Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
ஊரான்
சொத்துரிமை!
- ஹேமா ஜெய்|செப்டம்பர் 2019|
Share:
"எனக்கு இதுல சம்மதம் இல்ல மாமா" சுமதியின் மெல்லிய குரல் அந்தச் சலசலப்புகளுக்கிடையே அழுத்தமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள். சூழலில் சட்டென்று ஏறிய கனம். சில முகங்களில் அதிர்ச்சி. சிலருக்குச் சுவாரஸ்யம். அண்ணிகள் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. இதில் மட்டும் ஒற்றுமையாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். நாகராஜனும், பிரதாப்பும்கூட அப்படியே.

நாகா திரும்பி சுமதியையும், அவள் அருகில் எட்டுமாத வயிற்றைத் தாங்கியபடி கீழே அமர்ந்திருந்த ராகவியையும் முறைத்தான். ராகவியைப் பார்த்த பார்வையில் 'நீயும் இதுல கூட்டா?' மறைமுகக் கேள்வி பொதிந்திருந்தது. "உன் சம்மதத்தை யாரும் இப்ப கேட்கல, போதுமா?" அதுவரை ஆன செலவுகளை எழுதிக்கொண்டிருந்த பிரதாப் விருட்டென்று எழுந்தான். அது என்னவோ சின்னதிலிருந்தே சுமதியைக் கண்டால் அவனுக்கு ஆகாது. அமைதியாக இருக்கிற மாதிரியே இருப்பாள். சந்தர்ப்பம் வந்தால் பாயின்ட் பாயின்ட்டாக எடுத்து வைத்து எதிரில் நிற்பவரை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்ற மறைமுக எரிச்சல் நீறுபூத்த நெருப்பாக உள்ளே கனிந்து கொண்டே இருக்கும்.

"சும்மா இருப்பா... நான்தான் இருக்கேன்ல" அவனைத் தடுத்த குளித்தலை மாமா "என்னம்மா, வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ இப்படிப் பேசலாமா?" சிறு அதிருப்தியுடன் ஏறிட்டார். கூடத்தையும் சமையலறையையும் இணைக்கும் தூணில் சாய்ந்து நின்ற சுமதி, ரொம்ப நாள் யோசித்து வைத்ததைச் சொல்வதுபோல முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் திரும்பவும் சொன்னாள். "எங்க பங்கை விட்டுக்கொடுக்கிற எண்ணம் எதுவும் இல்ல மாமா. எதுவா இருந்தாலும் நாலாப் போடச் சொல்லுங்க."

"சுமதி, என்னாச்சு உனக்கு? எல்லார் முன்னாடியும்...!" தன்னை அடக்க முயன்ற கணவனையும் அதே பார்வை. "எதுவும் சொல்லாதீங்க. எங்க தாய் தகப்பனோட உழைப்பு இந்தச் சொத்து, இதை நாங்க யாருக்காகவும் விட்டுத் தரத் தயாரா இல்ல." முகிலன் தன் மச்சினர்களைப் பார்த்து கையைப் பிசைந்தான்.

"எனக்குத் தெரியும்டி, எல்லாத்தையும் மொத்தமா சுருட்டணும்கிறதுதான் உன் எண்ணம்னு நல்லா தெரியும்." நாகா அடிக்கிற மாதிரி அருகே வர, பெரிய அண்ணி கவலையோடு, இடுப்பில் சொருகியிருந்த கொத்துச் சாவியைத் தொட்டுப்பார்த்தாள். எட்டு நாளாக உரிமைக்காரியாகச் சொருகிக்கொண்டு கேட்பவர்களுக்குப் பணத்தை அள்ளி கொடுத்தபடி வீடெங்கும் வளையவந்த பெருமை! தன்னைச் சுற்றி ஏக்கமாகப் பார்வை ஓடியது. கல்லுகல்லாகக் காரைக்கட்டிடம், இரண்டாள் சேர்ந்தாலும் அணைத்துப் பிடிக்கமுடியாத மரத்தூண்களும், கம்பி ரேழியிட்ட முற்றமும், கீழே மேலே என எண்ண முடியாத அறைகளும், பழைய இரும்பில் பாரம்பரியமாகச் சுழல்பூட்டு வைத்த பொக்கிஷ அறையும்... முன்னே பின்னே இடம் விட்டு நடுவில் சொப்புச் சித்திரமாய் வீடு. பெங்களூரில் ரயில் பெட்டி போன்ற அபார்ட்மெண்டில் வசிப்பவளுக்கு இது எவ்வளவு பெரிய சொர்க்கம்!

'சின்னவன் லண்டன்ல, நமக்குதான் முழுசான்னு நினைச்சா, இப்ப?' பக்கென்று தொண்டையை அடைத்த உணர்வில் அருகில் ஒலித்த சலசலப்புகளைக் கவனிக்கத் தவறியிருந்தாள். பிரதாப் சுமதியைக் கை ஓங்க, முகிலனை முந்திக்கொண்டு ராகவியின் கணவன் அவனைத் தடுக்க, "நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதானே இத்தனையும் பண்றீங்க? உங்களை வைக்க வேண்டிய இடத்தில வைக்கிறோம்" என்று நாகா கத்த... "ஷ்.ஷ்.. யாரோ விசாரிக்க வராங்க" நொடியில் வீடு அமைதியானது.

வந்தவர்கள் மூத்த மகன்களைக் கண்டுகொள்ளாமல் சுமதியை துக்கம் விசாரித்தது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற, "எப்படியோ கடைசிவரை பார்த்து உங்க அப்பாவைக் கரை சேர்த்துட்டமா..." ஆறுதல் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். வழியனுப்பிவிட்டு வந்த சுமதி "அத்தை நீங்க வடையைப் போட்டு எடுங்க, நான் படையலுக்கு எடுத்து வைக்கிறேன்" ஒன்றுமே நடக்காதது போன்ற சுவாதீனத்தில் உள்ளே போய்விட்டாள். கூடவே ராகவியும்.

சர்புர்ரென்று சீறிக்கொண்டு இருந்த சரவெடிகள் காரியம் முடிந்த இரவுவரை தணியாமல் கனன்றபடியே இருந்தன. கிட்டத்தட்ட சாபம் கொடுக்காத ரீதியில் கத்திவிட்டு நாகா பெங்களூருக்கும், பிரதாப் அவன் மாமனார் வீட்டுக்கும் கிளம்பிவிட, வீடு அப்படி அப்படியே கிடந்தது. 'எப்படியோ தொலைஞ்சு போங்க, எங்களுக்கென்ன?' என்கிறமாதிரி விருந்தினர்களுக்கு முந்திக் கிளம்பிவிட்ட சகோதரர்களின் பொறுப்புணர்வு புல்லரிக்க வைக்க, உதவ வந்த ராகவியை உட்காரச் சொல்லிவிட்டு சுமதி ஒழுங்கு செய்தாள். கூடப் பிள்ளைகளும் முகிலனும் கைகொடுத்தார்கள்.

அடுத்த நாள் மாலை கிளம்பிய ராகவியை அனுப்பிவிட்டு பிறந்த வீட்டில் அக்கடா என்று உட்கார்ந்தபோது வெறிச்சென்று இருந்த அந்தச் சூழல் சுமதிக்கு வினோத உணர்வு கொடுத்தது. கல்யாணம் ஆகாத அத்தைகள், பாட்டி என ஜே ஜே என்றிருந்த வீடு, பிறகு பிள்ளைகள் ஒவ்வொருவராக படிப்பு, திருமணம் எனச் சிறகடித்துப் பறந்துவிட, அம்மா அப்பா மட்டும் எனக் குறுகிப் போனதும், பத்து வருடங்களுக்கு முன்பு சரியாய் ஜீவன் பிறந்த வருடம் அம்மா தவறியபின் தனிமனிதராக அப்பா நின்றதும்....

"என்ன உட்கார்ந்துட்ட, கிளம்பலாமா?" முகிலன் வண்டியை மாமரத்து நிழலில் நிறுத்தி விட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தவள் அருகே வந்தான். "போலாங்க... பசங்க வந்துட்டாங்களா?"

"ம்ம்... வீட்டுல விட்டுட்டு டிபன் கொடுத்துட்டுதான் வரேன்." என்றவன், "சுமதி..." இழுத்தான். "இது தேவையா நமக்கு, என்னமோ சொத்துக்கு ஆசைப்பட்டு இத்தனை நாளும் கவனிச்சிக்கிட்ட மாதிரி உன் அண்ணனுங்க இரண்டு பேரும் என் காதுபடவே கேவலமா பேசுறாங்க. இந்தப் பேச்சை இங்கேயே விட்டுட்டு வா. நமக்குள்ளதே நமக்குப் போதும்னு இல்லாம..."

"என்ன பேசுறீங்க நீங்க? இது யாரோ மூணாம் மனுஷங்களோட உடமை இல்ல. எங்க அப்பா அம்மாவோடது. எனக்கும் என் தங்கைக்கும் முழு உரிமை இருக்கு. யார் என்ன பேசினாலும் கவலை இல்ல, நான் ஒண்ணு கேட்கிறேன். நம்ம ஜீவனுக்கு இருக்கிற உரிமை உங்க செல்லப்பொண்ணு ஹரிணிக்கு இல்லையா? இல்ல நாளைக்கு நீங்க எதுவும் அவளுக்குத் தர மாட்டீங்களா?"

"கண்டிப்பா கொடுப்பேன். ஆனா, நம்ம காலம் வேற சுமதி. சொத்து பசங்களுக்குன்னும், கல்யாணம் பண்ணி வைக்கிறதோட பொண்ணுங்களுக்கான கடமை முடிஞ்சுருச்சுன்னும் நினைச்சு வாழ்ந்த போன தலைமுறை உங்க அம்மா, அப்பா. இதுதான் இங்குள்ள நடைமுறை. இதை மாத்திப் புரட்சி பேசி சொந்தக்காரங்களுக்கு நடுவுல வீணா அசிங்கம் பண்ணாதே."

"அப்ப வாங்கிக்கிற கடமை மட்டும்தான் அவங்களுக்கு. பார்த்துக்கிற கடமை எதுவும் இல்ல, அப்படித்தானே?"

"ஸோ, உங்கப்பாவை நீ பார்த்துகிட்டதால இப்ப அடிச்சுக் கேட்கிறேன்னு சொல்றியா? கேட்கவே நாராசமா இருக்கு. இதோட இந்தப் பேச்சை விடு!"

"முடியாதுங்க."

இதே பதிலைத்தான் அடுத்த வாரம் அழைத்த பெரியப்பாவிடமும் சொன்னாள். ஏற்கனவே தோல்வி அடைந்திருந்த மாமா இவரை உசுப்பி விட்டிருப்பது தெரிந்தது. "கேஸ் போடுற ஐடியா எல்லாம் இல்ல. ஆனா, அதுதான் முடிவுன்னா அதுக்கும் தயாராகவே இருக்கோம் பெரியப்பா."

"நம்ம பக்கத்துல இதுதான் பழக்கம். நகை, புடவை, சாமான் செட்டு எல்லாம் நீங்க இரண்டு பேரும் எடுத்துக்குங்க. மத்தபடி..." முடிந்தவரை பேரம் நடக்க, "இல்ல பெரியப்பா" அவர் மனதுக்குள் திட்டுவது நன்றாகத் தெரிந்தது. சிரித்துக்கொண்டே ஃபோனை வைத்தாள் சுமதி. எத்தனை சட்டங்கள் வந்தால் என்ன? பெண்களுக்கான சொத்துரிமையை வீடும் சமூகமும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளாதவரை ஒரு புண்ணியமும் இல்லை.
பல கட்டப் பேச்சு வார்த்தைக்குப் பின் வியாபாரம் படிந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் பத்திரங்கள் கைமாறின. "நினைச்சதை சாதிச்சிட்ட. நீ மட்டும் கடைசிவரை நல்ல பேரு வாங்கணும், நாங்க நாமத்தை போட்டுக்கணும்," ஏதோ விட்டுக் கொடுத்ததைப் போல ஏகமாய்ப் புலம்பியபடி அண்ணன்கள் இரண்டு பேரும். "அவங்க கிடக்குறாங்க, நீ ஆக வேண்டிய வேலையைக் கவனி" என்று சந்தோசமாக ராகவியும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க, வீடு சுமதிவசம் வந்தது. திருச்சி ஹைவே அருகே ஐம்பது ஏக்கர் நிலமும், டவுனில் வாடகைக்கு விட்டிருந்த கடைகளும் வீட்டைவிடக் கவர்ச்சிகரமாகத் தோன்ற, விட்டுக்கொடுக்கும் சாக்கில் தங்கமும், வெள்ளியும், வங்கி இருப்பையும் மொத்தமாய் எடுத்துக்கொண்டு சகோதரிகள் இருவரின் பங்காக வீட்டைக் கொடுத்ததற்கே இத்தனை தள்ளுமுள்ளு!

வாசல் கதவுக்கு நேரெதிரே மாட்டியிருந்த அப்பாவின் புகைப்படம் சந்தனமாலையுடன் தன்னையே உறுப்பதுபோலத் தோன்ற, சுமதி பக்கத்தில் வந்து நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்கள் அவளை அரூபமாய் ஊடுருவின.

'அப்பா நீங்களும் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் நான் பிரச்சனை பண்ணினதா நினைக்கறீங்களா?' தீர்க்கமான அந்தப் பார்வையைத் தாங்கமுடியாமல் விழிகளைத் தணித்துக்கொண்டாள் சுமதி.

எப்படி இருந்த அப்பா? யோகா, தியானம், உடற்பயிற்சி என ஆரோக்கியமாய், திடகாத்திரமாய் உடம்பைக் கவனித்துக் கொண்டு, அம்மா போய் நான்கைந்து வருடம்வரைகூடத் தானே சமைத்து சாப்பிட்டு, அப்புறமும் உதவிக்கு ஆள் வைத்தபடி தனிக்காட்டு ராஜாவாய்... நன்றாய்த்தான் இருந்தார். வைத்த பொருளை, வைத்த இடத்தை, ஆட்களை, நேரத்தை எனக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து போகத் துவங்கியது. முதலில் வயதுக்குரிய ஞாபகமறதி என்றுதான் நினைத்தார்கள். சாப்பிட்டு முடித்த ஐந்தாம் நிமிடம் 'சாப்பாடு கொடு' என்றும், நடுராத்திரி எழுந்து மருந்து கொடு என்றும் சண்டை போட ஆரம்பித்தபோது சின்னதாய் என்னமோ உறுத்தியது. ஒரு மாலைவேளை, திடீரென்று சுமதியை அழைத்து "எனக்கு வீட்டுக்குப் போக வழி தெரியலம்மா" கோவிலுக்கு வந்தவர் அங்கிருந்து தடுமாறிப் பேச, ஏதோ விபரீதம் என மண்டையில் பலமாக உறைக்க, இவள்தான் ஓடினாள்.

மருத்துவ ஆலோசனைப்படி மருந்து எடுக்கத் தொடங்கிய இரவே தோட்டத்தில் அடமாக அமர்ந்து வீட்டுக்குள் போக மறுத்தவர் நள்ளிரவில் தெருவில் இறங்கி ஓட, அதற்குமேல் தனியாக விடமுடியாது என்று அப்பாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். மெல்ல மெல்ல சுற்றி இருந்தவர்களை மறந்து, தன்னை மறந்து, சுயம் மறந்து, உணர்வுகள் மறந்து... உதவிக்கு அருகில் யாரும் இல்லாமல் ஒற்றை ஆளாகச் சுமதி திண்டாடித்தான் போனாள்.

நாளுக்கு நாள் அப்பாவின் நிலை மோசமாகத் தொடங்கி, ஒருகட்டத்தில் இயற்கை உபாதைகளைக்கூடச் சொல்லத் தெரியாமல் நின்றது நின்ற இடத்தில், கொஞ்சம் கண்டித்தால்கூடப் பச்சைப் பிள்ளைபோல முடியைப் பிய்த்துக்கொண்டு, வீம்புக்கு ஆடைகள் களைந்து... அப்பப்பா! போதும் அவர் பட்ட பாடு.

நீரேறிய விழிகளுடன் தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்தாள்.

வீட்டின் அமைப்பில் லேசான மாற்றங்கள் செய்து அசிஸ்டட் லிவிங் கூடம், ஓய்வறை, படுக்கை வசதி, இன்டோர் விளையாட்டுத் திடல் மற்றும் கவுன்சலிங் அறை எனச் சுவரில் வரிசையாக அம்புக்குறியிட்ட அறிவிப்புப் பலகைகள் மாட்டியிருந்தன. தோட்டத்தில் சீரான நடைபாதை, அங்கங்கே நான்கைந்து பேர் சேர்ந்து அமரக் கல் இருக்கைகள்.

"அப்பாமாதிரி எத்தனையோ பேர் வயசான காலத்துல அல்சைமரால் கடுமையா பாதிக்கப்பட்டுக் கஷ்டப்படறாங்க. இந்த மாதிரி பெரியவங்களை வைச்சுப் பராமரிக்கக் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு ரொம்பப் பெரிய மன உறுதி வேணும். முழுநேரமும் வீட்டுல வச்சுப் பார்க்கமுடியாம, ஹாஸ்பிடல்லயும் சேர்க்க முடியாம, அதுவும் பெரும்பாலான பிள்ளைகள் வெளியூர்ல இருக்கிற இன்னிய சூழ்நிலைல"

"முதியோர் இல்லமாக்கா?" ராகவியும் முதலில் அப்படித்தான் கேட்டாள்.

"கண்டிப்பா இல்ல. நம்ம ஊர்ல புதுசு புதுசா முளைக்கிற முதியோர் இல்லங்கள் போதாதா? நான் சொல்றது முதியவர்களுக்கான ட்ராப்-இன் சென்டர். எளிமையாச் சொன்னா பெரியவங்களுக்கான ப்ளேஸ்கூல், டே-கேர் மாதிரி. டெமென்ஷியா மறதிக் குறைபாட்டால பாதிக்கப்பட்டவங்களுக்கு வெளிநாடுகள்ல இந்தவித வசதிகள் ரொம்பப் பிரபலம். காலைல வந்துட்டுச் சாயந்திரம் வீட்டுக்குப் போற மாதிரி. சத்தான சாப்பாடு, மருத்துவ வசதி, அவங்களுக்குத் தேவையான நினைவு விளையாட்டுகள், கண்காணிப்புடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள், அவங்க குடும்பத்துக்குத் தேவையான கவுன்சலிங்னு எல்லாம் சேர்ந்த சேவை மையம்." சுமதி விளக்கியபோது ராகவி "கண்டிப்பா செய்யலாம்கா" ஆர்வத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

ஆனால், இதையே அண்ணன்களிடம் சொன்னபோது ?

'நாங்க நாலு பேரும் சேர்ந்து ட்ரஸ்ட் அமைச்சு இந்த நல்ல காரியத்தைச் செய்யணும்னுதான் ஆசை. ஆனா, அவங்க ஒத்து வராதபோது, சொத்து கொடுன்னு வற்புறுத்தி வாங்குறது தவிர வேற வழியில்லாம போயிடுச்சு. என்னை மன்னிச்சுடுங்கப்பா...' தான் நின்ற கோணத்தில் இருந்து அப்பா முகத்தைத் திரும்பிப் பார்த்தவள், அந்த நொடி திகைத்துப் போனாள். நேருக்கு நேராக முகம் பார்த்துச் சிரிப்பவர்போல அப்பாவின் உதடுகளில் புன்னகை மேவியிருக்க, அந்தக் கண்கள்வழிப் பாய்ந்த ஒளி கண்ணாடிச் சட்டத்தின் ஊடே சூட்சுமமாய் அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததை உணர்வுபூர்வமாக உணர்ந்த அவள் சரீரம் லேசாய் நடுங்கியது.

ஹேமா ஜே,
சால்ட் லேக் சிட்டி, யூடா
More

ஊரான்
Share: 


© Copyright 2020 Tamilonline