Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
பரவை முனியம்மா
விசு
- |ஏப்ரல் 2020|
Share:
மத்தியதரக் குடும்பங்களின் அன்றாடப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் விசு (74) சென்னையில் காலமானார். ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட விசு, முதலில் நாடக உலகில் முத்திரை பதித்தார். இவரது நாடகங்களால் கவரப்பட்டார் இயக்குநர் கே. பாலசந்தர். பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினபிரவேசம்' மூலம் எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாகத் திரையுலகப் பிரவேசம் ஆனார் விசு. தொடர்ந்து 'சதுரங்கம்', 'அவன் அவள் அது' போன்ற படங்களின் கதைகளை எழுதியவர், நடிகை லக்ஷ்மி இயக்கிய 'மழலைப்பட்டாளம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். 'தில்லுமுல்லு' திரைப்படம் இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. 'கீழ்வானம் சிவக்கும்' படம் சோகத்தால் படம் பார்த்தவர்களின் கண்களைச் சிவக்க வைத்தது. 'குடும்பம் ஒரு கதம்பம்' திரைப்படம் குடும்பம் குடும்பமாக மக்களைப் பார்க்க வைத்தது. 'கணமணிப் பூங்கா' படத்தின் மூலம் இயக்குநராகக் கால் ஊன்றினார்.

'சிம்லா ஸ்பெஷல்' தியேட்டருக்குள்ளேயே நாடக அரங்கை வரவழைத்தது. 'மணல் கயிறு' இவரது எழுத்து மற்றும் நேர்த்தியான இயக்கத்தின் பெருமையைப் பறைசாற்றியது. குடும்பம், உறவுகள், அவற்றின் சிக்கல்கள், தீர்க்கும் வழிமுறைகள் என விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் கதைசொல்லத் தெரிந்த விசு தனது 'சம்சாரம் அது மின்சாரம்' மூலம் மாபெரும் வெற்றி பெற்றார். இத்திரைப்படம் 1986ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் மற்றும் தேசியத் திரைப்பட விருதுகளைப் பெற்றது. தொடர்ந்து 'திருமதி ஒரு வெகுமதி', 'வரவு நல்ல உறவு', 'காவலன் அவன் கோவலன்', பெண்மணி அவள் கண்மணி', 'வேடிக்கை என் வாடிக்கை' போன்ற படங்கள் குடும்பப் பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. விசுவின் பாணியில் பலரும் குடும்பப் பிரச்சனைகளை மையமாக வைத்துப் படமெடுக்கத் தொடங்கினர்.
வித்தியாசமான குரல், உச்சரிப்பு, மாறுபட்ட உடல்மொழி என்று தனது பாத்திரம் ஒவ்வொன்றையும் மறக்கமுடியாதபடி உயிர்த்துடிப்புடன் உலவவிட்டவர் விசு. 'நாரதர் நாயுடு', 'வேங்கைப்புலி வரதாச்சாரி', 'அம்மையப்ப முதலியார்', 'பீமாராவ்', 'காவிச்சட்டை கந்தசாமி', 'நாகர்கோவில் நாதமுனி', 'பட்டுக்கோட்டை பெரியப்பா' போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரங்களாகின. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கி வந்த விசு, சகோதரர் கிஷ்முவின் மரணத்தைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.

சன் தொலைக்காட்சியில் இவர் நடத்திய 'அரட்டை அரங்கம்' இவரை இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் எங்கிலும் பிரபலமாக்கியது. தமிழ் மக்களின் நெஞ்சம் புகுந்த விசு பின்னர் அதே நிகழ்வை 'மக்கள் அரங்கம்' என்ற பெயரில் ஜெயா தொலைக்காட்சியில் நடத்தினார்.

வயது மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் திரைப்பட, தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்புகளிலிருந்து ஒதுங்கியிருந்த விசு, 2016ம் ஆண்டில் 'மணல் கயிறு - 2' படத்துக்குக் கதை-வசனம் எழுதியதுடன் 'உத்திரமேரூர் நாரதர் நாயுடு'வாகவும் நடித்திருந்தார். அதுவே அவரது இறுதித் திரைப்படமானது. தனது கனவுப் படமாக, சம்சாரம் அது மின்சாரம் இரண்டாவது பாகத்துக்குக் கதை-வசனம் எழுதி வைத்திருந்தவர், சிறுநீரகப் பிரச்சனை காரணமாகக் காலமானார். விசுவிற்கு சுந்தரி என்ற மனைவியும், லாவண்யா, சங்கீதா, கல்பனா என மூன்று மகள்களும் உண்டு.
More

பரவை முனியம்மா
Share: 
© Copyright 2020 Tamilonline