|
ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 7) |
|
- ராஜேஷ், Anh Tran|மே 2018| |
|
|
|
|
அருணை கிளென், ஆசிரியை மிஸஸ் ரிட்ஜ் முன்னே கொண்டுபோய் நிறுத்தினார். ரிட்ஜ் அருணைக் கண்டிப்பார் என்று நினைத்தார் கிளென். ஆனால், அவரோ புன்னகைத்து விட்டு அருணை அணைத்துக் கொண்டார்.
"மிஸஸ் ரிட்ஜ், என்ன, அருணைக் கண்டிக்க மாட்டேங்கறீங்க? எப்படி சொல்லாம கொள்ளாம ஓடிப்போலாம், சொல்லுங்க? இவனை மாதிரி நாலுபேரு இப்படி பண்ணினா என்ன ஆறது? ஒரு பொறுப்பு வேணாம்?" என்று
பொரிந்து தள்ளினார்.
மிஸஸ் ரிட்ஜ் மௌனமாக இருந்தார். அவர் அருணைத் தேடியது உண்மைதான். ஆனால், எரிந்து விழுவதற்காக இல்லை. சாப்பாட்டு நேரம் நெருங்கிவிட்டதால் தான்.
மிஸஸ் ரிட்ஜின் அமைதி கிளென்னை என்னவோ செய்தது. "என்ன மிஸஸ் ரிட்ஜ்? ஒண்ணும் சொல்லமாட்டீங்க? இந்த மாதிரிப் பசங்கள நாலு திட்டு திட்டினாதான் ரோஷம் வரும்."
மிஸஸ் ரிட்ஜ் ஒரு பார்வை பார்த்தார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருந்தன. ரிட்ஜ் தனது ஆசிரியர் அனுபவத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகளைப் பார்த்திருக்கிறார், அவர்களைக் கையாண்டு இருக்கிறார். கிளென்
சொன்னது கொஞ்சங்கூட அவருக்குப் பிடிக்கவில்லை. அருணை நன்றாகப் புரிந்துகொண்டவர் அவர்.
"கிளென் சார், அருண் எந்தத் தப்பும் பண்ணவில்லை. சாப்பிட நேரமாச்சேன்னு தான் கூப்பிட்டு வரச் சொன்னேன்" என்றார். அவர் குரலில் சாந்தத்தோடு ஒரு திடம் இருந்தது. "நான் பார்க்காத குழந்தைச் சுபாவம் இல்லை,
விட்டுவிடுங்கள். அதுவும் இல்லாமல், இந்த கிராமம் மாதிரி ஒரு பாதுகாப்பான இடம் வேற எதுவும் கிடையாது. Let them explore."
கிளென் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்தார். அருண் உற்சாகத்தோடு ஹல்லரி பற்றிப் பேச ஆரம்பித்தான். அவள் கொடுத்த இலைகளைப் பற்றிப் பேசினான். "மிஸஸ் ரிட்ஜ், நீங்களும் இந்த இலையின் சாற்றை ருசித்துப் பாருங்க.
ரொம்ப ருசியா இருக்கு". அதற்குள் மிஸ் மெடோஸ் அங்கு வந்தார். அவரும் ஆர்வமாக அருண் கொடுத்த ஜலதோஷ இலைகளை மென்றார். "Mr. Sneeze Snatcher, இப்ப உன்னால நம்ம வகுப்பு பூரா sneeze free ஆகப் போகுது" என்று
சொல்லி அருணைச் செல்லமாகச் சீண்டினார்.
"இருக்கலாம். இதனால் எல்லாக் குழந்தைகளும் ஜலதோஷமே இல்லாம இருக்கலாம்" என்று மிஸஸ் ரிட்ஜ் ஆமோதித்தார்.
*****
அன்றைய பயணம் முடிவை நெருங்கியது. எல்லா மாணவ மாணவியரும் விடைபெற்றுக் கொண்டு பள்ளிக்கூட பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். மிஸஸ் ரிட்ஜ் வருவதற்குச் சில நிமிடங்கள் ஆயின. அவர், சீஃப் மற்றும் சில
பெரியவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பஸ்ஸில் கிளென் அருணின் பின்சீட்டில் வந்து அமர்ந்தார். அருணின் அருகே மிஸ் மெடோஸ் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். கிளென் வண்டியை ஓட்ட
உட்காராமல், ஏன் இப்படிப் பின் சீட்டில் அமர்கிறார் என்று மெடோஸுக்குச் சந்தேகம். இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. எப்படியும் வண்டி ஓட்ட கிளென் போகத்தானே வேண்டும் என்று சும்மா இருந்தார். பின்சீட்டில் அமர்ந்த
கிளென்னின் காதில் ஹெட்ஃபோன் இருந்தது. அவர் ஏதோ பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
"என்ன அருண், எப்படி இருந்தது இந்த ஃபீல்டு ட்ரிப்? பிடிச்சிருந்ததா?" என்று கேட்டார் மிஸ் மெடோஸ்.
"ரொம்ப!" என்று குதுகலத்தோடு பதில் அளித்தான் அருண். ஹில்லரி பற்றியும், அவள் கொடுத்த இலைகளைப் பற்றியும் விலாவாரியாகப் பேசினான்.
"மிஸ் மெடோஸ், எனக்கு இன்னும் நிறைய ஜலதோஷ மூலிகை இலைகளைக் கொண்டுவந்து தரேன்னு சொன்னா ஹில்லரி."
"அப்படியா? எப்ப?"
"இந்த வாரம் ஞாயிற்றுகிழமை சந்தைக்கு வரும்போது."
"எங்கே, நம்ம ஊருக்கா?"
"இல்லை, வொர்த்தாம்டனுக்கு."
"வொர்த்தாம்டன் ரொம்ப தொலைவாச்சே. அங்க அப்பா அம்மாவைக் கூட்டிச் போகச் சொல்லப் போறியா?" |
|
"ஆமாம்."
"அப்படி அவங்களால முடியாட்டி நானாவது கூட்டிட்டு போயிருப்பேன். இந்த வாரம் வேற வேலைகள் இருக்கு. சாரி அருண்" என்றார் மிஸ் மெடோஸ்.
அருண் மெதுவாக ஹோர்ஷியானா நிறுவனம் கிராம மக்களுக்கு விதித்திருந்த தடைபற்றிச் சொன்னான்.
"அப்படியா!" என்று மிஸ் மெடோஸ் ஸ்தம்பித்துப் போனார். அவர்கள் பேசுவதை கிளென் ஒட்டுக் கேட்பதுபோல இருந்தது. "அருண், இந்த கிளென் பாட்டுக் கேட்கிற மாதிரி பாவலா பண்ணிக்கிட்டு, நம்ம பேசறத ஒட்டுக் கேட்கறார்னு நினைக்கிறேன்" என்று கிசுகிசுத்தார்.
அருண் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அதற்குள் மிஸஸ் ரிட்ஜ் வந்து விடவே, கிளென் வண்டியை ஓட்ட அவசரமாக முன் பக்கம் நடந்து போனார். *****
வீட்டிற்கு வந்த பின்னர், அன்று இரவு சாப்பிடும்போது, அம்மா அப்பாவிடம் ஹில்லரியை சந்தித்ததுபற்றிச் சொன்னான்.
"எங்கேன்னு சொன்ன?" அப்பா ரமேஷ் கேட்டார்.
"வொர்த்தாம்டன்."
"ஹேய், அவ்வளவு தூரம் யார் போவாங்க?" என்றார் அப்பா.
"கட்டாயம் போகணுமா கண்ணா?" இது அம்மாவின் கேள்வி.
"ஆமாம், அவள் நிறைய ஜலதோஷ மூலிகை கொண்டுவரப் போறா. எனக்கு இனிமே ஜலதோஷம் வரவே வராது."
"கீதா, எனக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை கால்ஃப் இருக்கு. என்னால அருணை கூட்டிக்கிட்டு வொர்த்தாம்டன் வரைக்கும் போகமுடியாது" என்றார் அப்பா.
"கண்ணா, அங்கே உன்னை எங்கே சந்திக்கப்போறதா சொன்னா?" என்று அம்மா கேட்டார்.
"சந்தையில."
"ஞாயிறு சந்தையிலயா? அது எவ்வளவு பெரிய இடம் தெரியுமா?" அப்பா சத்தம் போட்டார்.
"ரமேஷ், ப்ளீஸ்" என்று சொல்லி, அவரை அங்கிருந்து நகர்ந்து போகச் சொன்னார் கீதா. அருணைப் பார்த்து, "அருண். ஹில்லரியிடம் செல்ஃபோன் இருக்கா?"
"இல்லை, அம்மா."
"அப்புறம் எப்படிப்பா நாம அவளை காண்டாக்ட் பண்றது? உனக்கு எந்த இடம்னு சொல்லல. சந்தையில தேடிக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்பா."
அருண் விடுவதாக இல்லை. "அம்மா, அந்த இலைகள் எனக்கு கிடைக்க இதுதாம்மா நல்ல சான்ஸ். பாரு, ஒரே நாள்ல எனக்கு ஜலதோஷம் நின்னுபோச்சு. அதுவுமில்லாம, அவ என்கிட்ட வேற ஏதோ சொல்ல
நினைக்கிறான்னு நம்புறேன். ப்ளீஸ், என்னை அங்க கூட்டிட்டு போங்களேன்."
கீதாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. "அருண், எனக்கென்னவோ இது சரியாப் படலை. வொர்த்தாம்டனுக்கு 2 மணிநேரம் வண்டி ஓட்டிக்கிட்டு போய், ஒரு செல்ஃபோன் கூட இல்லாம அந்த பெரிய சந்தையில
தேடுரது முடியாத காரியம்...." என்று சொல்லி அருணுக்கு முத்தம் கொடுத்து, அவனை படுக்கப் போகச் சொன்னார்.
"அம்மா, ப்ளீஸ்," என்று கெஞ்சிப் பார்த்தான்.
"பாரு நேரமாச்சு தூங்கறதுக்கு. எனக்கு வேற மளிகை சாமான் வாங்கப் போகணும். நான் திரும்பி வரதுக்குள்ள நீ தூங்கிருக்கணும், சரியா?" என்று சொல்லி, அவனது அறைக்குள் போகுமாறு அவனைக் கேட்டுக்கொண்டார்.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|