|
அசலும் நகலும் |
|
- மாயாவி|ஜூன் 2019| |
|
|
|
|
என் நண்பன் சுரேஷ் ஓர் ஆராய்ச்சிப் பைத்தியம். திடீர் திடீரென்று எதையாவது நினைத்துக் கொள்ளுவான்; உடனே அதை ஆராய்ச்சி செய்கிறேன் என்று கிளம்பிவிடுவான். மாதக் கணக்கில் ஆளைக் கண்ணிலே காண முடியாது. உடலை உட லென்று பாராமல், பணத்தைப் பணமென்று பாராமல் ஊர் ஊராகச் சுற்றுவான். தன் ஆராய்ச்சிக்கான குறிப்புக்களைச் சேகரிப்பான். பிறகு ஊருக்குத் திரும்பி வந்து அந்தக் குறிப்புகளைத் தொகுப்பான்; அலசுவான். இறுதியில், ஏதோ ஒரு முடிவுக்கு வந்து, "கண்டுபிடித்து விட்டேன் பார்" என்று அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசைவிட அதிகமாகக் களிக்கூத்தாடுவான்.
ஒரு சமயம் சுரேஷ் என்னிடம் வந்து, "முகுந்த்! நான் இப்போது தாப ஆராய்ச்சி செய்யப் போகிறேன்" என்றான்.
"தாப ஆராய்ச்சியா? அப்படியென்றால்?"
"சொல்கிறேன் கேள். உலகத்தில் தாபம் ஏற்படாத மனிதரே கிடையாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிலையில், ஒவ்வொரு விதமான தாபம் ஏற்படுகிறது. அத்தகைய தாபங்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன? அவற்றுக்கெல்லாம் பொதுவான காரணம் ஏதேனும் உண்டா? அல்லது ஒவ்வொரு தாபமும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படுகிறதா? இதையெல்லாம் ஆராய்ந்து ஒரு முடிவு காணப்போகிறேன்" என்று அவன் விளக்கினான்.
நான் உள்ளூர நகைத்தபடி, "பேஷ் பேஷ்! டார்வினின் ஆராய்ச்சியைவிட உயர்ந்ததாக இருக்கப்போகிறது உன் ஆராய்ச்சி . அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற தாபம் உன்னிடம் அதிகமாகுமுன்பே வேலையைத் தொடங்கு. உன் வெற்றிக்கு என் ஆசி!" என்று கூறி அனுப்பினேன்.
சுரேஷ் போய்விட்டான்.
ஆறு மாதங்கள் சென்ற பிறகுதான் அவன் சென்னை திரும்பினான்.
"என்ன சுரேஷ், உன் தாப ஆராய்ச்சி முடிந்துவிட்டதா?" என்று கேட்டேன்.
"ஆராய்ச்சியாவது? மண்ணாங்கட்டியாவது! இனிமேல் அந்தப் பேச்சையே என்முன் எடுக்காதே!" என்றான் அவன்.
"என்னப்பா விஷயம்? ஏன் ஆராய்ச்சிமீது திடீரென்று உனக்கு வெறுப்பு."
"அந்த நாசமாய்ப்போன ஆராய்ச்சி என்னை ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிவைக்கப் பார்த்தது முகுந்த். ஏதோ என் நல்ல காலம், சரியான சமயத்தில் விழிப்படைந்து, செத்தோம்-பிழைத்தோம் என்று ஊரை நோக்கி ஓடிவந்து விட்டேன்."
"அடடே! அப்படி என்னப்பா நடந்தது? விவரமாகச் சொல்."
சுரேஷ் சொல்லத் தொடங்கினான்.
"நான் ஊர் ஊராய்ப்போய் என் ஆராய்ச்சிக்கான குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு கேரளாவிலுள்ள புனலூர் என்ற ஊருக்கு வந்து, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கி, அருகேயிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு, குறிப்புக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். உனக்குத்தான் தெரியுமே; நாடு முழுவதும் பலதடவை சுற்றியிருப்பதால், நான் அந்தந்தப் பிராந்திய மொழிகளை, அந்தந்தப் பிராந்தியக்காரர்களைப் போலவே பேசுவேன் என்பது. புனலூருக்குச் சென்ற மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ சரியாக நினைவில்லை; ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத மலையாளி ஒருத்தன் மேசையில் என்முன் வந்து அமர்ந்தான். நான் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்த அதே கணத்தில் அவனும் என்னைப் பார்த்தான். சட்டென்று அவன் முகத்தில் ஒரு வெறுப்பு உணர்ச்சி மிதந்தது. நான் அதைப் பொருட்படுத்தாமல், 'ஸாரின்றே ஸ்வதேசம் எவிடயா?' (உங்களுக்கு எந்த ஊர்?) என்று மலையாளத்தில் கேட்டேன். என் தொழிலுக்கு இப்படி யார் எந்தவிதமான வெறுப்பைக் காட்டினாலும், பொருட்படுத்தாமல் வலியச் சென்று பேசவேண்டிய தேவை இருந்ததே!
ஆனால், அடேயப்பா! நான் இப்படிக் கேட்டதும் அவனுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! என்னை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பிடக்கூட விரும்பாதவன் போல் அங்கிருந்து எழுந்து போய்விட்டான்.
எனக்கு அவனுடைய போக்கு விசித்திரமாக இருந்தது. இருந்தாலும் அந்த விஷயத்தில் என் ஆராய்ச்சியைத் திருப்பாமல் சாப்பிட்டுவிட்டு என் அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டேன். ஆனால், அந்த விசித்திரப் பேர்வழி அன்று பகலில் நான் சென்ற இடத்துக்கெல்லாம் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அன்றைய வேலையை முடித்துக் கொண்டு டி. பி.க்குத் திரும்பியபோது கூட அவன் என்னைப் பின்தொடர்ந்து வந்து டி. பி. வாச்மேனோடு பேசிக்கொண்டிருந்தான்.
அதைப் பார்த்ததும், எனக்கு உள்ளூரச் சிறிது கிலி ஏற்பட்டது. அந்த ஆள் திரும்பிச் சென்றதும், வாச்மேனைக் கூப்பிட்டு அவன் யார், என்ன பேசிக் கொண்டிருந்தான் என்று விசாரித்தேன்.
"யாரென்று தெரியாது சார். அவருக்கு நிச்சயமாக இந்த ஊர் இல்லை. 'மோகன் என்று ஒருவர் இங்கே எந்த அறையில் தங்கியிருக்கிறார்?' என்று கேட் டார். 'அப்படி யாரும் இங்கே தங்கியிருக்கவில்லை' என்றேன். போய்விட்டார்" என்றான் வாச்மேன்.
இருந்தாலும் என் மனம் என்னவோ கலக்கந்தான் அடைந்தது. அந்த ஆளைப் பார்த்தபோது, அவன் என்னைப் பின்தொடர்ந்ததை நினைத்தபோது, எனக்குக் கேரளத்து நக்ஸலைட்களின் நினைவு எழுந்தது. ஒருக்கால் அவன் என் இருப்பிடத்தை அறிந்துகொள்ளவே என்னைப் பின்தொடர்ந்து இங்கே வந்திருப்பானோ? வாச்மேனுக்குப் போக்குக் காட்டுவதற்காக, வேறு யாரோ ஒருத்தரைத் தேடி வந்தது போல் பேசிவிட்டுத் திரும்பியிருப்பானோ?
இத்தகைய திகிலான நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டமையால் அன்றிரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டு பொழுதைத் தள்ளிவந்தேன். அந்நிலையில் இரவு ஒரு மணி இருக்கும்; என் அறையின் கதவு படபடவென்று தட்டப்பட்டது. திடுக்கிட்டு எழுந்தபோதிலும் அறைக் கதவைச் சட்டென்று திறந்துவிடவில்லை. கதவருகே சென்று நின்றவாறு "யாரது?" என்று குரல் கொடுத்தேன்.
"ஞான் தான் ஸாரே, வாச்மேன் கேசவன்."
கேசவன் எதற்காக என்னை நள்ளிரவில் எழுப்புகிறான் என்ற வியப்பான வினாவுடனே, கதவின் தாழை நீக்கி இலேசாகத் திறந்தேன். வெளியே......
ஆம்; காலை முதல் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த ஆள், தன் கையில் கத்தி ஒன்றுடன் நின்று கொண்டிருந்தான். ஒருகணம் பிந்தியிருந்தால் அவன் உள்ளே வந்து என்னைக் குத்திக் கொன்றிருப்பான். ஆனால், என் நல்ல காலம், அதற்குள், திறந்த கதவைப் படாரென்று சாத்தித் தாழிட்டுக் கொண்டே 'கேசவன்! கேசவன்!' என்று கத்தினேன்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, வெளியே யாரோ இருவர் பெருங்குரலில் இரைந்து கொண்டிருப்பது கேட்டது. அதில் ஒரு குரல் சற்றுமுன் நான் கேட்ட குரல் போலிருக்கவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் இலேசாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே பார்த்தேன். டி.பி. கட்டிடத்து வாயிலில் உண்மையான வாச்மேன் கேசவன், என்னைக் கொல்ல வந்தவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கப் போராடிக் கொண்டிருந்தான். இப்பொழுது எனக்கு தைரியம் வந்துவிட்டது.
ஓடிச்சென்று என்னைக் கொல்ல வந்தவனை ஆவி சேர்த்துக் கட்டிக் கொண்டேன். கேசவன் அவன் கையிலிருந்த கத்தியைப் பறித்தான். இருவரும் அவனை வராண்டா தூணோடு கட்டிவைத்துவிட்டுப் போலீசுக்கு ஆள் அனுப்பினோம்.
போலீசார் வந்து அவனை அடித்து, மிதித்து என்னை எதற்காகக் கொல்ல முயன்றான் என்பதை அவன் வாய்வழி வரவழைக்க முயன்றனர். ஆனால் அவன் கல்லுளி மங்கனாக இருந்தான். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவன் அளித்த பதில் இதுதான். என்னைக் கண்டாலே அவனுக்கு வெறுப்பாக இருக்கிறதாம். என்னைக் கொல்லவேண்டும் என்ற தாபம் அவனுள் கொதிக்கிறதாம். ஏன் என்று அவனுக்கே தெரியவில்லையாம். இன்று நான் தப்பிவிட்டாலும் என்றாவது ஒரு நாள் என்னைக் கொல்லாமல் விடமாட்டானாம்."
சுரேஷ் இப்படிக் கூறிவந்தபோது நான் அவனை இடைமறித்து, "சரி சரி, இப்பொழுது புரிந்துவிட்டது. இதையெல்லாம் பார்த்தபோது உனக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் தாபம் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியெல்லாம் போதும் என்று ஊருக்குத் திரும்பிவிட்டாய் போலும்" என்றேன்.
"இல்லை முகுந்த். கதை இன்னும் இருக்கிறது; சொல்கிறேன், கேள்" என்று என் நண்பன் மீண்டும் ஆரம்பித்தான்.
"அந்த ஆள் யாரோ? எதற்காக என்னைக் கொல்ல முயன்றானோ? ஆனால் போலீசில் அகப்பட்டுக்கொண்ட பிறகு அவர்கள் அவனைச் சும்மா விடுவார்களா? அவன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டனர். நான் என் போக்கில் என் ஆராய்ச்சிக்கான குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தேன். அந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஓடிப் போய்விட்டன. அப்பொழுது நான் திருவனந்தபுரத்திலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் குறிப்புச் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது தான் என்னைத் திடுக்கிட வைக்கும் அந்தச் செய்தி கண்ணில் பட்டது.
அன்று மாலையில் திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள ஆற்றின் கல் என்ற கிராமத்தில் என் வேலையை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் திரும்புவதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். உனக்குத்தான் தெரியுமே, நான் 'நச்சுத் தீவனம்' தின்னுவதில் விருப்பமுடையவன் என்பது . பஸ் ஸ்டாண்டிலிருந்த சாயாக் கடையில் நேந்திரங்காய் வறுவல் வாங்கினேன். அதைத் தின்று தீர்த்த பிறகு அதைச் சுற்றித் தந்த நியூஸ் பேப்பர் துண்டில் என் கவனம் தற்செயலாகச் சென்றது.
அது மூன்று நாட்களுக்கு முன் வெளியான பிரபல மலையாள தினசரி ஒன்றிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதம். அதில் என்னைக் கொல்ல முயன்றவனின் புகைப்படமும், அவன் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிவிட்ட செய்தியும் வெளியாகியிருந்தன.
இச்செய்தியைப் படித்த சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த எதிர்பாராத சம்பவமும் நிகழ்ந்து விட்டது. அன்று நான் ஆற்றின்கல்லிலிருந்து திருவனந்தபுரம் போக பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன், அதுதான் அன்றைய கடைசி பஸ். வேறு ஏதோ ஓர் ஊரிலிருந்து வந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ் அது. மாலை ஐந்தரை மணிக்கே வரவேண்டிய அந்த பஸ் இரவு எட்டு மணியாகியும் வரவில்லை. இனி வராது என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இரவு ஆற்றின்கல்லில் தங்கிவிடுவோம் என்றால், அந்தக் குக்கிராமத்தில் தங்கும் அறைகளுடன் ஹோட்டல் ஏது? முன்பின் தெரியாத ஊரிலே யார் வீட்டில் போய் இரவு தங்குவதற்கு இடம் கேட்பது?
இப்படி நான் தத்தளித்துக் கொண் டிருந்தபோது, என்னைப் போலவே பஸ்ஸுக்காகக் காத்திருந்தவர்களுள், சற்று நாகரிகமாகத் தென்பட்ட இருவர், அவ்வூரில் ஒருவர் பிரைவேட் டாக்சி வைத்திருப்பதாகவும், அதை ஏற்பாடு செய்து கொண்டு திருவனந்தபுரம் போய் விடலாமென்றும் பேசிக் கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளுவதாகச் சொன்னேன். மூவரும் டாக்சி வைத்திருப்பவரின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.
வழியில் ஒரு புதை (கால்வாய்). அதைக் கடக்க ஒரு மரப்பாலம் போட்டிருந்தார்கள். அந்த மரப்பாலத்தின் கிராதியில் யாரோ ஒருவன் கையில் குண்டாந்தடி ஒன்றுடன் நின்று கொண்டிருந்ததைப் பாலத்தடி மின்சார விளக்கொளியில் கண்டேன். அப்படி ஒன்றும் எங்கள் கவனத்தைக் கவரும்படியான விசேஷம் அவனிடம் இல்லைதான். ஆதலால் நாங்கள் அலட்சியமாகவே பாலத்தை நெருங்கினோம்.
நெருங்கிய போதுதான் நான் கவனித்தேன், அவன் என்னைக் கொல்ல முயன்றவன் என்பதை. அவனை நான் முழுவதுமாக அடையாளம் கண்டுகொள்ளும் முன்பே, அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான் போலும். சட்டென்று குண்டாந்தடியைத் தூக்கிப் பிடித்தவாறு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். நான் தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்வதற்குள், அவன் கைத்தடி என் மண்டையைப் பதம் பார்த்துவிட்டது. அடி விழுந்ததுதான் தெரியும்; நான் நினைவிழந்துவிட்டேன்.
எனக்கு நினைவு திரும்பியபோது, திருவனந்தபுரத்து ஆஸ்பத்திரி ஒன்றில் படுத்திருப்பதையும், என் மண்டையில் பெரிய கட்டுப் போட்டிருப்பதையும் கண்டேன். என் உடல் முழுவதும் ஒரே வேதனை. மண்டை , விண் விண் என்று தெறித்து, என்னை வாய்விட்டு அலறத் தூண்டியது. ஆனால் நான் அலறவில்லை. ஏன் தெரியுமா? என் எதிரே சித்திரப்பாவையென ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள். அவள் நர்ஸ் உடை தான் தரித்திருந்தாள். என்னைக் கவனித்துக்கொள்ளும் ஆஸ்பத்திரி நர்சாகவே இருக்கலாம். ஆனால் , நான் விழித்தபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தின் வழியே ஓடிக் கொண்டிருந்தது. |
|
முகுந்த்! என் இருபத்தெட்டு வயது வாழ்க்கையில் எத்தனையோ பெண்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவளைப்போன்ற பேரழகியை இதுவரையில் கண்டதேயில்லை. அது ஒருபுறமும், மற்றொரு புறம் அவள் என்னை நோக்கிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததும் சேர்ந்து என்னை என் வேதனை, வாதனை யாவற்றையும் மறக்கச் செய்தன.
நான் கண் விழித்ததும், அவள் முகத்தில் நிலவிய துயரம் மாறி மலர்ச்சி பிறந்தது. அவள், பரவசத்துடன் வானத்தை நோக்கிக் கைகூப்பி, "குருவாயூரப்பா! என் பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டாய்; உன் கருணை வாழ்க!" என்றாள்.
எனக்கு அவளுடைய போக்கு விசித்திரமாகவே இருந்தது. "சிஸ்டர்! நீங்கள் யார்? ஏன் எனக்காகக் கண்ணீர் சிந்தினீர்கள்? இப்பொழுது இறைவனை வாழ்த்துகிறீர்கள்?" என்று கேட்டேன்.
அவள் மயக்கும் சிரிப்பு ஒன்றைச் சிந்திவிட்டு, "நான் யாராயிருந்தால் என்ன? உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக் கும் ஒருவருக்காகக் கண்ணீர் சிந்துவதும் அவர் உயிர் மீண்டுவிட்டார் என்று அறிந்ததும் பிரார்த்தனை செலுத்துவதும், உலகில் நல்லவர்கள் செய்யும் காரியந்தானே!" என்றாள்.
அவளுடைய ஒயிலான சிரிப்பும், சாதுரியமான பேச்சும் என்னை மயக்கின. அவளுடன் பேச்சுக் கொடுக்க என் மனம் விழைந்தது.
"அப்படியானால், இந்த ஆஸ்பத்திரியில் உயிருக்காக மன்றாடும் ஒவ்வொருவருக்காகவும் நீங்கள் கண்ணீர் சிந்துவதும், பிரார்த்தனை செய்வதும் வழக்கமோ?" என்று சும்மாவானும் கேட்டு வைத்தேன்.
அவள் மீண்டும் சிரித்தாள். "கெட்டிக் காரராக இருக்கிறீர்களே. ஆனால் உங்கள் ஊகம் இங்கே சற்றுத் தவறிவிட்டது. உலகில் ஒருவர் உயிருக்காக மற்றொருவர் பிரார்த்தனை செய்வது புதுமையல்ல. ஆயினும், எல்லாரும் எல்லாருடைய உயிருக்காகவும் பிரார்த்தனை செய்வதில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்காக மட்டுமே மனம் கசிகிறார்கள்; பிரார்த்தனை செய்கிறார்கள்" என்றாள் அவள்.
எனக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு என்மீது காதல் பிறந்திருக்கிறது! எனக்குத்தான் அத்தகைய பேரழகியை அடையக் கசக்குமா என்ன? இருந்தாலும் அவளுடைய மனநிலையை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ளும் பொருட்டு, "அப்படியானால் நான் உங்களுக்கு வேண்டியவன்; அப்படித்தானே?" என்று சீண்டினேன்.
"போக்கிரி!" என்று கலகலவென நகைத்தாள் அவள். பிறகு, "தெரியாதோ உங்களுக்கு?" என்று பொய்க்கோபத்தோடு என்னைப் பார்த்தாள். இவ்வாறு முதல் சந்திப்பே எங்களைக் காதலராக்கி விட்டது.
எங்கள் காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
இப்பொழுது அவளுடைய வரலாறு முழுவதும் எனக்குத் தெரியும். அவள் ஓர் அநாதை. பெயர், நிரூபா. தன் வயிற்றைத் தானே கழுவிக்கொள்ள வேண்டியிருந்ததால், தாதித் தொழிற் பயிற்சி பெற்று, திருவனந்தபுரத்திலிருந்து இந்த ஆஸ்பத்திரியில் சில காலமாக நர்சாகப் பணியாற்றி வருகிறாள். என்னைப் பற்றியும் அவளுக்கு எல்லாம் சொன்னேன்.
என்னதான் மலையாளத்துப் பெண் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாலும், கேரளத்தில் தங்கிவிடும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. தவிர, கேரளத்தில் வசிப்பதில் வேறோர் ஆபத்தும் இருந்ததே! என்னைக் கொல்ல முயன்றவன் அன்று தப்பி ஓடிவிட்டானாம். அவனுக்கு நான் இன்னும் சாகவில்லை என்பது தெரிந்தால் மறுபடியும் என் உயிருக்கு அபாயம் விளைவிக்க முயலக்கூடும்!
இதை நான் நிரூபாவிடம் கூறியபோது அவள், "ஐயையோ! வேண்டவே வேண்டாம்; திருமணத்தை மட்டும் நான் பிறந்த மண்ணில் முடித்துக்கொண்டு நாம் தமிழ்நாட்டுக்கே போய்விடலாம்" என்று ஒத்துக் கொண்டாள்.
இவ்வாறு நாங்கள் தம்பதியராக எல்லாம் முடிவாகி விட்டது. நிரூபா அந்த ஆஸ்பத்திரியில் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் வேலை பார்த்து வந்தாள். ஒப்பந்தக் காலம் முடிய இன்னும் ஒரு மாதமே இருந்தது . அது முடிந்ததும் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டு ஊருக்குச் செல்வது என்று தீர்மானித்திருந்தோம். அந்தச் சமயத்தில் இன்னொரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்த து.
நான் அப்பொழுது நிரூபாவின் வீட்டில்தான் வசித்து வந்தேன். அவள் காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலையில் திரும்புவாள். இரவு வேலை உள்ள நாட்களில் மாலையில் போய்விட்டு மறுநாட் காலையில் திரும்பி வருவாள்.
ஒரு நாள், உனக்குக் கடிதம் எழுதலாமென்று காகிதத்துக்காக நிரூபாவின் பெட்டியைக் குடைந்து கொண்டிருந்த போது அதில் ஒரு கட்டுக் கடிதத்தைக் கண்டேன். அநாதையான இவளுக்கு யாரிடமிருந்து இத்தனை கடிதங்கள் வந்துள்ளன என்ற வியப்பு மேலிடவே, கட்டில், மேலாக இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தேன்.
மறுகணம், நான் ஆயிரம் தேள்கள் ஒன்றாகக் கொட்டியது போல் துடித்துப் போனேன். அந்தத் துடிப்பு பிற கடிதங்களையும் படிக்க என்னைத் தூண்டியது. அக்கடிதங்கள் அனைத்தும் சேர்ந்து எனக்கு ஒரு காதல் கதையை விளக்கமாக உணர்த்தின. அதாவது, நிரூபா இதற்குமுன் மோகன் என்ற இளைஞனைக் காதலித்தாள். இப்பொழுது நாங்கள் தீர்மானம் செய்திருப்பது போலவே அவர்களும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தனர் என்ற வரையில் அந்தக் கடிதங்களிலிருந்து எனக்கு விளங்கிற்று.
அதன் பிறகு அந்த மோகன் என்னவானான்? அவர்களிடையே மலர்ந்த காதல் ஏன் முறிந்து போயிற்று? இந்தக் கேள்விகள் என்னிடம் எழுந்து என் மனத்தைக் குழப்பின.
'ஏன்? ஒருத்தி ஒருவனைக் காதலித்து விட்டு, பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காக அவனை நிராகரித்துவிட்டு வேறொருவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா?' என்று நீ கேட்கலாம் முகுந்த். தாராளமாய்ச் செய்யலாம். உலகில் அப்படி எத்தனையோ நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால், நிரூபாவைப் பொறுத்த வரையில் இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் என் நிரூபா தன் வாழ்வில் என் ஒருத்தனையே காதலிக்கிறவள்; அந்தக் காதல் காரணகாரியமின்றி, என்னைப் பார்த்த உடனேயே அவளிடம் இயல்பாக எழுந்து தாபமாக மாறியிருக்கிறது. அப்படி நான் எண்ணியிருந்தபடியால் அவளுடைய காதல் விளையாட்டுக்கான கருவிகளில் ஒருவன் நான் என்பதை இக்கடிதங்கள் நிரூபித்ததும், என் கற்பனைக் கோட்டைகள் இடிந்து சரிந்துவிட்டன.
என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனி, நிரூபாவை ஏறெடுத்துப் பார்க்கலாகாது என்று முடிவுறுத்தியவனாக, அவள் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்புமுன்பே ஊருக்குப் புறப்பட்டுவிடத் தீர்மானித்தேன். ஆனால், புறப்படுமுன் அவளுக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதி வைத்தேன். கடிதத்தில், அவளுடைய முந்தைய காதல் நாடகம் எனக்குத் தெரிந்துவிட்டதென்றும், அதன் காரணமாக அவளைப் பிரிந்து செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
என்னுடைய சென்னை முகவரி அவளுக்குத் தெரியும். ஆதலால், 'இதற்குச் சப்பைக் கட்டும் முகமாக அவள் ஏதாவது எழுதுவாள்; நாம் மயங்கிவிடக் கூடாது' என்ற உறுதியுடன் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி வந்தேன். ஆனால், நான் சென்னைக்கு வந்து பத்து நாட்களாகி விட்டன; இது வரையில் அவளிடமிருந்து கடிதம் ஏதும் வரவில்லை. எப்படியோ போ. நான் எதையோ ஆராய்ச்சி செய்யப் போய் வேறு எதையோ அனுபவமாகப் பெற்றுக்கொண்டு திரும்பினேன். மனிதரது தாபத்தை ஆராய்ச்சி செய்து முடிவுகட்டப் புறப்பட்ட நான், ஒரு பெண்ணின் மனத் தாபம் எப்படி எப்படியெல்லாம் செயற்படக் கூடும் என்பதை அறியாமல், ஏமாற்றப்பட இருந்து, நல்ல வேளையாகச் சரியான சமயத்தில் தற்செயலாகத் தட்டி எழுப்பப்பட்டுத் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றபடி திரும்பி வந்திருக்கிறேன்."
சுரேஷ் இவ்வாறு தன் ஆராய்ச்சி அனுபவ வரலாற்றைக் கூறி முடித்துவிட்டு வீடு போய்ச் சேர்ந்தான். அவன் கூறிய கதையில் இரண்டு விஷயங்கள் எனக்கு மர்மமாக இருந்தன. ஒன்று - எதற்காக அந்த மலையாளத்துக்காரர் சுரேஷ்மீது வெறுப்புக் கொண்டு அவனைக் கொல்ல முயன்றார் என்பது. மற்றொன்று - சுரேஷை மனப்பூர்வமாகக் காதலித்த நிரூபா, ஏன் தனது முந்தைய காதலை அவனிடம் மறைத்தாள் என்பது.
சுரேஷைப் போல் ஓர் ஆராய்ச்சிப் பைத்தியமாக இருந்திருந்தால், உடனே இந்த இரண்டு மர்மங்களையும் ஆராயவேண்டும் என்ற தாபம் எனக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், எனக்கு இதைவிடப் பெரிய என் குடும்பத் தாபங்கள் பலப்பல இருந்தனவே! ஆதலால், அவன் கூறிய கதையை ஒரு காதில் வாங்கி, மறு காதின் வழியே வெளியேற்றிவிட்டு, என் போக்கில் என் அலுவல்களில் ஈடுபட்டேன்.
அன்று நான் வீட்டை அடைந்து அரை மணி இருக்கும். சுரேஷ் என்னைத் தேடிக் கொண்டு ஓடி வந்தான். "முகுந்த்! முகுந்த்! நான் பெரிய பாவியடா! அநியாயமாக என் நிரூபாவைச் சந்தேகித்து விட்டேன்! கிடைத்தற்கரிய அந்த மலபார் மாணிக்கத்தை இழந்துவிட்டேன்!" என்று அவன் புலம்பினான்.
"என்னடா விஷயம்?" என்று வியப்புடன் கேட்டேன்.
"நிரூபா கடிதம் எழுதியிருக்கிறாள். மாலைத் தபாலில் வந்தது. நீயே படித்துப் பார்" என்று அவன் தன் சட்டைப் பையிலிருந்த கடிதம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினான்.
கடிதத்தைப் படித்தேன். அதன் ஆரம்பமே என்னைத் திடுக்கிட வைத்தது. "அன்புள்ள அண்ணா!" என்று ஆரம்பித்து நிரூபா அந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள்.
"உங்கள் கடிதம் ஒரு நாளைக்கு முன் எனக்கு எழுதப்பட்டிருந்தால், நான் மனம் முறிந்து தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஆம் அண்ணா! உங்களை சுரேஷாக எண்ணி நான் காதலிக்கவில்லை. என் இன்னுயிர்க் காதலர் மோகன் என்று எண்ணியே காதலித்தேன். என்னுடைய முந்தைய காதல் விவகாரந்தான் இப்பொழுது உங்களுக்குத் தெரிந்ததாயிற்றே! மோகனும் நானும் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபின், எங்களைப் பிரித்த அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆற்றின்கல்லிலும், புனலூரிலும் உங்களைக் கொல்ல முயன்றவனும் சுரேஷ் என எண்ணி அக்காரியத்தைச் செய்ய முற்படவில்லை. மோகன் என எண்ணியே உங்களைத் தீர்த்துக்கட்ட முயன்றிருக்கிறான். அவன் பெயர் மதுசூதனன். எங்கள் ஊர்க்காரன் தான். என்னை அடைய மோகனோடு போட்டி போட்டுத் தோல்வி அடைந்தவன். அந்த வெறியில் மோகனைத் தீர்த்துக்கட்ட முயன்றான். அன்று உங்களைக் குண்டாந்தடியால் தாக்கியது போலவே முன்பு மோகனையும் அவன் தாக்கிவிட்டான். நீங்கள் வெறும் காயத்தோடு தப்பிவிட்டீர்கள். ஆனால், மோகனுக்குக் காயம்பட்டதோடு மூளையும் கலங்கிவிட்டது. அவர் உயிர் பிழைத்தார். ஆனால், பழைய சம்பவங்கள் யாவும் அவருக்கு மறந்து விட்டன. தான் யார் என்பதே அவருக்குத் தெரியவில்லையென்றால் - என்னை எப்படி அவர் அடையாளம் கண்டு கொள்ள முடியும்? நான் அவருடைய மூளைக் கலக்கத்தைப் போக்க எந்தெந்த வைத்தியரிடமெல்லாமோ கூட்டிச் சென்று காட்டினேன். பலன் இல்லை. கடைசியில் ஒரு நாள் மோகன் என் பாதுகாப்பிலிருந்தும் தப்பி எங்கோ ஓடிவிட்டார்.
அவர் சென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அவருடைய உருவ அமைப்பை அப்படியே கொண்ட உங்களை நான் எங்கள் ஆஸ்பத்திரியில் சந்தித்தபோது, உங்களை மோகன் என்றே கருதிவிட்டேன். நீங்கள் மீண்டும் மண்டையில் தாக்கப்பட்டிருந்ததால், இத்தடவை உங்கள் மூளைக் கலக்கம் போய்விட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் உங்களை வேறு யாரோ ஒரு தமிழர் என்று கூறியதைக் கேட்டபோது உங்களுடைய மூளைக் கலக்கம் இன்னும் தீரவில்லை என்று கருதி, புதிதாக உங்களுக்கு அறிமுகமானவள்போல் நடித்தேன். என் காதலை நீங்கள் ஏற்றுக் கொண்டபோது என் மோகனையே திரும்பப் பெற்றுவிட்டதாகக் களிப்படைந்தேன்.
ஆனால், நீங்கள் என்னைப் பிரிந்து சென்ற அன்று மாலையில் நான் வேலை நேரம் முடிந்து , ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டபோது, அசல் மோகன் ஆஸ்பத் திரி வாசலில் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மூளை கலங்கிய நிலையில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்த அவர், ஏதோ ஓர் ஊரில் ஒரு லாரியினால் மோதப்பட்டு, மீண்டும் மண்டையில் அடிபட்டுத் தமது மூளைக் கலக்கம் நீங்கப்பெற்று என்னைத் தேடிக்கொண்டு திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தார். - இதெல்லாம் எனக்கு, பின்னால் தெரிய வந்த விஷயங்கள். அப்போது வெளியே நின்ற அவரை, நான் நீங்களென எண்ணி "ஏன் இங்கே நிற்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"ஒருக்கால் நீ வீடு மாறி விட்டிருக்கலாம். ஆஸ்பத்திரிக்குப் போனால் நிச்சயமாகச் சந்தித்து விடலாமென்று இங்கே வந்து காத்திருக்கிறேன். சுகமாக இருக்கிறாயா நிரூபா? என் மூளைக் கலக்கம் இப்போது சரியாகிவிட்டது" என்று அவர் ஒவ்வொரு செய்தியாகச் சொல்லத் தொடங்கினார்; அப்போதுதான் எனக்கு நீங்கள் மோகன் அல்ல, வேறு ஆள் என்பது தெரிய வந்தது.
அப்பொழுது நான் எவ்வளவு தத்தளிப்பான நிலையில் இருந்திருப்பேன் என்பதை எண்ணிப் பாருங்கள். உங்களை ஏற்பதா? மோகனை ஏற்பதா என்ற பிரச்சினை எழுந்து என்னை உலுக்கியது. இறுதியில், உங்களை மோகன் என எண்ணியே காதல் கொண்டேன் என்பதை விளக்கினால் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளுவீர்கள் என்ற முடிவுடன், அசல் மோகனுடன், நகல் மோகனான உங்களைச் சந்திக்க வீடு வந்தேன். அங்கே, இந்த இக்கட்டைப் போக்கிக் கொண்டு என்னை வரவேற்றது உங்கள் கடிதம்.
என்னை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு பிரிந்து சென்றதால், உண்மை நிலையை உங்களுக்கு விளக்குவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அண்ணா! உருவ ஒற்றுமை காரணமாக நான் உங்களுக்கு விளைவித்துவிட்ட ஆயாசத்துக்கு என்னை மன்னித்து விடுங்கள். நாம் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்திருந்த அதே நாளில் நானும் மோகனும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். என்னை மன்னித்து விட்டதற்கு அறிகுறியாக அந்த நன்னாளில் எங்களுக்கு உங்கள் ஆசியை வழங்குங்கள். மீண்டும் எப்பொழுதாவது திருவனந்தபுரத்துக்கு வர நேரிட்டால், உங்கள் உடன்பிறவாச் சகோதரியின் வீட்டுக்கு அவசியம் வாருங்கள்.
மோகன் தமது அன்பையும் நன்றியையும் தங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்.
உங்கள் அன்புச் சகோதரி, நிரூபா."
கடிதத்தைப் படித்து முடித்ததும் "இப்பொழுது என்னடா செய்யப் போகிறாய்?" என்று சுரேஷைக் கேட்டேன்.
"சகோதரியின் திருமணத்துக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பப் போகிறேன்" என்றான் அந்த அசடு.
மாயாவி |
|
|
|
|
|
|
|
|