|
|
|
பாஸ்டன் அருகே உள்ள கிரோட்டன் (Groton, MA) நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகான நியூ இங்கிலாந்து ஷீரடி சாயி ஆலயத்தின் துவக்க விழா 2018 அக்டோபர் 10 முதல் 28ம் தேதிவரை விமரிசையாக நடைபெற்றது. சுமார் 28 ஏக்கர் வளாகத்தில், 40,000 ச.அடி பரப்பளவில், நிறுவப்பட்டுள்ள இந்த ஆலயம் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சாயிபாபா ஆலயம் என்று கூறப்படுகிறது. மூன்று கோபுரங்களுடன் கம்பீரமாக நிற்கும் இந்த ஆலயத்தின் மத்தியில் பிரதான சன்னிதியில் ஷீரடி சாயிபாபா கனிவுடன் அருள் பாலிக்கிறார். பாபாவின் சன்னிதியைச் சுற்றி விநாயகர், சிவன், துர்கை, கன்னிகா பரமேஸ்வரி, சாரிகா பகவதி அம்மன், தத்தாத்ரேயர், வெங்கடேஸ்வரர், மகாலக்ஷ்மி, பூதேவி, சீதா ராம லக்ஷ்மணருடன் ஆஞ்சநேயர், ராதா கிருஷ்ணர், நவக்கிரகங்கள் என்று பல்வேறு சன்னிதிகள் உள்ளன.
தெய்வ விக்கிரகங்களை மகாபலிபுரம் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பிகள் கருங்கல் மற்றும் பளிங்குக் கல்லில் அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். வேத பண்டிதர் திரு. ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் தலைமையில், மிஸிஸிப்பி, கனெக்டிகட், நியூ ஹாம்ப்ஷயர் மாநில இந்து ஆலயங்களிலிருந்து வந்திருந்த வைதிகர்கள் மற்றும் ரித்விக்குகளின் பங்களிப்புடன், ஹோமங்கள், ஜல-தான்ய-புஷ்பாதி வாச பூஜைகள், கண் திறப்பு, மற்றும் பிராணப் பிரதிஷ்டை யாவும் அக்டோபர் 10 முதல் 20 வரை நடைபெற்றன. அக்டோபர் 10அன்று அதிகாலை ஒரு பசுவின் ஆலயப் பிரவேசத்துடன் சடங்குகள் துவங்கின. 14ம் தேதி நடந்த மகாகும்பாபிஷேக விழாவைக் காண நாள்முழுவதும் சுமார் ஐயாயிரம் பேர் வந்திருந்தனர்.
ஷீரடி சாயிபாபா சமாதி அடைந்த நூறாவது வருடவிழா தினமான 18ம் தேதியன்றும், வெங்கடேஸ்வரர், மகாலக்ஷ்மி, ராம பரிவாரம் மற்றும் ராதா கிருஷ்ணர் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20ம் தேதியன்றும் ஆலயத்தில் அன்பர் கூட்டம் அலை மோதியது. 21ம் தேதி முதல் 28ம் தேதிவரை கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
|
|
வியப்பூட்டும் தகவல் ஒரு வியப்பூட்டும் தகவல். சில வருடங்களுக்கு முன் ஆலயத்திற்குப் பூமிபூஜை நடந்தபோது பாபா சன்னிதி மட்டுமே அமைப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தார்களாம். பூஜை நடந்த சில தினங்களுக்குப் பிறகு வட கரோலினாவைச் சேர்ந்த அன்பர் ஒருவர் ஆலய அமைப்புக் குழு அங்கத்தினருக்கு ஃபோன் செய்து, சாயிபாபா தன் கனவில் தோன்றி பாஸ்டனில் நிறுவப்படும் தன் ஆலயத்தில் வெங்கடேஸ்வரர் சந்நிதி அமைக்குமாறு தனக்கு ஆணையிட்டதாகவும், இதற்காக அரை மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாகவும் கூறினாராம். இதன் பிறகு மற்ற தெய்வங்களுக்குச் சன்னிதிகள் அமைக்கப் பல அன்பர்கள் முன் வந்தனராம்!
இன்னும் சில சுவையான தகவல்கள்: ஆலயத்தின் முகவரி 99 Shirdi Way (நகர ஒப்புதலோடு சாலைக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது). ஆலயம் பாபா முக்தி அடைந்த நூறாவது வருடம், அதே வாரம் திறக்கப்பட்டிருக்கிறது. நியூ இங்கிலாந்து ஷீரடி சாயி பரிவார் (NESSP) என்ற தொண்டு நிறுவனத்தின் கைவண்ணமான இந்த ஆலயம் சுமார் 12 வருடங்களுக்கு முன் பாஸ்டனில் வாழும் 40 சாயி பக்தர்களின் எளிய கனவாகத் தொடங்கியது. சாயிபாபா காட்டிய சிரத்தை-பொறுமை வழியைப் (ச்ரத்தா, சபூரி) பின்பற்றி பாபாவின் அருளாசியுடன் NESSP நிறுவனம் இந்த மாபெரும் பணியைப் பல இடையூறுகளைத் தாண்டி வெற்றிகரமாக முடித்துள்ளது.
மேலும் அறிய
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி |
|
|
|
|
|
|
|