அரங்கேற்றம்: காவ்யா ராஜு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் அரங்கேற்றம்: சம்யுக்தா லோகாநந்தி
|
|
|
|
ஜூலை 22, 2018 அன்று பாஸ்டன் அருகே ஆண்டோவரில் செல்வி. சஹானா வெங்கடேஷின் வீணை அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இவரது குரு திருமதி. துர்கா கிருஷ்ணன், பிரபல சங்கீத வித்வான்கள் வீணை சிட்டிபாபு மற்றும் லால்குடி ஜெயராமன் ஆகியோரிடம் பயின்றவர். சஹானா பத்து ஆண்டுகளாக மிகுந்த சிரத்தையுடன் இவரிடம் பயின்று வருகிறார்.
மிருதங்க வித்வான் மகாலிங்கம் ("மாலி") சந்தானகிருஷ்ணன் (பத்மஸ்ரீ பாலக்காடு ரகு மற்றும் வித்வான் திருச்சூர் நரேந்திரனிடம் பயின்றவர்) மற்றும் பிரபல கட வித்வான் Dr. ரவி பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பக்கவாத்தியத்துடன் சுமார் மூன்று மணி நேரம் வீணை இசை மழை பொழிந்தார் சஹானா.
பைரவி ராகத்தில் விரிபோணி வர்ணத்துடன் கச்சேரியைத் துவக்கிய சஹானா, பாபநாசம் சிவனின் "தத்வமறிய தரமா" (ரீதி கௌளை), தீட்சிதரின் "சுவாமிநாத பரிபாலய" (நாட்டை), தியாகராஜரின் "சமானமெவரு" (கரகரப்ரியா), சுவாதித் திருநாளின் "போகீந்திர சயனம்" (குந்தலவராளி) என்று பல அழகான பாடல்களை முதல் பாதியில் வாசித்தார். "நிதி சால சுகமா" என்ற தியாகராஜ கிருத்தியைக் கொண்டு மனம் கவர் கல்யாணி ராகத்தை மனோ தர்ம வழியில் ஆராய்ந்தது, ராகம்-தானம்-பல்லவி பகுதியில் "பாவயாமி ரகு ராமம்" என்ற பல்லவியை வைத்து பல ராகங்களில் கல்பனா ஸ்வரங்களை வாசித்தது, பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே" பாடலின் பத்து சரணங்களையும் ராகமாலிகையாக வாசித்தது, மிஸ்ர மாண்டு ராகத்தில் "கொம்மலோ கோயிலா" என்ற குயிலிசை வாசிப்பு ஆகியவை கச்சேரியின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன.
சிந்துபைரவி ராகத்தில் வாசித்த "வெங்கடாசலநிலையம்" மற்றும் யமுனா கல்யாணி ராகத்தில் வாசித்த லால்குடி ஜெயராமனின் தில்லானா கைதட்டல் பெற்றன. உலக ஒற்றுமை மற்றும் அமைதி வேண்டி காஞ்சி மகாபெரியவர் இயற்றிய "மைத்ரீம் பஜத" பாடலுடன் அரங்கேற்றம் நிறைவுற்றது. சஹானா வீணையைத் தவிர வாய்ப்பாட்டு, பரத நாட்டியமும் கற்று வருகிறார். சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கும் சஹானா, ரோபாடிக்ஸ் துறையில் ஆர்வமாக இருக்கிறார். பதினேழு வயது மாணவியான சஹானா 2016ம் ஆண்டு கிளீவ்லாண்டு தியாகராஜ ஆராதனையில் வீணையில் முதலிடம் பெற்றுச் சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. |
|
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன், மாசசூஸட்ஸ் |
|
|
More
அரங்கேற்றம்: காவ்யா ராஜு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் அரங்கேற்றம்: சம்யுக்தா லோகாநந்தி
|
|
|
|
|
|
|