|
மனமிருந்தால் வழி கிடைக்கும் |
|
- |மே 2018| |
|
|
|
|
ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சீதாப்பிராட்டியும் ராமரின் பிற சகோதரர்களும் ஹனுமானுக்கு ராம சேவையிலிருந்து ஓய்வுகொடுக்கத் தீர்மானித்தனர். ராமருக்கான பல்வேறு சேவைகளைச் செய்யும் பொறுப்புகளைத் தங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ள விரும்பினர். காரணம், ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குச் சேவை செய்யப் போதுமான வாய்ப்பை ஹனுமான் முன்னரே பெற்றுவிட்டார் என்பதுதான். அவர்கள் ஒரு பட்டியல் இட்டனர். காலைமுதல் இரவுவரை ராமருக்குச் செய்யவேண்டிய பணிகளை ஒன்றுவிடாமல் எழுதி அவற்றைச் செய்யும் பொறுப்பையும் தமக்குள்ளேயே பகிர்ந்துகொண்டனர்.
அந்தப் பட்டியலைக் கொண்டுபோய் ராமரிடம் கொடுத்தபோது அங்கே ஹனுமானும் இருந்தார். இந்தப் புதிய திட்டத்தைப்பற்றிக் கேட்டுக்கொண்ட ராமர், பட்டியலைப் படித்துப் பார்த்து, ஒரு புன்னகையோடு தமது ஒப்புதலைக் கொடுத்தார். அவர் ஹனுமானைப் பார்த்து “எல்லா வேலைகளையும் செய்ய ஆள் இருக்கின்றது, நீ ஓய்வெடுத்துக்கொள்” என்று கூறினார். தன் செவிகளை நம்பமுடியாத ஹனுமான், அந்தப் பட்டியலை மீண்டும் ஒருமுறை படித்துக்காட்டச் சொன்னார்.
அதில் ஒரே ஒரு வேலை விட்டுப்போயிருந்தது. 'மன்னர் கொட்டாவி விடும்போது சொடக்குப் போடுவது' அந்தவேலை! இதைக் கவனித்த ஹனுமான் சக்ரவர்த்தியான ஸ்ரீராமர் கொட்டாவி விடுகையில் தாமே சொடக்குப் போட்டுக்கொள்ளக் கூடாது என்றும், அதை ஒரு சேவகன்தான் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அந்தப் பணியாளாகத் தம்மை நியமிக்கவேண்டும் என்று ராமரிடம் அவர் கெஞ்சினார். ராமரும் ஒப்புக்கொண்டார்.
அதுவே ஹனுமானுக்குப் பெருத்த பாக்கியமாயிற்று, ஏனென்றால் அவர் எப்போதும் தன் எஜமானரின் முகத்தைப் பார்த்தவண்ணமே உட்கார்ந்திருக்கலாமே. மன்னருக்குக் கொட்டாவி எப்போது வருமென்று யாருக்குத் தெரியும்? அப்படி வந்தவுடன் சொடக்குப் போட்டாக வேண்டுமென்பதால் ஹனுமான் ஒரு நிமிடம்கூட எங்கும் போகவோ, சற்றும் கவனமின்றி இருக்கவோ முடியாது. அவருக்கு ஏமாற்றமளித்திருக்க வேண்டிய ஒரு திட்டம், ராமர்மேல் அவர்கொண்ட அன்பு மற்றும் சிரத்தையின் காரணமாக, மிகச்சிறந்த பணி ஒன்றை அவருக்குத் தந்துவிட்டது.
நமக்குக் கடவுள்மேல் உண்மையான பக்தி இருந்தால் போதும், மற்ற எல்லாம் தாமாகவே வந்து அமைந்துவிடும்.
நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2016 |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|