|
ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-3) |
|
- ராஜேஷ், ஷான்|ஜனவரி 2019| |
|
|
|
|
மதிய உணவிற்குப் பிறகு பெரியவர்கள் லிவிங் ரூமுக்கும், குழந்தைகள் வெளியே விளையாடவும் போனார்கள். அரவிந்த் தனக்குத் தெரியாத பேஸ்பால் விளையாட்டை விளையாட விரும்பினான். ஆனால், அனுவோ கிரிக்கெட் விளையாடுவதிலேயே குறியாக இருக்கவே, எல்லோரும் அதையே விளையாடினார்கள்.
"அருண், உன்னிடம் ஸ்டம்ப்ஸ் இருக்கா?" என்று அனு கேட்டாள்.
"ஸ்டம்ப்ஸ்? அப்படின்னா?" என்று அருண் கேட்டு வியந்தான்.
"அய்யோ அய்யோ! இதுகூடவா உனக்குத் தெரியாது?" என்று அனு ஆச்சரியப்பட்டாள். "அது இல்லாம கிரிக்கெட் ஆடவே முடியாது."
"அப்போ வா, பேஸ்பால் விளையாடலாம். அதுக்கு ஸ்டம்ப்ஸ் எல்லாம் வேணாம்" என்று அருண் பதிலளித்தான். அருணுக்குக் கிரிக்கெட் கொஞ்சம் வியப்பாக இருந்தது. பேஸ்பால் மாதிரி எளிதாக அவனுக்குத் தோன்றவில்லை. பேட்ஸ்மன், பௌலர், விக்கெட் கீப்பர் போன்ற வார்த்தைகள் அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தன. கிரிக்கெட் பேட்டைப் பார்த்தாலே அவனுக்குச் சிரிப்பாக வந்தது. பேஸ்பால் பேட் மாதிரி உருண்டையாக இல்லாமல் தட்டையாக இருந்தது. கிரிக்கெட் பந்தும் சிகப்பு நிறத்தில் ஆப்பிள் பழம்போல இருந்தது. ஒவ்வொன்றும் புதிதாக அருணுக்குப் படவே, அவனுக்கு ஆர்வம் அதிகரித்தது. அவனுக்கு விளக்கம் கொடுப்பது அனுவுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது.
எப்படா விளையாட்டு ஆரம்பமாகும் என்று இருந்தது அரவிந்துக்கு.
"அனு, அருணுக்கு விளையாட, விளையாட எல்லாம் புரியும். ஆரம்பிக்கலாமா?" என்று அரவிந்த் கேட்டான்.
"முடியாது. நான் சொல்லி முடிக்கும்வரை ஆட்டம் கிடையாது" என்று அனு மறுத்துவிட்டாள். அவள் கையில் பந்து இருந்ததால் அரவிந்த் வாயை மூடிக்கொண்டு இருந்தான்.
அனு ஒவ்வொன்றாக விளக்க, போதும் போதும் என்று ஆகிவிட்டது அருணுக்கு. "அனு, விளையாட ஆரம்பிக்கலாமே?" என்று கெஞ்சாத குரலில் கேட்டுப் பார்த்தான்.
"அருண், ஆட்டம் புரிஞ்சுக்காம ஆடப் பார்த்தா, தப்புத்தப்பா ஆடுவே. முதல்ல ஒழுங்கா கத்துக்கோ" என்று அருணை ஒரு அதட்டுப் போட்டாள். 'அரவிந்த் மாதிரி எல்லாத்துலயும் அவசரக்குடுக்கையா இருக்காதே."
அனு அப்படிச் சொன்னதும் ஆத்திரத்தில் அனுவை நோக்கிப் போனான் அரவிந்த். அருண் ஓடிப்போய், அரவிந்தைச் சமாதானப்படுத்தி திரும்பிப் போகச் சொன்னான். ஒரு வழியாகப் புரிந்துகொண்டு அருண் பேட் செய்யத் தயாரானான். அனுவிற்கும் ஆட ஆரம்பிக்கலாம் என்று தோன்றிவிட்டது. அனு பந்து வீசப் போனாள். அரவிந்த் பின்பக்கம் விக்கெட் கீப்பராக அமர்ந்தான். அருணுக்கு அனு என்ன பண்ணப் போகிறாள் என்பதே புதிராக இருந்தது. அருண் எல்லாத் கவசங்களையும் அணிந்துகொண்டு விண்வெளி வீரனைப்போலக் காட்சியளித்தான்.
"அருண், நான் வேகமாக வீசவா, இல்லை சுழல் பந்து போடவா?" என்று கேட்டாள்.
"அப்படீன்னா?" அருண் விழித்தான்.
"சரியா சீன் போடறா" அரவிந்த் முணுமுணுத்தான். "பெரிய ஸ்டார்னு நினைப்பு."
அனு மறுபடியும் கத்திக் கேட்கவே, ஏதோ ஒன்று சொன்னால் போதும் என்று நினைத்த அருண், "வேகப்பந்து" என்று பதில் கொடுத்தான். |
|
"ஆர் யூ ஷ்யூர்? உன்னால சமாளிக்க முடியாது" என்றாள் அனு.
"எல்லாம் பெரிய சீன்" என்று அரவிந்த் மீண்டும் முணுமுணுத்தான்.
"பரவாயில்லை அனு, நான் முயற்சி பண்றேன்" என்றான் அருண்.
அனு பேஸ்பால் பிட்ச்சர் போல ஓரிடத்தில் நின்று பந்தை வீசாமல், ஓடி வந்து வீசினாள். அருண் பேட்டைச் சுழற்றினான். பந்து பேட்டில் நன்றாகப் பட்டுப் பறந்துபோனது.
"That was a good length delivery and he hits over the long on. Wow! Sixer" என்று அரவிந்த் பின்னால் இருந்து வர்ணித்தான். "அருண், நீ மொதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டே. அற்புதம்."
அதைக் கேட்டதும் அனுவுக்குக் கோபமும் அழுகையுமாக வந்தது. அடுத்த பந்தை இன்னும் ஆக்ரோஷமாக வந்து வீசினாள். அதையும் அருண் தூக்கி அடித்தான்.
"Wow! That"s another six. No stopping Arun" என்று சிரித்துகொண்டே சொல்லி அரவிந்த் அனுவை மேலும் வெறுப்பேற்றினான். அனுவிற்குத் தாங்க முடியாமல் கோபம் கலந்த அழுகை கூடியது.
"அனு, அருணைப் பாரு, இதுதான் முதல் தரம் விளையாடுறான். உன் பௌலிங்கை எப்படி விளாசறான் பாரு. உன்னுட வீராப்பு எல்லாம் தூள் பண்ணிட்டான்."'
அருணுக்கு முதலில் குஷியாக இருந்தாலும், அனுவின் கோபத்தைப் பார்க்கப் பார்க்க, என்னாடா இது, சரியான அண்ணன் தங்கச்சி சண்டைல மாட்டிட்டோமேன்னு இருந்தது. "அரவிந்த், அனுவைச் சீண்டாதே, ப்ளீஸ்" என்று பணிவாகக் கேட்டுக்கொண்டான். அரவிந்த் சட்டை செய்யவில்லை.
"நீ சும்மா இரு அருண். இவளுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். ரொம்பதான் show off பண்ணினா பாரு" என்று அரவிந்த் பதில் சொன்னான்.
அனுவின் முகம் ரத்த நிறமாக மாறியது. ஓடி வந்து அடுத்த பந்தை வீசினாள். அது ஒரு beamer. பந்து தரையில் விழாமல் நேராக வந்து அருணின் நெஞ்சில் அடித்தது. அருண் 'ஆ' என்று கத்திக்கொண்டு கீழே விழுந்தான். அவனது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளிருந்து பெரியவர்கள் ஓடி வந்தார்கள்.
"என்ன ஆச்சு? என்ன ஆச்சு?" என்று பாலா அருணைப் பார்த்து பதறிப் போய்க் கேட்டள். கீதா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அப்பாக்கள் இருவரும் தூரவே நின்றார்கள்.
"அம்மா, அனு கோவத்துல அருண் மேல Beamer போட்டுட்டா" என்று அரவிந்த் முந்திக்கொண்டு கோள் மூட்டினான்.
"இல்லை அத்தை, விளையாடும் போது தெரியாம பட்டுருச்சு" என்று அருண் தன் நெஞ்சைத் தடவிக்கொண்டே சொன்னான். "அனு ஒரு தப்பும் பண்ணல."
அனு பேசாமல் உம்மென்று நின்று கொண்டிருந்தாள். பெரியவர்கள் என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டார்கள். "சரி, சரி. விளையாடினது போதும். அருண், நீ சட்டையைக் கழட்டு. அடி எப்படிப் பட்டிருக்குன்னு பார்க்கிறேன்" என்று பாலா சொன்னாள்.
அருண் சட்டையைக் கழட்டினான். பந்து பட்ட இடம் சிகப்பாக வீங்கி இருந்தது. "அச்சச்சோ! இது நம்ம வீட்டில உள்ள ஆப்பிள் மாதிரி இல்ல சிகப்பா, பெரிசா வீங்கி இருக்கு" என்று புலம்பினாள் பாலா.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: ஷான் |
|
|
|
|
|
|
|