|
|
|
கீழே விழுந்து எட்டு நாட்கள் படுக்கையிலிருந்து பின்னர் காலமானார் சிவசங்கரன். அவரது பிள்ளைகள் இருவரும் கடைசிக்காலத்தில் பக்கத்திலிருந்தனர்.
பக்கத்து வீட்டு சிதம்பரம் பிள்ளைதான் முன்னே நின்று காரியங்களைக் கவனித்தார். வேண்டியவர்களுக்கும், வேண்டியவைகளுக்கும் சொல்லியனுப்பினார். சாமான்கள் வந்து விட்டன. சுறுசுறுப்புடன் நடமாடி - அதிகாரம் பண்ணி - வேலைகளை நடக்கச் செய்தார்.
மூத்தவன் வேலுவிற்கு உள்ளுரிலேயே வேலை. கல்யாணமும் அங்குதான். பெண் பார்த்து முடித்து வைத்தது எல்லாமே சிதம்பரம் பிள்ளைதான். உள்ளூரிலே வேலை - நானுாறு ரூபாய் சம்பளம் - குடியிருக்க வீடு - சாப்பாட்டிற்கு ஏதோ கொஞ்சம் வருகிறதென்றால் வேறு எதையும் கவனிக்கத் தேவையில்லை யென்றாலும், பையனுக்கு அமாவாசையன்று ஒரு மாதிரியாகக் கண் மங்கிப் போகும். பேச்சு சரியில்லாது கொஞ்சம் தடுமாறும். அதனால் எந்த வித உபத்ரவமும் இல்லையென்ற உண்மையையும் பக்குவமாகப் பெண் வீட்டில் அவர் சொல்லி வைத்தார். இவராகச் சொல்லவில்லை யென்றாலும், அது பெண் வீட்டிற்குத் தெரிந்த விஷயம்தான். தெரிந்த உண்மையை உரத்த குரலில் சொல்லிவிடுவது பலவித பிற்கால அனுகூலங்களுக்கு வழிகோலும் என்பதோடு வம்பும் வராது என்பதைத் தெரிந்தவர்.
இளைய பையன் முத்துக் கறுப்பன். அசலூரில் வேலை. சர்க்கார் வேலை - மூத்தவனிடம் உள்ள நெருக்கம்போல இவனிடம் சிதம்பரம் பிள்ளைக்கு இல்லை. முத்துக்கறுப்பனுக்கும் அவரிடம் ஒரு பயம் - என்னவென்று சொல்லவியலாத பயம். அவனது கல்யாணத்தில் கூட சிதம்பரம் பிள்ளை நேரிடையாகப் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மூத்தவன் கல்யாணத்தை முன்னின்று நடத்தியவர் இதிலே பக்கத்து வீட்டுக்காரராகவே இருந்தார். கல்யாணம் முடிந்த பின்னும் தம்பதியினரை தனது வீட்டிற்கு அழைக்கவில்லை. "அவன் ரொம்பப் பெரியவன் மாதிரி ஆயிட்டான் - நம்மையெல்லாம் எங்க மதிக்கிறான்" செளகர்யமாக ஒதுங்கிக்கொள்வார்.
காரியங்கள் மளமளவென்று முடிந்து கொண்டிருந்தன. கிழடு செத்துவிட்டதென்றால் சிரிப்புச் சத்தம்கூட இழவு வீட்டில் கேட்கும். மற்றவர்களைப் பற்றி சிண்டு முடிச்சுப்போடும் பேச்சும் அங்கு நடக்கும்.
ஆற்றங்கரை தென்னந்தோப்பில்தான் தகனம் செய்யவேண்டும் என்று முடிவாயிற்று. செத்தவரின் செல்லமான தோப்பு அது. அவரது கடைசி விருப்பமும் அதுதான். உள்ள ஒவ்வொரு தென்னையும் அவர் நட்டு வளர்த்தது. மரங்கள் அதிகமில்லையென்றாலும், ஒவ்வொரு மரத்தின் காய்ப்பும் அதிகம்.
நீர்மாலை எனப்படும் சடங்கு முடிந்து சவ ஊர்வலம் ஆற்றங்கரை தென்னந்தோப்பை நோக்கிப் புறப்பட்டது. ஊருக்குப் பெரியவர் என்பதால் மட்டுமல்ல அங்குள்ள எல்லாருடனும் ஒருவிதத்தில் தொடர்பு உடையவரது கடைசி ஊர்வலமாதலால், அது சுவாமி புறப்பாடு மாதிரித் தோன்றிற்று. வீட்டு வாசலிலும் தெருவிலும் நின்ற பெண்கள் கும்பிட்டுக் கொண்டனர். இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கைகளைச் சேர்த்து வைத்துக் கும்பிடச் செய்தவர்களும் உண்டு. ஊர்க்கிழங்கள் தங்களுடையதை ஒத்திகை பார்த்தன.
அத்தனை அமளியிலும் சிதம்பரம் பிள்ளைமட்டும் பின்னே தங்கிவிட்டார். நடக்க முடியாதவர் போலத் தோற்றமும் அளித்தார். அந்தத் தோப்பிற்குள் அவர் செல்லவில்லை.
மறுநாள் காடேற்று - பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரையுள்ள வியாழன் - ஞாயிறு ஆகிய கிழமைகளில் துக்கம் விசாரிக்க வருவோர் மத்தியில் தேங்காய்க் கிழமை - பயற்றுக்கிழமை நடத்தி பலகாரம் வழங்கி, ஊர்க்கதை பேசி முடிக்கையில், அது ஒரு கொண்டாட்டமாகவே தோற்றமளிக்கும். சில கல்யாணங்கள் கூட அங்கே நிச்சயமாகும்.
இரவு பெண்கள் அழுவதற்காக அழைக்கப்பட்டார்கள். முறைப்படி ஒப்பாரி வைத்தார்கள்.
"கத்தரிக்காய் எங்களுக்கு கைலாயம் உங்களுக்கு வாழைக்காய் எங்களுக்கு வைகுந்தம் உங்களுக்கு"
என்று பாடி பரலோக பதவியை அளித்தார்கள். மறுநாள் சடங்கிற்கான காய்கறிகளை ஆண்கள் நறுக்கி வம்புப் பேச்சில் ஈடுப்பட்டார்கள். குழந்தைகள் வீட்டினுள்ளே ஓடிப்பிடித்து விளையாடின. இத்தனை கலகலப்புடன் மறுநாள் சடங்கு முடிந்த கையோடு ஊர்ப் பெரியமனிதர்கள் மற்றுமுள்ள விஷயங்களை குடும்பத்தினரை வைத்துக்கொண்டு பேசி முடிவு கட்டவாரம்பித்தனர். அதுவும் ஒரு சடங்காகிவிட்டது. சாப்பாடு முடிந்த பின்னர் அதை அந்த வீட்டில் பேச வேண்டாமென சிதம்பரம் பிள்ளை தம் வீட்டிற்கே எல்லாரையும் அழைத்தார். வேலைகளை முடித்துக் கொண்டு பெண்களும் வந்தனர்.
செத்துப் போனவரின் குணநலன்களைப் பேச ஆரம்பித்து நிலையாமை பற்றி விளக்கங்கள் பரிமாறப்பட்ட பின் விஷயத்திற்கு வருவார்கள். ஒற்றுமையின் அவசியம் பற்றி அடிக்கொரு தரம் அறிவுறுத்தப்படுவதால் கலந்து கொள்பவர்களின் பெருந்தன்மை சந்தேகத்திற்கப்பாற்பட்ட விஷயம்.
"அவன் வாயில்லாப்பூச்சி - சர்க்கார் வேலையும் இல்லே - நமக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான். ஆனா மேற்கொண்டு பாத்தா வேலுதான் கஷ்டப்பட்டிருக்கான்." சிதம்பரம் பிள்ளை பேசியது அப்பழுக்கில்லாமல் இருந்தது. பிறகு சொன்னார்:
"ஆனா இந்த விஷயத்திலே முத்து ஏதாவது நினைச்சுக்கக் கூடாது. அவனையும் ஒரு வார்த்தை கேட்டிடணும்."
உள்ளே முத்துக்கறுப்பனின் மனைவி வாயைப் பொத்திக்கொண்டு கூறினாள்:
"இந்த மனிசனுக்கு என்ன கெடுதல் செய்தீக - இப்படி ஈரல் கொலையைப் பிடுங்கறாப்பிலே கேக்கறாரே!"
இருந்தாலும் முத்துக்கறுப்பன் வழக்கப்படியேதான் சொன்னான்.
"எல்லாம் மாமா சொல்றாப்பிலேயே வைச்சுக்கிடுவோம் - நான் மாட்டேன்னா சொல்லப் போறேன்."
அந்த சங்கதி அவ்வாறு முடிந்தது. தென்னந்தோப்பின் மீதான தனது பாகத்தை விட்டுக் கொடுப்பதன் மூலம் முத்துக்கறுப்பன் தனக்கு ஒரு பாரம் இறங்கிவிட்டது போலத் தென்பட்டான். சாவுச்செலவு பூராவும் மூத்தவன்தான் ஏற்றுக்கொண்டான் என்று நம்பிவிடுவது எளிதான விஷயம். |
|
மீதியுள்ள வயலின் மீதுள்ள உரிமையும் அப்படித்தான் முடியப் போகிறது என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஊரிலே இருக்கிறவங்களோடு தோப்பு, வயல் விஷயத்தில் போட்டியிட முடியாது.
வெளியே பலத்த சப்தம். இரண்டொருவர் சீக்கிரமாகவே எழுந்தனர். முத்துக்கறுப்பனும் தெருவிற்கு வந்தான்.
ஊர் அம்பலத்தில் ஒருவனைப் பிடித்து வைத்திருக்கிறார்களாம். இன்று அதிகாலை தேங்காய் திருடும் போது சரியாகப் பிடிபட்டுவிட்டான். கைகள் கட்டப்பட்டு கொண்டு வரப்பட்டிருக்கிறான். கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் காவல்காரர் விளக்கமாகக் கூறினார்.
அந்த மனிதன் அசலுார். அடிக்கடி இங்கே வருவானாம். தான் வருவது இங்குள்ள தெப்பக்குளத்தில் குளிப்பதற்காகவே என்ற நம்பிக்கையை ஏற்கெனவே தோற்றுவித்திருக்கிறான். தேங்காய் எண்ணெயைத் தவிர வேறெதுவும் கண்டறியாத அந்தக் கிராமத்தில் முதன்முறையாக தலைக்கு வாசனை எண்ணெய் பூசி வந்தவன். நாலுபேர் அவனிடம் நட்புகொள்ள விரும்பியதும் உண்டு. கருக்கலிலே மரத்தில் ஏறி அங்கிருந்தபடியே குலைகளை ஒரு கயிறுமூலம் கீழே மெதுவாக விடுவானாம். பொத்தென்று போட்டால் சப்தம் எழும். பிறகு மெதுவாக இறங்கி, கயிறையும் தேங்காய்களையும் எடுத்துக்கொண்டு வயல் வரப்பு வழியாக அவனது ஊர் சென்றுவிடுவானாம். இன்று மாட்டிக் கொண்டிருக்கிறான்.
சுவாரஸ்யமான விஷயம். தனது அற்புதமான வர்மப்பிடியைப் பற்றி விவரம் தர ஆரம்பிக்கவே, அவரைப் பேச விடவில்லை. அரிவாளை அந்தத் தேங்காய்கள் பக்கத்தில் வைக்கும்படிச் செய்தார்.
"என்ன முத்து. நீதான் டவுன்லே இருக்கியே. இதுமாதிரி பாத்திருக்கியா?" - ஊர் மூத்தவர் சிரிக்கக் கேட்கிறார். முத்துக்கறுப்பன் அசட்டுச் சிரிப்போடு பார்க்கையில் சிறிது வியர்த்தது. ஆற்றங்கரைக் காற்று நன்கு வீசிக் கொண்டிருந்தது. தேங்காய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த நார் நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது. நீண்டு நீண்டு சென்றது. அது - அவனது பயம் துளித் துளியாகக் கண்ணாடியில் படிந்த பனியாகக் துடைக்கப்படுகிறது. வெள்ளை வெளேரென ஒரு ஏழுவயதுப் பையன் துள்ளி அந்த ஆற்றங்கரைப் பகுதியில் செல்வது மங்கலாகிறது. அது அற்புதமான ஓர் அதிகாலைப் பொழுது.
சில சமயங்களில் காலை வேளைகளில் சென்றால் இரவில் விழுந்துவிட்ட தென்னை மடல்களை எடுத்து வரலாம். நேரந் தெரியாது கருக்கலிலேயே பயல் எழுந்து வந்திருக்க வேண்டும்.
ஆற்றங்கரை மறுபக்கமாக இறங்கிச் செல்ல வேண்டிய இடத்திலிருந்து அவனது தோப்பு. மேட்டுப் பக்கம் அவன் காலைக் கடன்கள் முடிக்குமிடம்.
பலுான் போல ஒரு குலை மரத்திலிருந்து இறங்குகிறது. தரை தடுக்கிக் கயிறு விழுகிறது. பிறகு இரண்டு கால்கள் கீழே இறங்குகின்றன.
கால்களுக்குரிய மனிதன் ஏழு வயதுப் பையனை நோக்கி வருவது தெரிந்தது. கையிலே வளைந்த அரிவாள், அந்த நடை முத்துக்கறுப்பனுக்குப் பழகியதாய்த் தெரிந்தது. காய்கள் நாரால் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேட்டில் ஏறித்தான் வரவேண்டும். எப்படியும் பேசாமலிருக்க முடியாது. பக்கத்தில் வந்தால் தானாகப் பேசுவதா பதில் மட்டும் சொன்னால் போதுமா என்ற எண்ணத்திற்கு முடிவு கிடைக்கவில்லை.
ஆனால் வந்தவன், அரிவாளுடனும் தேங்காயுடனும் வேறு பக்கமாகத் திரும்பி நடக்கிறான். முத்துவுக்கு நடுக்கம். அவரை வீட்டில் பார்த்தால் எப்படிப் பேசுவது? பயம் தோன்றி நடுக்கம் அதிகமாகிறது. ஆனால் சிறுவன் வீடு திரும்பாமலிருக்க முடியாது.
மறுநாள் அவன் மனைவியுடன் புறப்பட்டான். தன் அப்பா வளர்த்த தென்னந்தோப்பைக் கடந்து செல்லுகிறபோது மனைவி பேசிக்கொண்டே வந்தாள். தோப்பைப் பார்த்தான். ஆனால் அந்தத் தென்னந்தோப்பு யாருக்குச் சேரவேண்டும் என்று முடிவு கட்டுவது அவ்வளவு கஷ்டமான விஷயமல்ல என்று அவன் நினைத்தான்.
"உங்க பேரிலே என்னதான் அப்படியொரு ஆங்காராமோ தெரியல்லே அந்தப் பாவி மனிசனுக்கு" என்று திரும்பவும் ஆரம்பித்தாள் மனைவி.
"அது அப்படியில்லே - நான்தான் பதினைஞ்சு வருஷமா பயந்துகிட்டிருந்தேன்னு நினைச்சேன் - அப்படியில்லே, அவர்தான் அதிகமா நடுங்கிக்கிட்டு இருந்திருக்காரு" என்று சொல்ல நினைத்தான் முத்துக்கறுப்பன்.
மா.அரங்கநாதன் |
|
|
|
|
|
|
|