிப் பொதுவிடத்தில் நம்மைப் பழிப்பவர்களை எத்தனைச் சிறிய அளவும் நம்மை நெருங்குவதைத் தவிர்க்கவும்.


பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline