நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றக்கூட்டம் வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
|
|
|
கும்பகோணம் பள்ளித் தீவிபத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு என் நன்றியை வளை குடாப் பகுதித் தமிழர்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஏனென்றால் முதன்முதலாக இத்தனை பெரிய விபத்து நடந்த போது, நான் எதேச்சையாக என்னுடைய மின்னஞ்சலைப் பார்த்தேன். வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்திலிருந்து நாங்கள் உங்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை செய்யலாம் என்று மின்னஞ்சல் வந்திருந்தது. இந்த மின்னஞ்சல்களைப் பார்க்கிற போது நிஜமாக நான் மிகவும் பெருமைப்பட்டேன். நம் தேசத்திலிருந்து தொலைதூரத்தில் நீங்கள் இருந்தால்கூட உங்களுக்கு நம் நாட்டின் மீது உள்ள பற்று, அதைப்போல் தொடர்ந்து சுனாமிக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். உங்களுக்கு நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும் மனிதநேயத்துடன் நீங்கள் செய்தது மனதைத் தொடுகிறது.
கும்பகோணம் விபத்து நடந்த வெகு சீக்கிரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைந்து வந்து துரிதமான பல நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார்கள். முதலமைச்சரின் உத்தரவினால், பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்வது, எரிந்த பள்ளிக்குக் கொடுக்கப் பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது, உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு மற்றப் பள்ளிகளில் சேர்க்கும் பணி, நிவாரண நிதி அறிவித்தல் என்று இவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம் என்றவுடன் பொதுமக்கள் அமைதியானார்கள்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சென்னை கீழ்ப்பாக்கம், வேலூர் சி.எம்.சி. போன்ற பெரும் மருத்துவமனைகளிலிருந்து வந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவம் பார்த்தோம். இதனால் உயிர்பிழைத்த குழந்தைகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டது. குறிப்பாக நான்கு அல்லது ஐந்து குழந்தைகளுக்குப் பலமுறை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார்கள்.
சில குழந்தைகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை இலவசமாகச் செய்தது. மற்ற மூன்று குழந்தைகளுக்கு டிவிஎஸ் நிறுவனத்தாரின் தொண்டு நிறுவனங்கள் இலவசமாகச் செய்து கொடுத்தன. சரியாக அறுவை சிகிச்சை என்பது இரண்டு மூன்று தடவை செய்தால்தான் அது சரியாக வருகிறது. மற்றக் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி தேவைபடவில்லை. சுமார் 12 குழந்தைகள் பிளாஸ்டிக் சர்ஜரி இல்லாமல் குணப்படுத்தப்பட்டார்கள். விஜய் என்கிற சிறுவனும் மற்றொரு பெண்ணும் இந்த அறுவை சிசிச்சை அளிக்கப்பட்டு தற் போது நலமாக இருக்கிறார்கள்.
விசாரணைக்குழுவின் முடிவுகள் வந்த பிறகு அதன் பரிந்துரைகளைச் செயலாற்றுவோம். அதற்குள் சில குறிப்பான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டோம்.
1. பள்ளிகளில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளன. 2. அடிக்கடி, கண்டிப்பான ஆய்வுப் பார்வையிடல் 3. மதிய உணவுச் சமையற்கூடங்களில் காங்கிரீட் கூரைகள் 4. நெருப்புப் பிடிக்காத கட்டுமானப் பொருள்களில் பள்ளிக் கட்டிடங்கள் 5. பள்ளிகளில் தீ விபத்து மற்றும் பேரிடர் பாதுகாப்புப் பயிற்சி என்று பல நடவடிக்கைகளைச் செயற்படுத்தியுள்ளோம். |
|
ஆனாலும், பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டும் என்ற கருத்து மாற வேண்டும். பொதுமக்களே அரசின் விதிகளை மீறி ஒரே ஆட்டோவில் 20 பிள்ளைகளைத் திணித்து அனுப்புவது கூடாது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பாதுகாப்பு விதிகளை மீறுகின்றனவா என்று பார்க்க வேண்டும். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்குச் சான்றிதழ் விலக்கப்படும். இது ஏற்கனவே உள்ள விதிமுறைகள்தாம். கும்பகோணம் பள்ளியில் இந்த விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இந்தத் தீ விபத்து நடந்திருக்காது.
இந்த விபத்து வந்த பிறகுதான் எல்லோருமே இந்த விதிமுறைகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்.
இல்லாவிட்டால் அரசாங்கம் பள்ளிகளை நச்சரிப்பதாக நினைத்தார்கள். பாதுகாப்பு விதிகள் தீவிபத்துகளைப் பற்றியன மட்டுமல்ல. நில நடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களுக்கும் தான். இது போன்றவற்றின் போது எவ்வாறு நடக்க வேண்டும் என்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.
பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்று பார்வையிடுவதற்கு அரசு மட்டுமல்லாமல், வெவ்வேறு நிறுவனங்களும் சேர்ந்து செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சான்று வழங்கும் கட்டிடப் பொறியாளர், மற்றும் பள்ளி உரிமையாளர்கள் எல்லோருமே சேர்ந்து பொறுப்பேற்றால், பள்ளிகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 நாளை நாம் நினைவுகூர்வது போல, கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நடந்த ஜூலை 16ஆம் நாளைக் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தென்றல் முன் வைத்தது. ஏற்கனவே இந்தியா முழுவதும் ஜூலை 16-ஐப் பாதுகாப்பு தினமாக அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார். அப்படிப்பட்ட அறிவிப்பு வந்தால், அதுவே இந்தக்கொடும் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
சந்திப்பு / தொகுப்பு: மணி மு. மணிவண்ணன் ஒலிபெயர்ப்பு: கேடிஸ்ரீ படங்கள்: சிவா சேஷப்பன் |
|
|
More
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றக்கூட்டம் வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
|
|
|
|
|
|
|