Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 16)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2019|
Share:
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக் கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். சூர்யா முதலில் சக நிறுவனரான விக்ரம் மேத்தாவைச் சந்தித்தார். அவர் க்ரிஸ்பர் வெட்டல், ஒட்டல் முறையின் அடிப்படைக் குறைகளைத் தம் குழுவினர் எவ்வாறு நிவர்த்தித்தனர் என்று விளக்கலானார். நாமும் சூர்யாவுடன் மேலே நடப்போம்...

*****


க்ரிஸ்பர் வழிமுறையில் மரபணுத் தொடரைக் குறிவைத்து வெட்டுவதில் இருந்த குறையைத் தம் செயற்கை வழிகாட்டல் ஆர்.என்.ஏ (Synthetic Guide RNA or sgRNA) நுட்பத்தால் நிவர்த்தித்தாக விக்ரம் விளக்கிவிட்டு, அது பாதி நிவாரணந்தான் என்றும் மரபணு எழுத்துக்களை வேண்டிய எண்ணிக்கையைவிட அதிகமாக வெட்டிவிடுவது இன்னொரு பிரச்சனை என்று கூறவே, அதற்கு என்ன நிவாரணம் என்று சூர்யா வினாவினார்.

விக்ரம் சூர்யாவின் கேள்வியைப் பாராட்டிவிட்டு, தொடர்ந்து விளக்கினார். "அதிகமான மரபணு எழுத்துக்களை வெட்டும் பிரச்சனைக்கு நிவாரணம் காண்பது மிகக்கடினமாக இருந்தது. பலவித நுட்பங்களைப் பரிசோதித்தோம். சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு நிவாரணம் கிடைத்தது."

ஷாலினி பரபரத்தாள். "என்ன நிவாரணம் அது? சமீப காலத்தில்தான் கண்டு பிடிச்சிருக்கீங்கங்கறது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே!"

சூர்யாவின் கண்களில் ஒளி ஒருகணம் மட்டும் பளிச்சிட்டு மறைந்தது. அங்கிருந்தவர்களில் கிரண் மட்டுமே அதைக் கவனித்தான்! பல வருடங்களாக சூர்யாவுடன் துப்பறிவதில் ஈடுபட்டிருந்த கிரண், சூர்யாவுக்கு எதோ யூகம் உதித்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான். ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி என்ன விஷயம் என்று மௌனத்தினால் வினாவினான். சூர்யா யாருக்கும் தெரியாமல் தலையை மிகக்குறைந்த அளவே அசைத்து, கையைக் கீழேயே உடலுக்குப் பின்னால் வைத்து அசைத்து, பிறகு என்று சைகை காட்டவே கிரணும் மெல்லத் தலையசைத்து ஒப்புக்கொண்டு விக்ரமை மீண்டும் கவனித்தான். வேறெவரும் அந்தக் குறு நாடகத்தைப் பார்க்கவில்லை.

என்ரிக்கே விக்ரமை இடைமறித்தார். "ஆமாம் ஷாலினி. மிகவும் முயன்றபின் சமீபத்தில்தான் நிவாரணம் கிடைச்சது. ஆனா எங்க துரதிருஷ்டம் அதைத் தக்கவச்சுக்க முடியலை..." என்று சோகமாகக் கூறியவர், விக்ரமைத் தொடருமாறு சைகை செய்தார்.

விக்ரம் என்ரிக்கேயின் தோளை ஆறுதலாகத் தட்டிவிட்டு, தொடர்ந்தார். "சொல்லப் போனா இது ஒரு வேறு புது நுட்பம்னு சொல்லலாமோன்னு தோணுது. அதே செயற்கை வழிகாட்டி ஆர்.என்.ஏ-வை அடிப்படையா வச்சுதான் அதிக வெட்டல் குறைபாட்டையும் நிவர்த்திச்சோம்!"

ஷாலினி வியப்புற்றாள். "அதே sgRNA-வா? அது குறிவைக்கற பிரச்சனையைத்தானே நிவர்த்திச்சது? அதை வச்சே எப்படி அதிக வெட்டலைத் தவிர்க்க முடியும்?"

விக்ரம் முறுவலுடன் தொடர்ந்தார். "நல்ல கேள்வி. ஆனா அந்த வேதியியல் பொருள் மட்டுமில்ல. அதோட இன்னொரு புரதத்தையும் சேர்க்க வேண்டியிருந்தது. Cas9-ஐச் சார்ந்த ரிபோ ந்யூக்ளியோ புரதமாக்கி (RiboNecleoProtein: RNP) புரதம் ஒன்றைச் சேர்த்து, மிகச்சக்தி வாய்ந்த வெட்டல் சாதனமாக்கினோம். அதைப் பயன்படுத்திச் செய்த பரிசோதனைகளில், எங்கள் முன்னேற்றிய முறை மிகக் கச்சிதமான மரபணு வெட்டல்களைச் சாதித்தது!"
பெருமிதத்துடன் விக்ரம் புன்னகைத்தார். என்ரிக்கேயும் பெருமிதமாக விக்ரமின் தோளைத் தட்டிக் கொடுத்தார். ஷாலினி பாராட்டினாள். "ஆஹா, கேட்கப் பிரமாதமா இருக்கு! நாங்க செய்யற ஆராய்ச்சியில எல்லாம், ரொம்ப நாளுக்கு ஒருமுறை எதோ சின்னச் சின்ன நுட்ப முன்னேற்றந்தான் கிடைக்குது. ஆனா நீங்க பெரிய ரெண்டு நுட்ப முன்னேற்றங்களை குறுகிய காலத்துல ஆராய்ஞ்சு கண்டு பிடிச்சிட்டீங்க?"

விக்ரம் பதிலளிக்குமுன் என்ரிக்கே மறுத்தார். "ரொம்பக் குறுகிய காலம் ஒண்ணுமில்ல ஷாலினி. வெகுநாளா சின்னச் சின்ன முன்னேற்றங்களோட பெரிய தடங்கல்களையும் சந்திச்சு அப்புறம் சமீப காலத்துலதான் விக்ரம் விவரிச்ச ரெண்டாவது முன்னேற்றம் கிடைச்சுது."

விக்ரம் ஆமோதித்தார். "ஆமாம் ஷாலினி இது பல வருடகால ஆராய்ச்சியின் பலனே தவிர தீடீர் முன்னேற்றமல்ல. அதுவும், சரியான அளவு மரபணு வெட்டுவதற்கான ரிபொ ந்யூக்ளீயோ புரத நுட்பம் கண்டு பிடிக்க ரொம்பகாலமா ஆராய்ச்சி நடத்தி பலப்பல தோல்விகளுக்குப் பின்னாலதான் அந்த நுட்பம் கிடைச்சது. ஆனாலும் அது எங்களுக்கு பெரிய சாதனைதான், ஒத்துக்கறேன்!" என்ரிக்கே, விக்ரம் இருவரும் மீண்டும் பெருமையுடன் புன்னகைத்து, கைகொடுத்துக் கொண்டனர்!

ஆனால் சூர்யா அவர்களின் பெருமைக் கொப்புளத்தை உடைத்தார்.

"சரி, எப்படி க்ரிஸ்பர் காஸ்-9 அடிப்படை நுட்பத்தில் இருந்த பிரச்சனையை ஆராய்ந்து, எப்படி அதற்கு நிவாரணம் கண்டு பிடிச்சீங்கன்னு சொல்லிட்டீங்க. நல்ல சாதனைதான்! ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலியே?"

விக்ரம் குழம்பினார். "உங்க கேள்விக்கு பதில் சொல்லலியா? என்ன சொல்றீங்க? இவ்வளவு நேரம் நான் சொன்னது என்னங்கறீங்க?"

சூர்யாவின் முகத்தில் மீண்டும் எதோ ஒருவித ஒளி தோன்றி ஒரு கணத்தில் மறைந்தது. கிரண் அவரிடம் அதைப்பற்றி கேட்கவேண்டும் என்று மீண்டும் மனத்துக்குள் குறித்துக் கொண்டான்!

சூர்யா தொடர்ந்தார். "ரொம்ப நாளா முயற்சி செஞ்சு பல தடங்கல்களைத் தாண்டி நுட்பம் கண்டுபிடிச்சீங்க. ஆனா அது இப்ப சரியா வேலை செய்யலை, அடிப்படை க்ரிஸ்பரைவிட மோசமாயிடுச்சுன்னும் சொல்லியிருக்கீங்களே? நான் என்ன நுட்பம் கண்டுபிடிச்சீங்கன்னு கேட்கலை. முன்னால பிரச்சனைகள் ஏற்பட்டப்போ எப்படி அதை ஆராய்ஞ்சு, நிவாரணம் என்ன கண்டு பிடிச்சீங்கன்னு கேட்டேன். ஏன்னா, நல்லா இருந்த நுட்பம் கெட்டுப் போச்சுன்னா கெடறத்துக்கு முன்னால ஏற்பட்ட பிரச்சனையை ஆராய்ஞ்ச முறை ஏன் இப்ப பயனில்லைன்னு புரிஞ்சுக்கலாம்னுதான்! ஆனா நீங்க அதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே? அதான்!"

என்ரிக்கே, விக்ரம் இருவர் முகத்திலும் இருந்த புன்னகை மொத்தமாக மறைந்து கவலையும் துக்கமும் ஆட்கொண்டன. விக்ரம் சோகமாகத் தலையாட்டினார். "நீங்க கேட்கறது சரிதான் சூர்யா. எங்க முன்னேறிய நுட்பத்தைப் பத்தி விவரிக்கற உற்சாகத்துல நான் அந்த வித்தியாசத்தைப் பத்தி நினைக்கலை. மன்னிச்சுக்குங்க!"

சூர்யா தடுத்தார். "சே, சே, அப்படியெல்லாம் மன்னிப்புக் கேட்கும்படியா ஒண்ணும் இல்லை. நம்ம வேலை நடந்தாகணும் இல்லியா? அதுக்காகத்தான். சொல்லுங்க, எப்படி முந்தைய பிரச்சனையை நிவர்த்திச்சீங்க? ஏன் இப்ப அதே வழிமுறை செல்லுபடியாகலை?"

விக்ரம் சோகப் பெருமூச்சு விட்டு, விளக்கலானார். "இந்த மரபணு ஆராய்ச்சித் துறையில ஒரு முன்னேற்றம் வரணும்னா பலப்பல விதமான புரதங்கள், வேதியியல் பொருட்கள் மற்றும் வழிமுறைகள் இவற்றின் நூறு, ஏன் ஆயிரக் கணக்கான சேர்க்கைகளைப் (combinations) பரிசோதிக்கணும். ஒவ்வொரு சேர்க்கைக்கும் பலகாலப் பரிசோதனை. அதுல எதாவது ஒண்ணு சிறிய முன்னேற்றம் கொடுக்கும். அதை அடிப்படையா வச்சு அடுத்தபடியான பலப்பல சேர்க்கைகளைப் பரிசோதிக்கணும். அப்படித்தான் க்ரிஸ்பரின் அடிப்படை நுட்பத்திலிருந்த பிரச்சனைகளுக்குப் படிப்படியா நிவாரணம் செஞ்சு எங்க நுட்பங்களைக் கண்டு பிடிச்சோம்."

என்ரிக்கே இடைமறித்தார். "விக்ரம் ரொம்பத் தன்னடக்கத்தோட விளக்கறார். அப்படி பல்லாயிரச் சேர்க்கைகளைப் பரிசோதிச்சு முன்னேற்றம் காணலாம்னா யார் வேணா பணமும் நேரமும் செலவழிச்சு நுட்பங்களைக் கண்டு பிடிக்கலாமே! உண்மை அது மட்டுமல்ல. இந்த மரபணுத் துறையில, உலகத்துல சில பேருக்குத்தான் சில சரியான வெற்றிகரமான புரதச் சேர்க்கைகளைப் பற்றிப் பிரமாதமான யோசனைகள் உதிக்கக்கூடும். அந்த ஒரு சிலர்ல விக்ரம் ஒருவர். அவர் இல்லாட்டா எங்க நுட்ப முன்னேற்றம் இல்லை. அதுதான் உண்மை!"

ஷாலினியும் ஆமோதித்தாள். "ஆமாம் சூர்யா, எந்த மாதிரிப் புரதங்கள் பரிசோதிக்கணும்னு தேர்ந்தெடுக்கறது மிக முக்கியம். சபாஷ் விக்ரம்!"

விக்ரம் பவ்யமாகப் பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டு மேலே விளக்கினார். அந்த விளக்கம் எந்தக் கதவைச் சூர்யாவுக்குத் திறந்தது, அவர் எப்படித் துப்புத் துலக்கலை முன்னகர்த்தினார் என்பவற்றை மேலே பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline