Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
தவறு என்பது தவறிச் செய்வது...
- |ஜூலை 2005|
Share:
Click Here Enlarge"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி" என்று ஒரு பழைய பாடல் வரும். கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலில் வரும் வரிகள் சிந்திக்கத் தக்கவை.

"தவறு என்பது தவறிச் செய்வது,
தப்பு என்பது தெரிந்து செய்வது!
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்,
தப்பு செய்தவன் வருந்தியாகணும்!"

தவறு செய்தவர்களுக்கும் சரி, தப்பு செய்தவர்களுக்கும் சரி, சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்றுவதோ, திருத்திக் கொள்வதோ, தமது பிழையை முழுதும் உணர்ந்து, அதற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு வேண்டுவதோ அவ்வளவு எளிதானதல்ல. தனி மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் ஒரு நாட்டின் பிழைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதனால்தான், அமெரிக்க மாநிலங்களவையான செனட்டின் மன்னிப்புத் தீர்மானம் குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றில் அமெரிக்கா மிக அண்மையில் தோன்றிய நாடு. ஏனைய நாடுகளைப் போல் இதுவும் செய்யாத பிழையில்லை. சில பிழைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பல பழைய நாடுகளைப் போல் அமெரிக்கா வறட்டுக் கௌரவம் பார்ப்பதில்லை. தம் முன்னோர் செய்த பிழைகளை உணர்ந்து அதற்கு வருந்தி மன்னிப்புக் கோரும் போற்றத்தக்க பண்பு இன்னும் அமெரிக்காவில் நிலவுகிறது. அதே நேரத்தில், இந்த நாட்டில் நிலவி வந்த, இன்னும் சிலரிடம் நிலவி வரும் இனவெறியை இது நினைவூட்டுகிறது. தனி மனித உரிமையை நிலை நாட்டும் குறிக்கோளுடன், சட்டத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்கி வரும் நாட்டிலும் இனவெறித் தாக்குதல்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப் பட்டிருக்கின்றன என்பது மனித வளர்ச்சியில் நாம் கடந்து கொண்டிருக்கும் பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது என்பதற்கு அடையாளம்.

எதற்காக இந்த மன்னிப்பு என்பதைப் பார்ப்போம். 1882 முதல் 1968 வரை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 4742 பேரை வெள்ளை இனத்தைச் சேர்ந்த கும்பல்கள் நையப் புடைத்துத் தூக்கிலிட்டிருக்கிறார்கள். லின்ச்சிங் எனப்படும் இது அமெரிக்காவில் 4 மாநிலங்களைத் தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் நடந்த கொடுமை. பாதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். குற்றம் செய்தவர்களில் 99% பேரை எந்த மாநிலமும், ஊரும் தண்டிக்கவில்லை. மாநிலங்களும், ஊராட்சிகளும் செய்யத் தவறியதைக் கூட்டரசு செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் தோற்றன. செனட் பிரதிநிதிகள் சிலர் பேசிப்பேசியே தீர்மானங்களைச் சட்டமாகாமல் தடுத்தனர். இந்தக் கொடுமையைத் தடுக்கச் சட்டம் இயற்றாததற்குத்தான் இப்போது செனட் மன்னிப்புத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்தக் கொடுமைகள் மறக்கப்படக்கூடாது, மீண்டும் தொடரக்கூடாது என்று உறுதி கூறுகிறது இந்தத் தீர்மானம்.

கிட்டத் தட்ட இந்தத் தீர்மானம் நிறைவேறிய அதே காலக் கட்டத்தில் 1964இல் மிஸ்ஸி ஸிப்பி மாநிலத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக அண்மையில் தொடர்ந்த வழக்குக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது. மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கொன்றவர்களில் இன்னும் உயிரோடு இருக்கும் 80 வயது கொலையாளிக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 64ல் நடந்த கொலைகளுக்கு இப்போதாவது நீதி கிடைத்திருக்கிறது. இதுவும் தம் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் தம் நடத்தைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை உணர்ந்து, வருந்தி, திருத்தப் பார்க்கும் நடவடிக்கை. பண்படுதல் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

இருநூறாண்டு இளைய சமுதாயத்தின் இந்த நடத்தையோடு ஐயாயிரம் ஆண்டு பழமைப் பண்பாடு குறித்துப் பெருமை கொள்ளும் பாரத சமுதாயத்தின் நடத்தையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இங்கே படும்பாட்டைப் பாரதத்தில் படுபவர்கள் தலித்துகள் என்று தங்களை அடையாளம் காட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள். இங்கே நிலவிய தீண்டாமைக் கொடுமையிலும் வன்மையானது பாரதத்தில் நிலவும் தீண்டாமை. பசுவுக்குக் கிடைக்கும் மதிப்பு கூட பல மனிதர்களுக்கு அங்கே இல்லை.
தான் பிறந்த மதத்தில் தான் வழிபடும் கடவுளுக்கு எடுத்த திருவிழாவில் தேருக்கு வடம் பிடிப்பதற்குக்கூட இவர்கள் நீதிமன்றம் ஏற வேண்டியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தவும் காவல்துறையின் கெடுபிடி வேண்டியிருக்கிறது. ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள் என்று காந்தியவாதி குமரி அனந்தன், தலித் தலைவர்கள் தவிர வேறு யாராவது முன்னணி அரசியல் தலைவர்களோ, சமயத் தலைவர்களோ, திரைக்கலைஞர்களோ முன் நின்று நடத்த வந்தார்களா? தேர் வடத்தைக்கூடப் பிடிக்க உரிமை கொடுக்காத மதத்தில் ஏன் அடிநிலையில் வாட வேண்டும் என்று சிலர் கொதிப்பதில் தவறு என்ன?

ஆனால் பாவம், மதம் மாறினாலும், அடிமை நிலை மாறுவதில்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு. கிறித்தவத் திருச்சபைகளுக்குள்ளும் இன்னும் சாதீயம் நிலைத்திருக்கிறது. பாகிஸ்தானிலும் ஒடுக்கப்பட்ட சாதி முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். படிநிலைச் சமுதாயத்தில், கடைசிப் படிக்குச் சற்று மேல் இருப்பவர்களும், தன்னையும் விடத் தாழ்ந்தவர்கள் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறார்களே ஒழிய படிநிலையைத் தகர்க்க வேண்டும் என்று போராடுவதில்லை. ஏன், ஞானபீட விருது பெறும் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரே "வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்" என்று சொல்லும் போது மற்றவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? "பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை" என்பது இன்னும் கனவுதான். இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு வெட்கக்கேடா!

அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களுக்குப் பின்னால் இங்கு வந்து குடியேறிய நம்மில் பலர், அந்தப் போராட்டங்கள் இல்லையேல் கருப்பின மக்கள் பட்ட பாட்டை நாமும் இன்னும் பட்டுக் கொண்டிருப்போம் என்பதை உணர்வதில்லை. தென்னாப்பிரிக்காவில் ரயில் வண்டியின் முதல் வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டபோதுதான் மோகன்தாஸ் காந்திக்கு ஞானோதயம் பிறந்தது. அது போல் இழிவு படாததாலோ என்னவோ, அமெரிக்காவின் குடியுரிமைகளை முழுதும் அனுபவிப்பவர்களில் சிலர் அதே உரிமைகளை இந்தியக் குடிமக்கள் எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்து வாதிடுவதைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் தங்கள் மூதாதையர்கள் நூறாண்டுக்கு முன்னால் எந்த நிலையில் இருந்தனர் என்பது பற்றிக் கவலைப்படாதவர்கள். படிநிலைச் சமுதாயத்தின் ஒரே குறிக்கோள் தாம் அடித்தட்டில் இருக்கக்கூடாது என்பதுதான்.

சாதீயம் வேரூன்றியியிருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழிகாட்டியோர் எண்ணற்றோர். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று பறைசாற்றிய வள்ளுவப் பெருமகனாரின் திருக்குறளை ஆய்வதற்கு அமெரிக்க மண்ணிலே ஒரு மாநாடு. உலகெங்குமிருந்து தமிழறிஞர்கள் கூடுகின்றனர். வள்ளுவரை உலக ஞானிகளோடு ஒப்பிடுதல், திருக்குறளை அமெரிக்க மண்ணில் பரப்புதல், குறள் நெறி எவ்வாறு மானிடத்துக்கு வழிகாட்டும் என்பதை ஆய்தல் என்ற நோக்கங்களோடு ஜூலை 8 இல் தொடங்குகிறது இந்தப் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு. ஒவ்வோராண்டும் ஜூலை 4 விடுமுறையில் நடக்கும் தமிழர் மாநாட்டை இந்த முறை டல்லாஸ் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து நடத்துகின்றனர் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை, மற்றும் தேசியத் தமிழ் இளைஞரணி. இரண்டு மாநாடுகளுக்கும் நம் வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline