Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பிம்பங்கள்
- ஐசக் அருமைராஜன்|ஆகஸ்டு 2018|
Share:
நான் கைது செய்யப்பட்டதற்கு வருந்தவில்லை. பிரம்மாண்டமான கட்-அவுட்டுகளுக்குத் தீ வைத்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணைக்குரியவனாக நிற்பதில் எனக்கு வெட்கமில்லை. நான் சமூக விரோதியல்ல. திருட்டுக் குற்றமோ, இரக்கமற்ற கொலையோ செய்யவில்லை.

தேசத்தை நேசித்ததால் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறேன்.

'மகா கனம் நீதிபதிகளே' என்று உச்சரிக்க எனக்குத் தெரியாது. அல்லது உச்சரிக்கக்கூடிய மனோநிலையில் நான் இல்லை.

அரசு வழக்கறிஞரின் சிடுசிடுத்த முகமும், அதட்டலான கேள்விகளும் என்னைக் குற்றவாளியாக்கி உள்ளே தள்ளிவிடத் தயாரிக்கப்பட்ட வாதங்களும் இப்போது முதல் முறையாக மட்டுமே நான் சந்திப்பது.

"உமது பெயர்?"

"பிரஜாபதி"

"ஊர்?"

"வில்லுக்கீறி"


கேள்விகள் அடுக்கப்படும்போதும் நான் மனசுக்குள் இந்த தேசத்தையும் இதன் வருங்காலத்தையும் மட்டுமே நினைத்துப் பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.

ஒரு நகரத்தின் அல்லது கிராமத்தின் அமைதியை முற்றாகக் கெடுத்து ஒவ்வொரு குடிமகனின் மனமும் பாதிக்கிற வகையில் அவன் பிரச்சனைகளைத் திசை திருப்பத் திட்டமிட்டு, நகர் முழுவதும் பிரம்மாண்டமான உயரத்தில் தூக்கி நிறுத்தப்படுகிற கட்-அவுட்டுகளால் இந்த நாடு பொய்முகமாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

ஆனாலும் நான் குற்றவாளியாக்கப்படலாம். வழக்கறிஞன் யாரும் என் உதவிக்கு வரவில்லை. பரவாயில்லை. என் வாதங்களை என்னால் சரியாகவே சொல்ல முடியும். நான் தானாகவே எடுத்துக்கொண்ட முடிவுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்.

அது ஜூன் மாதம். மழையில்லை. வயல்களில் தண்ணீர் விட எந்தத் திட்டமுமில்லை. புத்தகங்கள் கிடைக்காமல் அலைமோதி வெறுங்கையோடு திரும்பிப் போகிற பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. குடி தண்ணீருக்காகப் பல மைல்கள் குடத்துடன் செல்லும் பெண்களைப் பற்றி யாரும் எழுதவில்லை. எந்தப் பத்திரிகைப் புகைப்படக்காரனும் படமெடுத்துப் பத்திரிகைக்கு அனுப்பவில்லை. நீண்ட காலத் திட்டங்களில்லாத இந்த நாட்டில் அவ்வப்போது அறிவிக்கப்படுகிற 'முட்டைகளோ', 'பற்பொடியோ' ஒரு அரசைத் தூக்கி நிறுத்தப் போதுமானவையாகத் தோன்றுகிறது.

நான் காலையில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, சுவர் பொந்து வழியாகத் தூக்கி எறிந்த எச்சில் இலை, தரையில் விழவில்லை. அதைத் தாங்கிக் கொள்ளப் பல கரங்கள் பொந்துக்கு வெளியே காத்திருந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் யாரோ முக்கியப் புள்ளி வில்லுக் கீறிக்கு வருகிறார் என்ற செய்தி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாய் வந்தது. யார் என்பது முக்கியமில்லை. பிரபல நடிகனாயிருக்கலாம்; மந்திரியாயிருக்கலாம். யாராகவுமிருக்கலாம். அதனால் பாதிப்பில்லை. பிறகுதான் தெரிந்தது, வானத்தை எட்டி விடுமளவுக்கு பத்து கட்-அவுட்டுகள் தயாராகிக் கொண்டிருப்பது; முகப்புப் பாதையில் ஒன்று, பாதை நெடுக ஆறு அல்லது ஏழு; தக்கலையில் இரண்டு; இவை போக பாதையில் அலங்கார வளைவுகளும், கவர்ச்சி வரவேற்புகளும்...

வேலை தொடங்கியபோது பொழுதுபோகாத கூட்டம் அலை மோதியது. ஊருக்குப் புதிது; வர்த்தகர்களின் நன்கொடைகள், பொது நிறுவனங்களின் நன்கொடைகள் இவற்றால் பொருட்கள் விலை ஏற்றம்; கட்டுப்பாடற்ற விலை நிர்ணயம், கேள்வி எழுப்ப யாருமில்லை.

"என்ன இதெல்லாம்?"
என்று பஞ்சாயத்து பிரசிடெண்டிடம் கேட்டேன்.

"உன் வேலையைப் பாத்துக்கிட்டு சும்மா இரு!" என்று பதில்.

சும்மா இருந்ததால்தான் இந்த நாடு சுதந்திரத்திற்குப் பின் நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும் எல்லோருக்கும் உணவிட முடியாமலிருக்கிறது.

விளம்பரத்தை மட்டுமே நம்பி நிற்கிற ஒரு நாடு உருப்படப் போவதில்லை. அது நிச்சயம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு நாட்டில் நடிகன் இருக்கலாம், டாக்டர் இருக்கலாம். இஞ்சினியர் இருக்கலாம். வாத்தியார் இருக்கலாம். மந்திரி இருக்கலாம்.

ஒவ்வொரு டாக்டரும் தன் ஆஸ்பத்திரிக்கு முன்னால் கட்-அவுட் வைத்தால் என்னாவது? நோயாளி செத்தால் பரவாயில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை சரியோ, மருந்து சரியோ பாதகமில்லை. இப்படியொரு விளம்பரம் மட்டுமே போதுமானால் இத்தகைய பொய்முகங்கள் இந்த நாட்டை அழித்துவிடாதா? நாட்டை அறிவு சூன்யமாக்கிவிட இது போதாதா?

நான் யோசித்தேன். ஏதோ ஒன்று வலுக்கட்டாயமாக இந்த மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அது நிச்சயம் நல்ல திட்டமில்லை. ஒரு அணைக்கட்டோ, ஒரு மின்சார உற்பத்தி நிலையமோ அல்ல.
காளியை நான் சந்தித்தபோது இதைத்தான் கேட்டேன். காளி வெறும் நண்பன் மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான தொழிற்சங்கங்களின் தலைவன். மாதச் சம்பளத்தையோ, அலவன்சையோ கூட்டித் தருமாறு போராடும் அரசு ஊழியர்களின் தோளோடு தோள் நிற்பவன். இப்படி அவன் பெற்ற வெற்றிகள் ஏராளம், ஆனாலும், அவனால் ஒரு கல்லுடைப்பவனுக்கோ, கொத்தனாருக்கோ எதையும் செய்துவிட முடியவில்லை. பட்டினி கிடந்து சாகிறவனைக் காப்பாற்ற அவன் இல்லை.

"இது ஒரு புதிய கலாசாரம்" என்றான் அவன்.

"கலாச்சாரம் திட்டமிட்டுத் திணிக்கப்படுவதல்ல!"

"நீ என்ன செய்ய நினைக்கிறாய்?"

"தீ வைத்துக் கொளுத்தப் போகிறேன்"

"துணைக்கு எவன் வருவான்?"

"ஒருத்தனும் வேண்டாம்."

"மாட்டிக்கிடுவே! வேலை போயிடும்."

மாட்டிக்கொள்வதை விடவோ, வேலை பறிபோய்விடும் என்பதைவிடவோ இந்த நாடு முக்கியமாய்த் தெரிகிறது. குடியாட்சியை மெல்ல மெல்ல அழிக்கக்கூடிய இந்தச் சதியிலிருந்து இந்த நாட்டையும் இதன் குடியாட்சியையும் காப்பாற்றுவது அதிக முக்கியமாகிறது.

அடிப்படையான தேவைகளை விட கட்-அவுட் தேவைகள் பெரிதுதானா?

ஊரின் முகப்பில் அலங்கார வளைவும், அதையொட்டி வானைத் தொட்டு நிற்கும் கட்-அவுட்டும், பாதையின் இரு பக்கங்களிலும் வரிசை வரிசையாய் மலைபோல் உயர்ந்து நின்றன.

இருமிக்கொண்டே கைத்தடியுடன் வந்த பிச்சைக்காரன், பாதிப் பார்வை பறிபோயிருந்த கண்களை ஒரு கையால் வெளிச்சக் கூர்களுக்காய் மறைத்துக்கொண்டு, தலையை நிமிர்த்தி அந்தப் பிரம்மாண்டமான கட்-அவுட்டை ஏறிட்டுப் பார்க்கிறான். அவன் மனதுள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அசடு வழியச் சிரித்துக் கொண்டான்.

முதலில் நான் வேறு மாதிரி நினைத்தேன். இதற்குப் போட்டியாக காந்தியடிகளுக்கு ஒரு கட்-அவுட் எழுப்புவதென்று; அவர்தானே, 'சுதந்திரம் மக்களின் சுதந்திரமே! ஆட்சியாளர்களின் சுதந்திரமல்ல; அது கிராமங்களிலிருந்து தொடங்க வேண்டும்' என்று கூறினார்!

ஆனால், இங்கு ஒரு கிராமம் கட்-அவுட்டால் உயர்த்திக் காட்டப்படுகிறது.

நான் நினைத்ததற்கு மாறாக ரசிகர் மன்றம் வேறு நினைத்தது என்பது பின்னர்தான் தெரிந்தது. ஏட்டிக்குப் போட்டியாக ஆற்றங்கரை மேட்டில் நடிகருக்குக் கட்-அவுட் வைப்பதற்கு நன்கொடை வசூலித்தார்கள். விரைவாகவே பணிகள் தொடங்கின. ஆற்றங்கரை மேட்டில் நடிகன், கரைபோட்ட வேட்டியோடு, பட்டு ஜிப்பாவோடு, புன்முறுவலோடு, கட்-அவுட் ஆகி வானுயர நின்றான். போட்டியின் விளைவு, ரசிகர் மன்றத் தலைவன் இரவோடு இரவாகக் கொலை செய்யப்பட்டு, அதே கட்-அவுட்டில் தூக்கி பிணமாக நிறுத்தப்பட்டான்.

அமளியை அடக்க போலீஸ் குவிந்தது.

ஆனாலும் பிரமுகரின் வருகையில் மாற்றமில்லை. கொலைகாரன் அரசியல் செல்வாக்கில் பிடிபடாமலே இருந்தான். போலீஸாரின் கரங்களில் விலங்கு; ஓ! குடியாட்சி தலைகீழாகப் போயிற்று.

அது பிரமுகரின் வருகைக்கு முந்திய இரவு, பயங்கர அமைதி. நான் வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். முதல் கட்-அவுட் எரியத் தொடங்கியது. இரண்டு, மூன்று என்று நான்காவது கட்-அவுட்டை நெருங்கியபோது ஒரு கூட்டம் என்னைத் துரத்தியது. ஓடினேன்.

பிடிபட்டபோது செம்மையான அடி; ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் சிகிச்சை. ஆஸ்பத்திரி வெராண்டாவில் போலீஸ்காரர்கள்.

பத்திரிகைகள் என்னைச் சமூக விரோதியாய் காட்டின. என்னை பழிவாங்குவது போல, வர்ணப் படங்களாக கட்-அவுட்டுகளைப் பிரசுரித்தன. விழாக் கோலமான வில்லுக்கீறியும், பிரமுகரின் வருகையும் பக்கங்களை நிறைத்தன.

ஒரு நாட்டின் கனவு சிதைந்து போனது; அந்தக் கனவைச் சிதைக்கவும், உடைத்தெறியவும் இந்த நாட்டின் எல்லா தொடர்புச் சாதனங்களும் துணை நிற்கின்றன என்பது பயங்கரம்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், இத்தகைய பிரம்மாண்டமான ஏமாற்று வேலைகளால் திசை, திருப்பப்படுவதையோ, உண்மை நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கப்படுவதையோ, அறிவுஜீவிகள் கூடப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது கேவலமாகத் தோன்றுகிறது. முற்றிலும் இது நமக்கு சம்பந்தமில்லாதது போல நாம் நடக்கக் கற்றுக்கொண்டு விட்டோம் போலிருக்கிறது.

இந்தப் போலிக் கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் திராணியுடையவனை இனியேனும் உருவாக்கா விட்டால், வருங்கால அழிவிலிருந்து இந்தச் சமூகத்தை யாராலும் காப்பாற்ற முடியாமல் போய் விடும்.

நமக்குத் தேவை நிரந்தரத் தீர்வுகள்; திட்டங்கள், நாம் அவற்றைப் பெற முடியாத நிலையில் கட்-அவுட் போன்ற போலி விளம்பர வியூகங்களைக் கண்டு வியந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு ஆபத்தானது.

சமூக விரோதியாய் காட்டப்பட்டு, இப்போது கூண்டிலேற்றப் பட்டிருக்கிறேன். என் வாக்குகள் பலிக்கப் போவதில்லை. தண்டனை உறுதியென்று என் மனம் உள்ளுக்குள் கூறிக் கொண்டிருக்கிறது. கம்பிகளுக்குள் என் வருங்காலம் சோகத்தின் விளைச்சலாய் நிற்கும். ஆனாலும் ஒரு காந்தி தோன்றாவிட்டாலும், இன்னொருவன் தோன்றக்கூடும். அவன் தோன்றவேண்டும் என்பது என் பிரார்த்தனையாக மட்டும் இருந்துவிடக் கூடாது, இந்த நாட்டின் பிரார்த்தனையாக இருக்கவேண்டும்.

நான் இப்போது துணிவுடனும், உறுதியுடனும் விசாரணையைச் சந்திக்க தயாராகி நிற்கிறேன்.

ஐசக் அருமைராஜன்
Share: 




© Copyright 2020 Tamilonline