|
வாலால் கடிக்க வந்திருக்கலாமே! |
|
- |ஜனவரி 2019| |
|
|
|
|
ஒரு விவசாயியிடம் கடூரமான நாய் ஒன்று இருந்தது. அவர் வீட்டுக்கு வந்த ஒருவர் மீது அந்த நாய் பல்லைக் காட்டி உறுமிக்கொண்டு கடிக்கப் பாய்ந்தது. சரியான நேரத்தில் அவர் கீழே கிடந்த முள்கம்பை எடுத்து அதன் தலையில் ஒரு அடி வைத்தார். வலியில் ஊளையிட்டபடி நாய் பின்வாங்கியது. நாயின் குரலைக் கேட்ட எஜமான் வந்து பார்த்தார். தன் வீட்டுக்கு வந்தவர் அதன் தலையில் புண் ஏற்படுத்தியதைப் பார்த்து விவசாயி கோபம் அடைந்தார். அவரை அரசவை நீதிமன்றத்துக்கு இழுத்தார்.
"நாய் மிகவும் சாதுவானது என்று விவசாயி கூறுகிறாரே, நீ ஏன் அதை அடித்தாய்?" என்று அரசர் கேட்டார். "அது கடிக்க வாயைத் திறந்துகொண்டு என்மீது பாய்ந்தது" என்றார் வந்தவர். "அதற்காக முள்கம்பால் அடிக்க வேண்டியதில்லையே, மழமழப்பான குச்சியைப் பயன்படுத்தி இருக்கலாமே" என்று வாதிட்டார் விவசாயி. "உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும்போது எவருக்கும் எதைக்கொண்டு அடிப்பதென்று யோசிக்க நேரம் கிடையாது. எது கையில் கிடைக்கிறதோ அதைத்தான் பயன்படுத்துவார்" என்று கூறியதோடு வந்தவர் நிற்கவில்லை. "நாய் என்னைத் தன் வாலால் கடிக்க வந்திருக்கலாம்; அதை விட்டுவிட்டுப் பல்லால் கடிக்க வந்தது. அதனால் நானும் அதுபோலவே கூர்மையான ஒன்றால் பதிலடி தரவேண்டி வந்தது" என்று ஒரு போடு போட்டார்.
இந்தப் பதிலின் உண்மையைப் புரிந்துகொண்ட அரசர் அவரை விடுவித்தார். விவசாயி தனக்குப் பிரியமான நாய் என்பதால் இந்த உபாயங்களைச் செய்து பார்த்தார். அதற்கேற்ற பதிலுபாயத்தை வந்தவரும் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. நேர்மையான வழியை விவசாயி கடைப்பிடித்திருந்தால் இந்தத் தொந்தரவு ஏற்பட்டிருக்காது.
நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2017. |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|