நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
|
|
|
கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப் பின்னரும், சுனாமியால் நாகை மாவட்டம் பாதிக்கப்பட்ட போதும் உதவிபுரிய முன் வந்தது சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம். சான் ஃபிரான்சிஸ்கோ பகுதித் தமிழ் மன்ற உறுப்பினர்களைத் தம் அமெரிக்கப் பயணத்தின்போது கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கிருத்திகா தம்பதியர். அவர்கள் பயணத்தில் ஓர் அங்கமாக சான் ஃபிரான்சிஸ்கோவும் இருந்ததால், இது எளிதாயிற்று.
டாக்டர் ராதாகிருஷ்ணன் தம்பதியருக்கு ஜூன் 19, ஞாயிறு அன்று சான் ஃபிரான் சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான் ஓசே பொது நூலக அரங்கில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் சுனாமிப் பேரழிவு நடந்த நாள் முதல் இன்று வரை நடந்த, நடந்து வரும் பணிகள் அனைத்தையும் ஒரு பவர் பாயிண்ட் காட்சி மூலம் விளக்கினார். அழிவுகளின் தாக்கம் எவ்வளவு, எத்தனை உயிரிழப்பு, உயிர்காக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், புனரமைப்புப் பணிகள், நிவாரணப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக விளக்கினார். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பிற சேவை நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நிவாரணப் புனரமைப்புப் பணிகளில் எவ்வாறு செயல் படுகின்றன என்பதை விளக்கினார்.
ராதாகிருஷ்ணன் துயரமான தருணங்களில் தங்கள் அன்பையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்திய தமிழ் மன்ற உறுப்பினர் களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவர் பேச்சுக்குப் பின் மன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறினார்:
அமெரிக்காவில் முன் கூட்டியே சுனாமி எச்சரிக்கை கொடுப்பது போல் ஏன் இந்தியாவில் செய்யவில்லை?
இந்தியப் பெருங்கடலில் இவ்வளவு பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சுனாமி வரும் வாய்ப்பு இருக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால், மார்ச் 28-ல் மீண்டும் இந்தோனேசியாவில் பெரும் பூகம்பம் வந்த போது இந்தியா கொடுத்த எச்சரிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொண்டு மிகவும் ஒழுங்காகக் கடற்கரையிலிருந்து பின் வாங்கினார்கள். டிசம்பர் 26-ஐ விட மார்ச் 28-ல்100 சதவீத முன்னேற்றம்.
குஜராத் நிலநடுக்கத்துக்குப் பின் வந்த அனுபவத்துக்குப் பின்னால், இடர்ப்பாடு நடந்தவுடன் அரசின் நிவாரணப் பணி தொடங்கியிருக்க வேண்டும். ராணுவமும் வந்திருக்க வேண்டும். இருந்தாலும், முதல் 48 மணி நேரத்தில் ஒரு நிவாரணமும் நடக்கவில்லையே ஏன்?
இது யாரும் எதிர்பார்க்காத பேரிடர். என் பேச்சில் முதல் மூன்று நாள்களில் குழப்பம் இருந்தது என்றுதான் நானும் சொன்னேன். இந்திய ஜனநாயக முறைப்படி, ராணுவம் கூட மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பின் பேரில், அவர் கேட்டதைத்தான் செய்ய வேண்டும். நாகப்பட்டினத்திலும், சுனாமிக்கு முற்பட்ட நவம்பரில் மழைக்கால வெள்ள நிவாரணப் பணியைத் திறம்படச் செய்தார்கள்.
ஆனால், சுனாமியால் மாவட்டம் நிலை குலைந்து தடுமாறி விட்டது உண்மைதான். நாகப்பட்டினத்தில் ராணுவத்தின் பொறுப்பு கரையைத் தாண்டியிருந்த படகுகளை அகற்றுவது. அதை வெகு திறமையாகச் செய்தார்கள்.
தொண்டு நிறுவனங்களோடு ஒத்துழைக்கச் சரியான நெறிமுறைகள் இல்லாததால் உடனடியான மீட்பு நடவடிக்கைகளில் குழப்பம் இருந்தது உண்மைதான். எதிர்பாராத இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதில் நேர்ந்த பிழைதான் இது. இப்போது சுனாமி பற்றிய நடவடிக்கைகளில் முன்னேறியிருக்கிறோம்.
ஆனாலும், எரிகற்கள், எரிமலை, மண்சரிவு போன்ற அபூர்வமான இடர்ப்பாடுகளுக்கு நாம் ஆயத்தமில்லை. எந்த இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்க வேண்டும். தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு முன்னேற முயற்சி எடுக்கிறோம். அந்த முயற்சிகளின் தொடர்பால்தான் நான் அமெரிக்காவில் வந்து இங்குள்ள இடர்ப்பாடு நிவாரணங்களைப் பற்றி அறிந்து கொள்ள அமெரிக்கா வந்துள்ளேன். சுனாமி பற்றிய அறிவிப்புகளை மேல் நாடுகள் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.
தற்காலிக வீடுகள் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கின்றன. மற்ற இடங்களில் இல்லை. அங்கேயும் அதன் தரம் குறைவு ஏன்?
உண்மைதான். இவை வெய்யில், மழை தாங்காது. கும்பகோணம் தீ விபத்தால் ஓலைக்கூரைகளை ஏற்க முடியவில்லை. சில இடங்களில் குடிநீர்க் குழாய்க்கு அருகிலேயே கழிவுநீர்க் குழாயை வைத்து விட்டார்கள். கழிவறைகள் சரியாகக் கட்டப்படவில்லை. இதில்தான், தொழில்நுட்பப் பரிமாற்றம் தவறிவிட்டது என்பேன். கோபேயிலும், அமெரிக்காவிலும், தற்காலிகக் குடியிருப்புகள் அற்புதமாய் இருந்தன. ஆனால் நம்மோடு பகிர்ந்து கொள்ளவில்லை. குடியிருப்புகளுக்கான தரங்கள் உயர் அதிகாரிகளைத் தவிர மற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. நாகப்பட்டினத்தில் பல இடங்களில் தற்காலிக வீடுகள் நன்றாகக் கட்டியிருந்தாலும், வேறு பல இடங்களில் இன்னும் முன்னேற வேண்டும்.
குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற குடியிருப்புகள் இல்லை இவை. இதற்கான தரப்பாடுகள் உருவாக்கப் படவேண்டும். |
|
மீட்சிப் பணியில் அரசியல் குறுக்கீடு இருந்ததா?
தமிழக அரசியல் கட்சிகள் எதிரெதிர் துருவங்களாக இருப்பது உண்மைதான். நான் இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் பணி புரிந்திருக்கிறேன். ஆனால், இடர்ப்பாடுகள் என்று வரும்போது, தொலைக்காட்சியில் காட்டுவது போல், இரண்டு அணிகளும் சண்டை போடாமல் சேர்ந்துதான் தொண்டாற்றுகிறார்கள். அன்றாட அலுவலில் நீங்கள் நினைக்கும் அளவுக்குக் குறுக்கீடு இல்லை. எங்கே சிக்கல்கள் இருக்கின்றன என்றால், ஓர் ஊரில் 4000 பேருக்கு நிவாரண உதவி அளித்தால் அதில் ஒரு பத்து பேருக்குத் தவறாக நிவாரண உதவி போய்ச் சேரும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசின் கொள்கை என்னவோ, பெரிய தொகைகள் வழங்கும்போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டும், ஆனால் ஆயிரம் ரூபாய் போன்ற சிறு தொகை வழங்கும்போது எல்லோரையும் சான்றுகள் கேட்டு உலுக்க வேண்டாம். இதனால் தகுதியற்ற சிலருக்குப் பணம் போயிருக்கலாம்.
நாகப்பட்டினம் போல மற்ற மாவட்டங் களில் ஏன் மீட்சிப்பணி சுறுசுறுப்பாக இல்லை.
நாகைக்கு நல்ல நிவாரண நிதி கிட்டியது. ஐநா வங்கி போன்றவற்றின் மூலம் 400 கோடி ரூபாய் கிடைத்தது. பல தொண்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்களை விரைவாக நிறைவேற்றினோம். அரசின் மானியமும் கிட்டியது. வெகுவாகப் பாதிக்கப் பட்ட அக்கரைப் பேட்டையில் ·ப்ளை ஓவர் முடியப்போகிறது. 30 லட்சம் ரூபாய் செலவில் சமூகக் கூடம், 40 லட்சம் ரூபாய் செலவில் நல்ல பள்ளிக் கட்டிடம், நல்ல சாலை ஆகியன முடிந்து விட்டது.
மற்ற மாவட்டங்களில், இந்தோனேசியா, இலங்கை, நாகப்பட்டினம் அளவுக்குச் சேதம் இல்லை. நாகையில் ஓரளவுக்கு நிவாரணம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. மீனவர்களுக்கு வேறு தொழில் வாய்ப்பு போன்றவற்றில் முன்னேற்றம். மற்ற மாவட்டங்களில் முயற்சி தொடர்ந்து வருகிறது. நாகையில் 6 மாதத்தி லிருந்து 1.5 ஆண்டுகளுக்குள் தற்காலிகக் குடியிருப்புகளிலிருந்து நிரந்தரக் குடியிருப்புகளுக்கு மாறலாம். மற்ற இடங்களில் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம்.
நீங்கள் பொறுப்பேற்ற மாவட்டங்களில் நல்ல முத்திரை குத்தி வருகிறீர்களே..
என் கோட்பாடுகள் சில எனக்கு உதவியாக இருக்கின்றன என நம்புகிறேன். அதிகாரத் தோரணையில் பவனி வருவதை விட்டு மக்களோடு பழகிப் பணியாற்றினால்தான் வெற்றி பெற முடியும். அதிகாரிகளுக்கும் சுயமரியாதை இருக்க வேண்டும். சினிமா காமெடி போல் ஆட்சியாளர்கள், கட்சிகள், ஊடகங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதிகாரிகள் என்றால் லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்று பெயரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. குறைகளைச் சுட்டிக்காட்டும்போது ஏற்றுக் கொண்டு திருத்த முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்கள் பாராட்டுகிறார்கள் என்று நம் வேலையில் திருப்தி கொண்டு இருக்காமல் எச்சரிக்கையாகத் தொடர்ந்து முன்னேறும் மனப்பான்மை வேண்டும்.
அதே நேரத்தில் எங்கள் வெற்றிக்கு ஊடகங்கள், பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. அமெரிக்காவில் இருப்பது போல் சுத்தம், ஈடுபாடு, விதிகளைப் பின்பற்றும் மனப்பான்மை மக்களுக்கு வேண்டும். சுணக்கமாக இருக்காமல், விதிகளை மீறுவதற்காக லஞ்சம் கொடுப்பது போன்றவற்றை விலக்கி, விதிகள் நமது நன்மைக்காக என்று மக்கள் நடந்தால் முன்னேறுவோம்.
சந்திப்பு / தொகுப்பு: மணி மு. மணிவண்ணன் ஒலிபெயர்ப்பு: கேடிஸ்ரீ படங்கள்: சிவா சேஷப்பன் |
|
|
More
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
|
|
|
|
|
|
|