|
|
|
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே இயற்கையிலும், மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) எப்படி மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்றும் விவரித்தார். பிறகு க்ரிஸ்பர் முறை, அத்துடன் பல்திறன் மூல உயிரணு நுட்பத்தைச் சேர்த்துப் பயன்படுத்தி மிருகங்களின் உடலில் மனித அங்கங்களை வளர்க்கமுடியும் என்பவற்றையும், சமீபத்தில் முழுச் செயற்கை மரபணு எழுத்துக்களே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களை விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் தெரிவித்தார். சூர்யா முதலில் சக நிறுவனரான விக்ரம் மேத்தாவைச் சந்தித்து யூகவேட்டு வீசவே அவர் சினந்து சீறினார். அடுத்து நடந்தது என்ன...
*****
என்ரிக்கேயின் சக நிறுவனரான விஞ்ஞானி விக்ரம் மேத்தா, தனது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி சூர்யா வீசிய யூக வேட்டால் முதலில் அதிர்ந்து போய் வார்த்தை வராமல் திணறினாலும், பிறகு அடங்காச் சினத்தோடு என்ரிக்கேயைப் பார்த்து, "என்னைப் பற்றியே விசாரிக்க வைத்தீர்களா" என்று சீறினார். என்ரிக்கே தன்னையே சூர்யா யூகத் திறமையால் அதிர வைத்ததாக அவருக்கு ஆறுதல் கூறி, சூர்யா விக்ரமின் சொந்த வாழ்க்கை விவரங்களை எப்படி யூகித்தார் என்று விளக்குமாறு வேண்டிக் கொண்டார்.
சூர்யாவும் முறுவலோடு விளக்கலானார். "என்ரிக்கே சொன்னது சரி விக்ரம். விசாரணையில்லை, வெறும் யூகந்தான். நான் விளக்கினா, இவ்வளவுதானான்னு சிரிக்கப் போறீங்க!"
விக்ரம் சற்றே தணிந்து இன்னும் தீராத அவநம்பிக்கையுடன் தொடருமாறு சைகை காட்டினார்.
சூர்யா தொடர்ந்தார். "நான் முதல்ல யூகிச்சது என்ன? நீங்க பெர்க்கலியில படிச்சீங்கன்னுதானே? உங்க சுவர்ல பெர்க்கலி பட்டம் எதுவும் இல்லை. ஆனா, நீங்க பெர்க்கலி மாணவர்ங்கறத்துக்கு மற்ற பல தடயங்கள் இந்த அறையில இருக்கு!"
விக்ரமுக்குப் புரிய ஆரம்பித்தது. "என்ன தடயங்கள்?"
சூர்யா சுட்டிக் காட்டினார். "இதோ பாருங்க உங்க நாற்காலியில ஒரு ஜேக்கட் மாட்டியிருக்கீங்க. அதன் பாக்கெட் மேற்புறம் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் சின்னமும் UC பெர்க்கலி என்ற எழுத்துக்களும் பொறிக்கப் பட்டிருக்கு. மேலும், உங்க மேஜைமேல பெர்க்கலி காஃபி கோப்பை இருக்கு. அது மட்டுமில்லாம பெர்க்கலியின் கரடி (Berkeley Bears) அணி சமீபத்துத்துல நடந்த பெரும் விளையாட்டு (Big game) ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக அணியைத் தோற்கடிச்ச செய்தியை பிரிண்ட் எடுத்து உங்க மேஜைமேல ஒரு ஓரமா வெச்சிருக்கீங்க! இதெல்லாம் வச்சுத்தான் பெர்க்கலி மாணவர்னு யூகிச்சேன்."
விக்ரம் தணிந்து புன்னகைத்தார். "ஓ! நல்ல யூகந்தான்! ஆனா மோனா பத்தி... அதையும் தாண்டி அவளுடைய அலங்கார ஆர்வம் அதெல்லாம்... அதெப்படி யூகிக்க முடியும், அதுவும் சில நொடிகளுக்குள்ள?"
என்ரிக்கே இடைபுகுந்தார். "அதான் சூர்யா விக்ரம்! என்னைப் பத்தியும் அப்படித்தான் சில நொடிகளுக்குள்ள பல விஷயங்களை கவனிச்சு, யூகிச்சு அதிரடிச்சுட்டார். சொல்லுங்க சூர்யா எனக்கும் ஆர்வமா இருக்கு. மோனா பத்தி எப்படி யூகிச்சீங்க?" |
|
சூர்யா முறுவலுடன் விளக்கினார். "மிக மிக எளிது. முதலாவதாக இவங்க ரெண்டு பேரும் தம்பதிகளா எடுத்துகிட்ட புகைப்படங்கள் இதோ பக்க மேஜைமேல கண்ணெதிரா இருக்கு."
விக்ரம் இடைமறித்தார். "ஓகே, அது ஸிம்பிள்தான். ஆனா அதுலல்லாம் மோனாங்கற பேர் இல்லையே?"
சூர்யா தலையாட்டினார். "இல்லைதான். ஆனா, அந்தப் புத்தகம் ஷெல்ஃபைப் பாருங்க. அதுல ரெண்டாவது தட்டுல ஒரு மிக அழகான, மிக விலை உயர்ந்த, வெள்ளி மற்றும் தங்கத்துல செஞ்ச ஃப்ரேமில ரெண்டு பேரும் எதோ கடற்கரையில அன்னோன்னியமா இருக்கற படத்தையும், அதுக்குக் கீழ "விக்ரமுக்கு என்றும் அழியாக் காதலுடன் மோனா" அப்படின்னு பொறிக்கப் பட்டிருக்கறதையும் கவனிச்சு ஒரு படி தாண்டி, அது அவங்கதான்னு யூகிச்சேன்."
விக்ரமின் புன்னகை இன்னும் சற்று மலர்ந்தது! "ஓ, வெரிகுட், வெரிகுட். அப்ப அந்த விலை உயர்ந்த சட்டகத்தை வச்சுத்தான் விலை உயர்ந்த அலங்கரிப்புன்னு சொன்னீங்களா?"
சூர்யா தலையசைத்து மறுத்தார். "அதைமட்டும் வச்சு இல்லை, ஆனா அதுவும் ஒரு அம்சந்தான். இந்த அறையைச் சுத்தி கவனியுங்க. விலை உயர்ந்த மிங் வேஸ்கள், இத்தாலிய வெனிஸ் கண்ணாடி வார்ப்புகள், ஜன்னல்கள் மேல் பல்நாட்டுப் பட்டுத் திரைச்சீலைகள் இப்படி பலதரப் பட்ட விலை உயர்ந்த அலங்கரிப்புக்கள் உள்ளனவே. அவற்றையும் வைத்துத்தான் அப்படி யூகித்தேன்!"
விக்ரம் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். "வாவ், பிரமாதம். நான்கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு உஷ்ணமாயிட்டேன். ஸாரி என்ரிக்கெ, ஸாரி சூர்யா!"
என்ரிக்கே வலக்கை கட்டை விரலை உயர்த்திக் காட்டி முறுவலித்தார். சூர்யாவும் "சே சே. மன்னிப்பெல்லாம் எதுக்கு, உங்க நிலைமைல பெரும்பாலும்..."
கிரண் இடைமறித்தான். "பெரும்பாலும் என்ன பெரும்பாலும்? ஒட்டு மொத்தமா ஒரே கேஸ்தானே இது. ஒவ்வொரு முறையும் சூர்யா யூகிக்க அவங்க கோபிக்க, அப்புறம் விளக்க, அப்புறம் இளிக்க. அவ்வளவுதானே!"
அவன் விளக்கத்தைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். என்ரிக்கே கிரணையும் ஷாலினியையும் விக்ரமுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
"விக்ரம் இது கிரண். அவர் சூர்யாவுக்கு உதவி. சரியான கோமாளி. நான் இவர் ஜோக்குகளைக் கேட்டு சிரிச்சது போல சமீப காலமா சிரிச்சில்லை! இவங்க ஷாலினி. எனக்கு ரொம்ப நாளாத் தெரியும். நல்ல மருத்துவ ஆராய்ச்சியாளர். இவங்கதான் சூர்யாவை நம்ம பிரச்சனையை விசாரிக்கப் பரிந்துரைச்சாங்க."
விக்ரம் மலர்ந்த புன்னகையுடன் அனைவரையும் வரவேற்றார். "வெல்கம், வெல்கம்! இப்ப நான் உங்க விசாரணைக்கு எப்படி உதவ முடியும்?" சூர்யாவே பதிலளித்தார். "இந்த நிறுவனத்தின் முன்னேறிய க்ரிஸ்பர் தொழில்நுட்பத்துக்கு மூலகர்த்தா நீங்கள்தான்னு என்ரிக்கே கூறினார்..."
விக்ரம் குறுக்கிட்டார். "சே சே... என்ரிக்கே ரொம்ப அளவுக்கதிகமா என் புகழ் பாடறார். அது அவருடைய தன்னடக்கம். இந்த நிறுவனத்தில் பல தலைசிறந்த விஞ்ஞானிகள் இருக்காங்க. நிச்சயமா என்ரிக்கே தலைமையில் ஒரு கூட்டு முயற்சின்னுதான் சொல்லணும்!"
விக்ரமின் புகழ்ச்சியைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்ட என்ரிக்கே, "இப்படிச் சொல்றது உங்க தன்னடக்கம் விக்ரம். நீங்கதானே முதல்ல இப்படி இப்படி மாறுதல் செஞ்சா க்ரிஸ்பர் பலவீனங்களை நிவர்த்திக்கலாம்னு யோசனை குடுத்தீங்க? அப்புறந்தானே நாம் நிறுவனத்தையே ஆரம்பிச்சு நீங்க சொன்ன சிறந்த விஞ்ஞானிகளையும் சேர்த்துக்கிட்டோம். அப்ப நீங்கதானே மூலகர்த்தா? அதுக்கப்புறம் குழுவின் சாதனைதான் ஒத்துக்கறேன்."
சூர்யா தொடர்ந்தார். "அப்படி மூலகர்த்தாவான நீங்களும், தலைசிறந்த மற்ற விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய க்ரிஸ்பர் நுட்பம் எப்படி தவறாப் போச்சுன்னு ஏன் கண்டு பிடிக்க முடியலை? உங்கள் நுட்பந்தானே, நீங்கள் உருவாக்கிய படிகளில் ஒரு ரெண்டு படி பின்னால போய் மீண்டும் புதுசா உருவாக்கலாமே? அப்போ முதல்ல சரியா வேலை செஞ்சபடி பிறகும் வேலை செய்யலாமே!"
என்ரிக்கே, விக்ரம் இருவர் முகத்திலும் ஆச்சர்யம் தோன்றி மறைந்து சோகம் ஆட்கொண்டது. என்ரிக்கே விக்ரமைத் தூண்டினார். "நீங்களே அந்த சோகக் கதையை சொல்லுங்க விக்ரம். என்னால முடியாது"
விக்ரம் மீண்டும் ஆச்சர்யத்துடன் சூர்யாவைப் பாராட்டினார். "நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி சூர்யா. நாங்களும் முதல்ல அப்படித்தான் நெனச்சோம்! இதுனால என்ன பரவாயில்லை மீண்டும் வழிமுறையை கடைப்பிடிச்சு முயன்றா சரியாப் போயிடும்னுதான் நம்பினோம். ஆனா..."
விக்ரம் ஆழ்ந்த சோகத்துடன் தன் விவரணையை நிறுத்திவிட்டு "ஹூம்..." என்று பெருமூச்சு விடவே ஷாலினி அவரைத் தொடருமாறு தூண்டினாள். "ஆனா என்ன விக்ரம் சொல்லுங்க. இது சாதாரணமா எல்லா ஆராய்ச்சியிலயும் பின்வாங்கி முன்போகறா மாதிரிதானே? உங்க நுட்பத்துல ஏன் அப்படிச் செய்யமுடியலை?" விக்ரம் விளக்கினார்...
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|