|
|
|
வருசா வருசம் கண்ணோரத்தில் லேசா ஈரத்தையும் கொடுக்கும் நாள்தான் இன்னைக்கு. அப்பாவோட உள்ளங்கை தலைகோதி தடவிக் கொடுக்குற மாதிரி ஒரு சிலிர்ப்பு... இன்னைக்கு அப்பாவோட நினைவு நாள். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு "அப்பஞ் செத்ததும் புள்ளைக மடையில்லாத குளம் மாதிரி"ன்னு. நிஜம்தான். அரவணைக்கவும் ஆளில்ல. அள்ளிக்கவும் சனமில்ல. பிள்ளையைப் பெத்தா கண்ணீரும் தென்னையை வைச்சா இளநீரும்ன்னு சொல்லுவாங்களே. எங்கப்பனுக்கு நான் முதல் ரகம்.
சிறு வயசில அவரோட வண்டி மாட்டு சாட்டக்கயிறு எம் முதுகில் கோடு போடாத நாளே இல்லைன்னுதான் சொல்லணும்... இந்த இசக்கிப் பயலோட சேர்ந்து நீர்க்கோழி பிடிக்கப் போனாம்பான்னு அந்த நேரத்தில் வத்த வைப்பான் எங்கண்ணன். எமகாதன். என்னதான் அடிச்சாலும் இராத்திரியில் சின்னவன் சாப்பிட்டு படுத்தானான்னு கேட்டு வைப்பாரு. இல்லைன்னு பதில் வந்தா, எலே ராசா எந்திரிலேன்னு எழுப்பிச் சாப்பிட வைச்சுட்டு, பிள்ளைய இப்படிப் போட்டு அடிச்சுட்டேனேன்னு, தேங்கா எண்ணையத் தடவி விட்டுப் பொலம்பும் பாசக்கார பாமரன்தான் எங்க அப்பா.
நினைவு தெரிஞ்சு அவருக்கு விவசாயந்தான் தொழில், வேலை, சொத்து, அடையாளம் எல்லாமே. தென்னை மரம் ஏறுறதுல இருந்து வாழைக்கி வொரம் வைக்குற வரைக்கும் மனுசரு மம்பட்டி, தூக்குச் சட்டியோட திரியாத நாளே இல்ல. எங்க தோப்பில் இருக்கும் அத்தனை மரத்துகிட்டேயும் அவுகளுக்கு ரொம்ப பரிச்சயமுண்டு. சின்ன வயசுல நான்லாம் அவரோட தோப்புக்கு போவேன். தென்னைக்கு மடைய மாத்தி வெட்டும்போது கிணத்துத் தண்ணியிலதான் ஊறிக்கிட்டிருப்பேன். கண்ணெல்லாம் செவந்து ஆட்டம் போட்டு குதிச்சு கிடந்து சிநேகிதனுவள தண்ணில் தள்ளிவிட்டு விளையாண்டு களைக்கும்போது வந்து, 'லேய்..'ன்னு ஒரு அதட்டல்ல மொத்தப் பேரையும் அடக்கிட்டுப் போய்டுவாரு.
புதுசா தோப்பிலே தென்னங் கன்னு நடும்போது என்னைய இல்லன்னா எப்பவாச்சும் அண்ணன கூப்பிட்டுக் கைத்தொட்டு வைக்கச் சொல்லுவாரு. தென்னை மரங்களைப்பத்தி அவுகளுக்கு அத்தனை விசயமும் அத்துபடி. மழைக்காலத்தில் இடி விழுந்து எரிஞ்சு போன ஒரு தென்ன மரத்து தடியை மாமரத்துக் கிளையில் கட்டி வைச்சிருந்தார். மூணாவது நாள்ள அந்த தோப்புல வெள்ளை முகமூடி மாதிரி ஆந்தை ரெண்டு அலையுது. எப்போய்... ஆந்தை கடிக்காதான்னு கேட்டதுக்கு இந்த ஆந்தைக அழிஞ்சு போற விளிம்பில் இருந்த பறவை. ஒன்னும் செய்யாது. பூச்சிகளை தின்னுடும்ன்னார்.
திடீர்ன்னு ஒருநாள் தோப்புக்குள்ள குழிவெட்டத் தொடங்குவார். எதுக்குப்பான்னு கேட்டா, மழைக்காலம் வருதுல்லா தேக்கி வைச்சு கிட்டா பொறவு ஒதவும்பார். ஒரு மண்ணும் புரியாட்டியும் கூட ஒத்தாசை வேலை செய்வேன் கீத்துக் கொட்டகை பக்கம் இருந்த பெரிய தொட்டியில் புழு, மீன் செதிலல்லாம் போட்டு உரந் தயாரிப்பார். தோப்பு வேலை மட்டும் இல்ல, நெல்லுல இருந்து புல்லு வரைக்கும் மாடுல இருந்து ஆடு வரைக்கும், கீரையில் இருந்து கீத்து கொட்டாய் போடுறவரைக்கும் அவருக்கு தெரியாத சமாச்சாரம் எங்க கிராமத்தில் கொறவு.
மண்ணெண்ண வெளக்கு வெளிச்சம்தான் எங்க வீட்டுக்கு, படிப்பில் நானும் அண்ணனும் சுமார்தான். அப்பாவும் எட்டாங் கிளாஸ். ஆனா ட்ராக்டர் கம்பேனிகாரங்க எங்க ஊருக்கு வந்தப்போ இங்லீஷ்ல பேசினது செல்லப்பாதான்னு ஊரே இன்னைக்கும் சொல்லும். அப்பாவோட புத்தகங்களை அவரோடு இருக்கும் வரைக்கும் நான் தொட்டதே இல்லை. ஒவ்வொன்னும் கிலோ கனம் பெறும்.
புள்ள வளர்க்க செல்லப்பாவுக்குச் சொல்லியாக் கொடுக்கணும்ன்னு ஊரே மெச்சும். நாங்களும் நல்ல விதமாத்தான் வளந்தோம். ஆனாலும் எங்க கிளவி நாம் பொறந்ததும் மண்டையப் பார்த்து எலே! செல்லப்பா இளையது ரெட்டச்சுழில, வூட்டுல அடங்காதுன்னு சொல்லி இருக்கா. அவ வெத்தலக்கற படிஞ்ச வாய் முகூர்த்தம் அப்படித்தான் அமைஞ்சுடுச்சி. பண்ணாத சேட்ட கெடயாது. சின்ன வயசுல பையமாருங்ககூட கட்டி உருண்டு வீட்டில் அடிவாங்கினவன். ஏழாப்புல ரத்தக் காயத்தோட வீட்டுல கொண்டுபோய் விட்டுச்சு. வீட்டுல தெரிஞ்சுறக் கூடாதுன்னுட்டு எங்கண்ணன் களிமண்ண எடுத்துத் தடவி விட்டான். வலி விண்ணு விண்ணுன்னு தெறிக்க வீட்டுல சொல்லிட்டேன். வெளக்கமாறு ஒன்னு புதுசா வாங்க வேண்டியதாப் போச்சி.
நாங்களும் அப்படி இப்படின்னு ட்ரவுசர் பள்ளிக்கூடத்தைத் தாண்டி சைக்கிள்ல மேட்டூர் பள்ளிக்கூடம் போற அளவு வளர்ந்துட்டோம். அது வரைக்கும் வாழ்க்கைக்கான அச்சாணி எதுன்னே தெரியாம திரிஞ்ச பசங்களாவே இருந்துட்டோம்.
அப்போதான் ஒருநாள்... தென்னையில் ஏறும்போது கொளவி கொட்டி கை வழுவி கீழ விழுந்து அப்பாருக்கு மூட்டு விலகிடுச்சு. கவர்மெண்டு ஆஸ்பத்ரிக்கி தூக்கிட்டு ஓடுனோம். நம்ம புத்தூர் வைத்தியர்தான் ஆறே நாளில் ஜல்லுன்னு எந்திரிச்சு நிக்க வைச்சாருவாரே, இதுக்கேம்ல கலங்குதீயன்னு அவரு எங்களுக்கு சமாதானம் சொல்லிக்கிட்டாரு.
அதுக்குப் பொறவுதான் ஊருல நெலமை மாற ஆரம்பிச்சது. காளை மாடு வைச்சிருந்தவனெல்லாம் மாட்ட மேக்கே கேரளாக்காரனுக்கு வித்துட்டு ட்ராக்டர் வாங்க ஆரம்பிச்சாங்க. எருக்குழி எல்லாம் எங்க போச்சுன்னே தெரியாம போயிருச்சி. ஊருக்குள்ள பால் வத்திப் போச்சு. மகசூல் அதிகம் தருது, உரமேத்துரோம்ன்னு வாரி வாரி பொட்டாசியத்தையும், யூரியாவையும் கொட்டுனாங்க. தென்னை விவசாயிக்கு நெல்லைப் பத்தி தெரியாதுன்னு தப்பா நினைச்சுடாதீங்க. பச்சக்கருது பால் பழுக்கும்போதே எப்போ அறுவடையின்னு நாள் குறிப்பாரு எங்கைய்யா.
களை எடுக்க மெஷினு வந்திருச்சுன்னு வேடிக்கப் பார்க்க ஊரே கூடினாக. எங்கைய்யா நடக்க முடியாட்டியும் படுத்துக்கிடந்தே பொருமுனாரு. கேக்க ஆள் இல்ல.. இந்த மெஷினெல்லாம் வந்து வயித்தில நாளைக்கு அடிக்கப்போவுதுன்னு ஒரு சிறுக்கிக்கும் தெரியாமதான் போயிருச்சி. உழுறதுக்கு மெஷினு. உரம் போட மிஷினு, மருந்தடிக்க மிஷினு, களையெடுக்க, களத்துல நெல்லடிக்க, விட்டா காது குத்த, ஆடு வெட்டன்னு மெஷினக் கொண்டாந்துருவானுங்க... இந்த மாடு கண்ணெல்லாம் எங்க போயி முட்டிக்கும்... எத்தனப்பேரு பொழப்பு போகுது. அவரோட ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுள்ளதுன்னு புரிஞ்சுக்க ஆள் இல்ல அன்னைக்கு.
நான் படிச்சுப் பட்டம் வாங்கி அதே ஊருல அக்ரிகல்ச்சர் ஆபீஸரா வந்து நாசமாப் போன வேதிமருந்துகள மண்ணுல கொட்டி மண்ண மலடாக்குறத பத்தி இந்த மக்ககிட்ட சொல்லணும்ன்னு அவர் கனவு கண்டுக்கிட்டு இருந்திருக்கார். நான் டூரிங் கொட்டகயில் முரட்டுக் காளை ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு.. 'பொதுவாக எம்மனசு தங்க'த்துக்கு ஆடிக்கிட்டு இருந்தேன்.
அடுத்த வருஷம் ஊரெல்லாம் தென்னைக்கு வண்டுகடி நோய் வந்துச்சி. எங்க தோப்பில் வண்டு சத்தங்கூட காணும். எங்கைய்யா சொல்வாவ "ஆந்தை இருக்கும்போது வண்டெல்லாம் மசுறுடான்னு" ஆந்தை பொந்துக்கு கீழே வண்டு முதுகெலும்புதான் அதுக்கு சாட்சி. |
|
ஒரே மாமரத்துல அஞ்சு கிளை பதியம் போட்டு கிளிமூக்கு, மல்கோவான்னு விளைய வைப்பாரு. எதோ மோடி மஸ்தான் வேலையின்னு கிராதகப்பயலுவ சொல்லிட்டு போனானுவ. நடக்குறதுக்கு சங்கடமா இருக்கும் போதே துண்டுல புன்னை மரத்தோட கொட்டைய வைச்சுக்கிட்டே தெரட்டு ரோட்டுல வீசிக் கிட்டே போவாரு. நானும் அண்ணனும் யாரு தூரமா வீசுறோம்ன்னு பந்தயம் விட்டுக்கிருவோம். இன்னைக்கு எங்க ஊருக்குள்ளே நாலுவழி ரோடு போடுறப்போ வெட்டிப் போட்ட மரத்துக்கெல்லாம் எங்க அப்பாருதான் சாமின்னு யாருக்குந் தெரியாது.
ஏதோ கொடுக்கல் வாங்கல் வெவகாரத்துல தோப்பு கேஸாகிடுச்சி. ரெண்டு மாசத்துக்கெல்லாம் வீட்டுல என்ன என்னவோ நடந்துச்சு. எனக்கு அரிசிப் பெட்டியில் கெடைக்கும் அஞ்சுப்பத்து படியளந்ததால் வீட்டு நடப்பு மேல பெருசா அக்கற இல்ல. அண்ணந்தான் ரொம்ப மாறிட்டான். பள்ளிக்கூடம் போவாம செங்க சூளைக்கு ட்ராக்டர் ஓட்டப்போனான். கோனார் கடையில் எனக்கு பொரோட்டாவுக்கு 'நான் காசு கொடுத்துக்குறேன். சாப்புட்டு பள்ளிக்கூடம் போய் நல்லா படிலே'ன்னு சொல்றான். இப்போதான் அவனக் கொஞ்சம் புடிக்க ஆரம்பிச்சிருச்சி.
பத்தாவது தாண்டினா போதும்டா சாமி. வேன் ஓட்ட கத்துகிட்டு ட்ரைவர் ஆகிடலாம்ன்னு கனவுல நான் இருக்க "எம் மவன் வெவசாய ஆபீஸர்"ன்ற எங்கைய்யாவோட கனவு தறி அறுந்த தயிர்ப்பானை கீழ விழுந்தது போல தெறிச்சிறுச்சுன்னு அப்போ எனக்கு தெரியாது. ரெண்டு மாசம் ஊரைச்சுத்திட்டு மெட்ராஸைப் பார்க்க வந்துட்டேன். நாலு காசு சம்பாரிச்சேன். அப்பா போட்ட வெத தானே இந்த ஒடம்பு. ரத்தத்துல எங்கனையாவது அவரோட கொணம் ஒட்டிக் கிடக்காமலா போயிரும். எந்த சாமி வினையோ கெடைச்ச பொஸ்தகத்தை எல்லாம் தேடித்தேடிப் படிச்சேன். கூட்டு சேர்ந்தவுங்கல்லாம் தங்கமான மனுஷங்களாப் போக, உலகத்தைப் பத்தின பார்வை விஸ்திரமடைஞ்சது. கம்யூனிசம், பொதுவுடமை பேசும் அப்பாவோட வார்த்தைகள் காரல் மார்க்ஸ் மூலதனத்தை கற்று வந்ததுன்னு தெரியும்போது பெருமையும் வைராக்கியமும் கூடிப்போச்சு.
மாவோ, லெனின், சமூக அரசியல் சித்தாந்தங்கள் எல்லாம் என்னை மனுஷனா மாத்துச்சு. நிஜத்தைச் சொல்லணும்னா பத்து வருசப் பள்ளிக்கூடத்துக்கு வெளியில்தான் நான் உலகத்தைக் கத்துக்கத் தொடங்கினேன். ஆனா என்ன பிரயோஜனம். சமுதாயத்துக்கிட்ட கம்யூனிச கோபத்தை மட்டும் காமிச்சு என்ன செய்ய. அந்த இடத்தில் தான் ஒரு சம்சாரியோட ஆதங்கம் புலப்பட்டுச்சு. வாழ்க்கையைப் புத்தகங்களில் தேடும்போது சுய அடையாளம் தடையாப்பட்டது, பத்தாங்கிளாஸ் கதிர்வேல் என்ன சாதிப்பான்னு காட்ட வேண்டியது முக்கியமா பட்டது.
கைக்காசை சேர்த்து பி.ஏ சேர்ந்தேன். நாட்கள் உழைப்பும் களைப்புமா நகர படிப்பை முடிச்சு திரும்பிப்பார்க்கும் போது எங்கண்ணன் மவன் என்னைச் சித்தப்பான்னு கூப்பிட்டுட்டு இருந்தான். அப்பா மரம் ஏறுறத முழு மொத்தமா விட்டிட்டு இருந்தாரு. ஏறணும்ன்னாலும் சொந்த மரத்தில மிதிச்ச மனுஷன் இனி எங்க போய் அடுத்தவன் மரத்துல கை வைப்பாரு. ஆடு, கோழி எல்லாம் நின்ன இடம் புழுதி மண்டிக் கெடந்துச்சி. இனி நான் இருக்கேன். எதுக்கும் கவலைப்படாதீங்கன்னு சொல்லும் தன்னம்பிக்கை என் கிட்ட நிறையவே இருந்தது. அப்பா கண்ணில் ஒரு சொட்டு ஈரம் கம்பீரமா மின்னியதை அன்னைக்குத்தான் பார்த்தேன்.
மத்திய அரசு தேர்வெழுதி செலக்ட் ஆனேன். இன்னைக்கு மத்திய இரயில்வேயில் பணியில் இருக்கேன். சொல்ல மறந்துட்டேனே. இடையில் எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு.
சொந்தத்தில் அதிகம் படிச்ச பொண்ணுன்னு இளமதியை எனக்குக் கட்டி வைச்சாங்க. பத்துப் பைசா வாங்காம கட்டிக்கிட்டேன். செல்லப்பா மவன் போய் கதிர்வேல் அப்பா ஆகியிருந்தது ஊர்ப் பேச்சு. குவார்ட்டஸ்க்கே அப்பாவைக் கூப்பிட்டேன். என்னோட வந்துடுங்களேன்னு கேட்டேன். என்னையப் பெத்த இந்த மண்ணு காத்தை விட்டுட்டு எங்கிட்டுலே நான் இந்த சீவனை தூக்கிட்டு திரிவேன். நீ போய்ட்டு வா ராசான்னு சொல்லிட்டார். அப்பா பேச்சுக்கு இன்றைக்கும் மறுபேச்சில்லை.
அப்பாவுக்குக் கால் இப்போ சொகம் ஆகிட்டு. மனசுதான் அந்தத் தென்ன மரக் காத்துக்கு நடுவுல சிக்கிக் கிழிபட்டுட்டே கெடந்தது. ஒருநாள் கீத்து வேரோட மரத்தையும் புடிங்கிட்டு விழுந்திருச்சி. நல்லாத்தான் இருந்தார். என்ன பண்ணுச்சுன்னே தெரியல. காலையில நீச்சத்தண்ணி தான்னு கேட்டுட்டு நெஞ்சைப் புடிச்சவுகதான். எந்திரிக்கவே இல்ல... ஊருக்குப் போயிருந்தபோது அழுகுரலுக்கு நடுவே அப்பாவின் மரணத்தின் வினாடியை ஓலத்தின் நடுவே வர்ணித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் கூட அழுகையை விடவில்லையே நான். முன்ன நின்னு எல்லா காரியத்தையும் எடுத்துப்போட்டு செஞ்சேன். அண்ணன் முகத்துக்கு நேரா வந்து "ஏம்ல உனக்கு இருதயம் செத்து போச்சால, அப்பா போய்ட்டாரு கல்லு மாதி நிக்கியலே கல்லுளி மங்கா"ன்னு கோவிச்சு அழுதான். எனக்கு அழுகை வரவில்லை. மெளனத்தைத் தவிர எந்த வார்த்தையும் என்கிட்ட இல்லை. சரியாச் சொன்னா எனக்கு ஊரே மயானப்பட்ட மாதிரி தோணுச்சி. எரிச்ச அஸ்திய அள்ளிட்டு வந்து தனியா மொட்ட மாடில உக்காந்து கதறி அழுதேன். என் சத்தம் ஊருக்கே கேட்டிருக்கும். யாரும் கிட்ட வரல.
காரியம் முடிஞ்சு பதினாறாம் நாள்ல சொந்த ஊருல இருக்கும் குடிசைக்கு பின்னாடி குழிதோண்டி தென்னம்பிள்ளை ஒன்னை நட்டு வைச்சேன். ஆச்சி இன்னையோட பதினோரு வருசம். தென்னம் பிள்ளை எழுந்து நிக்குது. அதை கட்டிக்கும் போது எங்கைய்யா நெஞ்சுமேல வெவரம் தெரியாத வயசில கதை கேட்டு தூங்கும் சுகம். யாரு சொன்னது எங்கைய்யா செத்துட்டார்ன்னு. இந்தா எழுந்து நிக்கார் பாருங்கைய்யா. இயற்கை விவசாயம் பண்ண சொந்த ஊரில் நிலம் ஒன்னு கிரையம் முடிக்கப்போறேன் இன்னைக்கு.
(நன்றி: 'வற்றாநதி' சிறுகதைத் தொகுப்பு)
கார்த்திக் புகழேந்தி |
|
|
|
|
|
|
|