வாடகைக்கு விட்ட வீடு
|
|
தென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம் |
|
- கோம்ஸ் கணபதி|ஜூலை 2005| |
|
|
|
"இலாஹி"
அன்பான அம்மாவுக்கு,
மகன் சம்சு என்கிற சம்ஸ¤தீன் 'ஸலாம் அலைக்கும்' சொல்லி எழுதிக் கொள்ளுவது. நான் எங்கே, எப்படி இருக்கேண்ணுல்லாம் சொல்ல முடியாத ஒரு நிலையில இருக்கேன். ஆத்தா, ஏதோ ஒங்க புண்ணியத்திலயும், அருளாளனும் அன்பாளனும் ஆன அல்லாவின் கருணையினாலயும், ஈராக்கில ஒரு மிலிட்டரி கேம்ப் ஒண்ணுல வேல பாத்துக்கிட்டு இருக்கேன். எம் போட்டோ ஒண்ணு வேணுமிண்டு கேட்டீகளாம். என்ன ஆத்தா, நீங்க பாக்காத சம்ஸா? போட்டோவில பாக்கிற மாதிரில்லாம் இப்ப இல்ல. இன்னும் ரெண்டே ரெண்டு வருசம் குலயக் கையில பிடிச்சிக்கிட்டு இருங்க. நேர்ல வந்திருவன்ல்லா!
இந்த லட்டர் கொண்டு வருத நாங்குநேரி தாணு அண்ணாச்சி மூலமா முந்நூத்தி இருவத்தஞ்சி குவைத்தி தினார் அனுப்பியிருக்கேன். பேங்கில நம்ம ரூவாய்க்கு அம்பதாயிரமாவது வரும். எவ்வளவு? அம்பதாயிரம் ரூவா. தாணு அண்ணாச்சிக்குக் கொஞ்சம் திக்கு வாயி. ஆனா எனக்கு தெய்வம் மாதிரி. எனக்கு குவைத்ல வேலை இல்லாமப் போய்ட்டப்போ, அண்ணாச்சி நாலு மாசம் அவுக ரூமுலேயே என்னத் தங்க வச்சிக்கிட்டு சாப்பாடும் போட்டாக. எந்தப் பெய இந்தக் காலத்தில பண்ணுவான் ஆத்தா? அவுக மாமிசம்லாம் சாப்ட மாட்டாக. நீங்க பாட்டுக்கு மீனு கீனுண்ணு எதையாவது பண்ணி வைக்காதிங்க. என்ன புரியுதாத்தா?
மேற்படி அம்பதில இருந்து, முப்பதோ, முப்பத்திச் சொச்சமோண்டு நினக்கேன், அத எடுத்து கடையம் ஏசண்டுகிட்ட கொடுத்திட்டீகண்ணா இங்க கல்·புக்கு வர்ரதுக்குப் பட்டிருந்த நாலு லச்சம் கடன் வட்டியும் முதலுமா அடபட்டுப் போவும். ஏசண்டு சம்முவம் கல்லுல நாரு உரிக்கிற பய, அதனால பத்திரக் கட மம்மது சாச்சாவை... நல்லாக் கேட்டுக்கோங்க... மம்மது சாச்சாவைக் கூடத் துணக்கிக் கூட்டிட்டுப் போங்க. எளுவத்தஞ்சி வயசில உங்கள உக்கார வச்சிச் சாப்பாடு போடாம இப்படிப் போட்டு அலக்களிக்க வச்சிட்டான் அல்லா. கையோட அடவு வச்சிருந்த ஒங்க ரெண்டு வடம் சங்கிலி இருக்கே, அதையும் கையன்னா கானா அடவுக்கடையிலிருந்து மீட்டி ஜீனாப் அக்கா கழுத்தில போட்டிருங்க. அப்பயாவுது ஷாகுல் மச்சான் அக்காவயும் அவுக குழந்தைகளையும் போட்டு அடிக்காம மிதிக்காம இருப்பாகளாண்டு பாப்போம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கட்டுமே யெண்டுதான் நெனச்சு சொந்தத் தம்பி மகனுக்கே அக்காவத் தாலி கெட்டிக் கொடுத்தீக, என்னத்தக் கண்டீக! வாப்பா உசிரோட இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காதுதான். என்ன பண்ணுதது... கண்ணைத் தொடச்சிக்கோங்க ஆத்தா. நம்ம கையில என்ன இருக்கு. நல்லது நடக் கணுண்டு சொல்லி அல்லாகிட்ட துவா கேட்டுப்போம்.
வாப்பாண்ட உடனேதான் ஞாபகத்துக்கு வருது. வாப்பா உயிரோட இருந்தப்போ நம்ம வீட்டுக்கு வராத சாதி சனம் கிடையாது. அதிலயும் ரம்சான் பெருநாளக்கி கொஞ்சப் பேருக்கா நோம்புக் கஞ்சியும் பிரியாணியும் ஆக்கிப் போட்டிருப்பீக? சாயபுவா நம்மோ பொறந்திட்டாலும், அண்ணைக்கி அந்த கத்தோலிக்கப் பள்ளி அஞ்சாங்கிளாசு அய்யர் வாத்தியார்கிட்டதான் நான் படிக்கணுண்டு ஏன் வாப்பா சொன்னா கண்டு இப்பத்தான் புரியுது. ஆத்தோவ், அண்ணைக்கிக் குருங்காவனம் அய்யர் சார்வாள் ராமலிங்க சாமிகள் பாட்டையெல்லாம் என் மண்டையில ஏத்தாமப் போயிருந்தாகண்ணா, இண்ணைக்கி எனக்கு இவ்வளவு மனப் பக்குவம் வந்திருக்குமா ஆத்தா... நீங்களே சொல்லுங்க.
இதயெல்லாம் இப்பம் ஏன் கொண்டு வரே சம்சுண்டு நீங்க கேக்கணும்... இராக்கு சண்டை நிண்ண பொறகாவது இங்க அமைதி வருமுண்டுதான் எல்லாரும் நினச்சிக்கிட்டு இருந்தாக. ஆனா இங்க இப்ப நிலமை என்னண்டா யாரை யாரு சுடுவாக, எந்த இடத்தில தீ வைப்பாக ஒண்ணும் சொல்ல முடியல. ஊரு முழுக்கக் காத்திய மாசத்து சொக்கப் பனைதான். இந்தக் கொள்ளையில எனக்கு வேல கொஞ்சம் கஸ்டமா இருந்திட்டாலும் அல்லா அருளால கை நிறையவே சம்பளம் தராக. எவன் ஆத்தா நம்ம ஊர்ல எட்டாங் கிளாசு படிச்ச பயலுக்கு வேல கொடுப்பான். நான் ஒரு கூறுகெட்ட மடயன். என்னமோ சொல்ல வந்திட்டு. எங்கயோ போயிட்டேன். ஆங்... எங்க விட்டேன்... எந்த இடத்தில தீ வைப்பாக, ஏன் சண்டை போடுதா கண்டுல்லாம் சொல்ல முடியாத நெலம. நூத்துக்கு தொந்நூத்தி சொச்சம் நம்மள மாதிரி சாயபுதான். இருந்தாலும் ஏன்தான் சண்டை போட்டுக்கிடுதாகண்டு இண்ணைக்கு வரைக்கும் புரியல ஆத்தா! கூடுதலாப் படிச்சிருந்தா ஒரு வேளை புரியுமோ என்னமோ?
ஆங்... கூடுதலாப் படிச்சிட்டவுக எல்லாம் என்னத்தக் கிளிச்சிட்டாகண்டு நீ கேக்கதும் எங் காதில விழாம இல்ல. கூடுதலாப் படிச்சிட்டு டாக்டராகி லச்ச லச்சமா சம்பாதிக்கானே ஒங்க மூத்த மவன்.. ரசாக்கு அண்ணன்... விருதாப் பய... வாயில என்னமாத்தான் வருது. பொண்டாட்டி பேச்சக் கேட்டுக்கிட்டு பெத்த தாய்க்கு சோறுகூடப் போடத் தெரியாத பய. அண்ணைக்கி இவன் மெடிக்கல் காலேஜில படிக்கும்போது பிள்ள படிப்பு நிண்ணுடப் படாதுண்ணு வீட்டில இருந்த ஒரே ஒரு பசு மாட்ட வித்து, ராத்திரியோட ராத்திரியா பாளயங்கோட்டை காலேஜில கொண்டு போய்க் கொடுத்தீகளே. இப்படியா வள்ளிசா மறந்திருவான்! கொஞ்ச மாவது நன்னி விசுவாசம் வேண்டாம் இவன்ல்லாம் ஏன் வேட்டி கட்டுதாண்டு எனக்குப் புரியல தாயி.
அத விடுங்க ஆத்தா. மூதேவி கிடக்கான். மூண்றை வருசத்துக்கு முன்னால ஊருக்கு வந்த இடத்தில பிரியாணியும் சால்னாவும் வச்சுத் தந்து ஊட்டி விட்டீகளே. நான் ஒரு கூறு கெட்ட கூகை. இப்படித்தான் எங்கயோ ஆரம்பிப்பேன். எங்கயோ ஊரு சுத்தப் போயிறுவேன். நீங்க ஊட்டி விட்டது ஞாபகத்துக்கு வந்திச்சா, ரெண்டு சொட்டுக் கண்ணீரு வந்திருச்சி. வாப்பா பள்ளி வாசலுக்குக் கூட்டிடுப் போம்போது சொல்லிக் கிட்டு வருவாக, "ஆம்பளப் பய, யாரு... ஆம்பளப் பய கண்ணீரு விடப்படாது, அய்யா"ண்டு.
என்ன சொல்ல வந்தண்டா ஊருக்கு வந்தப்போ "வருத பங்குனியோட வயசு முப்பத்தஞ்சி முடிஞ்சி முப்பத்தாறு நடக்கப் போவுது, ஒரு நிக்காஹ் பண்ணிட்டுப் போய்யா"ண்டு சொல்லி என் நாடியைப் பிடிச்சிக்கிட்டுக் கெஞ்சினீகளே. ஒண்ணு சொல்லுதேன் கேட்டுங்கோங்க. இந்த நிக்கா அது இதுண்டு ஆரம்பிச்சீக, அப்புறம் இந்த சம்சு பொல்லாத பெயலாயிருவான். பிறவு நம்ம ஊர்ப்பக்கம்கூட தல வச்சுப் படுக்க மாட்டான். ஏணுண்டு கேக்கணும். நாப்பது வயசு நெருங்கப் போற பெயலுக்கு எவன் ஆத்தா தம் பொண்ணக் கெட்டிக் கொடுப்பான். அப்படியே கெட்டிக் கொடுத்தாலும் அவள நான் கல்·ப்க்கெல்லாம் கூட்டிட்டு வர முடியாது. அதுக்காக அவள அங்க விட்டுட்டு அவ அங்கயும் நா இங்கயும் இருக்கதுல எனக்கு இஸ்டம் கிடையாது. அதக்காட்டிலும் பாவம் வேற ஒண்ணும் இல்ல ஆத்தா.
சரி ஊர்லயே நான் பொண்டாட்டி கூட இருக்கலாமுண்டா நான் படிச்சிருக்க படிப்புக்கு பஸ் ஸ்டாண்டு பக்கம் ஒரு சாயாக் கடையோ இல்ல ஒரு இரும்புக் கடையோதான் வக்க முடியும். பதினஞ்சி வயசில சினிமாக் கொட்டகை மைதீன்கனி ராவுத்தர் கடையில நான் சாயா அடிக்கும் போது பட்ட அவமானம் போதாதா ஆத்தா? கடை பூட்டுத வரைக்கும் கூட இருக்கலண்டு கொதிக்கிற பாய்லர் தண்ணிய எம் மேல ஊத்தி வேடிக்கை பாத்தானுகள. அந்தச் சுட்ட புண்ணுக்கு ராத்திரில்லாம் வாழை நாரை உரிச்சித் தடவுனீகளே! இதெல்லாம் மறக்கிற விசயமா? |
|
ஏதோ கண்ணுக்குத் தெரியாத இடத்தில கக்கூஸ் கழுவிக்கிட்டு இருந்தாலும் (வேற வழியில்ல, என்னதான் வேலை பாத்துக் கிட்டிருக்கேண்டு கேட்டீகளே, சொல்ல வேண்டியதாப் போச்சு!) வாப்பாவை மாதிரியே என்னோட சுயமரியாதைக்குப் பங்கம் வந்திராம, காலம் போய்க்கிட்டு இருக்கு. அதனால இந்தச் செத்த பேச்ச இதோட விட்டிருங்க, என்ன புரியுதா?
இன்னொண்ணும் சொல்லியாகணும். ஒங்க கழுத்தில கிடந்த கருகுமணியை, என்ன மிஞ்சிப் போனா அரக்களஞ்சி இருக்குமா, ஆத்தா அதையும் அவன் - ரசாக்கு பொண்டாட்டி - பிடுங்கிகிட்டு ராவோட ராவோ மழையில வெளியில அனுப்பியிருக்கா. அதை இந்த ரசாக்கு... வாயில என்னமாத்தான் வருது... அவன் ஆஸ்பத்திரி வாசல்ல நிண்டு பாத்துக்கிட்டே இருந்திருக்கான். "என்னவே, இப்படிப் பாத்துகிட்டே நிக்கேரு. மழையில நனைஞ்சி கிட்டுப் போறது ஒம்மப் பெத்த தாயில்லா. போய் நல்ல வார்த்தை சொல்லிக் கூட்டிட்டு வாரும், வே" எண்டு சொல்லியிருக்காரு. ஆரு சொல்லிருக்கா? அவன்ட்ட வைத்தியம் பாக்க வந்த சங்கராண்டித் தேவரு. அதுக்கு இந்தக் கூறு கெட்ட மடயன்... ஆரு? வேற ஆரு, ஒம் மூத்த மவன். அவன் சுடச்சுட ஆப்பம் கேட்டா மெடிகல் காலேஜுல இருந்து பிள்ள வந்திருக்கு, ஒரு கொறை வச்சிரக் கூடாது எண்டு, உடனே கடைக்கு ஓடிப் போயி அரிசி வாங்கிட்டு வந்து, ஊற வச்சி, அரைச்சி ஆப்பம் ஊத்திக் கொடுப் பிய... அந்தச் செல்ல மவன் ரசாக்கு.. என்ன சொல்லியிருக்கான் தெரியுமோ? "வே, ஊசி போட வந்தேரு, ஊசியப் போட்டுட்டு, ஒம்ம சோலியப் பாத்திட்டுப் போவேரா...."ண்டு. 'அவனைத் தலை முழுகிட்டேண்டு' அண்ணைக்கி நீங்க சொன்னப்போ எனக்கு இதெல்லாம் தெரியாது. போன தடவை வந்திருப்போ குருங்கா வனத்துக்குக் குளிக்க வந்திருந்த சங்கராண்டித் தேவரு மாமா எல்லா விவரத்தையும் சொன்னாரு. சொல்லிட்டு "வே, ஒம்ம வாப்பா ஆத்தாவைச் சாகிற வரைக்கும் அப்படி வச்சிப் பாத்துக்கிட்டாரு, நீராவாது ஒம்ம அண்ணன்காரன் மாதிரிப் பண்ணிடாம, அந்தத் தாயி கண்ணு கலங்காமப் பாத்துக்கோரும்.. வே..." அப்படீண்டாக.
அதனால சொல்லிட்டேன், சொல்லிட்டேன்... இந்த நிக்கா, தாலி, மயிரு, மட்டை... இந்தப் பேச்செல்லாம் இனிமே எடுக்காதீங்க ஆத்தா. என்னயும் தலை முழுகிட்டேங்கிற பேரு எனக்கு வந்திரப்படாது, ஆத்தோய்...
'அலைக்கும் ஸலாம்' சொல்லி முடிக்கிறேன்.
மகன் சம்சு என்கின்ற சம்ஸுதீன்
கோம்ஸ் கணபதி, டென்னஸி |
|
|
More
வாடகைக்கு விட்ட வீடு
|
|
|
|
|
|
|