Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 20)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2019|
Share:
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் சொன்னார். சூர்யா அவரது தலைமை விஞ்ஞானி விக்ரம் அளவுக்கு மீறிய செலவாளி என்று அறிந்தார். நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனி தன் நண்பர்களிடம் பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதால் மிக்க கவலையில் ஆழ்ந்துள்ளார் என்பதையும் உணர்ந்தார். அடுத்து நடந்தது என்ன என்பதை இப்போது பார்ப்போம்...

*****


தானே ஈர்த்து, பல மில்லியன் டாலர்கள் மூலதனமிட வைத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற கவலையால் தொழில்நுட்பத்துக்குத் தற்காலிக இன்னல் வரவழைத்து, நிறுவனத்தை விற்க முயற்சிக்க முடியுமா என்று சூர்யா வினாவியதும், எரிமலையாக வெடித்த ஷான் யாவரையும் வெளியே போகுமாறு ஆணையிடவே அனைவரும் வெளியேறினர்.

என்ரிக்கே அவர்களை அடுத்த உறுப்பினரும், மற்றொரு மரபணு விற்பன்னருமான ஹான் யூ-வின் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் பல சீனத்துப் பழமைப் பொருட்கள் சுவரிலும் மூலைகளிலும் அழகாக அலங்கரித்தன. ஷாலினியும் கிரணும் அவற்றை ரசித்துப் பார்த்தனர்.

என்ரிக்கே சூர்யாவை ஹான் யூவுக்கு பெயர் மட்டும் கூறி அறிமுகம் செய்ததும், கை குலுக்கிக் கொண்டே உடனே சூர்யா வழக்கம் போல் ஓர் அறிமுக அதிர் வேட்டு வீசினார்! "அறையை நல்லாவே அலங்கரிச்சிருக்கீங்க ஹான்! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. ஆமாம், உங்க பெற்றோர்கள் எப்போ ஷி-ஆன் (Xi-An) நகரத்துலேந்து ஷாங்காய் மாநகருக்கு குடி பெயர்ந்தாங்க? உங்க மனைவியின் பெற்றோர்களும் ஷாங்காய்க்குக் குடி பெயர்ந்துட்டாங்களா இல்ல, நீங்க ரெண்டு பேரும் வளர்ந்த அந்த ஷி-ஆன் குறு வட்டாரத்துலயே இன்னும் இருக்காங்களா?"

சூர்யாவின் கேள்விகள் ஹானின் முகத்தில் ஒரு பயங்கலந்த கோப விகாரத்தை ஊட்டின! ஹான் சில கணங்கள் திறந்த வாய் மூடாமல் அதிர்ச்சித் தோற்றத்தில் இருந்துவிட்டுப் பேசத் திணறினார். "ஆங்... என்ன... எப்படி..." என்று திக்கியவர் சுதாரித்துக் கொண்டு திடீரென்று வெடித்தார்!

"என்ரிக்கே! என்ன இது! நம்ம தொழில் நுட்பப் பிரச்சனயைத் துப்பறிவாளரால எப்படித் தீர்க்க முடியும்னு அப்பவே சந்தேகிச்சேன், சரியாப் போச்சு. இவர் என் பரம்பரையையே ஆதியோட அந்தமா குடாய்ஞ்சு விசாரிச்சிருக்கார் போலிருக்கு? சே! நீங்க இவ்வளவு மட்டமா இறங்குவீங்கன்னு எதிர்பார்க்கலை. ஷேம் என்ரிக்கே ஷேம்!"

என்ரிக்கே கைகளை உயர்த்தி அமைதியாகும்படிச் சைகை செய்தார். "அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்லை ஷான்! உங்களை மாதிரி ஷானுன்னு ஒருத்தர் இருக்கார்னே சூர்யாவுக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடிதான் தெரியும். இங்க இருக்கறதை வச்சேதான் அவர் எல்லாத்தையும் யூகிச்சிருக்கணும். என்ன சூர்யா?"
ஹான் நம்பிக்கையில்லாமல் சூர்யாவைக் கேள்விக்குறியுடன் நோக்கினார். "யூகமா? நுழைஞ்ச சில நொடிகளுக்குள்ள எப்படி...?"

சூர்யா விளக்கினார். "உங்களுக்கு அதிர்ச்சியளிச்சதுக்கு ஸாரி ஷான். ஆனா என்ரிக்கே சொன்னபடி யூகந்தான். முதலாவதாக, ஷி-ஆன்ல கண்டு பிடிக்கப் பட்ட புதைஞ்ச டெர்ரா-கோட்டா போர்வீரர்கள் பொம்மை ரெண்டு கதவுக்கு ரெண்டு பக்கமும் காவலா வச்சிருக்கீங்க. ரெண்டாவது, உங்க மேஜைமேல மூணு புகைப்படங்கள். ஒண்ணுல இருக்கறது உங்க மனைவியும் குழந்தைகளும்னு தெரியுது..."

ஹான் தொடருமாறு சைகை செய்யவே சூர்யா மேலே விளக்கலானார். "இன்னொரு புகைப்படத்துல ரெண்டு இளவயது ஜோடிகள், ஒரு ஷி-ஆன் சிறுவர் பள்ளி முன்னாடி ஒரு சிறுவன், ஒரு சிறுமியுடன் நிக்கறாங்க. இன்னொண்ணுல அதே ஜாடையுள்ள ஆனா சற்று முதிய வயதான ரெண்டு ஜோடிகள் அதே பள்ளி முன்னாடி உங்களோடயும் உங்க மனைவியோடயும் நிக்கற புகைப்படம் இருக்கு..."

ஹான் அமைதியாக, மலர்ந்த ஆவலுடன் தூண்டினார். "ஆமாம் இருக்கு, ரொம்ப வேகமா நுணுக்கமாத்தான் கவனிச்சிருக்கீங்க. அதனால?"

சூர்யா முறுவலுடன் தொடர்ந்தார். "அதனால, நீங்களும் உங்க மனைவியும் ஒரே பள்ளியில இளம்பருவத்தில படிச்சீங்க, அதனால ஷி-ஆன்ல ஒரே வட்டாரத்துல வளர்ந்திருக்கணும்னு யூகிச்சேன்"

ஹான் புன்னகைத்தார். "ஓகே அது நல்ல, ஆனா எளிய, யூகந்தான். அப்போ ஷாங்காய் குடி பெயர்ச்சி? எப்படி?"

சூர்யா முறுவலுடன் தொடர்ந்தார். அதுவும் புகைப்பட யூகந்தான். அங்க சுவத்துல கொஞ்சம் பெரிய அளவுல ஷாங்காயின் ஸ்கைலைன் படம் இருக்கு. அதன் கீழ்ப்பக்கம் உங்க பெற்றோர்கள் நிக்கறாங்க. வெறும் சுற்றுலாவா இருந்தா அந்தப் படத்த மாட்டியிருக்க மாட்டீங்கங்கறது என் கணிப்பு. அதுனால குடிபெயர்ந்துட்டாங்கன்னு யூகிச்சேன். உங்க மனைவி பெற்றோர்களைப் பத்திக் கேட்டது அவங்க நண்பர்களா ரொம்ப வருஷம் ஒரே வட்டாரத்துல குடியிருந்ததுனால அவங்களும் ஷாங்காய்க்கு வந்துட்டாங்களோன்னு விசாரிச்சேன் அவ்வளவுதான்."

ஹான் கை தட்டினார். "பிரமாதம், பிரமாதம். சில விவரங்களை ரொம்ப வேகமா கவனிச்சது மட்டுமில்லாம, ரெண்டும் ரெண்டும் அஞ்சுன்னு அபாரமா கணிச்சும் இருக்கீங்க. நம்மத் தொழில்நுட்பப் பிரச்சனையைத் தீர்க்க சரியான நபரைத்தான் வர வழைச்சிருக்கீங்க என்ரிக்கே, சபாஷ்!"

என்ரிக்கே பவ்யமாகப் பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டு அறிமுகத்தைத் தொடர்ந்தார். "ஹான் யூவும் விக்ரம் மாதிரியே. மரபணுத் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த விற்பன்னர். அவங்க ரெண்டு பேர்தான் எங்க தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மூலகர்த்தாக்கள்."

ஹான் இடைமறித்தார். "ஆ, என்ரிக்கே என்ன இது ரொம்ப புகழாதீங்க. உங்களோட வழிகாட்டல் இல்லாட்டா நாங்க ஒண்ணும் செஞ்சிருக்கவே முடியாது. சரியான தருணங்களில் சரியான கேள்விகள் கேட்டு நுணுக்கமான நுட்ப யோசனைகள் நீங்க குடுத்ததுனாலதான் எங்களால் சாதிக்க முடிஞ்சுது. சரி சூர்யா சொல்லுங்க உங்களுக்கு நான் என்ன உதவி செய்யலாம்?"

சூர்யா வினாவினார். "மிக்க நன்றி ஹான். உங்க தொழில்நுட்பப் பிரச்சனைக்குக் காரணம் என்னவாயிருக்கலாம்னு விற்பன்னரான உங்கள் கருத்து என்ன?"

கிரண் ஷாலினியிடம் முணுமுணுத்தான். "இது என்ன நம்ம அப்பா அப்பப்போ டிவிடியில போடுவாரே எங்க வீட்டுப் பிள்ளைன்னு ஒரு படம். அதுல வர இரட்டையர் ஹோட்டல் ஸீன் மாதிரி திரும்பி முதல்லேருந்தான்னு கேக்கற மாதிரி இருக்கு! எல்லா மரபணு விவரத்தையும் இவர் திரும்பி அடுக்கப் போறாரோ!"

ஷாலினி "உஷ்! சும்மா இரு. சூர்யா காரணமில்லாம கேள்வி கேகக மாட்டார்! வேற வேற விஞ்ஞானிகளோட பார்வை வேற மாதிரி இருக்கலாம். இவர் என்னதான் சொல்றார்னு பாக்கலாம்."

அவர்களின் முணுமுணுப்பைத் தன் பாம்புச் செவியால் கேட்டுவிட்ட சூர்யா "ஹான், உங்க தொழில்நுட்பம் என்னன்னு ஆதிலேந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. விக்ரம் அதை விவரமா சொல்லிட்டார். பிரச்சனைக்குக் காரணம் என்னன்னு உங்க கருத்தைச் சுருக்கமா சொல்லுங்க போதும்!"

ஹான் சோகமான புன்னகையுடன் பதிலளித்தார். "சுருக்கமா சொல்லணும்னா ஒண்ணும் தெரியலன்னுதான் சொல்லணும்..."

கிரண் மீண்டும் ஷாலினியிடம் கிசுகிசுத்தான். "இதுவும் நம்ம அப்பா அடிக்கடி பாடற, போடற பாட்டு ஒண்ணுதானே? ஒண்ணுமே புரியலே உலகத்துலே... அந்தப் பாட்டே எனக்கும் ஒண்ணும் புரியல!" ஷாலினி மீண்டும் அவனை அடக்கினாள்.

ஹான் கிரணை முறைத்துப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார். "என்ரிக்கே, விக்ரம், நான் மூணுபேரும் தனித்தனியாவும் கலந்து பேசியும் பல கோணங்களில் ஆராய்ஞ்சாச்சு. ஆனா இப்படிப்பட்ட பிரச்சனை நேர வாய்ப்பே இல்லை. அதுனாலதான் காரணம் என்னன்னு அரசல்புரசலா கூட எதுவும் தோணலை. ஸாரி."

கிரண் பலமாகவே எக்காளித்தான். "அதிசயம் ஆனால் உண்மை! நடக்கவே வாய்ப்பில்லை. ஆனால் நடக்கிறது! எல்லோரும் கண்டு வியப்பில் ஆழுங்கள்!"

ஹான் என்ரிக்கே இருவரும் கிரணைக் கோபத்துடன் முறைத்தனர்.

ஷாலினியும் அவன் மண்டையில் லேசாகத் தட்டி "சே கிரண் என்ன இது விவஸ்தையே இல்லாம இப்படி சொல்றே?"

ஆனால் சூர்யாவோ கிரணுக்குப் பக்க பலமாகப் பேசினார். "கிரண் சொல்றதுல தப்பில்லை. விஞ்ஞானரீதியா வாய்ப்பே இல்லாதது நடக்குதுன்னா எப்படி! சரி விடுங்க, அவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. அப்பப்போ இப்படி எதாவது தமாஷுக்குச் சொல்லுவான். நீங்க உங்க ஆராய்ச்சிக் கூடத்தைச் சுத்திக் காட்டுங்க பாக்கலாம்."

அவர் அப்படிக் கூறுகையில் அவர் கண்கள் பளிச்சிட்டதைக் கிரணும் ஷாலினியும் கவனித்து ஜாடை பரிமாறிக் கொண்டதை என்ரிக்கேயும் ஹானும் கவனிக்கவில்லை!

சூர்யா ஹான் யூவின் ஆய்வுக் கூடத்தில் என்ன பார்த்தார்? அவர் கண்கள் ஏன் பளிச்சிட்டன. பார்க்கலாம்...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline