Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
'அருணாசல மகிமை' தொடரிலிருந்து சில பகுதிகள்
- பரணீதரன்|பிப்ரவரி 2020|
Share:
முதல்முறையாகப் பூண்டி சாமியாரைத் தரிசித்துவிட்டு நான் பெற்ற அனுபவங்களை உணர்ச்சி பொங்க ஸ்ரீ காமகோடி சுவாமிகளிடம் கூறிய போது, பெரியவர்கள் அதிசயமோ ஆச்சரியமோ அடையாமல் அப்படியொரு சாமியார் இருப்பதைத் தாம் முன்பே அறிந்திருப்பது போல அத்தனை சாதாரணமாக அச்செய்தியைக் கேட்டுக் கொண்டார்கள்.

பின்னர், மூன்று, நான்கு முறை நான் பூண்டிக்குச் சென்று அந்தச் சாமியாரை தரிசனம் செய்தேன், ஒவ்வொரு முறை சென்றபோதும், அவரிடம் எனக்கு ஏற்பட்ட மரியாதையும் பக்தியும் அதிகமாயின. அங்கு போனால் அந்தச் சந்நிதியை விட்டு வரவே மனம் இடம் கொடுப்பதில்லை. திரும்பி வந்தபிறகு, மீண்டும் எப்போது செல்லலாம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

முதல் நாளன்று நான் அவருடன் பேச முயலவில்லை. அவருடைய ஆழ்ந்த மௌனமும், அருள் பார்வையும் ஒரு நிம்மதியையும் மனத் தெம்பையும் அளித்தன. 'அவருக்கு எல்லாமே தெரியும்' என்ற ஒரு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

அடுத்தமுறை சென்றபோது அவரிடம் ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றவே, "சாமீ, நான் போன வாரம் வந்திருந்தேன். மறுபடியும் உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு, வந்தேன்" என்றேன். ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றியதால் சொன்னேன். அவர் பதில் கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென்று அவர் பேசினார்: "நாகரத்தினம் பிள்ளைகூட அப்படித்தான் சொல்வாரு. நினைச்சுக்கிட்டா நான் வந்துடனுங்கிறாரு. அதான் ஐயா, ஆற்காடு நாகரத்தினம் பிள்ளை... வேலூர் ஆற்காடு."

எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது. கூடவே தைரியமும் வந்தது.

"சாமி பேர் என்ன? எந்த ஊர்?" என்று கேட்டேன்.

"ரைஸ்மில் கோவிந்தராஜ முதலியாருக்கு நான் என்ன செஞ்சேன்... அவருதான் எனக்கு என்ன செஞ்சாரு. அதெல்லாம் அந்தக் காலம் ஐயா. நல்லது கெட்டது, ஒழுங்கு கட்டுப்பாடு, போக்குவரத்து, நீதி நேர்மை, என்னாய்யா நான் சொல்றது? ரோடு போட்டானுங்க... பஸ் ஓடிச்சு, கரண்ட் வந்தது. போஸ்ட் நட்டுகினே போனான். கோனேரிகுப்பம், பில்லூரு, மேல்வைத்தியநாத குப்பம், வெள்ளிக்கிழமை சந்தை... கும்பல் இருக்காதா, வரவங்க போறவங்க, பிள்ளை குட்டிங்க, அதெல்லாம் ஆட்டோமாடிக்கா நடக்க வேண்டியதுதானே. என்னய்யா நான் சொல்றது? அண்ணாமங்கலம் ஆதிமூலம், ஏர்ணாமங்கலம் சிவராமன் டோல்கேட் போட்டான்... அதுக்குத் துட்டு வாங்கி ரசீது கொடுத்தான். ஆனா அது ராத்திரி வரைக்கும்தான் செல்லும்... மறுநாள் வேறே ரசீது வாங்கிக்கணும், தெரியுமா?" இப்படி அவர் பேசிக்கொண்டே போனார். எனக்குத் தலைகால் புரியவில்லை. இவர் எத்தனை வருஷத்துக்கு முந்திய விஷயங்களைச் சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள, "அப்போதெல்லாம் வெள்ளைக்காரன் இருந்தானா?" என்று நான் கேட்டேன்.

"ஜப்பான்காரன் கூட இருந்தான்" என்று சாமியார் பதில் சொன்னார்.

"சாமீ பேரு என்னா? சாமிக்கு எந்த ஊர்?" என்று சந்தடி சாக்கில் மறுபடியும் கேட்டு வைத்தேன்.

"அதெல்லாம் சொல்லமுடியாது போய்யா?" பட்டென்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார்.

அவர் பேசுகிற விஷயங்களையும், பயன்படுத்தும் சொற்களையும் கேட்டால், அந்தச் சாமியார் கிராமியச் சூழ்நிலையிலே பலகாலம் பழகியவர்போல் தோன்றுகிறது. பெரும்பாலும் விவசாயம் சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றியே பேசுகிறார். அவருடைய பேச்சின் பொருள் நமக்குப் புரிவதில்லை. அந்த மகான் நடந்ததைப்பற்றிப் பேசுகிறாரா, நடந்து கொண்டிருப்பதைப் பற்றிப் பேசுகிறாரா, நடக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறாரா என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கேது?

பூண்டி சாமியார் நாம் கேட்பதற்கெல்லாம் பதில் கூறிவிடுவதில்லை. சில கேள்விகளுக்கு நேரிடையாகப் பதில் கூறுகிறார். சில கேள்விகளுக்கு மறைமுகமாகப் பதில் கூறுகிறார். சிலருடன் மட்டுமே பேசுகிறார். பெரும்பாலும் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார்.

அங்கு வருபவர்கள் பழக்கப்பட்டவராக இருந்தாலும், புதியவராக இருந்தாலும் ஒரேமாதிரிதான் பார்க்கிறார். அவர் முகபாவத்தில் ஒருவித மாறுதலும் இல்லை.

அக்கம்பக்கத்திலிருக்கும் கிராம மக்கள் அவரைத் தரிசிப்பதற்காக வந்து கொண்டேயிருக்கிறார்கள். சிலர் விழுந்து கும்பிட்டுவிட்டு, திருநீற்றைப் பெற்றுக்கொண்டு போய்விடுகிறார்கள். "போய்வரேன் சாமீ" என்றால், "நல்லது", "போய் வா" என்று கூறுகிறார். சில சமயம் தலையை மட்டும் ஆட்டுகிறார். சில சமயம் ஜடமாக உட்கார்ந்திருக்கிறார்.

அவரிடம் வரும் ஒரு சிலர் தங்கள் சொந்தப் பிரச்னைகளை அந்தரங்கமாகக் கூறுகிறார்கள். அதைக் கருணையோடு காது கொடுத்துக் கேட்கிறார். அவரவர்களுக்குத் தேவையான உபதேச மொழிகளைக் கூறுகிறார். நாட்டுப் பழமொழிகளையும் கிராமத்து மக்களுக்குத் தெரிந்த எளிய உதாரணங்களையும் கூறிப் புரியவைக்கிறார். சிந்திக்கச் சிந்திக்க, மகத்தான தத்துவங்களும் வாழ்க்கை நெறிகளும் அவற்றில் புதைந்து கிடப்பதை நம்மால் உணர முடிகிறது.

ஒரு வயதான அம்மாள், தன் மகன் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, வீண் செலவு செய்கிறான் என்று மனம் குமுறி சாமியாரிடம் முறையிட்டுக் கொண்டாள். அந்த அம்மாளின் நிலை கண்டு அவர் மனம் இரங்கியதை அவர் ஆறுதல் மொழிகளில் காண முடிந்தது.

"என்னாம்மா செய்யறது? கலிகாலம். பன்னண்டணா செலவு செய்தா, நாலணா மிச்சம் பிடிக்கணும். நமக்குப் பிறர் சொத்து வேணாம், உடைமை வேணாம். கால் வயத்து கஞ்சிக்கு இருந்தா போதும்... என்னாம்மா நான் சொல்றது? பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லுங்கிற மாதிரி நீ கஷ்டப்படறே... என்னா செய்யறது? இது கலிகாலம்... ஒருத்தரும் 'ஐயோ'ன்னு நினைக்க மாட்டாங்கம்மா. கால்லே முள்ளு குத்தினா பக்கத்திலே இருக்கிறவன் எடுக்கமாட்டான். அப்படிப்பட்ட காலம்மா இது! ஒழுங்கா இருந்து கொஞ்சம் துட்டு மிச்சம் பிடிச்சாதானே பொழைக்க முடியும்.? சிறு துளி பெரு வெள்ளம்... அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லே பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லே..."

அந்த அம்மாள் குறுக்கிட்டு ஏதோ முணுமுணுக்கிறாள்.

சாமியார் தொடருகிறார்: "ஆமா, ...பட்ட கால்லே படும். கெட்ட குடியே கெடும்னு சும்மாவா சொன்னாங்க.. கெட்ட சகவாசம், என்ன செய்யறது.. கலிகாலம்மா இது... கீரையை விதைச்சா பயமில்லை. பக்கத்துலேயே முருங்கை மரத்தை வெச்சா, அதுக்கு வேலி போட்டுத்தான் ஆவணும். இல்லேன்னா காயைத் திருடிக்கிட்டுப் போயிடுவாங்க... அப்படிப்பட்ட காலம்மா இது."

வேறொரு பக்தார் வந்தார். நண்பர் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து ஏதோ வியாபாரம் செய்யப் போவதாகவும், அதற்குச் சாமியாரின் ஆசி வேண்டும் என்றும் கோரினார் அவர்.

"ஒரே தாய் வயத்திலே பொறந்த பிள்ளைங்களே ஒழுங்கா, ஒற்றுமையாயிருக்க மாட்டேங்கிறாங்க... சண்டை போட நிக்கிறாங்க.. நீ பார்த்துச் செய்" என்று அவருக்கு அறிவுரை கூறினார். அவர்களுக்குள் சண்டை வரும் என்று எச்சரித்தாரோ என்னவோ!

ஒருநாள் எதையோ பற்றிப் பேசிக்கொண்டு வந்த சாமியார் திடீரென்று, "உலகத்திலே தர்மம் போயிடுச்சு. அதனாலே ஒற்றுமை போயிடுச்சு" என்று கூறினார். கேட்கும்போது அது சாதாரணப் பேச்சாகத்தான் இருந்தது. ஆனால், அதைப்பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்த்தபோது அது ஒரு வேதவாக்கு என்பது புரிந்தது. எத்தனை மகத்தான சத்தியத்தை எத்தனை சாதாரணமாக, எத்தனை எளிதாக அவர் சொல்லிவிட்டார் என்று அதிசயித்தேன்.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றியும் ரமண பகவானைப் பற்றியும் எழுதப் போவதாகக் கூறி, "சாமி அந்த மகான்களைப் பார்த்திருக்கா?" என்று கேட்டேன்.

"அவங்களைப் பத்தி தெரியணும்னா தபோவனம் போய்யா" என்று கூறினார் அவர். சாமியார் எந்த இடத்தைக் குறிப்பிடுகிறார் என்பது அந்தக் கணம் எனக்குப் புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவர் திருக்கோயிலூர் தபோவனத்திலுள்ள ஞானானந்த கிரி சுவாமிகளைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாயிற்று. தபோவனம் சுவாமிகளை நான் ஆறு மாதங்களுக்கு முன் முதன் முறையாகத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். பூண்டி சாமியார் மீண்டும் அவரிடம் என்னைப் போகச் சொல்கிறார். தபோவனத்தின் பெருமையைக் கூறாமல் 'அருணாசல மகிமை' முற்றுப் பெறாதோ என்னவோ!

ஒருநாள் பூண்டி சாமியாரிடம், "ஸ்ரீ காமகோடி சங்கராச்சாரியாரைத் தெரியுமா?" என்று கேட்டேன்.

"கரண்ட், மோட்டார், பம்ப் செட் எல்லாத்துக்கும் சங்கராச்சாரிதான் கணட்ரோல், தெரியுமா?" என்று பதிலுக்கு என்னிடம் கேட்டார் அவர். அந்தச் சமயத்தில் - சாமியார் என்னவோ பேசுகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால, அந்த வார்த்தைகளைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு சாமியாரின் பரிபாஷை தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

அறுபது வருடங்களுக்கு மேலாக தெய்வபக்தி வளரவும், ஆத்திகம் தழைக்கவும், ஆன்மீகம் சிறக்கவும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்தான் மூல காரணமாக இருந்து வருகிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. தமது தவ வலிமையால் பாரதமெங்கும் ஆன்மீக மின்சாரத்தைப் பாய்ச்சி வருகிறார் சுவாமிகள். மறைந்து வரும் நமது வேத நெறியையும், புதைந்து கிடக்கும் புராதனக் கலைச் சிறப்புக்களையும் தமது ஆன்மீக சக்தியால் மீண்டும் வெளிக்கொண்டு வருகிறார். அதனால் தார்மீக வெள்ளம் பாரதமெங்கும் பாய்ந்து, பாரெங்கும் சாந்திப் பயிர் தழைக்கச் செய்கிறார். இந்த உண்மையைத்தான் பூண்டி சாமியார் தமக்கே உரிய உதாரணத்தால் விளக்கியுள்ளார் என்று எனக்குத் தோன்றியது. இதைப்பற்றி நான் காஞ்சிப் பெரியவர்களிடம் கூறியபோது சுவாமிகள் புன்முறுவல் பூத்தார்.

'அருணாசல மகிமை' முதல் பகுதி வெளியானதும் விகடன் இதழை எடுத்துச் சென்று பூண்டி சாமியாரின் மலரடிகளில் வைத்து ஆசி கோரினேன்.

"அருணாசல மகிமை'யைப் பத்தி எழுதறேன். அது நல்லபடியா முடிய உங்க அனுக்ரகம் இருக்கணும் சாமி" என்றேன்.

"என்னாய்யா அருணாசல மகிமை? பன்னண்டனா, பதினாலணா கொடுத்தா அருணாசல புராணம் கிடைக்குது. வாங்கிப் படிச்சா போச்சு" என்றார்.

"அதைப் படிச்சுகிட்டுதான் வரேன் சாமி" என்றேன் நான்.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ஐயா" என்றார் சாமியார்.

"புஸ்தகமும் படிக்கிறேன். எல்லா இடத்துக்கும் நேரிலே போயும் பார்க்கிறேன். படித்தது, பார்த்தது எல்லாம் எனக்கு விளங்கி, அதை நான் எழுதி, அது மத்தவங்களுக்கும் புரிஞ்சு, அதனாலே நன்மை ஏற்படற மாதிரி நீங்க ஆசீர்வாதம் பண்ணணும்" என்று உளமார வேண்டினேன் நான்.

"அதெல்லாம் நாலு யுகத்து கதை, தெரிஞ்சுக்க... அதுலே செய்யுள்தான் முக்கியம்... என்னாய்யா, நான் சொல்றது?" என்றார் சாமியார்.

நான் கைகட்டி நின்று அந்த சித்தபுருஷரின் அருளுபதேசத்தை பயபக்தியுடன் கேட்டுக் கொண்டேன். என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது சாமியார் பக்தர்களுக்கு விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். கீழே சிந்திய விபூதியும், குங்குமமும் பிரித்து வைக்கப்பட்டிருந்த 'அருணாசல மகிமை' தொடக்கக் கட்டுரைப் படங்களின் மீது விழுந்திருப்பதைக் கவனித்தேன். உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. அண்ணாமலையாரின் ஆலய கோபுரங்களில் பூண்டி சாமியார் விபூதி, குங்கும அபிஷேகம் செய்துவிட்டார். 'அருணாசல மகிமை' சிறக்க, பூண்டி சாமியாரின் பரிபூரண ஆசியும் கிடைத்து விட்டது.

அன்று அவரிடம் விடைபெற்றுக் கொள்வதற்கு முன், "சாமியாரைப் பற்றி எல்லாரும் தெரிஞ்சுக்க ஆசையாயிருப்பாங்க. எனக்குத் தெரியப்படுத்தினா எழுதலாம்னு பார்க்கிறேன்" என்றேன் நான்.

'சொல்ல முடியாது' என்றோ, 'சொல்லுகிறேன்' என்றோ சாமியார் கூறவில்லை!

"சரி, போய் வா" என்று மீண்டும் வரும்படிக் கூறி விபூதிப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

எப்படியாவது தம்மைப் பற்றிய விவரங்களை அவர் தெரியப்படுத்தி விடுவார் என்ற நம்பிக்கையுடன் நான் பூண்டியிலிருந்து புறப்பட்டேன்.

★★★★★


அன்று நாங்கள் பூண்டிக்குச் சென்ற போது இரவு ஒன்பது மணியாகி விட்டது. அமைதியான அந்தக் கிராமம் உறங்கி விட்டிருந்தது. சாமியாரின் திண்ணைக்கு எதிரே நின்றிருந்த ஓரிருவர் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.

அருகில் சென்று பார்த்தோம். மின் விசிறி சுழல, அந்தப் பரதேசி திண்ணையில் மகாராஜாவைப் போல் படுத்திருந்தார். அவருடைய இமைகள் மூடியிருந்தன. ஆனால், கால்கள் அசைந்துகொண்டே இருந்தன. விளக்கை அணைத்து விட்டு, திரையைப் போட்டார் சுப்பிரமணி.

"சாமி எத்தனை மணிக்குப் படுத்தது?" என்று கேட்டேன் நான்.

"இப்பத்தான் படுக்க வைத்தோம்."

"காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்?"

"தூங்கினாத்தானே எழுந்திருக்க! எப்போ கூப்பிட்டாலும் கண்ணை முழிச்சுப் பார்ப்பாரு. படுக்க வைக்கிறாங்களேன்னு சும்மா படுக்கிறாரு அவ்வளவுதான். முந்தாநாள் கூட கோயம்புத்தூரிலேருந்து பாதி ராத்திரி ஒரு பார்ட்டி வந்தது. குரல் கொடுத்தோம். உடனே எழுந்து உட்கார்ந்து பேசினாரு. அவங்க ஆசையாக் கொடுத்த பழத்தைகூடச் சாப்பிட்டாரு. உங்களுக்கு ஏதாவது பேசணுமா? எழுப்பட்டுமா?" என்று கேட்டார் ஓர் உள்ளூர்வாசி.

"வேண்டாம்... நான் ராத்திரி இங்கேயே தங்கப் போகிறேன். காலையிலே பார்த்துக்கலாம்" என்று கூறி அவரைத் தடுத்தேன். அசையாமல், நாளெல்லாம் அந்தத் திண்ணையில் அமர்ந்திருந்து விட்டு, கால்களைச் சற்று நீட்டிப் படுத்திருப்பவரை எழுப்பி உட்கார வைப்பது மகாபாவம் என்று தோன்றியது எனக்கு.

விடியற்காலை நான்கு மணி. எதிரிலுள்ள டீக்கடைக்காரம்மா, பால் வாங்கி வரப் பையனை எழுப்பும் குரல் கேட்டுக் கண் விழித்தோம். ஸ்ரீ காஞ்சி காமகோடிப் பெரியவர்களின் விசுவரூப தரிசனத்தைக் காண, அவர் படுத்துறங்கும் மேனாவுக்கெதிரில் மண் தரையில் துண்டை விரித்துப் படுத்திருந்த நாட்கள் என் நினைவுக்கு வந்தன.

எழுந்து சாமியாரின் திண்ணைக்கெதிரே போய் நின்றோம். அங்கு ஒரு பூனைக்குட்டி ஓடி வந்தது. நான் ஏற்கெனவே அதை அங்கு பார்த்திருக்கிறேன். அது சாமியாரின் மடியில் தன் இஷ்டத்துக்குக் கொஞ்சி விளையாடும்; சுருட்டிக்கொண்டு படுத்துறங்கும்; தோள்மீது ஏறி குதிக்கும்; எதிரிலுள்ள கிண்ணத்தில் பக்தர்கள் ஊற்றி வைக்கும் பாலைக் குடிக்கும். ஆனால், சாமியார் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார். அவர் அதைத் தொட்டு நான் பார்த்ததில்லை. .

அடுத்து, சுப்பிரமணி, சாமியாரின் முகத்தைத் துடைத்து விட்டு, சடையை மாற்றி, திருநீறு பூசி, சந்தனம் குங்குமம் இட்டு, மாலைகள் அணிவித்து, திரையை விலக்கிவிட்டு அவருக்குப் பூஜை செய்தார். அங்கு கூடியிருந்தவர்களும், அப்போது திண்ணைக்கு நேரே வந்து நின்ற முதல் பஸ்ஸில் இருந்த பிரயாணிகளும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

சாமியார் கடையைத் திறந்துவிட்டார். கொடுத்து வைத்தவர்கள் வந்து தரிசனம் செய்து புண்ணியம் பெற்றுச் செல்லலாம்!

பரணீதரன்
Share: 
© Copyright 2020 Tamilonline